வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி குறள் 1194 வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின்
குறள் 1194
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்
[காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி]

பொருள்
வீழ்தல் -  ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

வீழப்படுவார் - ஆசையினால் விழுவார்

கெழீ - கெழுவு -. பொருந்த, நிறைய
keẕuvu   கிறது, கெழுவினது, ம், கெழுவ, v. n. To belong to, to be combined or connected with, பொருந்த. 2. To be full, நிறைய. Compare கெழுமு, and கழுமு--Note. The gerund of the verb is கெழீஇ, in poet ry. என்னைகெழீஇயினர்கொல்லோ. How are they made social and free! (நாலடி.

கெழுவு - நட்பு, keẕuvu   III. v. i. belong to, be full, கெழுமு.

கெழீஇயிலர்  - நண்பர் அல்லர் ;  நம்மவர் அல்லர்.

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

வீழ்வார் - ஆசைப்படுபவர் (காதலர்)

வீழப்படாஅர் - ஆசைப்படாதவர்

எனின் - என்றால்

முழுப்பொருள்
தான் ஆசையாக காதலித்த தலைவன் இப்பொழுது பிரிந்துள்ளான். பல நாட்களாக பிரிந்துள்ளான். பிரிவால் வாடுகிறாள். அப்படி இருக்கையில் தலைவி நினைக்கிறாள், இவ்வளவு நாள் அவன் என்னை வந்து பார்க்கவில்லை. அப்படி என்றால் என்னை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு என் மீது ஆசையில்லை. அதனால் தான் என்னைத் தேடி வரவில்லை.

இப்படி தான் ஆசைப்பட்டவர் என்னை விரும்பாதபொழுது என்னை பலர் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன? ஒரு பயனும் இல்லை. இது காதல் வயப்பட்டவுடன் ஏற்படும் மாற்றம். தலைவன் தலைவியின் வாழ்வில் வந்தப்பிறகு தாய் தந்தை உறவினர்கள் நண்பர்கள் சுற்றத்தார்கள் எல்லாம் இரண்டாம் பட்சமே. ஆதலால் காதலித்தப்பின்புத் தலைவனின் அன்பு மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது என்ற நுட்பமான உளவியலை நாம் இங்கு காணலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
('காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவரருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுதி', என்ற தோழிக்குச் சொல்லியது.) வீழப்படுவார் - கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும்; தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர் - தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர்.(சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. கெழீஇயின்மை: நல்வினையின்மை; அஃது அருத்தாபத்தியால் தீவினையுடைமையாயிற்று. 'தீவினையுடையோற்கு அந்நன்கு மதிப்பால் பயனில்லை', என்பதாம்.).

மணக்குடவர் உரை
நற்குணங்கள் பலவுடையரென்று உலகத்தாரால் விரும்பப்பட்டாரும் தம்மால் காதலிக்கப்பட்டவரால் தாம் காதலிக்கப்படாராயின், விருப்பமில்லாராவர். இது வாழ்க்கையை முனிந்து கூறிய தலைமகளுக்கு நீ இவ்வாறு கூறுவையாயின் நின்னைப் புகழ்கின்ற உலகத்தாருள் மிக வாழ்வார் யாரென்ற தோழிக்கு அவள் கூறியது. கொண்டான் காயிற் கண்டான் காயுமென்பது பழமொழி.

மு.வரதராசனார் உரை
தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.

சாலமன் பாப்பையா உரை
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாதவளாக மனைவி இருந்துவிடுவாளானால், அவள் தீவினை வசப்பட்டவளே.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain