குறள் 1234
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]
பொருள்
பணை - பருமை; பெருமை; மரக்கொம்பு; மூங்கில்; அரசமரம்; மருதநிலம்; வயல்; நீர்நிலை; குதிரையானைகள்தங்குமிடம்; விலங்கின்படுக்கை; முரசு; வாத்தியம்; மருதநிலப்பறை; உயரம்; பரண்; தவறுகை; ஐந்துஆண்டுகொண்டகாலவளவு; சாணைக்கல்; உலைக்களத்துப்பட்டடை; யானைத்தந்தம்.
நீங்கிப் - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.
பைந்தொடி - பொன்வளையல்; பெண்
சோரும் - சோர்தல் - தளர்தல்; மனம்தளர்தல்; மூர்ச்சித்தல்; நழுவுதல்; கண்ணீர்முதலியனவடிதல்; கசிதல்; கழலுதல்; வாடுதல்; தள்ளாடுதல்; தடுமாறுதல்; இறத்தல்; விட்டொழிதல்; துயரப்படுதல்; உடலின்தைலம்முதலியனஇறங்குதல்.
துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).
நீங்கித் - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.
தொல் - பழைய; இயற்கையான
கவின் - அழகு
வாடிய - வாடுதல் உலர்தல்; மெலிதல்; பொலிவழிதல்; மனமழிதல்; தோல்வியடைதல்; கெடுதல்; நீங்குதல்; குறைதல்; நிறைகுறைதல்.
தோள் - புயம்; கை; தொளை.
முழுப்பொருள்
தலைவி தன்னுடைய பெருமைப் படக்கூடிய அழகினை இழந்துள்ளாள். பிரிவின் துன்பத்திலும் வருத்தத்திலும் மெலிந்துள்ளதால் அவள் கைகளில் இருந்த பொன்வளையல்கள் அவள் கைகளில் இருந்து நழுவுகிறது. மேலும் அவள் மேனியில் இருந்த ஒளி குறைந்துள்ளதால் அதில் இருந்து ஒளி பெரும் பொன்வளையல்களும் இப்பொழுது ஒளியிழந்து சோர்வாக காணப்படுகின்றன. ஏனெனில் தலைவனை பிரிந்துள்ள தலைவி துன்பத்தால் வாடுகிறாள். அதனால் அவள் இயற்கையாக அழகுபடைத்த அவளுடைய தோள்களும் பொலிவிழந்துவிட்டன.
பிரிவினால் வாடுவதால் இயற்கை அழகும் தன்னை விட்டு போய்விட்டது உடலும் மெலிந்துவிட்டது அழகுக்கு அழகு சேர்க்கும் ஆபரணங்களும் அழகு சேர்க்கவில்லை.
பிரிவினால் வாடுவதால் இயற்கை அழகும் தன்னை விட்டு போய்விட்டது உடலும் மெலிந்துவிட்டது அழகுக்கு அழகு சேர்க்கும் ஆபரணங்களும் அழகு சேர்க்கவில்லை.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் - அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால் பெற்ற செயற்கை அழகே அன்றிப் பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும் - இன்று அதற்கு மேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன, இவை இங்ஙனம் செயற்பாலவல்ல. (பெருமை இழத்தல் - மெலிதல். பைந்தொடி - பசிய பொன்னால்செய்த தொடி, 'சோரும்' என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது. 'அன்றும் பிரிந்தார்' என்று அவரன்பின்மை உணர்த்தி, 'இன்றும் குறித்த பருவத்து வந்திலர்' என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; 'இனிஅவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ'? என்பதாம்.).
மணக்குடவர் உரை
துணைவர் நீங்குதலானே பழைய அழகு அழிந்த தோள் பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடாநின்றது. பசுத்த வளை- மரகதத்தினாற் செய்த வளை. தோள் அழகழிதலேயன்றி மெலிவதுஞ் செய்யாநின்றதென்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
மு.வரதராசனார் உரை
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.
சாலமன் பாப்பையா உரை
அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.
No comments:
Post a Comment