தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக

thirukkural meaning விளக்கம் பொருட்பால், குடியியல், நல்குரவு குறள் 1043 தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை
குறள் 1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
தொல் - பழைய; இயற்கையான

வரவும் - வரவு - வருவாய்; வருகை; வரலாறு; விளைவு; வழி; வணங்குகை

தோலும் - சருமம்; உடம்பின்; மேலுள்ளதோல்'புறணி; விதையின்மேற்றோல்; கேடகம்; துருத்தி; மெல்லென்றசொல்லால்விழுமியபொருள்பயப்பச்செய்யும்நூல்; புகழ்; அழகு; சொல்; யானை; தோல்வி; நற்பேறின்மை; உடம்பு; பக்கரை; மூங்கில்.

கெடுக்கும் - கெடுத்தல் - அழித்தல்; பழுதாக்குதல்; ஒழுக்கங்கெடுத்தல்; அவமாக்குதல்; செயலைத்தடைசெய்தல்; இழத்தல்; நீக்குதல்; நஞ்சுமுதலியவற்றைமுறியச்செய்தல்; முறியடித்தல்; காணாமற்போகுதல்

தொகையாக - கூட்டம்; சேர்க்கை; கொத்து; மொத்தம்; பணம்; எண்; கணக்கு; தொக்குநிற்றல்; திரட்டுநூல்; விலங்குமுதலியவற்றின்திரள்; கூட்டல்; தொகுத்துக்கூறுகை; வேற்றுமைத்தொகைமுதலியதொடர்சொற்கள்

நல்குரவு - வறுமை

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

நசை - ஆசை; அன்பு; நம்பிக்கை; எள்ளல்; குற்றம்; ஈரம்.

முழுப்பொருள்
வறுமையினை ஆசையாக ஒருவர் ஏற்றால் என்னவாகும்? அதாவது செயல் ஆற்றாது பொருள் ஈட்டாது இருத்தல். அறம் பொருள் இன்பம் வீடு என்பது மனிதன் ஆற்றவேண்டிய நான்கு வேடங்கள். அறம் என்னும் தர்மத்தை (தனது வேலைகளை, செயல்களை, பொறுப்புகளை) ஆற்றினால் தான் பொருள் ஈட்ட முடியும். அப்படி பொருள் ஈட்டாமல் இருந்தால் தொன்மையான தன் குடியின் செல்வங்களும் புகழும் மொத்தமாக அழிந்துபோகும். 

ஏழ்மை, அது தரும் வளமின்மை இவைத் தவறாக தூண்டும் ஆசையினால் திருடவும், பிறர் பொருளுக்கு ஆசைப் படுதலையும் தூண்டுமென்பது பொதுவாக உணரப்படுவது.

இப்படி (பொருள், கல்வி, உடல், உறவுகள் போன்ற) செல்வங்களை ஒருவர் இழந்தால் அவர் உடலாலும் மனதாலும் நோய்வாய் பட்டு துன்பப்படுவார் என்பதை சொல்லி அறியவேண்டியது இல்லை.

“பசி வந்திட பத்தும் பறந்துபோகும்” என்ற சொலவடை நன்கு அறியப்பட்ட ஒன்றே.

இன்மையைப்பற்றி நாலடியார் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது. பாய்ந்து ஒலிக்கின்ற அருவிநீர் கற்களின் மேற்புறத்தைக் கழுவுகின்ற கூட்டமான மலைகளையுடைய சிறந்த நாடனே! உலகத்தில் வறுமை பொருந்தியவர்க்கு அவர் பிறந்த குலத்தின் பெருமை கெடும்; அவருடைய பேராற்றல் கெடும்; எல்லாவற்றிற்கும் மேலான அவர்தம் கல்வி நிலையுங் கெடும். இனி அப்பாடலானது.

பிறந்த குலமாயும்; பேராண்மை மாயும்
சிறந்ததங் கல்வியும் மாயும் – கறங்கருவி
கன்மேற் கழூஉங் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு (நாலடி 285)

நான்மணிக்கடிகை பாடல் வரியும், “நலனும் இளமையும் நல்குரவின் கீழ் சாம்” (நான்மணி 81) என்று கூறுகிறது.

மணிமேகலை காப்பியத்தில், பாத்திரம் பெற்ற காதையில், கூறப்படும் வரிகளும் இதே கருத்தையே அழகாகக் கூறுகின்றன.

“குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும் 
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் 
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும் 
பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் 
பசிப்பிணி என்னும் பாவி…” (மணி 11:76-80)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல்குரவு என்னும் நசை - நல்குரவு என்று சொல்லப்படும் ஆசை; தொல் வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும் - தன்னால் பற்றப்பட்டாருடைய பழைய குடிவரவினையும் அதற்கு ஏற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும். (நசையில் வழி நல்குரவும் இல்லையாகலின், நல்குரவையே நசையாக்கி, அஃது அக்குடியின் தொல்லோர்க்கு இல்லாத இழிதொழில்களையும் இளிவந்த சொற்களையும் உளவாக்கலான், அவ்விரண்டனையும் ஒருங்கு கெடுக்கும் என்றார். 'குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்' (மணி.11-76) என்றார் பிறரும். தோலாவது 'இழுமென் மொழியால் விழுமியது நுவறல்' (தொல். பொருள். செய்யுள் .239) என்றார் தொல்காப்பியனாரும். இதற்கு 'உடம்பு' என்று உரைப்பாரும் உளர். அஃது அதற்குப் பெயராயினும் உடம்பு கெடுக்கும் என்றற்கு ஓர் பொருட்சிறப்பு இல்லாமை அறிக.).

மணக்குடவர் உரை
தொன்றுதொட்டு வருகின்ற குடிப்பிறப்பினையும் வடிவழகினையும் ஒருங்கு கெடுக்கும்; நல்குரவென்று சொல்லப் படுகின்ற ஆசைப்பாடு. நல்குரவு ஆசையைப் பண்ணுதலினால் ஆசையாயிற்று. தொல்- ஆகுபெயர். இது குலத்தினையும் அழகினையும் கெடுக்குமென்றது.

மு.வரதராசனார் உரை
வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain