பழகிய நட்பெவன் செய்யுங்

thirukkural meaning விளக்கம் குறள் 803 பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை பொருட்பால், நட்பியல், பழைமை
குறள் 803
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
பழகிய - பழகுதல் - பயிலுதல்; உறவுகொள்ளுதல்; பதப்படுதல்; சாதுவாதல்; இணக்கமாதல்; ஊடாடுதல்; நாட்படுதல்.

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

கெழுதகைமை - Intimacy, உரிமை; நட்பு.

தாங்கு - தாங்கல்; ஆதாரம்; ஈட்டிக்காம்பு

செய்தாங்கு - செய்தவற்றை

அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

அமையா - பொருந்தாத

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

முழுப்பொருள் 
பலகாலம் பழகிய நண்பர் உரிமையுடன் ஒரு செயலை செய்தால் (நம் கொள்கையுடன் உடன்படாத செயலாகக்கூட இருக்கலாம் அல்லது நம்மிடம் அறிவிக்காமல் செய்த செயலாக கூட இருக்கலாம்) அதனை ஏற்று நாம் அச்செயலை செய்யாவிட்டால் அல்லது அவருடன் அச்செயலிற்குப்பின் துணையாக நாம் இல்லையேல் பல காலம் பழகிய அந்த நட்பிற்கு பிறகு பொருள் என்ன?

இங்கே செயல் எனப்படுவது நமக்கு உடன்படாத செயல் அல்லது நம்மிடம் அறிவிக்கப்படாத செயல் ஆகிய பொருள்களை மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக திருமணம் போன்றவற்றை நண்பர் நமக்கு அறிவிக்காமல் செய்திருக்கலாம். திருமணத்திற்கு பின் அவரை வாழ்த்தி அவருடன் துணையாக இருப்பதே சிறந்தது.

ஆனால் நம் நண்பர் தீயவற்றை விளைவிக்கும் செயல்களை அல்லது அறம் அல்லாத செயல்களை செய்வார் என்றால் அதனை நாம் உடன் இருந்து செய்யவேண்டும் என்று திருவள்ளுவர் கூறவில்லை.

நம் நண்பர் தீங்கான ஒரு செயலை தவறிச்செய்தால் அதன் பிறகு அவருடன் உறவை முறித்துக்கொள்வது தவறு. அவரை மீட்டெடுக்க அவருடன் துணையாக இருந்து உதவுவதே பழகிய நட்பிற்கு அழகு.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கெழுதகைமை செய்தாங்கு அமையாக்கடை - தாம் உடம்படாதனவேனும் நட்டார் உரிமையாற் செய்தனவற்றிற்குத் தாம் செய்தாற் போல உடம்படாராயின்; பழகிய நட்பு எவன் செய்யும் - அவரோடு பழையதாய் வந்த நட்பு என்ன பயனைச் செய்யும்? (செய்தார் போல உடம்படுதலாவது, தாமும் அவரிடத்து உரிமையால் உடம்படுதல். இவை இரண்டு பாட்டானும் பழைமையான் வரும் உரிமையது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம். இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.

சாலமன் பாப்பையா உரை
தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain