கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்

thirukkural meaning விளக்கம் குறள் 326 கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை
குறள் 326
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
கொல்லாமை -   - kollāmai   n. கொல்- +ஆ neg. Abstinence from killing, as a virtue உயிர்க்கொலை செய்யாமை

மேற்கொண்டு - மேற்கொள்ளுதல் - மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல்.

ஒழுகுவான் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

வாழ்நாள்  - ஆயுட்காலம்

மேல் -  மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

செல்லாது - சொல்லாமல் - கூறாமல்

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

உண்ணும் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்

கூற்று -  கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன்

முழுப்பொருள்
உயிர்களை கொல்லாததை ஓர் விரதமாக நினைந்து வாழ்நாள் முழுதும் மேற்கொண்டு ஒருவர் வாழ்வார் என்றால் அவர் ஆயுட்காலம் முழுவதும் ஆயுளிற்கு பிறகும் அவர் மேல் உயிரை உண்ட கொலைகாரன் என்ற கூற்று/பழி வராது. அவன் குடும்பமும் அப்பழியைச் சுமக்க நேரிடாது. உதாரணமாக பல லட்ச உயிர்களை கொன்று குவித்த ஹிட்லர் இன்றும் கொடியவராக கருதப்படுகிறார்.

மேலும் கொல்லாமையை வாழ்நாள் முழுவதும் பழகினால் அவர் அவருக்கு விதிக்கப்பட்ட முழு ஆயுளை அனுபவிக்க குறுக்கே எந்த ஒரு கூற்றும் (காலன்/யமன்) வராது. கொலை மிக பெரிய பாவம். அதனுடைய வினைப்பயனை அந்தப் பிறவியிலேயே விதிக்கப்பட்டதற்கு முன்பே அனுபவித்து இறப்பர்.

ஒருவர் தனக்கு விதிக்கப்பட்ட நீண்ட / முழு ஆயுளை வாழ்வார் என்றால் அவர் வாழ்வில் ஞானம் எய்த ஏதுவாக இருக்கும். ஆயுள் கூடினால் அனுபவம் கூடும். மேலும் விடுபட்டு விடுபட்டு ஒவ்வொன்றாக துறந்து துறந்து ஒருவர் ஞானம் அடைகிறார். ஞானம் அடைந்தால் வீடுபேறு கிட்டும். ஆதலால் ஒருவர் கொலை செய்தால் அவர் ஞானம் அடைவதற்குத் தடையாக கூற்று(காலன்/யமன்) முன்பே வந்து அமைந்துவிடும்.

கம்பராமாயண நாட்டுப்படலத்தில், “கூற்றம் இல்லையோர் குற்றம் இலாமையால்” (79) என்று கோசல நாட்டு மக்களின் நிலையைச் சொல்லியிருப்பார். குற்றங்கள் இல்லாமையால், அந்நாட்டினருக்கு மரண பயம் இல்லையாம். பாவத்தின் சம்பளம் மரணம் என்பது விவிலியத்தின் வாக்கு. இந்திய சமயச் சிந்தனையில், பிறந்திறந்து பண்படுபவதே ஒவ்வொரு ஆத்மாவுக்கும் விதிக்கப்படுவது.

”வேள்விவாய்க் கண்படுத்தும் வெவ்வினைசெய் ஆடவர்கை
வாளின்வாய்க் கண்படுத்தும் வாரணத்தின் ஈருரிபோல்
கோளிமிழ்ப்பு நீள்வலைவாய்க் கண்படுத்தும் இன்னணமே
நாளுலப்பித் திட்டார் நமரலா தார்எல்லாம்” (சீவக 2787)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் - கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல், உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது - உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது. (மிகப்பெரிய அறம் செய்தாரும் மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையான் அன்றி இம்மைதன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பர் என்னும் அறநூல் துணிபு பற்றி, இப் பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான்: படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார் வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது, என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து. இதனான் அவர்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கொல்லாமையை விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழ்நாளின் மேல், உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது. பிறவாமை யுண்டாமாதலால் கூற்றுச் செல்லாது என்றார். இது கொல்லாமையின் பயன் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

சாலமன் பாப்பையா உரை
கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அஹிம்சையைக் கடைப்பிடிப்பவனுக்குத் துர்மரணம் நேராது.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain