குறள் 85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]
பொருள்
வித்தும் - வித்து-தல் - vittu- 5 v. tr. [K. bittu.] 1.To sow; விதைத்தல். வித்திய வுழவர் நெல்லொடுபெயரும் (ஐங்குறு. 3). 2. To spread, broadcast;பரப்புதல். அண்ண லிவனேல் விளியாக் குணத்துதிநாம் வித்தாவா றென்னே (சீவக. 1611). 3. Toimpress on one's mind; பிறர்மனத்துப் பதியவைத்தல். செவிமுதல் வயங்குமொழி வித்தி (புறநா. 206).
இடல் - இடுதல் - வைத்தல்; போகடுதல் பரிமாறுதல் கொடுத்தல் சொரிதல் குத்துதல் அணிவித்தல்; உவமித்தல் குறியிடுதல்; ஏற்றிச்சொல்லுதல்; சித்திரமெழுதுதல்; உண்டாக்குதல் முட்டையிடுதல்; கைவிடுதல் புதைத்தல் பணிகாரம்முதலியனஉருவாக்குதல்; தொடுத்துவிடுதல்; செய்தல் தொடங்குதல் வெட்டுதல் ஒருதுணைவினை.
வேண்டும் - vēṇṭum v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.
கொல்லோ - கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.
விருந்து - புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று.
ஓம்பி - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.
மிச்சில் - எஞ்சியபொருள்; எச்சில்; கரி.
மிசை - உணவு; சோறு; உயர்ச்சி; மேலிடம்; மேடு; வானம்; முன்னிடம்; ஏழனுருபு.
மிசைவான் - மிசைஞர் - உண்பவர்.
புலம் - வயல்; இடம்; திக்கு; மேட்டுநிலம்; பொறி; பொறியுணர்வு; அறிவு; கூர்மதி; துப்பு; நூல்; வேதம்.
முழுப்பொருள்
நம் வீட்டிற்கு வருகின்ற விருந்தினர்களுக்கு முதலில் வயிராற உணவளித்து எவ்வித வருத்தமும் வராமல் போற்றி உபசரித்து பின்பு மிச்சம் இருப்பதை நாம் உண்ணுவதே விருந்தோம்பல் ஆகும். அப்படி ஒருவர் விருந்தோம்பல் செய்து பழகுவார் என்றால் அவருடைய வயலில் (வீட்டில்) விதைக்க வேண்டுமா என்ன? விதைக்காமலையே செடிகள் வளரும். வளம் பெருகும். அதாவது அவர் வேறு செயல்களில் செய்து புண்ணியத்தை ஈட்டவேண்டும் என்றில்லை. விருந்தோம்பலை சரியாக செய்கிறமைக்காக அவருக்கு பலன் தானாக கிட்டும்/விளையும்.
ஒருவர் வீட்டிற்கு வருகிறார் என்றால் முதலில் எல்லாவற்றையும் தின்றுவிட்டு மீதம் இருப்பதை (அது வருபவர்களுக்கு தேவையான அளவு இருப்பினும்) வருபவர்களுக்கு கொடுத்தால் அது விருந்தோம்பல் ஆகாது. அதுமட்டுமில்லாது திருவள்ளுவர் மிச்சம் இருப்பதை உண்ணவேண்டும் என்கிறார். குறைவாக இருந்தால் புதிதாய் சமைக்கக்கூடாது என்று சொல்லவில்லையென்றாலும் அது பொருத்தமாக இருக்கிறது. ஏனெனில் வீட்டில் உள்ளோருக்கு உணவு பற்றாக்குறை ஆகிவிட்டதே என்று விருந்தினர் மனம் வருந்த நேரும். அந்த வருத்தத்தையும் அவர்களுக்கு கொடுக்க கூடாது. மிச்சத்தை உண்டு மகிழ வேண்டும். ஒரு வேலை குறைவாக சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது அல்லவா.
ஐம்பெரும் காப்பியங்களும் ஒன்றான மணிமேகலையில் (13:113-4) ‘யாவரும் வருகவென்றிசைத்துடன் ஊட்டி, உண்டெழு மிச்சில் உண்டு’ என்று கூறப்பட்டிருப்பதிலிருந்து, விருந்து புறத்திருக்க தான் உண்ணா நெறியோடு, அவர்களை உண்ணுவித்து, பின்பு தான் உண்ணுதலை சிறப்பித்திருப்பதைக்காணலாம். சங்க இலக்கியங்களான குறுந்தொகை, குறிஞ்சிப் பாட்டு இவற்றிலும், இக்குறள் கருத்தை அடியொட்டிய வரிகள் இருப்பதைக் காணலாம்
மேலும்
விச்சதின்றியே விளைவு செய்குவாய்
விண்ணு மண்ணக முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும்
புலையனேனையுன் கோயில் வாயிலிற்
பிச்சனாக்கினாய் பெரிய அன்பருக்
குரியனாக்கினாய் தாம் வளர்த்ததோர்
நச்சு மாமரமாயினுங் கொலார்
நானும் அங்கனே யுடைய நாதனே
–திருச்சதகம், திருவாசகம், பாடல் 96
பொருள்:-
விதை இல்லாமலே செடிகொடிகளை வளரச் செய்பவன் நீ; விண்ணுலகம், மண்ணுலகம் ஆகியவற்றை நிலைபெறச் செய்து, உரிய காலத்தில் அவைகளை, அழிப்பவனும் நீயே; புலையனைப் போன்ற என்னையும் உன் கோவிலின் முன்னே வைத்துப் பித்தனாக்கினாய் —அடியார்களுக்கு உரியவானாக ஆக்கிவைத்தாய். உலகத்தார் தாமே வளர்த்த மாமரங்கள் நச்சுத்தனமை எய்தினாலும் கொல்ல மாட்டார்கள்— என்னை அடிமையாக உடைய தலைவனே! யானும் அத்தகையேன் ஆவேன்.
“மரம் சா மருந்தும் கொள்ளார்”– என்று தமிழ் நூல்கள் பகரும். மருந்தே வேண்டினும் அந்த மரம் சாகும் அளவுக்கு அதன் பட்டைகளைத் தோலுரிக்க மாட்டார்கள்.
ஒப்புமை
“.... ஒழுகிய நெய்ம்மலி அடிசில்
வசையில் வாந்திணைப் புரையோர் கடும்பொடு
விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னொ டுண்டலும் புரைவதென் றாங்கு
அறம்புணை யாகத் தேற்றி” (குறிஞ்சிப் 204-8)
“உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில்’ (குறுந் 233.4-5)
“யாவரும் வருகவென் றிசைத்துடன் ஊட்டி
உண்டெழு மிச்சில் உண்டு” (மணி 13:113-4)
பரிமேலழகர் உரை
விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ - வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா. ('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ? பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்றவாறு.
மணக்குடவர் உரை
விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ? பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்றவாறு.
மு.வரதராசனார் உரை
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.
சாலமன் பாப்பையா உரை
விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
சலிக்காமல் உபசரிப்பவன் நிலம், விதைக்காமலே விளையும்.
No comments:
Post a Comment