பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி

thirukkural meaning விளக்கம் பொருட்பால், அரணியல், நாடு குறள் 733 பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு
குறள் 733
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு
[பொருட்பால், அரணியல், நாடு]

பொருள்
பொறை  - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை

ஒருங்கு - முழுமை; முழுதும்; எல்லாம்; எல்லாங்கூடிநிற்கை; அடக்கம்; ஒருகாலத்தில்; ஒருசேர; ஒருதன்மை; அழிவு

ஒருங்குதல் - ஒருபடியாதல்; ஒன்றுகூடுதல்; ஒருவழிப்படல்; ஒதுங்குதல்; ஒடுங்குதல்; அழிதல்.

மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

வருங்கால் - வரும் பொழுது

தாங்கி - தாங்குதல் - சுமத்தல்; புரத்தல்; ஆதரித்தல்; தடுத்தல்; பொறுத்தல்; தோணிதள்ளுதல்; வருந்துதல்; மனத்திற்கொள்ளுதல்; அன்பால்நடத்தல்; தாமதித்தல்; நிறுத்துதல்; குதிரைமுதலியவற்றின்வேகத்தைஅடக்கிச்செலுத்துதல்; நொண்டுதல்; இளைப்பாற்றுதல்; ஏற்றுக்கொள்ளுதல்; அணிதல்; சிறப்பித்தல்; அழுத்துதல்; பிடித்துக்கொள்ளுதல்

இறைவற்கு - அரசர்க்கு / ஆட்சிக்கு 

இறை  - உயரம்; தலை கடவுள் தலைவன் அரசன் உயர்ந்தோன்; மூத்தோன் பெருமையிற்சிறந்தோன்; கணவன் பறவையிறகு; கடன் வீட்டிறப்பு மறுமொழி மணிக்கட்டு குடியிறை சிறுமை அற்பம் காலவிரைவு; சிவன் பிரமன் மாமரம்

ஒருங்கு - முழுமை; முழுதும்; எல்லாம்; எல்லாங்கூடிநிற்கை; அடக்கம்; ஒருகாலத்தில்; ஒருசேர; ஒருதன்மை; அழிவு.

ஒருங்குதல் - ஒருபடியாதல்; ஒன்றுகூடுதல்; ஒருவழிப்படல்; ஒதுங்குதல்; ஒடுங்குதல்; அழிதல்.

நேர்வது - நேர்தல் - பொருந்துதல்; நிரம்புதல்; நிகழ்தல்; எதிர்ப்படுதல்; இளைத்துப்போதல்; மென்மையாதல்; எதிர்தல்; நெருங்குதல்; தீண்டுதல்; பெறுதல்; கொடுத்தல்; உடன்படுதல்; ஒத்தல்; உறுதிசெய்தல்; அமர்த்தல்; நியமித்தல்; தண்டனைக்குஉட்படுத்தல்; வேண்டுதல்; செல்லுதல்; வேண்டிக்கொள்ளல்; எதிர்த்தல்; அறுத்தல்

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

முழுப்பொருள் 
பொறை என்றால் பாரம், சுமை. ஒரு நாட்டிற்கு சுமையானது போர் (செலவுகள்), இயற்கை பேரிடர், வறட்சி/பஞ்சம், உயிர்கொல்லி நோய்கள், பொருளியல்/நிதியியல் நெருக்கடிகள், ஆகிய பல அடங்கும். இவற்றை போன்ற சூழ்நிலைகள் நாட்டின் தலை மீது வைத்த மலை (போன்ற பாரம்) போல் இருக்கும். 

இத்தகைய சுமைகள் நாட்டிற்கு வருமானால் அதனை தாங்குவதற்கு ஏற்ற 1) ஆட்சியையும் (திறம்பட்ட அமைச்சர் மற்றும் நிர்வாகம்).  2) ஆட்சியின் அரசரையும் (திறம்பட்ட அரசர்) 3) மக்களாட்சி என்றால் அத்தகைய ஆட்சியை தேர்ந்துதெடுக்கும் மக்களையும் மக்களின் கல்வியையும் 4) ஆட்சிப்புரிவதற்கும் பேரிடர் சுமைகளை தாங்குவதற்கும் தேவையான வரிகளை உழைத்து தவறாமல் அளிக்கும் மக்களையும் 5) பேரிடர்களை தாங்கி சமாளித்து அவற்றுக்கான தீர்வுகளை காண தேவையான கல்வி மற்றும் தேர்ந்தமக்களை கொண்டதே நாடு.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு - அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது. (பாரங்கள் - மக்கள் தொகுதியும் ஆன் எருமை முதலிய விலங்குத்தொகுதியும், தாங்குதல் - அவை தத்தம் தேயத்துப் பகை வந்து இறுத்ததாக, அரசு கோல் கோடியதாக, உணவின்மையானாகத் தன்கண் வந்தால் அவ்வத்தேயங்களைப் போல இனிதிருப்பச் செய்தல், அச்செயலால் இறையைக் குறைப்படுத்தாது தானே கொடுப்பதென்பார், 'இறை ஒருங்கு நேர்வது' என்றார்.).

மணக்குடவர் உரை
குடிமை செய்தால், ஒரு காலத்திலே பல குற்றம் தன்னிடத்துவரினும் அதனைப் பொறுத்து, நிச்சயித்த கடமையை அரசனுக்கு ஒருங்கு கொடுக்க வல்லது நாடு. குடிமையாவது கடமையொழிய வருவது.

மு.வரதராசனார் உரை
(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை
போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain