மக்களே போல்வர் கயவர்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், குடியியல், கயமை குறள் 1071 மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்
குறள் 1071
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்
[பொருட்பால்,  குடியியல்,  கயமை]

பொருள்
மக்களே- மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

போல்வர் - போல் - போன்றவர்கள்

கயமை - கீழ்மை.

கயவர் - கீழ்மையானவர்கள் 

அவர் -அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

அன்ன -அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

ஒப்பாரி - ஒப்பு; ஒத்தபாவனை; போலி; அழுகைப்பாட்டு;(abounding with comparisons) ஒப்புச்சொல்லி அழுதல்,

யாம் - தன்மைப்பன்மைப்பெயர்

கண்டது - காணப்பட்டபொருள்; சம்பந்தமற்றசெய்தி.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
மக்களை போன்ற புறத்தோற்றத்தில் உடலும் உருவமும் கொண்டவர்கள் கீழ்மையானவர்கள். அது ஒன்றே கீழ்மையானவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள ஒற்றுமை. மற்றபடி கீழ்மையானவர்களை போன்ற வேறு ஒரு இனத்தை இவ்வுலகில் காண முடியாது. அவர்களை விலங்குகளோடும் ஒப்பமுடியாது. விலங்குகளுள்ளும், நற்குணம் கொண்டவையும், மனிதரிடையேயும் காணவியலாத சில அபூர்வ ஒழுக்கவியல் கூறுபாடுகள் உள்ளன.

எனக்கு ஒரு தசாவதார உவமானம் தோன்றுகிறது. மற்ற யுகங்களில் எல்லாம் மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் இருக்கும். நன்மை தீமை என்ற இரண்டும் தெளிவாக வரையறை படுத்தப்பட்டு இருக்கும். ஆனால் கலியுகத்தில் ஒவ்வொருவருக்குள்ளேயும் நன்மையையும் தீமையும் சாம்பல் நீறம் போன்று ஒருவண்ணம்போன்று தோன்றினாலும் பலவண்ணங்களில் வேறுபடும் குணங்களை உடையவர்களாக மக்கள் இருப்பர். இவர்கள் எல்லோரும் ஒரே உருவத்தில் இருப்பார்கள். இவர்களை புறத்தால் வேறுபடுத்தி பார்ப்பது இயலாது ஆனால் கீழ்மை குணங்கள் கொண்டோர் கீழ்மையானவர்கள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மக்களே போல்வர் கயவர் - வடிவான் முழுதும் மக்களை ஒப்பர் கயவர்; அவர் அன்ன ஒப்பாரி யாம் கண்டது இல் - அவர் மக்களை யொத்தாற்போன்ற ஒப்பு வேறு இரண்டு சாதிக்கண் யாம் கண்டதில்லை. (முழுதும் ஒத்தல் தேற்றேகாரத்தால் பெற்றாம். 'அவர்' என்றது அவர் மாட்டுளதாய ஒப்புமையை. மக்கட் சாதிக்கும் கயச்சாதிக்கும் வடிவு ஒத்தலின், குணங்களது உண்மை இன்மைகளானல்லது வேற்றுமை அறியப்படாது என்பதாம். இதனான் கயவரது குற்றமிகுதி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மக்களை யொப்பவர் கயவர்; அம்மக்களை யொக்குமாறு போல ஒப்பது ஒன்றனோடு மற்றொன்று உவமை கூறப்படுமவற்றில் யாங்கண்டறிவது இல்லை. உறுப்பொத்துக் குணமொவ்வாமையால் கயவர் மக்களல்லராயினார்.

மு.வரதராசனார் உரை
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.

சாலமன் பாப்பையா உரை
கயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது இல்லை.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain