ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

thirukkural meaning விளக்கம் பொருட்பால், படையில், படைமாட்சி குறள் 763 ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்
குறள் 763
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்
[பொருட்பால், படையில், படைமாட்சி]

பொருள்
ஒலித்தல் oli-   11 v. [T. uliyu, K. uli, Tu.uri.] intr. 1. To sound, as letter; to roar,as the ocean; சத்தித்தல் ஒலித்தக்கா லென்னாமுவரி(குறள், 763). 2. To wash, as clothes; ஆடைவெளுத்தல். ஊரொலிக்கும் பெருவண்ணார் (பெரியபு. திருக்குறிப்புத்தொண்ட. 113).--tr. To remove, as dirt;to clean; விளக்குதல் உதிர்துக ளுக்க நின்னாடையொலிப்ப (கலித். 81, 31).  

ஒலி - ஓசை; ஆரவாரம்; இடி; காற்று; எழுத்தொலி; சொல்.

ஒலித்தக்கால் - கடலைப்  (கடல் அலைகளைப்)  போன்று ஆரவாரத்துடன் ஒலித்தல் 

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

என்னாம்  - மனதால் 

உவரி - உவர்நீர், உப்புநீர்; கடல்; சிறுநீர்.

எலிப் - ஒருசிறுநாற்கால்உயிரி; பெருச்சாளி; கள்ளிமரம்; பூரநாள்; கள்.

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

நாகம் - வானம்; துறக்கம்; மேகம்ஒலி; காண்க:நல்லபாம்பு; நாகப்பச்சை; நாவல்; பாம்புநஞ்சு; நாகலோகம்; யானை; குரங்கு; கருங்குரங்கு; காரீயம்; துத்தநாகம்; நற்சீலை; மலை; புன்னைமரம்; ஞாழல்; சுகம்.

உயிர்த்தல் - உயிர்பெற்றெழுதல்; தொழிற்படுதல் மூச்செறிதல் மூச்சுவிடல்; ஈனுதல் மோத்தல் கூறுதல் வெளிப்படுத்துதல் இறந்துபடுதல் சொரிதல் இளைப்பாறல்.

உயிர்ப்ப - மூச்செறிதல்

கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்- 

முழுப்பொருள் 
எலிகள்பல கூட்டமாய்கூடி கடல்போல ஆரவாரம் (ஓசை எழுப்பினாலும்) செய்தாலும் வல்லமைப் பொருந்திய நாகம் மூச்சுவிட்டாலே எலிகள் அணைத்தும் அழிந்துவிடும்.

அதுப்போல மனதாலும் தொடர் பயிற்சியாலும் வலிமையில்லாத படையாயின் அது கடலளவு இருப்பினும் அது எலிகள் கூச்சலிடுவதுப் போன்று ஆரவாரம் செய்தாலும் வலிமையான வீரர் (அரசர்) முன்னே நிற்குமாயின் எலிகள் அழிந்துவிடும். நரிகள் கூட்டம் ஊளையிட்டு வந்தாலும் அரிமாவின் ஆற்றல்முன் நிற்கமுடியாது.

ஆதலால் படையின் மாட்சி எண்ணிக்கையில் இல்லை. படையின் மாட்சி மனதிலும் பயிற்சியிலும் உள்ள வலிமையில் உள்ளது.

கடலென்று சொல்லாமல் உவரி என்று சொல்லுகிறார் திருவள்ளுவர். ஏனெனில் உவரி என்றது உப்பு நீர் நிறைந்த கடலைக் குறிப்பதாகும். உண்ணீராக இல்லாது, உப்பு நீராக இருப்பதைச் சொல்லி, அதைப்போன்ற எண்ணிக்கையில் பெருகியிருந்தாலும், பயனில்லாமையை அழகாக கூறுகிறார் திருவள்ளுவர்.

எலியையும் அரவத்தையும் தொடர்புறுத்தி இலக்கியங்களில் பலபாடல்களை கி.வா.ஜவின் ஆராய்ச்சிப் பதிப்பு சுட்டுகிறது. குறிப்பாக கம்பன் பல இடங்களில் கூறுகிறார்,

“எலியெலாம் இப்படை அரவம் யானென 
ஒலியுலாம் சேனையை உவந்து கூயினான்” (கம்ப.குகப்.10)

”அரவின் நாமத்தை எலிஇருந் தோதினா லதற்கு
விரவும் நன்மையென்” (கம்ப.இரணியன்.50

“புற்றி னின்றுவல் வரவினம் புறப்பட்டப் பொருமி
இற்ற தெம்வலி யெனவிரைந் திருதருமெலி” (கம்ப.மூலபல – 27)


பெருங்கதைப் (1,56:273-5) பாடலொன்று, 
“பைவிரி நாகத் தைவாய்ப் பறந்த 
ஒலிப்புயிர் பெற்ற எலிக்கணம் போல 
ஒழிந்தோர் ஒழிய” என்று நயமாகக் கூறுகிறது.

வீரர் அல்லாதார் திரண்டு ஆர்ப்பரித்தாலும், வீரன் அஞ்சாமையைக் கூறும் பழமொழிப் பாடலொன்று,

மறுமனத்த னல்லாத மாநலத்த வேந்தன்
உறுமனத்த னாகி யொழுகின் – செறுமனத்தார்
பாயிரங் கூறிப் படைதொக்கா லென்செய்ப
ஆயிரங் காக்கைக்கோர் கல்.

மகாபாரதக் காட்சியில் அபிமன்யுவைச் சுற்றி நின்ற கௌரவர் கூட்டத்தைத் தனியொருவனாக நின்று போரிட்ட வீரத்தை இக்குறள் சொல்லும் கருத்தாலே அரியலாம். இவ்வரிய குறள், யாவரும் அறியத்தக்கதொரு குறள்.

”வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ” (புறநா.79:5-6)


“பலம்என் றிகழ்தல் ஓம்புமின்” (புறநா.301.11)

“பைவிரி

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
எலிப்பகை உவரி ஒலித்தக்கால் என்னாம் - எலியாய பகை திரண்டு கடல் போல ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்? நாகம் உயிர்ப்பக் கெடும் - அந்நாகம் உயிர்த்த துணையானே அது தானே கெடும். (உவமைச்சொல் தொக்கு நின்றது. இத்தொழில் உவமத்தால் திரட்சி பெற்றாம். வீரரல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால் அதற்கு வீரன் அஞ்சான்: அவன் கிளர்ந்த துணையானே அவர்தாம் கெடுவர் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். வீரரல்லாதார் பலரினும் வீரனொருவனை ஆள்தல் நன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் முறையே அரசனுக்குப் படை ஏனையங்கங்களுள் சிறந்தது என்பதூஉம், அதுதன்னுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதூஉம் அது தன்னுள்ளும் வீரன் சிறந்தான் என்பதூஉம் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
கடல்போல ஒலித்தாலும் எலியினது மாறுபாட்டினால் வருந்தீமை யென்னுளதாம்; எலி நாகம் உயிர்த்த அளவிலே கெடும். இது படைமிகுத்தது வெல்லுமென்று கருதாது வீரரைத் தௌ¤ந்தாளல் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.

சாலமன் பாப்பையா உரை
பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain