இலமென்று வெஃகுதல் செய்யார்

thirukkural meaning விளக்கம் அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை குறள் 174 இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்.
குறள் 174
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]

பொருள்
இலம் - இல்லம்; இல்லறம் வறுமை

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

வெஃகுதல் - மிகவிரும்புதல்; பிறர்பொருளைஇச்சித்தல்; ஆசைப்படுதல் 

செய்யார் - செய்யமாட்டார்கள் ; பகைவர்

புலம் - வயல்; இடம்; திக்கு; மேட்டுநிலம்; பொறி; பொறியுணர்வு; அறிவு; கூர்மதி; துப்பு; நூல்; வேதம்.

வென்ற - வென்றோன் - வெற்றியடைந்தோன்; புலனடங்கப்பெற்றோன்; அருகக்கடவுள்

புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.

யில் - இல் - இல்லாத

காட்சி - பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.

யவர் - அவர் 

முழுப்பொருள்
ஐந்து புலன்களை வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர்கள் சான்றோர் எனலாம். அத்தகையவர்கள் எப்பேர்ப்பட்ட வறுமையிலும் பிறர் பொருள்கள் மீது ஆசைப்படமாட்டார்கள். ஏனெனில் ஆசை பொறாமையாக மாறி நம்மை தவறான வழியில் நடத்தும். ஐந்து புலங்களை வென்றவர்கள் பிறர் பொருள் மீது ஆசைப்பட மாட்டார்கள் என்று கூறி இருக்க்கலாம். ஆனால் அப்படி கூறியிருந்தால் அது துறவு வாழ்க்கை தேர்ந்தெடுத்த துறவிகளை மட்டும் குறிக்கும். இது இல்லறவியலில் குறிப்பிட்டுள்ளதால் இல்லறத்தில் வாழ்ந்தும் ஐந்து புலன்களை வென்றவர்களை பற்றி கூறப்படுகிறது. மேலும் எல்லா வசதியும் இருக்கும் பொழுது பிறர் பொருள் மீது ஆசைப்படாது இருப்பது ஒன்றும் கடினமல்ல. ஆனால் வறுமையில் நமது மனம் தவியாய் தவிக்கும் பொழுது பிறர் பொருள் மீது ஆசை படாது இருத்தலே கடினம் அதனாலே  அப்படி ஆசைப்படாது இருத்தல் சிறந்தது. ஐந்து புலன்களை வென்றவர்கள் தனது வறுமையை நினைத்து கழிவிரக்கம் கொள்ளமாட்டார்கள் பிறர் பொருள்கள் மீதும் ஆசைப்படமாட்டார்கள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இலம் என்று வெஃகுதல் செய்யார் - 'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்; புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார். (வெல்லுதல்: பாவ நெறிக்கண் செல்ல விடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல்.).

மணக்குடவர் உரை
வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்: ஐம்புலனையும் வென்ற புன்மையிலாத தெளிவுடையார். இது தெளிவுடையார் செய்யா ரென்றது.

மு.வரதராசனார் உரை
ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.

சாலமன் பாப்பையா உரை
ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
ஆசையை வென்றவர், ஏழைமையிலும் அடுத்தவர் உடைமைக்கு ஆசைப்படார்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain