இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்

thirukkural meaning விளக்கம் குறள் 205 இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்
குறள் 205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]

பொருள்
இலன் - இல்லை; இல்லாதவன்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

தீயவை - தீயசெயல்; துன்பம்; கீழ்மக்கள்கூட்டம்.

அற்க - வேண்டாம்
செய்யற்க - செய்யாதே ; செய்ய வேண்டாம்

செய்யின் - மீறி செய்தால்

இலன் - இல்லை; இல்லாதவன்

ஆகும் - நடக்கும்; ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

மற்றும் - மேலும்; மீண்டும்.

பெயர்த்து - பின்னும்

பெயர்த்தல் - போக்குதல்; நிலைமாறச்செய்தல்; அப்புறப்படுத்துதல்; திருப்பிப்போடுதல்; பிடுங்கல்; கெடுத்தல்; ஒடுங்கிக்கொள்ளுதல்; பிரித்தல்; மீட்குதல்; வசூலித்தல்; செலுத்துதல்; விடுத்தல்.

முழுப்பொருள்
நீ வறுமையில் இருக்கிறாய் என்பதற்காக வறுமையை போக்கப் பிறருக்குத் தீயனவற்றைச் செய்யாதே. அப்படித் தீயனவற்றைச் செய்தால் நீ இன்னும் வறுமையாகிவிடுவாய்.

உதாரணமாக நீ செல்வத்தில் வறுமையாக இருந்தாலும் உன்னுடன் உன் கல்வி, உறவினர்கள் மதிப்பு என்று மற்ற செல்வங்கள் இருக்கும். ஆனால் நீ தீயவற்றை பிறருக்கு செய்தால் உன் கல்வியும் உறவினர்களும் என்று மற்ற செல்வங்களும் உன்னைவிட்டுப்போய் நீ மேலும் வறுமையில் சிக்கீத் தவிப்பாய். வரும் பிறவிகளிலும் நீ வறுமையில் தவிப்பாய். சென்றப்பிறவியில் செய்த தீவினைக்காகத் தான் இந்த பிறவியில் கஷ்டப்படுகிறாய். ஆதலால் இப்பிறவியிலும் தீவினை செய்து அடுத்தபிறவியிலும் கஷ்டப்படாதே.

குற்றம் செய்கின்றவர்கள் குற்றம் செய்வதற்கு ஒரு சப்பைக்கட்டு காரணம் வைத்திருப்பர் (உதாரணமாக மறந்து செய்துவிட்டேன், கோபத்தில் செய்துவிட்டேன், அவன் செய்ததால் நானும் செய்தேன், வறுமையில் செய்துவிட்டேன், வீட்டில் கஷ்டம்). இக்காரணங்கள் எல்லாம் பொய். கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தாங்கினால் தான் தருமம் பழக முடியும். சிலர் நினைப்பதுபோல் தருமம் தானாக வந்து மடியில் விழாது. ஆனால் தருமம் என்பது பல பிறவிகளுக்கு வந்து உன்னை காக்கப்போகிறது. உனக்கு துணைவரப்போகிற தருமத்திற்காக நீ கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும். ஆதலால் வறுமை வந்துவிட்டது என்று தயவு செய்து பிழை செய்யாதே.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”இலமென்று வெஃகுதல் செய்யார்” (குறள் 174)

பரிமேலழகர் உரை
இலன் என்று தீயவை செய்யற்க -யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக, செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும் - செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம். (அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித்.குறிஞ்சி.22) என்பதனாலும் அறிக. மற்று - அசை நிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளாலும் வறியனாம், என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக; செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன். அது செல்வம் பயவாது. இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.

மு.வரதராசனார் உரை
யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

சாலமன் பாப்பையா உரை
தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
வறியவனுக்குத் தீங்கு செய்பவன் வாழாது போவான்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain