Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

குறள் 1072
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்
[பொருட்பால்,  குடியியல்,  கயமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறிவாரின் - அறிதல் உடையார்

கயமை - கீழ்மை.

கயவர் - கீழ்மையானவர்கள்

திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்.

உடையர் - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள்

நெஞ்சத்து நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

அவலம்  - துன்பம்; வறுமை பலவீனம் கவலை கேடு குற்றம் நோய் அழுகை அவலச்சுவை மாயை பயன்படாதுஒழிதல்; இடப்பக்கம்.

இலர் - இல்லை , who are not

முழுப்பொருள்
அறம் எது நல்லது எது அறமில்லாதது எது கீழ்மையானது எது என்று அறிந்தவர்கள் தான் கயவர்கள் (கீழ்மையானவர்கள்). அவர்கள் ஒன்றும் அதை அறியாதவர்கள் அல்ல. அத்தகைய கயவர்களிடம் மிகுந்த செல்வமும் இருக்கும். எப்படி அவர்களிடம் இவ்வளவு செல்வம்? ஏனெனில் அறத்திற்குப் புறம்பான செயல்களின் மூலம் ஈட்டிய செல்வம் இது என்ற ஒரு குற்ற உணர்ச்சியோ கவலையோ சஞ்சலமோத் துளியும் இல்லாதவர்கள் இவர்கள். அவர்கள் தவறுகளை மறுபடியும் மறுபடியும் செய்வதால் குற்றஉணர்ச்சியே அற்றவர்களாக ஆகிவிடுகின்றனர். அதனால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் ஒரு நாள் அதை இழப்பார்கள்.

தேவைக்கு அதிகமான செல்வம் இருந்தால் மேன்மையானவர்கள் இது நமக்கு அதிகம் என்று எண்ணம் கொண்டு அச்செல்வத்தை மற்றவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் உதவிப்புரிவர்.

ஏன் நாம் ஒரு தவறை பலமுறை தெரிந்தே செய்கிறோம் ?
எழுத்தாளர் ஜெயமோகனின் (மூலம்) வெண்முரசுவில் இருந்து ...

சீடனாகிய சுகுணன் பெருமூச்சுவிட்டு “ஓம்” என்றான். கபிலர் “யாருடைய வரவென நான் அறியலாமா?” என்றார். “என் பெயர் கிந்தமன். காசியபகுலத்தில் குஞ்சரர் என்னும் முனிவருக்கு அப்சரகன்னியில் பிறந்தவன்” சீடனின் வாயிலிருந்து நடுவயதான ஒருவரின் குரல் எழுந்ததைக் கண்டு மாத்ரி திகைத்து மூச்சை இழுத்தாள். “தாங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என அறியலாமா?” என்றார் கபிலர். சுகுணன் “நான் இங்கு அழைக்கப்பட்டேன். இங்கே விழுந்துள்ள விதியின் முடிச்சொன்றை நான் அவிழ்க்கவேண்டுமென விதியே ஆணையிட்டது” என்றான்.

“தங்கள் சொற்களுக்காகக் காத்திருக்கிறோம் முனிவரே” என்றார் கபிலர். சுகுணன் “சந்திரகுலத்தில் விசித்திரவீரிய மன்னரின் மைந்தனாகப்பிறந்த இம்மன்னர் பாண்டு எனக்கு பெரும் தீங்கொன்றை இழைத்தார்” என்றான். பாண்டு திகைப்புடன் எழுந்துகொண்டான். “முதிரா இளமையில் கூதிர்காலத்தில் இமயமலையின் அடிவாரத்திலுள்ள பிங்கலவனம் என்னும் குறுங்காட்டில் அஸ்தினபுரியின் இளவரசரான பாண்டு தன்னுடைய இருபது வேட்டைத்துணைவர்களுடன் யானைமீதமர்ந்து வேட்டைக்குச் சென்றிருந்தார்” என்று சுகுணன் சொன்னதும் பாண்டு அச்சம் குடியேறிய கண்களுடன் அமர்ந்துகொண்டான்.

“அந்த வேட்டையில் பாண்டுவால் ஓடும் செந்நாய்களையோ துள்ளும் மான்களையோ பதுங்கும் முயல்களையோ வேட்டையாடமுடியவில்லை. அவரது விழிகளுக்கு கூர்மையில்லை. அவரது அம்புகள் விழிகளைத் தொடரவும் முடியவில்லை. தன்னால் வேட்டையாடமுடியாதென்று அவர் உணர்ந்தார். ஒருவேட்டைமிருகமாவது கையிலில்லாமல் கானகத்திலிருந்து திரும்பக்கூடாதென அவர் எண்ணியபோது பசும்புதர்களுக்கு அப்பால் இரண்டு மான்கள் நிற்பதைக் கண்டு வில்குலைத்தார்.”

“அப்போது வேட்டைத்துணைவனான குங்குரன் என்ற முதியவன் அரசே, அவை இணைமான்கள், அவற்றைக் கொல்ல வேட்டைத்தெய்வங்களின் ஒப்புதலில்லை என்றான். மிகவும் இளையவராகிய பாண்டு சினத்துடன் திரும்பி அதை நான் அறிவேன், ஆனால் இன்று ஒருவேட்டையேனும் இல்லாமல் திரும்புவதைவிட இந்தப்பாவத்தைச் செய்யவே விரும்புகிறேன் என்று கூவியபடி தன் வில்லை நாணேற்றி தொடர்ச்சியாக ஐந்து அம்புகளால் அந்த மான்களை வீழ்த்தினார்.”

சுகுணன் சொன்னான் “அந்த மான்கள் அம்புபட்டு அலறிவிழுந்தபோது அவற்றின் குரல் மானுடக்குரல் போலவே இருக்கிறது என்று பாண்டு நினைத்தார். வேட்டைத்துணைவர்களும் அவ்வண்ணமே நினைத்தனர். உண்மையில் அது மானுடனாகிய நானும் என் துணைவியாகிய கௌசிகையும்தான்.” பாண்டு நடுங்கும் கைகளை ஒன்றுடன் ஒன்று கோத்துக்கொண்டு வெளுத்த உதடுகளுடன் அமர்ந்திருந்தான். சாளரத்திரைச்சீலைகள் காற்றில் பறந்து அமைந்தன.

“முற்பிறவியில் நான் தித்திரன் என்னும் முனிவனாக இருந்தேன். ஐந்துவயதிலேயே ஞானம்தேடி கானகம் சென்று கடுந்தவம் செய்து உடல்துறந்து விண்ணகமேகினேன். ஏழு பிரம்ம உலகங்களை என் தவத்தால் கடந்து நான் விண்ணளந்தோன் வாழும் வைகுண்டத்தின் பொற்கதவம் முன் நின்றேன். அங்கே காவல்நின்றிருந்த ஜயனும் விஜயனும் என்னை அதிலிருந்த சின்னஞ்சிறு துளைவழியாக உள்ளே செல்லும்படி ஆணையிட்டனர். நான் உடலைச்சுருக்கி நுண்வடிவம் கொண்டு உள்ளே நுழைந்தேன். என் இடதுகையின் கட்டைவிரல் மட்டும் உள்ளே நுழையாமல் வெளியே நின்றுவிட்டது.”

”திகைத்து நின்ற என்னை நோக்கி ஜயவிஜயர் முனிவரே உங்கள் ஆழத்தின் அடித்தட்டில் முளைக்காத விதை ஏதோ ஒன்று உள்ளது. அனைத்தும் முளைத்துக் காய்த்துக் கனிந்தவர்களுக்கன்றி வைகுண்டத்தில் இடமில்லை என்றனர். நான் என் அகத்தை கூர்ந்து நோக்கியபோது என்னுள் கடுகை பல்லாயிரத்தில் ஒன்றாகப் பகுத்தது போல சின்னஞ்சிறு காமவிழைவு எஞ்சியிருப்பதைக் கண்டேன். அதை நிறைக்காமல் என்னால் உள்ளே நுழையமுடியாதென்று உணர்ந்தேன். முனிவரே இங்கே ஒருகணமென்பது மண்ணில் ஏழு பிறவியாகும். சென்று வாழ்ந்து நிறைந்து மீள்க என்றனர் ஜயவிஜயர்.”

“நான் காட்டில் நீத்த உடல் மட்கி மறைந்த மண்மீது அமர்ந்து தவம்செய்த குஞ்சரர் என்னும் முனிவரின் சித்தத்தில் குடியேறி அவர் விந்துவில் ஊறி பாத்திவப் பிந்துவாக ஆனேன். காமம் எழுந்து விழிதிறந்த குஞ்சரர் அந்தவனத்தில் மலருண்ண வந்த சதானிகை என்னும் அப்சரகன்னி ஒருத்தியைக் கண்டார். அவளை நான் அவருடலில் இருந்து அழைத்தேன். அவ்வழைப்பைக்கேட்டு அவள் அருகே வந்தாள். அவளுடன் அவர் இணைந்தபோது நான் என் உருவை மீண்டும் அடைந்தேன். கிந்தமன் என்ற மகனாகப் பிறந்து அவரது தழைக்குடிலில் வளர்ந்தேன்.”

“என் முதிராஇளமையில் ஒருநாள் தந்தை சொற்படி ஊழ்கத்தில் இருக்கையில் வைகுண்டவாயில் முன்னால் ஒரு எளிய கற்பாறையாகக் கிடந்த தித்திரனை நான் கண்டேன். நான் யாரென்று உணர்ந்தேன். என் இடக்கையின் கட்டைவிரலை என் தவத்தால் அழகிய இளம்பெண்ணாக ஆக்கிக்கொண்டேன். அவளுக்கு கௌசிகை என்று பெயரிட்டு என் துணைவியாக்கினேன். அவளுடன் காமத்தை முழுதறியத் தலைப்பட்டேன். ஒருபிறவியிலேயே எழுபிறப்பின் இன்பத்தையும் அறிந்து கனிய எண்ணினேன்.”

“என் இனிய துணைவி கௌசிகையும் நானும் ஊர்வன நீந்துவன பறப்பன நடப்பன என்னும் நால்வகை உயிர்களாகவும் வடிவெடுத்து காமத்தை அறிந்துகொண்டிருந்தோம். மானாக அந்த அழகிய பிங்கலவனத்தில் துள்ளிக்குதித்தும், தழுவியும் ஊடியும், சுனைநீர் அருந்தியும், நறும்புல்தளிர்களை உண்டும் மகிழ்ந்தோம். இணைசேர்ந்து முழுமையை அறிந்துகொண்டிருந்த கணத்தில் பாண்டுவின் அம்புபட்டு எங்கள் காமத்தவம் கலைந்தது. உடலும் உள்ளமும் பிரிந்து நாங்கள் விழுந்தோம். எங்கள் உடல்களை பாண்டுவின் வேட்டைக்குழு எடுத்துச்செல்வதை அந்தக் காட்டின் காற்றுவெளியில் நின்றபடி திகைத்து நோக்கிக்கொண்டிருந்தோம்.”

பாண்டு எழுந்து கைகளை வீசி “நான் ஓர் அரசனுக்குரிய செயலையே செய்தேன்! வேட்டையும் போரும் அரசனுக்குப் பாவமல்ல” என்று சிதறிய குரலில் கூவினான். சீற்றத்துடன் அவனைநோக்கித் திரும்பிய சுகுணன் “ஆம், அது நெறி. ஆனால் அந்நெறிதான் இணைசேர்ந்திருக்கும் உயிர்களையும் துயிலில் இருக்கும் உயிர்களையும் கொல்லலாகாது என்று விலக்குகிறது. புணரும் உயிரின் விந்துவில் வாழும் உயிர்களை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை. கனவில் எழும் மூதாதையரைக் கலைக்கவும் எவருக்கும் உரிமை இல்லை” என்றான். அந்தச்சீற்றத்தைக் கண்டு பாண்டு முகம் சிவக்க கண்கள் நீர் நிறைய அப்படியே அமர்ந்துவிட்டான்.

“காமமும் கனவும் அனைத்துயிருக்கும் உரிமைப்பட்டவை. காமத்திலும் கனவிலும் உயிர்களின் அகம் பெருகுகிறது. அப்போது ஓர் உடலை அழிப்பவன் இரு அகங்களை அழிக்கிறான். அவன் அந்த இரண்டாவது அகத்திற்கான பொறுப்பை ஏற்றே ஆகவேண்டும். நீ பிழைசெய்துவிட்டாய். ஆகவே என் சாபத்தை நீ அடைந்தேயாகவேண்டும்.” பாண்டுவின் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு கன்னங்களில் வழிந்தது. அவன் உதடுகளை அழுத்தியபடி கைகூப்பினான்.

வளையலோசை கேட்டு குந்தி நிமிர்ந்து அம்பாலிகையைக் கண்டாள். அவள் கண்களில் தெரிவதென்ன என்று அவளால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அறியாத விண்ணாழத்தில் இருந்து மண்ணுக்குவந்த தெய்வம் போல அவள் தோன்றினாள். நகைக்கிறாளா அழுகிறாளா என்று அறியமுடியாதபடி முகம் விரிந்திருக்க உதடுகள் இறுக்கமாக ஒட்டியிருந்தன.

“அன்று அந்தக் காற்றுவெளியில் நின்றபடி நான் தீச்சொல்லிட்டேன். நீ ஒருநாளும் காமத்தை அறியமாட்டாய் என்றேன். காமத்தை உன் உடலும் உள்ளமும் அறிந்துகொண்டிருக்கும். தீப்பற்றிக்கொள்ளாத அரணிக்கட்டை போல உன் அகம் முடிவில்லாது உரசிக்கொண்டிருக்கும். அவ்வெம்மையில் நீ தகிப்பாய். என்னைப்போலவே உன் உள்ளம் கவர்ந்த தோழியையும் நீ அடைவாய். ஆனால் அவளுடன் கூடும்போது அக்காமம் முதிராமலேயே நீ உயிர்துறப்பாய்.”

பாண்டு கைகூப்பியபடி “நான் அச்செயலைச் செய்யும்போதே அதன் விளைவையும் அறிந்திருந்தேன் என இன்று உணர்கிறேன் முனிவரே. அது நோயுற்ற குழந்தையின் வன்மம். இயலாத உடலில் கூடும் குரூரம். என் அகம் மீறிச்செல்ல விழைந்துகொண்டிருந்த வயது அது. என் உடலின் எல்லைகளை என் அகத்தின் எல்லைகளை நான் கற்பனையால் கடந்துசென்றுகொண்டிருந்தேன். அந்த விசையால் அறத்தின் எல்லைகளையும் கடந்துசென்றிருக்கிறேன். கடந்துசெல்லும்போது மட்டுமே நான் இருப்பதை நான் உணர்ந்தேன். எனக்கும் வலிமையிருக்கிறது என்று அறிந்தேன்.”

தலையை தன் கைகளில் சேர்த்து முகம் குனித்து தளர்ந்த குரலில் பாண்டு தொடர்ந்தான் “அந்த நாளை இன்றும் நினைவுகூர்கிறேன். இணைசேர்ந்து நின்ற மான்களை நான் ஏன் கொன்றேன்? வேட்டைக்காக மட்டும் அல்ல. அது மட்டும் அல்ல. அவை நின்றிருந்த இன்பநிலைதான் அதற்குக் காரணம். ஆம், அதுதான். அவற்றைக்கொல்ல நான் எண்ணிய கணம் எது? அவற்றில் அந்த ஆண்மான் உடலின்பத்தில் திளைத்து தன் பெரிய பீலிகள் கொண்ட இமைகளைத் தாழ்த்தி கண்மூடியது. அதைக்கண்ட கணமே நான் என் அம்புகளை எடுத்துவிட்டேன்.”

“அம்புகள் ஒன்றன் மீது ஒன்றாக மான்களைத் தைத்தன. ஐந்து அம்புகள். முதல் அம்பு என் கையை விட்டெழுந்தபோது என் அகம் குற்றவுணர்வு கொண்டு சுருண்டது. ஆனால் அடுத்த அம்பு அக்குற்றவுணர்ச்சியைச் சிதறடித்தது. என் உடல் உவகையில் அதிர்ந்தது. அதுவும் ஒரு காமம் என்பதைப்போல. அடுத்தடுத்த அம்புகள் வழியாக நான் இன்பத்தின் உச்சம் நோக்கிச் சென்றேன். என் கண்கள் கலங்கி உடல் சிலிர்த்துக்கொண்டிருந்தது. பாவம் போல பேரின்பம் வேறில்லை என அன்று அறிந்தேன். ஏனென்றால் பாவம்செய்பவன் தன்னைப் படைத்த சக்திகளை பழிவாங்குகிறான்.”




“அம்புகள் தசையில் சென்று குத்திநிற்பதை, அந்தத் தசைகள் அதிர்ந்து துடிப்பதை, குருதி மெல்லத்தயங்கி ஊறிக்கசிவதை, அம்பின்விசையில் நிலைதடுமாறி அவை எட்டுகால்களும் மாறிமாறி ஊன்ற சரிந்து மண்ணில் விழுவதை அவற்றின் இளமையான வால்களும் விரிந்த காதுகளும் துடிப்பதை நீள்கழுத்துக்கள் மண்ணில் எழுந்து விழுந்து அறைபடுவதை ஓடுவதைப்போல குளம்புகள் காற்றில் துழாவுவதை இத்தனைநாளுக்குப்பின்னும் கனவு என துல்லியமாக நினைவுறுகிறேன்.”

“அப்போதும் அவற்றின் உடல் இணைந்திருந்தது” என்றான் பாண்டு. “ஆம், அதை நான் மறக்கவேயில்லை. ஒவ்வொரு முறை நினைவுகூரும்போதும் என் உடலை அதிரச்செய்வது அதுதான். அவை இணைந்தே இறந்தன. நான் நேற்று மாத்ரியுடன் இருக்கையில் என் அகம் முழுக்க நிறைந்திருந்த காட்சியும் அதுவே. நினைவிழந்து சரிவதற்கு முன் நான் இறுதியாக எண்ணியது அதைப்பற்றித்தான்.”

சத்யவதி “தவசீலரே, வரமருளவேண்டும். பாவங்களனைத்தும் பொறுத்தருளப்படும் பேருலகைச் சேர்ந்தவர் நீங்கள். தங்கள் சினம் தணியவேண்டும். என் குழந்தைக்கு தங்கள் அருளாசி வேண்டும்” என்று கைகூப்பினாள். “பேரரசி, அக்கணத்துக்கு அப்பால் நான் சினமேதும் கொள்ளவில்லை. அக்கணமெனும் மாயையை கடந்ததுமே வாழ்வும் மரணமும் ஒன்றே என்றறிந்துவிட்டேன். ஆனால் பிழையும் தண்டனையும் ஒரு நிறையின் இரு தட்டுகள். அவை என்றும் சமன்செய்யப்பட்டிருக்கவேண்டும். அவற்றை மீற தெய்வங்களாலும் ஆகாது” என்றான் சுகுணன்.

சுகுணன் “நேற்றைத் திருத்த எவராலும் இயலாது என்பது வாழ்வின் பெருவிதி. அதை அறிபவர் கூட நாளையைத் திருத்த இக்கணத்தால் முடியும் என்ற பெருவிந்தையை அறிவதில்லை” என்று தொடர்ந்தான். “உங்கள் சிறுமைந்தனுக்கு என் அருளாசிகளை அளிக்கிறேன். அவன் மைந்தரால் பொலிவான். இழந்த காமத்தின் பேரின்பத்தை பலநூறுமடங்காக பிள்ளையின்பத்தால் நிறைப்பான். போர்முதல்வனும் அறச்செல்வனும் ஞானத்தவத்தவனும் சென்றடையும் முழுமையின் உலகையும் இறுதியில் சென்றடைவான். அவனுடன் காமநிறைவடையாத பெண் எவளோ அவள் அவனை அவ்வுலகுக்கு வழிகாட்டி அழைத்துச்செல்வாள். தன் பொற்கரங்களால் அவனுடைய அனைத்து வாயில்களையும் அவளே திறந்துகொடுப்பாள். ஆம், அவ்வாறே ஆகுக!”


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர் - தமக்குறுதியாவன அறிவாரின் அவையறியாத கீழ்மக்கள் நன்மையுடையார்; நெஞ்சத்து அவலம் இலர் - அவர்போல அவை காரணமாகத் தம்நெஞ்சத்தின்கண் கவலையிலராகலான். (நன்று என்பது சாதியொருமை. உறுதிகளாவன, இம்மை மறுமை வீடுகட்கு உரியவாய புகழ் அற ஞானங்கள். இவற்றை அறிவார் இதைச் செய்யாநின்றே 'மிகச் செயப்பெறுகின்றிலேம்' என்றும், செய்கின்ற இவைதமக்கு இடையூறு வருங்கொல் என்றும், இவற்றின் மறுதலையாய பழி பாவம் அறியாமை என்பனவற்றுள் யாது விளையுமோ என்றும் இவ்வாற்றான் கவலை எய்துவர்; கயவர் அப் புகழ்முதலிய ஒழித்துப் பழி முதலிய செய்யாநின்றும் யாதும் கவலை உடையரல்லராகலான், 'திருவுடையர்' எனக் குறிப்பால் இகழ்ந்தவாறு. இதனான் பழி முதலியவற்றிற்கு அஞ்சார் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நன்மையறிவாரினும் கயவர் திருவுடையர்; இம்மை மறுமைக்கு உறுதியாயின செய்யப்பெறுகிலோமென்னும் கவற்சி நெஞ்சின்கண் உறுதலிலராதலான். இது தாமறியா ரென்பது.

மு.வரதராசனார் உரை
நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.

சாலமன் பாப்பையா உரை
நல்லது கெட்டதை அறிந்தவரைக் காட்டிலும் கயவர் செல்வம் உடையவர் ஆவர்; காரணம், கயவர் நல்லத கெட்டது என்ற கவலையே நெஞ்சில் இல்லாதவர்.

English Meaning - As I taught a kid - Rajesh
A person knows does wrong things is aware about what is wrong and what is right. Such a person is very wealthy and does not feel guilt of their sins or accumulating more money than required and for not giving back that money to the society. They do not feel guilty because doing bad or wrong things has become a habit for them (First time there is guilt. Second and third time, they kill that guilt and derive pleasure out of it. Hence, it becomes an habit without guilt). Similarly accumulating ill wealth has become a habit.


Questions that I ask to the kid
Who does not have a guilt in their heart? Why?
A person has a lot of wealth through wrong means. What is your comment about it? How does he sustain that wealth?

How come a person does not have guilt when they do it for long? Because a person does it multiple times means they don't have guilt? 

No comments:

Post a Comment