பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்

thirukkural meaning விளக்கம் குறள் 633 பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு பொருட்பால், அமைச்சியல், அமைச்சு
குறள் 633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]

பொருள் 
பிரித்தலும் - பிரித்தல் - பிரியச்செய்தல்; முறுக்கவிழ்தல்; பகுத்தல்; வகுத்தல்; கட்டவிழ்தல்; பங்கிடுதல்.

பேணிக் - பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

கொளலும் - கொளல் - கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை.

பிரிந்தார்ப் - பிரிந்தவர் ; பிரித்துக்கொண்டவர்

பொருத்தலும் - பொருத்து - இணைப்பு; உடல்மூட்டு; மரக்கணு; ஒன்றுசேர்க்கை; ஒப்பந்தம்; மரத்தின்இணைப்பு; கன்னப்பொட்டு

வல்லது - வல் - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு.

அமைச்சு - அமைச்சன்; அமைச்சுஇயல்.

முழுப்பொருள் 
திறமையான வலிமையான அமைச்சரவை எது ?அவற்றின் கடமைகள் யாவை ?

1. பிரித்தல் - நண்பனின் நண்பன் நண்பன். அதுபோல் நண்பனின் பகைவன் பகைவன். ஆதலால் பகைவரின் நண்பர்களை பகைவரிடம் இருந்து பிரித்தல் பகைவரின் பலத்தை குறைப்பதற்கு வழிவகுக்கும். அதையே ஒரு அமைச்சு செய்யவேண்டும்.

உதாரணமாக மகாபாரதத்தில் துரியோதனனும் பாண்டவர்களும் எதிரிகள். கர்ணனும் துரியோதனனும் நண்பர்கள். அதனால் பாண்டவர்கள் கர்ணனுக்கு எதிரி ஆனார்கள். கர்ணனை துரியோதனனிடம் இருந்து பிரிக்க கர்ணனின் அன்னை குந்தி மூலம் முயற்சி செய்தான் கிருஷ்ணன். அதில் வெற்றிபெறவில்லை என்றாலும் குந்தியின் மூலம் கர்ணனிடம் இருந்து சில வரங்களை பெற்று கர்ணனை வலுவிழக்க செய்தான்.

2. பேணுதல் நண்பனின் நண்பன் நண்பன். அதுபோல் நண்பனின் பகைவன் பகைவன். அது இங்கும் பொருந்தும். நமது அண்டை நாட்டினர்கள் மற்றும் மற்ற நாடுகளில் இருப்போரை நமது நண்பர்களாய்ப் பேணி காத்துக்கொள்ள வேண்டும். அது நமக்கு எப்பொழுதும் வலுசேர்க்கும் அரணாக அமையும். இல்லையென்றால் அவர்கள் நமக்கு பகைவராய் மாற வாய்ப்புண்டு. நண்பர் பகைவரானால் அது நமக்கு பேரிழப்பாகும்.

3. பிரிந்தார்ப் பொருத்தலும் - எக்காரணத்திற்காகவோ நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்களை பழைய காழ்ப்புகளை மறந்து மறுபடியும் (அவர்கள் முயற்சியாலோ அல்லது நமது முயற்சியாலோ) நம்மிடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். (கண்டிப்பாக அவர்களை உளவு/ஒற்றாடவும் வேண்டும்)

மேற்சொன்னவாரு திறமையாக செய்ய வல்லதே நல்ல ஒரு அமைச்சு. இவை அமைச்சின் கடமையும் ஆகும்.

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
பிரித்தலும் - வினை வந்துழிப் பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்க வேண்டின் பிரித்தலும்; பேணிக்கொளலும் - தம்பாலாரை அவர் பிரியாமல் கொடை இன்சொற்களால் பேணிக்கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலும் - முன்னே தம்மினும் தம் பாலாரினும் பிரிந்தாரை மீண்டும் பொருத்த வேண்டின் பொருத்தலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான். (இவற்றுள் அப்பொழுதை நிலைக்கு ஏற்ற செயலறிதலும், அதனை அவர் அறியாமல் ஏற்ற உபாயத்தால் கடைப்பிடித்தலும் அரியவாதல் நோக்கி, 'வல்லது' என்றார். வடநூலார், இவற்றுள் பொருத்தலைச் 'சந்தி' என்றும் பிரித்தலை 'விக்கிரகம்' என்றும் கூறுப.).

மணக்குடவர் உரை
மாற்றரசரிடத்து உள்ளாரையும் நட்பாகிய அரசரையும் அவரிடத் தினின்று பிரித்தலும், அவ்வாறு பிரிக்கப்பட்டாரை விரும்பித் தம்மிடத்துக் கொளலும், தம்மிடத்து நின்று பிரிந்தாரைக் கூட்டிக் கொளலும் வல்லவன் அமைச்சனாவான்.

மு.வரதராசனார் உரை
பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா உரை
நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain