சூழ்வார்கண் ணாக ஒழுகலான்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல் குறள் 445 சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்
குறள் 445
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]

பொருள்
சூழ்வார் -சூழ்வோர் - அமைச்சர்; உறவினர்; சூழ்ந்துநிற்பவர்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல்.

ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல்.

ஆன் - ஆன் - āṉ   part. 1. An instr. ending,as in மண்ணானியன்ற குடம் மூன்றனுருபு. (தொல்சொல். 75, உரை ) 2. Ending common to nounsand verbs of the 3rd pers. masc. sing.; ஆண்பாற் பெயர்வினைகளின் விகுதி ஊரான், வந்தான். 3.An euphonic increment, used with a modification of பத்து `ten', as in இருபான் ஒரு சாரியை (நன். 244.)

ஒழுகலான் -  நடந்துக்கொள்பவன்

மன்னவன் - மன்னன், இந்திரன், அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

சூழ்வாரைச்சூழ்வார் -சூழ்வோர் - அமைச்சர்; உறவினர்; சூழ்ந்துநிற்பவர்.

சூழ்ந்து - சூழ்தல்  - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

முழுப்பொருள்
அரசர் தன்னை சூழ்ந்து இருக்கும் அமைச்சர்கள் துறை சார்ந்த நிபுணர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியே மக்களும் நாட்டுக்கும் ஏற்ற நல்ல முடிவுகளை திட்டங்களை தீட்டி நிறைவேற்றும்படி இருக்கும். ஏனெனில் ஒரு தனிமனிதனால் எல்லாவற்றையும் அதுவும் இது போன்ற பெரும்பணியை செய்ய இயலாது. ஆதலால் மக்களின் நலனையும் நாட்டின் நலனையும் தன்னுடைய மனதில் எப்பொழுதும் வைத்துக்கொண்டு சிந்திக்கும் அமைச்சர்களை பெரியோர்களை துறை சார்ந்த நிபுணர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தன்னுடைய அமைச்சர்களாக தன்னை சூழ அரசர் வைத்துக்கொள்ளவேண்டும்.

இது தனி நபர்களுக்கும் பொருந்தும். நமது தாய் தந்தை சகோதரர் சகோதரிகளை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் பெரியோர் சான்றோரை நம்மால் தேடி தேடி தேர்ந்தெடுக்க முடியும். ஆன்மீக வாழ்விற்கு நல்ல ஒரு குருவையும். வேலை செய்யும் இடத்தில நல்ல ஒரு நிபுணரையும் துணை கொள்ளுதல் மிக மிக பயனுள்ளதாக அமையும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கற்றார் பலரைத்தம் கண்ணாக இல்லாதான்” (பழமொழி 228)

“கண்போற் காதல்நின் கழிபே ரமைச்சன்” (பெருங்.2.11:166)

“உற்றது முடிக்கும் உறுதிநாட்டத்துக்
கற்றுப்பொருள் தெரிந்த கண்போற் காட்சி
அருமதி அமைச்சர்” (பெருங்.3.3:93-5)

“கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலும்..
கொற்றம் கொள்குறிக் கொற்றவற் கென்பவே” (சீவக.1921)

“மற்றவன் மனமும் கண்ணும் வாழ்க்கையும் வலிய சால்பும்
அற்றமில் புகழும் கோலும் ஆபவர் அமைச்ச ரன்றே’ (சூளாமணி.மந்திர.6)

“மந்திரக் கிழவர் கண்ணா” (சூளாமணி.தூது.135)


பரிமேலழகர் உரை
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் - தன் பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடந்தலான், மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் - அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க. (இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தானே சூழவல்லனாயினும் அளவிறந்த தொழில்களான் ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமை பற்றி , அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தல் அமைச்சியலுள் சொல்லப்படும் இலக்கணத்தினர் என்பதனை ஆராய்தல். இவை மூன்று பாட்டானும் பெரியாரைத் துணைகோடலின்சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்லவல்லவனாதல் காரியமெண்ண வல்லார் தனக்குக் கண்ணாக வொழுகலான்.

மு.வரதராசனார் உரை
தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain