வீழுநர் வீழப் படுவார்க்கு

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி குறள் 1193 வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு
குறள் 1193
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு
[காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி]

பொருள்
தனிப்படர்மிகுதி - தனிமையில் நினைத்துப் புலம்புந் தலைவியின் நிலை

வீழு - vīẕu  -வீழ், கிறேன், வீழ்ந்தேன், வேன், வீழ, v. n. To fall, [poetic form of விழு.] 2. v. a. To desire, ஆசைவைக்க. 3. To long for, to desire earnestly, மேவ. (p.)

வீழுநர் - ஆசை வைக்க பட்டவரால்

வீழப்படுவார்க்கு - ஆசையில் விழுந்தோர்க்கு

அமையுமே - அமையும் - அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

வாழு - vāẕu  வாழ், கிறேன், வாழ்ந்தேன், வேன், வாழ, v. n. To live, to sustain life, சீவிக்க. 2. To flourish, to enjoy happiness, to prosper, செழிக்க. (Ell. 15.) 3. To be, or exist, to reside, as living creatures in their ap propriate place; to roam, சஞ்சரிக்க. வாழாநின்றகாலம். The time of prosperity. (p.) வாழுகிறபெண். A married girl, living with her husband. நீர்வாழுஞ்செந்துக்கள். Aquatic creatures.

நம் -எல்லாம் என்னும் சொல் உயர்திணை யாயின் அஃது உருபேற்கும் போது கொள்ளுஞ்சாரியை; வணக்கம்.

வாழுநம் - ஜீவிக்கும் ; உயிர் வாழும் இருவருக்கும்

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

செருக்கு - அகந்தை; மகிழ்ச்சி; ஆண்மை; மயக்கம்; செல்வம்; செல்லம்; aspiration, high hope, மனோராச்சியம்.

முழுப்பொருள்
தலைவி தலைவனை பிரிந்து இருக்கும் பொழுது : நான் ஆசைவயப்பட்ட  என் காதலர் (ஆசை வயப்படுத்தப்பட்ட) என்னிடம் மறுபடியும் வந்து சேர்ந்து நாங்கள் இருவரும் ஒன்றாக இனிமையாக மகிழ்ச்சியாக வாழ்வோம் என்ற மயக்கம் தலைவிக்கு அமையும். அந்த மயக்கம் (நம்பிக்கை) அமைந்தால் மட்டுமே அவளால் தனியாய் தனிமையில் உயிர்வாழ முடியும். இல்லையென்றால் அவள் ஜீவிப்பது கடினமே. பிரிவு (என்னும் நோய்) அவ்வளவு கொடியது. அவர்களுக்கு இடையே உள்ள காதலே பிரிவெனும் நோய்க்கு மருந்தாய் இந்த (மறுபடியும் சேர்ந்து வாழ்வோம் என்ற) மயக்கத்தை தந்துள்ளது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே - தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு ஏற்புடைத்து ; வாழுநம் என்னும் செருக்கு - காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர்; வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு. ('நாம் அவரான் வீழப்படாமையின், நமக்கு அமைவது இறந்துபாடு' என்பதாம்.).

மணக்குடவர் உரை
தாம் காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு உலகின்கண் இருந்து உயிர்வாழ்வேமென்னுங் களிப்பு அமையும். இது, தலைமகள், இருந்தாலும் பயனில்லை: அதிற்சாதல் அமையுமென்று வாழ்க்கையை முனிந்து தோழிக்குக் கூறியது

மு.வரதராசனார் உரை
காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.

சாலமன் பாப்பையா உரை
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain