ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு
ஊனைக் -ஊன் - தசை, இறைச்சி; கொழுப்பு; உடம்பு
குறித்த - நோக்கி
குறித்தல் - கருதுதல்; தியானித்தல்; வரையறுத்தல்; கோடுவரைதல்; குறித்துக்கொள்ளுதல்; சுட்டுதல்; பற்றுதல்; இலக்குவைத்தல்; அடைதல்:பாவித்தல்; சொல்லுதல்; முன்னறிவித்தல்; ஊதியொலித்தல்.
உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்
எல்லாம் - முழுதும்
நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.
நன்மை - நலம்; பயன்; உதவி; சிறப்பு; நன்னெறி; நற்குணம்; ஆக்கம்; நற்செயல்; நல்வினை; வாழ்த்துமொழி; மிகுதி; மேம்பாடு; புதுமை; அழகு; நல்லருள்; காண்க:நன்மையாதல்.
குறித்தது - குறித்தல் - கருதுதல்; தியானித்தல்; வரையறுத்தல்; கோடுவரைதல்; குறித்துக்கொள்ளுதல்; சுட்டுதல்; பற்றுதல்; இலக்குவைத்தல்; அடைதல்:பாவித்தல்; சொல்லுதல்; முன்னறிவித்தல்; ஊதியொலித்தல்.
சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி.
முழுப்பொருள்
உயிரானது உடலை பற்றிக்கொண்டு இருக்கும். ஆதலால் அவ்வுடலை பேண வேண்டியது நம் கடமை. உடல் இல்லையென்றால் உயிரும் இல்லை. அதுப்போல உயிர் இல்லையென்றால் உடலுக்கு பிணம்/சவம் என்றே அழைக்கப்படும்.
உயிரும் உடலும் எப்படி ஒன்றுக்குடன் தொடர்புடையதோ அதுப்போலவே சான்றாண்மையும் (மேன்மையும்) நாணமும் ஒன்றுக்குடன் தொடர்புடையது. மேன்மையெனப்படுவது நல்லவற்றை செய்து தீயவற்றை செய்யாது இருப்பது. தீயவற்றை செய்யாது இருக்க நாணம் அவசியம். அந்த நாணம்/வெட்கம் இல்லையெனில் ஒருவர் தீமை செய்ய கலங்கவே மாட்டார். ஆதலால் ஒருவர் சான்றாண்மை பெற நாணம் அவசியம். அதேப்போல் இந்த நாணம் மட்டும் இருந்து நல்ல காரியங்களை செய்யாது இருந்தால் அதுவும் மேன்மை தராது. ஒருவகையில் நல்லவனவற்றை செய்யாது இருந்தாலும் நாணம் நம்மை நாணச்செய்யும். நாணம் என்னும் நன்மை என்று கூறுகிறார் திருவள்ளுவர் ஏனெனில் நாணம் நமக்கு நற்பயன் தருகிறது, மேம்படச்செய்கிறது, நன்னெறிப்படுத்துகிறது.
உயிர் நீங்கினால் சவம் ஆவதுபோல ஆவோம் நாணம் நீங்கினால் மேன்மை நீங்கும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா: சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது - அது போலச் சால்பு என்னும் நன்மைக் குணத்தைத் தனக்கு நிலைகளனாகக் கொண்டு, அதனை விடாது. ('உடம்பு' என்பது சாதியொருமை. நன்மை - ஆகுபெயர். உயிர் உடம்போடு கூடியல்லது பயனெய்தாதவாறு போலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். 'ஊணைக் குறித்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்.
மணக்குடவர் உரை
பலவகை உயிரும் மேற்கூறிய எல்லாவற்றினும் உண்டியைக் கருதிற்று: அதுபோலச் சால்பு, நாணமாகிய நன்மையைக் கருதிற்று. இது சான்றோர்க்கு நற்குணங்கள் பலவும் வேண்டுமாயினும், இஃது இன்றியமையாதென்றது.
மு.வரதராசனார் உரை
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.
சாலமன் பாப்பையா உரை
எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.
காந்தியின் வாழ்வும் குறளும் (நன்றி: பா ல சு ந் த ரி)
வழக்கு இனிதே முடிந்து விட்டதால் இந்தியாவுக்குத் திரும்ப முடிவு செய்தார் காந்தி. அப்துல்லா சேத் ஒரு பிரிவு உபசார விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது ஒரு பத்திரிக்கை செய்தி காந்தியை ஈர்த்தது. அந்த செய்தி: நோட்டால் சட்டசபைக்கு உறுப்பினரை தேர்வு செய்ய இந்தியருக்கு இருந்த உரிமை பறிப்பு பற்றிய செய்தி. இது குறித்து அப்துல்லா சேத்திடம் விவரம் கேட்கிறார் காந்தி. எங்களுடைய அட்டர்னியான ஸ்ரீ எஸ் கோப்புதான் இது பற்றி எங்களிடம் கூறினார். அவருக்கும் கப்பல் துறை என்ஜினியருக்கும் ஆகாது. எனவே தேர்தலில் தன்னைத் தோற்கடித்து விடுவார் என்று பயந்தார்.
எனவே, அவருடைய ஆலோசனையின் பேரில் நாங்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்து ஓட்டுப் போட்டோம். அதைத்தான் இப்போது ரத்து செய்ததாகக் கூறி இருக்கிறார்கள். இதனால் என்ன நன்மை தீமை என்று படிக்காத எங்களுக்கும் புரியவில்லை என்று விவரமாக கூறினார் சேத். இதன் பின்விளைவுகளை அறிந்த நீங்களே எங்களை முன் நின்று வழி நடத்த வேண்டும். உங்கள் தலைமையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்றார் சேத். இதனை விருந்துக்கு வந்த அனைவரும் வழிமொழிய இன்னும் ஒரு மாதம் காந்தியின் பயணம் ஒத்தி போடப்பட்டது.
காந்தி ஒரு பாரிஸ்டர், எனவே அவருடைய இந்தப் பணிக்கு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஊதியத்திற்கு என்ன ஏற்பாடு செய்வது? என்று அப்துல்லா சேத் வினவினார். பொது சேவைக்கு எனக்குக் கட்டணம் தேவையில்லை. அப்படி கட்டணம் பெற்றுக்கொண்டால் அதற்குப் பெயர் பொது சேவையே அல்ல. ஆனாலும், இந்த வேலையை முடிக்கப் பலவேறு செலவுகல் உண்டு. நிறைய சட்ட புத்தகங்கள் வாங்க வேண்டும். பலருக்குத் தந்தி கடிதங்கள் அனுப்ப வேண்டும், பலரை நேரில் சந்திக்க வேண்டும். அத்துடன் பல பிரசுரங்கள் அச்சடிக்க வேண்டும். இவற்றுக்கு ஆண்டுக்கு குறைந்த பட்சம் 300 பவுடன் ஆகும். அதற்கு நன்கொடை வசூலிக்க வேண்டும். இதற்கு ஆள்பலமும், பணபலமும் தேவை என்று தெளிவுபடுத்தினார் காந்தி.
தங்களுடைய மொழி, மதம், இனம் என்ற வேறுபாடுகளை மறந்து அனைவரும் புலம் பெயர்ந்த இந்தியர் என்று ஒருங்கிணைந்தனர். 10,000 கையெழுத்துக்கள் பெறப்பட்டன. “வோட்டுரிமை ரத்து செய்வது கூடாது!” என்ற மகஜர் அரசுக்கு அனுப்பப்பட்டது. அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியாகி ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த மசோதாவை அரசு நிறைவேற்றியது. பல நொண்டி சாக்குகளைக் கூறி இந்தியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தது அரசு. அனைத்து வேலைகளையும் உறுப்பினர்கள் தங்கள் சொந்த செலவிலேயே செய்தனர்.
இந்த போராட்டம் தொடர, காந்தியின் வழிகாட்டுதல் தேவை. எனவே அவர் இன்னும் சிலகாலம் நோட்டாலில் தங்க வேண்டும் என்று அனைவரும் விரும்பினர்.
தன்னுடைய தரப்பை எடுத்துக் கூறினார் காந்தி பொதுமக்கள் செலவில் என்னால் வாழ இயலாது. நான் இங்கு தங்கி வாழ குறைந்தபட்சம் ஆண்டுக்கு 300 பவுன் தேவைப்படும். எனவே அந்த தொகைக்கு ஈடான சட்டப்பணிகள் எனக்குக் கிடைக்குமானால் நான் தங்குவது சாத்தியம் என்றார் காந்தி.
உங்களுடைய பொது வேலைக்காக நாங்கள் ஆண்டுக்கு 300 பவுன் வசூலித்துக் கொடுக்கிறோம். அதுவல்லாமல் தனியாக தாங்கள் வெளியில் வழக்குகளையும் கவனிக்கலாம் என்றார்கள். பொது ஜன சேவைக்கு நான் ஊதியம் வாங்க விரும்பவில்லை. உங்களை வேலை வாங்குவது மட்டுமே எனது வேலை. அதற்கு ஏன் ஊதியம்? சங்கப் பணிக்காக மட்டுமே நிதி திரட்ட வேண்டும்.
எனக்கு சட்டப் பணிகள் கிடைத்தால் மட்டுமே போதும் என்று தெளிவாகக் கூறிவிட்டார் காந்தி. அதன்படி 20க்கும் மேற்பட்ட இந்தியரின் வழக்குகளை ஓர் ஆண்டுக்குக் காந்தியே கவனிக்க வேண்டும்; அதற்கு ஊதியம் ஆண்டுக்கு 300 பவுன் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் நேட்டாலில் குடியேறினார் காந்தி.
பொது வேலைக்கு ஊதியம் பெற நாணப்பட்டார். அப்படி ஊதியம் பெற்றுக் கொண்டு ஊழியம் செய்தால் அது பொது சேவையே அல்ல! என்பது காந்தியின் வாதம்.
இதைத்தான் வள்ளுவன் கூறினார்.
குறள் 1013
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு
Join the conversation