சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை

thirukkural meaning விளக்கம் பொருட்பால், அரணியல், அரண் குறள் 744 சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண்
குறள் 744
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்
[பொருட்பால், அரணியல், அரண்]

பொருள்
சிறு - சிறிய - ciṟiya   சிறு, (adj.) (சிறுமை) little, small, inferior, சின்ன, Note:- Before a substantive beginning with a vowel சிறு becomes சிற்று.

காப்பின் - காப்பு - பாதுகாவல்; காவலாயுள்ளது; காப்புநாண்; தெய்வவணக்கம்; காப்புப்பருவம்; திருநீறு; கைகால்களில்அணியும்வளை; வேலி; மதில்; கதவு; அரசமுத்திரை; ஏட்டுக்கயிறு; காவலானஇடம்; ஊர்; திக்குப்பாலகர்; சிறை; மிதியடி; அரசன்நுகர்பொருள்.

பேர் - பெயர்; ஆள்; உயிரி; புகழ்; பெருமை; பொலிவு.

இடத்தது - இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

ஆகி - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

உறு  - மிகுதி; மிக்க; பகை; போர்

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

ஊக்கம்  - உள்ளக்கிளர்ச்சி, மனவெழுச்சி; உள்ளத்தின்மிகுதி; முயற்சி; வலிமை; உயர்ச்சி; மேற்கொண்டஎண்ணம்; உண்மை

அழிப்பதுஅழிவு - கேடு; தீமை செலவு வறுமை வருத்தம் மனவுறுதியின்மை; தோல்வி கழிமுகம்

அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்

முழுப்பொருள் 
இயற்கை வளங்களான மலைகள் ஆறுகள் கடல்கள் பாலைவனங்கள் காடுகள் நாட்டிற்கு அரண்களாக அமைந்தால் பகைவர்கள் அதனை கண்டு மலைத்துப்போய் அந்த நாட்டிடம் தரைமார்க்கமாக நெருங்க மாட்டார்கள். ஆனால் எல்லா நாடுகளுக்கும் இயற்கை வளங்கள் எல்லையில் அரணாக அமைய முடியாது.

ஆனால் நாட்டின் சில இடங்களில் முக்கியமாக எல்லைகளில் பாதுக்காப்பு பெரிய அளவில் இருக்கவேண்டும். அந்த பெரிய பாதுகாப்பின் உறுதியானதாக இருத்தல் வேண்டும். வலிமையான பகைவராயினும் அவர்களுடைய முயற்சிகளையும் மனவெழுச்சியையும் அழிக்கவல்லதாய் இருக்க வேண்டும். அவ்வாறான பாதுக்காப்பே நாட்டிற்கு சிறந்த அரண். 

இன்றைய காலகட்டத்தில் வான்வழி தாக்குதல்களும், கடல்வழி தாக்குதல்களும், அணுஆயுத தாக்குதல்களும் நடக்கிறது. ஆதலால் இவற்றுக்கு எதிராக பகைவரும் அஞ்சும்படியான பாதுகாப்புகள் இருப்பதும் அவசியம்.

நாட்டின் உள்ளே மெல்ல மெல்ல ஊடுருவி நாட்டிற்குள்ளேயே தீவிரவாதத்தை கட்டவிழுக்கும் கும்பல்களும் உண்டு. ஆதலால் அவற்றை தொடர்ந்து கூர்ந்து கண்காணித்து உடனுக்குடன் களைய நாட்டிற்குள்ளேயும் ஒரு நுண்ணிய அரண் அவசியமாகும்.  

கோட்டை வடிவமைப்பிலே நான்கு புறமும் வாயில்களை வைத்து எண்திசையிலுமிருந்தும் வரும் பகைவர்களிடமிருந்து குடிகளைக் காத்த வரலாறுகள் ஏராளம். முற்றுகை இட்டவர்களை மாதக்கணக்கில், அவர்கள் உணவுக்குக்கூட வழியில்லாமல், வாடிப்போகச் செய்து தோற்றுத் திரும்பிய அரசர்களும் ஏராளம்.


மகேந்திரபல்லவனின் கோட்டையை முற்றுகையிட்ட இரண்டாம் புலிகேசி மாதக்கணக்கில் காத்திருந்து, அவனுடைய படைகள் ஊக்கமிழந்து இருந்ததைப் பற்றிய பேராசிரியர் கல்கி அவர்களின் வருணனை நினைவுக்கு வருகிறது. பாரியின் பறம்புமலையை மூவேந்தரும் முற்றுகையிட்டபோதும் பட்டினிபோட்டும் பணியவைக்க இயலாது சோர்ந்ததை சங்க இலக்கியச் சித்திரங்கள் காட்டுகின்றன. கபிலரின் பாடல் வரிகள், “கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும், பறம்பு கொள்ற்கு அரிதே” (புறம் 110), அவர் பாரி மகளிர் வேண்டி, முற்றுகையிட்ட மூவர்க்கும், அவர் கூறியதைச் சொல்லுகின்றன. இது உணர்த்துவது பாரியின் கோட்டை வலிமை பற்றியும்தான்

இயற்கை அரண்களும் இவ்வாறே இருக்கவேண்டும். மலையாலும், கடலாலும் சூழப்பட்ட சிலநாடுகள் பகையரசர்களால் புகுதற்கரியதாக இன்றும் உள்ளதை நினைவுபடுத்தும் குறள். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சிறுகாப்பின் பேர் இடத்தது ஆகி - காக்க வேண்டும் இடம் சிறிதாய் அகன்ற இடத்தை உடைத்தாய்; உறு பகை ஊக்கம் அழிப்பது அரண் - தன்னை வந்து முற்றிய பகைவரது மன எழுச்சியைக் கெடுப்பதே அரணாவது. (வாயிலும் வழியும் ஒழிந்த இடங்கள் மலை, காடு, நீர்நிலை என்றிவற்றுள் ஏற்பன உடைத்தாதல் பற்றி 'சிறுகாப்பின்' என்றும்,அகத்தோர் நலிவின்றியிருத்தல் பற்றி, 'பேரிடத்தது ஆகி' என்றும், தன் வலி நோக்கி 'இது பொழுதே அழித்தும்' என்று வரும் பகைவர் வநது கண்டால், அவ்வூக்கமொழிதல் பற்றி, 'ஊக்கம் அழிப்பது' என்றும் கூறினார்.) .

மணக்குடவர் உரை
காக்கவேண்டும் இடம் சிறிதாய், மதிலகம் பெரிய இடத்தையுடைத்தாய், மதிலையுற்ற பகைவரது மிகுதியைக் கெடுப்பது அரணாவது. சிறு காவலாவது ஒருபக்கம் மலையாயினும் நீராயினும் உடைத்தாதல்.

மு.வரதராசனார் உரை
காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain