ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம் குறள் 662 ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்
குறள் 662
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

பொருள்
ஊறு - உறுகை; தொடுஉணர்வு; இடையூறு; கொலை; உடம்பு; காயம்; வல்லூறு; நாசம்.

ஒரால் - ஒருவுகை, நீங்குகை.

உற்ற - உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.
பின் - பின்பு

ஓல்குதல் - தளர்தல்; மெலிதல்; குழைதல்; நுடங்குதல்; சுருங்குதல்; அசைதல்; ஒதுங்குதல்; அடங்குதல்; வளைதல்; குறைதல்; வறுமைப்படுதல்; மேலேபடுதல்; மனமடங்குதல்; கெடுதல்; நாணுதல்; எதிர்கொள்ளுதல்.

ஒல்காமை - தளர்வடையாது ; சோர்வடையாது;

இவ் இரண்டின் - இவ்விரண்டும்

ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை

என்பர் - என்பார்கள்

ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல்

ஆய்ந்தவர் - சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர், வருந்துபவர்

கோள் - கோள் கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி.

முழுப்பொருள்
ஒரு செயலை செய்யும் முன்பே வரக்கூடிய இடையூறுகளை நீக்குவர், இடையூறுகளை வரும் பொழுதே இயன்றவரை களைவர், இடையூறுகள் வந்தபின்பு மனம் தளராது செயலில் ஈடுபடுவர் மன உறுதியும் செய்யும் வினையின்/செயலின் மீது துணிவும் உடையவர்கள். அத்தகையவர் பல நூல்களை கற்றதாலும் பட்டறிவினாலும் அறிவர் இடையூறுகள் என்பது எச்செயலை செய்யும் பொழுது வழியில் வரக்கூடிய ஒன்றே ஆகும். அவற்றை கண்டு சோர்வடையக்கூடாது. துணிவாக எதிர்கொண்டு உறுதியாக செயலை செய்துமுடிக்கவேண்டும். அதுவே அவர்களுடைய கொள்கை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆய்ந்தவர் கோள் - முன் நீதிநூல் ஆராய்ந்த அமைச்சரது துணிபு; ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டன் ஆறு என்பர் - பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்ட வழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழி என்பர் நூலோர். (தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ, வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலுடையதனை முன் 'ஊறு' என்றமையின், 'உற்றபின்' என்றும்,இவ் இரண்டன் கண்ணே பட்டது என்பார் 'இரண்டன் ஆறு' என்றும் கூறினார். 'ஊறு ஒரார்' என்று பாடம் ஓதுவாரும் உளர், அஃது 'ஒல்காமை' என்னும் எண்ணோடும், 'இரண்டு' என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்தில).

மணக்குடவர் உரை
வினைசெய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும் அவ்விடத்துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார் நீதி நெறியை ஆராய்ந்தவர்.

மு.வரதராசனார் உரை
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.

சாலமன் பாப்பையா உரை
பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain