Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

குறள் 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]

பொருள்
தென்புலத்தார் - தென்திசையிலுள்ளபிதிரர்; யமபடர்.

தெய்வம் - கடவுள்; ஊழ்வினை; தெய்வத்தன்மை; எண்வகைமணத்துள்ஒன்றாகியதெய்வமணம்; தெய்வச்செயல்; ஆண்டு; புதுமை; தெய்வத்தன்மைஉள்ளது; மணம்

விருந்து - புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று.

ஒக்கல் - உறவினர், சுற்றத்தார்; குடி, குடும்பம்; மூட்டுகை; இடைப்பக்கம்; ஒக்கலை

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை

ஐம்புலம் - ஐந்துபொறிகளுக்குரியஉணர்ச்சிகள்:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

ஐம்புலத்து - ஐம்புலத்தவர் - தென்புலத்தாராம்பிதிரர், தெய்வம், விருந்து, சுற்றத்தவர், தான்.

ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை

ஓம்பல் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு

முழுப்பொருள்
1) தென்திசையில் உள்ள இறந்த மூதாதையர்கள், 2) தெய்வங்கள், 3) விருந்தினர்கள், 4) உற்ற குடும்பத்தார்கள் உறவினர்கள் சுற்றத்தார்கள் 5) தான் என்னும் தன்னை ஆகிய ஐவரையும் பேணி வளர்த்து உபசரித்து சீர்தூக்கிப் போற்றி வாழ்வதே சிறப்பாகும். அதுவே இல்வாழ்க்கையின் அறமாகும் (கடமையாகும்).

ஒருவன் தன்னை அறவழிகளில் நிறுத்திக்கொள்ளாவிடில், தன்னைச் சார்ந்தவர்களுக்கு அறவழிக் கடமைகளை ஆற்றமுடியாது என்பதால், “தான்” என்று இல்லத்தோரையும் சேர்த்து சொல்லப்பட்டது.

தன்னை மட்டும் பேணிக்கொள்ளாமல் தன்னை சார்ந்துள்ள அனைவரையும்  தெய்வங்களையும் மூதாதையர்களையும் பேணி கடமையை ஆற்றுவதால் தான் இல்வாழ்க்கை இல்லறம் என்னும் அறமாக மாறும்.

சிலப்பதிகாரம் 14:11, உரை,  இவ்வாறு கூறுகிறது ‘இல்லறமென்பது கற்புடைய மனைவியோடு, இல்லின் கண் இருந்து செய்யும் அறம். அதன் துறையாவன: தன்னை ஒழிந்த மூவர்க்கும், துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும், தேவர்க்கும், முனிவர்க்கும், விருந்தினர்க்கும், சுற்றத்தார்க்கும், பிறர்க்கும் துணையாதலும், வேள்வி செய்தலும், சீலம் காத்தல் முதலியனவும், அருளும் அன்பும் உடையன ஆதலும், பிறவும்’

மேலும்: அஷோக் உரை

சிலப்பதிகாரத்தில் கோவலனை பிரிந்துள்ள கண்ணகி, அவன் (அவள் தலைவன் கோவலன்) இல்லாமல் தன்னால் விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறாள். அப்பாடல் கீழே
‘அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்,
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும், இழந்த என்னை, நும்
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர்த் தலைத் தாள்
மன் பெரும் சிறப்பின் மா நிதிக் கிழவன் 75
முந்தை நில்லா முனிவு இகந்தனனா,
அற்பு உளம் சிறந்து ஆங்கு, அருள் மொழி அளைஇ,
என் பாராட்ட, யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாய் அல் முறுவற்கு அவர் உள் அகம் வருந்த, 80
போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்,
ஏற்று எழுந்தனன், யான்’என்று அவள் கூற
-- இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் ( / 2. மதுரைக் காண்டம் / 6. கொலைக்களக் காதை)

பொருள்
அறநெறியாளர்களுக்கு  அளித்தல், செந்தண்மைப் பூண்டொழுகும் அந்தணர்களைப் பாதுகாத்தல், துறவிகளை வழிபடுதல் - இந்த மூன்றும்  இல்லறம் பூண்டோர் கடமை. இந்த மூன்றையும் துறந்து நான் வாழ்ந்துகொண்டிருந்தேன்.  

இப்படி வாழ்ந்த என்னை உன் தாயும், தந்தையும் உன்மீது எப்போதும் இல்லாத சினத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, என்மீது அன்பு உள்ளம் கொண்டு, அருள் தரும் மொழிகளைப் பேசி, என்னைப் பாராட்ட, நான் வீட்டில் ஒளிந்துகொண்டு, என் நோவையும் துன்பத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், வாயால் புன்னகை பூத்துக் காட்ட, அந்த புன்னகையைப் பார்த்து  அவர்கள் மனம் வருந்தும்படிப் போற்றப்படாத ஒழுக்க நெறியில் வாழ்ந்தீர். 

அதனை நான் மாற்றாத உள்ளத்தோடு வாழ்ந்தேன் ஆகையால், நீ எழுக என்றவுடன் எழுந்தேன்.  - என்று கண்ணகி கோவலனிடம் கூறினாள்.  
(எழுக என எழுந்தாய். என் செய்தனை - என்று கோவலன் வினவியதற்கு இப்பபடி விளக்கம் அளித்தாள்) 


ஒப்புமை
”அரசுகொள் கடன்க ளாற்றி மிகுதிகொண்ட டறங்கள் பேணிப்
பரவரும் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையுந் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி
வரைபுரை மாடம் நீடி மலர்ந்துள்ள பதிகள் எங்கும்” (பெரிய. திருநாட் 26)

பரிமேலழகர் உரை
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம். (பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார்' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.).

மணக்குடவர் உரை
பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.

மு.வரதராசனார் உரை
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

சாலமன் பாப்பையா உரை
இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பிறர் நலம் காத்தலே சம்சாரியின் முதற்பணி.

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
”செல்வத்தைப் புறக்கணிக்க வேண்டா. வந்த விருந்தினரைத் தெய்வமாகக் கருது. உனக்காக மட்டும் உணவு உண்டாக்கினால் போதாது. நாட்டுக்குப் பயன்படுமாறு உணவு ஏராளமாக உண்டாக்கு. பொருள் உண்டாக்குவது உனக்காக அல்ல. மற்றவர்களுக்காக. எவருக்கும் இடமில்லை என்று சொல்லாதிருப்பாயாக. இதுவே ஒழுக்கம்” இவை உபநிடதங்களிலே காணப்படும் உபதேசங்களுக்குச் சில உதாரணங்கள்

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமனன்)
ஒழுக்கத்துக்கு முதன்மை
ஒழுக்கத்தைப் பாதுகாப்பதே வருணன் எனப்படும் தெய்வத்தின் கடமை என்பதையும், தெய்வங்களுக்கு வருணன் வழங்கப்பட்ட முதன்மையையும் வேதம் கூறுவதாக அறிவோம்.  இதிலிருந்தே, வேதங்களிலே ஒழுக்கம் எவ்வளவு முக்கியமாகக் கருதப்பட்டதென்பதும் புலனாகும். வேதங்கள் மனிதனுடைய கடமைகளை ஐந்தாகப் பிரித்துள்ளன. தெய்வம், ஞானிகள், பிதிரர், உடன் வாழும் ஏனைய மனிதர் ஆகிய நான்கு பகுதியினருக்குமட்டுமின்றிப் பிராணிகளுக்கும் தன்னால் ஆவன செய்ய ஒவ்வொரு மனிதனும் கடமைப்பட்டுள்ளான் என்பது வேதவாக்கு. “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்க ஐம்புலத்தா றோம்பல்தலை” என் வள்ளுவர் கூறுவது இங்கு ஒப்பிடத்தக்கது. பிதிர்கள், தெய்வம், விருந்தினர், உறவினர், தான் ஆகிய ஐவருக்கும் செய்ய வேண்டிய கடமையைக் செய்வது ஒருவனுக்கு அறம் என்பதே இக்குறளின் கருத்து. வேதங்களும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றன. குறளும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றது. வேதமும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றது. அவற்றுள் தென்புளத்தார் தெய்வம் விருந்து ஆகிய மூவரையும் பேண வேணுமென்பது இரண்டுக்கும் பொதுவாயுள்ளது. ஆனால், குறள் ஒருவன் தன்னையும் தன் உறவினரையும் பேணவேணுமெனக் கூரியதற்கும் பதிலாக, வேதங்கள் ஞானிகளையும், மக்கலாலாத ஏனைய பிராணிகளையும் பேணுவது ஒருவனுக்கு அறம் எனக் கூறியிருப்பது ஒப்பிடத்தக்கது. ஒருவன் தன்னைப் பேணுவதை ஓர் அறமாக வேதங்கள் கருதாதது இங்குச் சிந்திக்கத்தக்கது. தன்னைப் பேணுவது பிறரைப் பேணுவதற்குத் தான் நிலைக்களனாய் நின்று பயன்படும் பொருட்டே. எனவே, தன்னைப் பேணுவதும் ஒரு அறமாகுமென வாதாடலாம். எனினும், சுயநலமின்மையே எல்லாவற்றுள்ளும் தலையாய அறமாக வேதங்கள் பேசுவதை இங்குக் குறிப்பிடல் வேண்டும். சதபத பிராமணத்தில் ஒருவன் தனக்குரிய எல்லாவற்றையும் தியாகம் செய்தலே வீடுபேற்றுக்கு வழி எனக் கூறப்பட்டுள்ளது. சுயநலமின்மை, தியாகம் ஆகிய இவற்றோடு சேர்த்து அன்பையும் விருந்தோம்பலையும் மிக முக்கியமான அறங்களாக வேதங்கள் பேசுகின்றன. சூதாடல், பிறன்மனை விழைதல், பொய் பேசுதல் ஆகியவற்றைப் பெரும்பாவங்களாக வேதங்கள் கண்டிக்கின்றன. 

எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரையில் இருந்து (ஒக்கலை ஏறிய உலகளந்தோன்)
ஒக்க என்றால் இணையாக என்று பொருள். இணைந்து என்றும் வரும்.ஒக்கடித்தல் என்றால் சேர்ந்து தாளமிடுதல் என்று வையாபுரிப்பிள்ளையின் அகராதி சொல்கிறது. ஒக்க நோக்குதல் என்றால் சமமாக பாவித்தல். ‘ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்’ என்று தேவாரம்.

ஒக்கல் என்றால் சுற்றத்தார் ‘தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஐம்புலத்தார் ஓம்பல் தலை’ என்று வள்ளுவர். மூதாதையர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தினர், தான் என்று ஐந்து பேரையும் பேணுவது கடமை. ஒக்கலித்தல் என்றால் பேணுதல் என்ற பொருள் இதிலிருந்து வந்திருக்கலாம்.

எழுத்தாளர் ஜெயமோகனின் “தத்துவம் மேற்கும் கிழக்கும்” எனும் கட்டுரையில் இருந்து
இந்திய தத்துவநூல்கள் பெரும்பாலும் சூத்திரங்கள் என்னும் ஒற்றை வரிகளாக இருப்பதைக் காணலாம். அவை இருபட்டை அணுகுமுறை வழியாக அறியப்பட வேண்டியவை. அவற்றைத் தர்க்கபூர்வமாக விளக்கி விரித்து எழுதும் உரைகள் வழியாக அறியும் முறை ஒருபட்டை. அவை தத்துவத்துக்குள் வருகின்றன. அவற்றை தியான மந்திரங்களாக ஆக்கி தியானித்து உபாசித்து அறியும் முறை இன்னொரு பட்டை. அது தத்துவமே அல்ல

உதாரணமாக திருக்குறள்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்று
ஐம்புலத்தார் ஓம்பல் தலை

என்ற குறள் இந்திய தத்துவநூல்களுக்குரிய சூத்திர வடிவில் ஒரு தொன்மையான தரிசனத்தை முன்வைக்கிறது. தென்புலத்தார் என்றால் மூதாதையர். மூதாதையர், தெய்வம், விருந்து ,ஒக்கல் அதாவது சொந்தபந்தங்கள், தான் என ஐந்தையும் பேணவேண்டியது ஒருவனின் கடமை என்கிறது இக்குறள்

உரைகளின் வழியே விதவிதமாக இந்த ஒன்றரை வரி விரியும். தெய்வத்திற்கும் முதலாக தென்புலத்தாரை ஏன் வைத்தார் வள்ளுவர்? ஏனென்றால் அவர்கள்தான் ஆதிதெய்வங்கள். வழிபாட்டின் தொடக்கமே மூதாதையர் வழிபாடுதான். தெய்வம் என பன்மையில் சொல்லவில்லை என்பதைக் கவனிக்கலாம்.

விருந்து என்ற சொல் விருந்தினரை அல்ல சான்றோரையே குறிக்கிறது என விளக்கங்கள் உண்டு. ஒக்கல் என்பது உறவினரை மட்டும் சொல்லவில்லை. அச்சொல் சார்ந்திருப்பவர்களைச் சொல்கிறது. பழைய இல்லறவாழ்க்கையில் பல்வேறு சிறுகைத்தொழிலளர்கள் மற்றும் நாடோடிகள் இல்லறத்தானைச் சார்ந்திருந்தனர். வீட்டு மிருகங்களையும் இதில் சேர்க்கலாமென விளக்கப்படுவதுண்டு

சிந்திக்கும்தோறும் இந்த வரி விரிந்தபடியே போகும். இப்படி சுருக்கமாக, சூத்திரவடிவில் எழுதும் வழக்கம் மேலைச்சிந்தனை மரபில் பிற்காலத்தில்தான் தத்துவ அங்கீகாரம் பெற்றது. நீட்சேயின் ‘இவ்வாறு பேசினான் ஜரதுஷ்டிரன்’ என்ற நூல் முக்கியமான முன்னுதாரணம். பின்னர் விட்ஜென்ஸ்டீனின் நூல்கள்.

இந்த வரியை ஒரு தியானமந்திரமாக கொள்ளும்போது அதையொட்டி ‘சிந்திக்கும்’ பயிற்சியை நாம் திட்டமிட்டு ரத்துசெய்கிறோம். அதைவெறும் சொல்லாட்சிகளாக மட்டுமே எடுத்துக்கொண்டு அச்சொற்கள் நம் அகத்தை ஊடுருவி கனவுத்தளத்தை ஆழத்து அமைதியையும் தீண்ட அனுமதிக்கிறோம்.

எனக்குத்தெரிந்த ஒரு துறவி இவ்வரியை அவரது குருவிடமிருந்து மந்திர உபதேசமாகப்பெற்றார். நாளடைவில் ‘தென்புலத்தார்தெய்வம்விருந்தொக்கல்’ என்ற ஒற்றைவரியாக அது மாறியது. அவர் அதைச் சொல்லும்போது நான் மனம் அதிர்ந்தேன். தென்புலத்தவரே தெய்வமும் விருந்தும் சொந்தமும் ஆகிறார்கள் என்றும் தென்புலத்தாரின் தெய்வம் விருந்தும் சொந்தமும் தான் என்றும், தென்புலத்தார் விருந்தும் தெய்வமும்போன்றவர்கள் என்றும் விதவிதமாக அர்த்தம்கொடுக்க ஆரம்பித்தது அவ்வரி.


சங்கர நாராயணன் என்பவர் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் (குரு: கடிதங்கள்) இவ்வாறு குறிப்பிடுகிறார்
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று
ஐம்புலத்தார் ஓம்பல் தலை

என்று வள்ளுவர் சொல்கிறார். தென்புலத்தார் என்றால் பெற்றோரும் மூதாதையரும். தெய்வம் அதன் பின். விருந்து, சுற்றம், தான் என ஐது தரப்பையும் பேண வேண்டும். சரி, மாதாபிதாகுருதெய்வம் என்னும் கணக்கில் குரு வரவேண்டுமே எங்கே? என்று கேட்டேன். ஒரு நல்ல மாணவர் உடனே பதில் சொன்னார். குருவை நம் ஓம்பவேண்டியதில்லை, குருதான் நம்மை ஓம்புகிறார் என்றார்.

உங்கள் குறிப்பு மிகமிகச் சிறப்பானது. ஏன் குரு உறவு முக்கியமானது? அம்மா நம் உடலை நினைக்கிறாள். அப்பா நம் மரபை நினைக்கிறார். தெய்வம் நம் ஆத்மாவை நினைக்கிறது. நம் ஞானத்தை நினைப்பவர் குரு மட்டும்தான்.

2 comments:

  1. வணக்கம். நன்று>>> நனிநன்று.
    உளம் மகிழ்ந்தேன் 81ஆம் அவையில் இந்நல்லிடுகை வழி.
    நிறைநலத்துடனும் பெருவளத்துடனும்
    நீடு சிறந்து வாழ்க.
    நல்லிடுகைக்கு நன்றியுரித்து.

    Dr. த.இராமலிங்கன், கண்ணாடிக்கலைஞர்,
    மதுரை.
    *9092866868*

    ReplyDelete