ஊடி யவரை உணராமை வாடிய

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால், கற்பியல், புலவி குறள் 1304 ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று
குறள் 1304
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று
[காமத்துப்பால், கற்பியல், புலவி]

பொருள்
ஊடல் -  ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். பொய்க்கோபம் கொள்ளுதல், சிணுங்குதல், கருத்து வேறுபாட்டால் வரும் (சிறிய) பிணக்கு

ஊடி - பொய் சினம் கொண்டு பேசிக்கொள்ளாமல்

ஊடியவரை - ஊடல் செய்த தலைவன்

உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

உணராமை - அறியாமல்

வாடிய - வாடுதல் - உலர்தல்; மெலிதல்; பொலிவழிதல்; மனமழிதல்; தோல்வியடைதல்; கெடுதல்; நீங்குதல்; குறைதல்; நிறைகுறைதல்.

வள்ளி - கொடிவகை; நிலப்பூசணி; தண்டு; கொடிபோன்றுதொடர்ந்திருப்பது; கைவளை; தொய்யிற்கொடி; காண்க:வள்ளித்தண்டை; முருகக்கடவுளின்தேவி; குறிஞ்சிநிலப்பெண்; முருகக்கடவுட்குமகளிர்மனநெகிழ்ந்துவெறியாடுதலைக்கூறும்புறத்துறை; குறிஞ்சிமகளிர்கூத்துவகை; சந்திரன்.

முதல் - ஆதி; இடம்முதலியவற்றில்முதலாயிருப்பது; காரணம்; மூலகாரணனானகடவுள்; முதலானவன்; ஏற்றம்; மூலதனம்; வேர்; கிழங்கு; அடிப்பாகம்; மரம்முதலியவற்றின்அடி; இடம்; அகப்பொருட்குரியநிலம்; பொழுதுகளின்இயல்பு; பிண்டப்பொருள்; செலவுக்காகச்சேமிக்கும்பொருள்; இசைப்பாட்டுள்ஒன்று; சொத்தின்கொள்முதல்விலை; பன்னிருஉயிரெழுத்தும்பதினெட்டுமெய்யெழுத்தும்; தொடக்கமாகவுடைய; ஏழாம்வேற்றுமையுருபு; ஐந்தாம்வேற்றுமையுருபு; பத்திரம்.

அரிந்தற்று
அரிதல் - அறுத்தல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

முழுப்பொருள்
உறவுகளில் தலைவனும் தலைவியும் ஒருவரோடு ஒருவர் ஊடுகின்றனர். ஆனால் அப்படி ஊடியப்பிறகு அதனை சிறிது நேரத்திற்குள் முடிக்காமல் ஊடலை வளர்ப்பதென்பது வாடிய கொடியினை அதன் அடியில் அறுத்தல் போன்றதற்கு ஒப்பாகும். அவ்வுறுவு அறுபட்ட அக்கொடியைப் போன்று பிழைக்காது.

காதலில் ஊடல் இருக்கலாம். ஆனால் ஊடலை முடித்து கூடலில் ஈடுபட்டு காதலை வளர்க்கவேண்டும். காதலை வளர்க்க ஊடலை ஏதுவாக பயன்படுத்தவேண்டும். மாறாக ஊடலை வளர்த்தால் உறவே அறுந்துவிடும்.

எனக்குத் தோன்றிய உதாரணம்:
சக்கரைப்பொங்கலில் சிறிதளவு உப்பு இனிமையை தூக்கி காண்பிக்கும். ஆனால் உப்பு அதிகமானால் அது கரித்துவிடும். அது சக்கரைபொங்கலின் இனிமையை வெகுவாக குறைத்துவிடும். அளவு மீறினால் கரித்துவிடும்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) ஊடியவரை உணராமை - நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று - பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும். ('நீர் பரத்தையரிடத்தில் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற்பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்', என்பதாம்.).

மணக்குடவர் உரை
நும்மோடு ஊடிக்கண்டும் இவையிற்றால் வரும் பயன் இல்லை: நின்னோடு நெருநல் ஊடிய காமக்கிழத்தியரை ஊடல் தீராது பெயர்தல், வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும். இது காமக்கிழத்தியரை ஊடல் தீராமை தீது; ஆண்டுப் போமேன்ற தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain