குறள் 1233
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]பொருள்
தண-த்தல் - taṇa- 12 v. intr. 1. To depart,go away; நீங்குதல் தங்குதீமல நாளுந் தணந்திடும்(பிரமோத். 10, 38). 2. To go; to pass; போதல் --tr. 1. To put away, remove; நீக்குதல் மெலிவைத்தணப்பான் (தணிகைப்பு. கள 340). 2. To leave,separate from; பிரிதல் தணந்தமை சால வறிவிப்பபோலும் (குறள், 1233).
தமை - tamai n. T. tami. Passion,desire; ஆசை அவனுக்கு அதிகத் தமையிருக்கிறது.
தணந்தமை - அவர் நீங்கியதை
சால - மிகவும்
அறிவிப்ப - அறிவிக்கை, அறிவிப்பு , விளம்பரம்
போலும் - ஓர்அசைச்சொல்; ஐயப்பாட்டைக்குறிக்குஞ்சொல்.
மண-த்தல் - maṇa- 12 v. intr. 1. To beunited, mingled; கலத்தல். அறையும் பொறையுமணந்த தலைய (புறநா. 118). 2. To come together;வந்து கூடுதல். நிரை மணந்த காலையே (சீவக. 418).3. To happen; நேர்தல். மருவுற மணந்த நட்பு (கலித்.46). 4. To be fixed, attached; பொருந்துதல்.மத்தகத் தருவியின் மணந்த வோடைய (சீவக. 2211).5. To emit fragrance; கமழ்தல். மணந்த சோலையும் (அரிச். பு. விவாக. 98). 6. To shine; விளங்குதல். தேவர் மகுட மணக்குங் கழல் வீரா (திருப்பு.527).--tr. 1. To wed; மணம் புரிதல். மணந்தார்பிரிவுள்ளி (நாலடி. 397). 2. To copulate with;புணர்தல். (பிங்.) மாசில்வண் சேக்கை மணந்தபுணர்ச்சியுள் (கலித். 24). 3. To live in companywith; கூடியிருத்தல். மணக்குங்கான் மலரன்னதகையவாய் (கலித். 25). 4. To embrace; அணைத்தல். திருந்திழை மென்றோள் மணந்தவன் (கலித்.131).
மணந்த - கூடிய ; கலந்த ; மணம் புரிந்த ; அணைத்த
நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.
வீங்கிய - வீங்குதல் - பருத்தல்; பூரித்தல்; வீக்கமுறுதல்; வளர்தல்; மிகுதல்; நெருங்குதல்; இறுகுதல்; விறைப்பாய்நிற்றல்; மேனோக்கிச்செல்லுதல்; மெலிதல்; ஏக்கங்கொள்ளுதல்; தூங்குதல்.
தோள் - புயம்; கை; தொளை.
முழுப்பொருள்
தலைவனுடன் கூடிய நாட்களில் மகிழ்ச்சியாக இருந்த பொழுது பூரித்திருந்த தலைவியின் தோள்கள் இன்று தலைவன் பிரிந்து இருக்கும் பொழுது பிரிவாற்றாமையால் துன்புற்று மெலிந்து காணப்படுகின்றன. தலைவன் தன்னை பிரிந்து இருக்கிறான் என்பதை அவளது பொலிவிழந்த தோள்கள் இவ்வுலகிற்கு பறைசாற்றுகிறது.
தலைவன் நீங்குகையில் தலைவி தோள்கள் நெகிழ்வதைக் குறுந்தொகைப் பாடல் இவ்வாறு கூறுகிறது.
“மணப்பின் மாணலம் எய்தித்
தணப்பின் ஞெகிழ்ப தடமெந்தோளே” (குறுந்தொகை:299:7-8)
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) மணந்த நாள் வீங்கிய தோள் - காதலர் மணந்த ஞான்று, இன்ப மிகுதியால் பூரித்த நின் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும் - இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்துவது போல் மெலியா நின்றன, இது தகாது. ('அன்றும் அவ்வாறு பூரித்து இன்றும் இவ்வாறு மெலிந்தால், இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து அவரைத் தகவின்மை கூறுவர்' என்பதாம்.).
மணக்குடவர் உரை
காதலர் கூடின நாள்களிற் பூரித்ததோள்கள். அவர் நீங்கினமையை மிகவும் பிறர்க்கு அறிவிப்பன போலாகாநின்றன. கருவியைக் கருத்தாவாகக் கூறினார். பிரிவிடை யாற்றாளாகிய தலைமகள் தனதுதோள் வாட்ட முற்றதுகண்ட தோழிக்குச் சொல்லியது.
மு.வரதராசனார் உரை
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.
சாலமன் பாப்பையா உரை
அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.
No comments:
Post a Comment