பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

குறள் 972
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
[பொருட்பால், குடியியல், பெருமை]

பொருள் 
பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

ஒக்கும்  - ஒக்க - ஒருமிக்க, கூட, ஒருசேர, சமமாயிருக்க, நிகர்க்க, பொருந்த, மிகுதியாக; தகுதியாயிருக்க

எல்லா - முழுதும்

உயிர்க்கும் - உயிர்களும் - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு

ஒவ்வா - ஒவ்வுறுதல் - பொருத்தமுறல்; ஒப்பாதல்.

தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு.
செய்தொழில் - செய்கின்ற தொழில் ; செய்கை

வேற்றுமை - வேறுபாடு; பகைமை; ஒப்புமையின்மை; செயப்படுபொருள்முதலாயினவாகப்பெயர்ப்பொருளைவேறுபடுத்துவது; காண்க:வேற்றுமையுருபு; வேற்றுமைப்புணர்ச்சி; வேற்றுமையணி

வேற்றுமையான் - வேறுபடுவார்கள் 

முழுப்பொருள் 
நாம் பிறக்கும் பொழுது நாம் எல்லோரும் சமமே. நமது பெற்றோரின் தொழில், குடி, பெருமை, புகழ் ஆகியவற்றால் நாம் வேற்றுமை அடைய மாட்டோம். ஆனால் நாம் வாழ்வில் செய்கின்ற செயல்களினாலே அவற்றை செய்யும்விதத்தாலே அவற்றை செய்யும் நேர்மை, உழைப்பு, தொழில் நேர்த்தி, தரம் ஆகியவற்றால் நமது சிறப்பும், பெருமையும் மாறும். நமது மதிப்பு நாம் செய்யும் தொழிலில் உள்ள நேர்மையில், உழைப்பில், நேர்த்தியில், செயல் தரத்தில் அடங்கியுள்ளது.

எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். அதிலே தான் நமது பண்பு உள்ளது. அவர் செய்கின்ற தொழிலினால் குலத்தினால் அவர் வேறுபட மாட்டார். அவரின் நேர்மை, தொழிலின் நேர்த்தி அவரை வேறுபடுத்தும். மகாத்மா காந்தி அடிகள் அரசர் (King, Viceroy) ஆனாலும் ஒரு எளிய விவசாயி ஆனாலும் எல்லோரையும் சமமாகவே பாவித்தார். உதாரணமாக அவர் லண்டன் நகரில் நடைபெற்ற வட்ட மேஜை சந்திப்பிற்கு அவர் எப்பொழுதும் அணிகின்ற விவசாயி அணிந்துக்கொள்ளும் கதர் வெட்டி துண்டை தான் அணிந்துகொண்டார். அரசருக்காக கோட் சூட் அணியவில்லை.

கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்கள் செயல்வழி ஞானம் பெற்றவர். அவர் தன் செயலின் மூலம் வேறுபடுகிறார். பெருமை பெற்றுள்ளார். 


கம்பராமாயணத்தில் வாலிவதைப் படல பாடல் வரிகள் இக்குறளின் கருத்தையே கூறுகின்றன.

“இனையதாதலின் எக்குலத்து யாவர்க்கும் 
வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்” (கம்ப.வாலிவதை.115)

இக்குறளின் கருத்து ஔவையாரின் “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே” என்ற கூற்றோடு ஒப்பவில்லை. தவிரவும் விஞ்ஞான வளர்ச்சியிலே மரபணுக்கள் ஒருவருடை குணக்கூறுகளை ஓரளவுக்கு சங்கிலித்தொடராக தொடர்வதையும் உறுதி செய்கின்றன. அதனால் பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்பது முழுவதுமாக ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்தில்லைதான். அதைத் தள்ளிவிட்டுப் பார்த்தாலும், செய்தொழிலில் ஆற்றும் சிறப்பால் ஒருவருக்குப் பெருமை வருவது உறுதியே.

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் - பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான். (வேறுபாடு - நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது. எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

சாலமன் பாப்பையா உரை
எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.

கீதை பற்றிய எதிர்விவாதங்களில் அது வர்ணாசிரமத்தை ஆதரிக்கிறது என்பதற்காகச் சுட்டப்படும் வரி

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகஸ:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்ய கர்தாரமவ்யயம்: [4/12]

நான்குவர்ணங்களும் என்னால் படைக்கப்பட்டன
இயல்புகள் செயல்களின் அடிப்படையில்
அதன் படைப்பாளியே ஆயினும் என்னை
படைக்காதவனென்றும் அழிவற்றவென்றும் அறிக

இதில் முதல் வரியே எப்போது எடுத்துமேடையில் சுட்டப்படுகிறது. வர்ணங்கள் குணங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் அமைகின்றன என்றே இந்த வரி சொல்கிறது. அடுத்தவரி இன்னும் சிக்கலான தத்துவம் கொண்டது. இவற்றை இயற்றியவன் ஆயினும் அவன் இவற்றுக்கு ஆசிரியன் அல்ல.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்

என்னும் குறளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இதிலும் முதல்வரியை மட்டுமே மேற்கோளாக்குவார்கள். செய்தொழில் வேற்றுமையால் சிறப்பு குன்றும் கூடும் எனச் சொல்லும் குறளை விடவும் குணத்திற்கும் செயல்பாடுகளுக்கும் ஏற்ப சமூகப்படிநிலை அமைகிறது என்று சொல்வதல்லவா இன்னும் பொருத்தமானதாக உள்ளது?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்

எல்லா உயிர்களும் பிறப்புசார்ந்து நிகரானவையே. ஆனால் சிறப்பு என்பது அவ்வண்ணம் நிகரானது அல்ல. அது செய்யும் தொழிலால் வேறுபடுகிறது– என்பது இதன் நேரடிப்பொருள்.  இதற்கு பரிதியார் ‘நற்குலத்தாரவர் என்றதால் இழிதொழிலாலே இழிகுலமாவார் என்பதாம்’ என்று விளக்கம் அளிக்கிறார்.

இந்தக்குறளை கீழான தொழில்செய்பவர்கள் கீழானவர்கள் என்றோ கீழான தொழில்செய்யும் சாதிகளில் பிறந்தவர்கள் கீழானவர்கள் என்றோ பொருள்கொள்பவர்கள் சிலர் உண்டு. ஆனால் அடுத்த குறள் இன்னும் தெளிவான விளக்கத்தை இந்த பாடலுக்கு அளிக்கிறது. உண்மையில் இவ்விரு குறள்களையும் பிரிக்காமல்தான் பொருள்கொள்ள வேண்டும்.

மேல் இருந்தும் மேல் அல்லர் கீழ் இருந்தும்
கீழ் அல்லர் கீழ் அல்லவர்

மேன்மைகுணம் இல்லாதவர் சமூகத்தின் மேல்படிகளில் இருந்தாலும் மேலானவர்கள் அல்லர். சமூகத்தின் கீழ்ப்படிகளில் இருந்தாலும் கீழ்மைக்குணம் இல்லாதவர்கள் கீழானவர்கள் அல்லர். 

திருக்குறள், பொருட்பால், ஒழிபியலில், பெருமை எனும் அதிகாரத்தில் வருகின்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (972) என்ற குறளுக்கு தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், பொருளதிகாரம், களவியல், நூற்பா எண். 90 – “ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின்  ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோனாயினுங் கடிவரை இன்றே” என்ற நூற்பாவில் வருகின்ற ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ என்பதற்கு, ஒப்பு பத்துவகைப் படும் என்று கூறுகிறார். அதை  மெய்ப்பாட்டியல் சூத்திரம் (25) “பிறப்பே குடிமை ஆண்மை, ஆண்டோடு / உருவு நிறுத்த காம வாயில் / நிறையே அருளே உணர்வொடு திருவென / முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” என்பதைக் கூறி இதில் பிறப்பு என்பதற்கு “பிறப்பாவது அந்தணர், அரசர், வணிகர் . . . என்றாற்போல் வருங் குலம். குடிமையாவது, அக்குலத்திலுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் ‘குடிமை’ என்றார்” என்று சொல்கிறார்
ஆகவே ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா / செய்தொழில் வேற்றுமை யான்” எனப் பிறரும் குலத்தின் கண்ணே சிறப்பென்பது ஒன்று உண்டென்று கூறினராகலின்” என்கிறார்.  குலம் என்பது பிறப்பினால் வரக்கூடியது எனில், “குலத்தின் கண்ணே சிறப்புண்டு” எனும்போது அது பிறப்பின் வழியே வந்த சிறப்பு என்றாகிறது. இப்படியான நிலையில் “பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதற்கு என்ன பொருள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்.
நான்:   அதைப்பற்றி கீதை உரையில் எழுதியிருக்கிறேன்
சௌம்யநாராயணன்: சரி..பார்க்கிறேன்
நான்: சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஜ என்பதற்கும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்பதற்கும் வேறுபாடே இல்லை
இவர்கள் கீதையிலும் குறளிலும் முதல் வரியை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்
சௌம்யநாராயணன்: சரிதான்
நான்: நால் வருணங்களும் என்னால் படைக்கப்பட்டன, இயல்புகள் செயல்களின் அடிப்படையில் – கீதை [பிறப்பால் அல்ல]
பிறப்பு எல்லா உயிர்களுக்கும் சமம் .ஆனால் செய்யும் செயல்களால் சிறப்புகள் வேறுபடுகின்றன- குறள்
அதாவது உயிர்கள் சமம் அல்ல, செயல்மூலம் அவற்றின் தரம் மாறுபடுகிறது
சௌம்யநாராயணன்: இல்லை செய்தொழில் வேற்றுமையான் என்பதைக் கொண்டு அவ்வாறு சொல்லிவிட முடியாது… குறளைப் பொறுத்தவரையிலும் பிறப்பினால் ஒத்த அந்தணர்களுள் அல்லது அரசர்களுள் அல்லது வைசியர்களுள் தங்களின் செயலினால் மாறுபடுவோரைக் குறிப்பதாக நான் கருதுகிறேன்
காரணம், மறப்பினும் ஓத்துக் கொளலாகும் என்ற குறளையும் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது.
எனை வகையான் தேறிய பின்பும் வினைவகையான் வேறாகும் மாந்தர் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன்.
எடுத்துக்காட்டாக, ஒரு அந்தணர் அந்தணர்க்குரிய தொழில்கள் என வரையறுக்கப்பட்டவற்றையல்லாது வேறொன்றைச் செய்வாராயின் அவர் கீழாகவே கருதப்படுவார் என்பதுதான்.
நான்: அந்தக் குறளில், அல்லது அந்த அத்தியாயத்தில் அப்படி இல்லை. அது நீங்கள் கொள்ளும் பொருள். குறளுக்கு அது எழுதப்பட்டுக் குறைந்தது 500 வருடம் கழித்து பரிமேலழகர் அளித்த உரை அதற்கான முகாந்திரமாக அமையலாம். ஆனால் அது ஒருபோதும் கடைசிப்பொருள் அல்ல. வழிகாட்டுப்பொருளும் அல்ல.
சௌம்யநாராயணன்: பரிமேலழகர் அளித்த உரையில் நான் கூறியதெதுவும் இல்லை
நான்: இல்லை- பரிமேலழகர் அந்த குறளுக்குச் சம்பந்தமே இல்லாமல் வருணத்தை  எடுத்துகொண்டு வருகிறார்.  வருணந்தோறும் தொழிற்பாகுபாடுகள் வேறுபாடு பற்றி அந்த வரியில் சொல்கிறார்
சௌம்யநாராயணன்: அந்த வரிகளில் இல்லை என்பது இருக்கலாம்.. ஆனால், அவர் அதை மனதில் கொண்டிருந்தார் என்பதற்குத்தான், “மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” என்று சொல்லி இருப்பதாகத் தோன்றுகிறது.
நான்:  குறளின் அந்தவரிகளில் வருணம் பற்றி ஏதும் இல்லை.
சௌம்யநாராயணன்: மீண்டும் பார்க்கிறேன்..
நான் அதனால்தான் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரைக் குறிப்பிட்டிருந்தேன்
மேலும் வாராததனான் வந்தது உணர்தல் என்ற தொல்காப்பிய நூல் உத்தியை அடிப்படையாகக் கொண்டு குறளைப் பார்த்தேன்
நான்: பார்ப்பான் பிறப்பொழுக்கம் என்பது அக்காலத்தைய நம்பிக்கைகளில் ஒன்று. அது அவரவர் வர்ணத்து வேலையை அவரவர் செய்யாவிட்டால் தப்பு என்பதல்ல.
அன்றைய நோக்கில் பார்ப்பாருடையது தொழில் அல்ல, நெறி, தவம். ஒருவேளை உணவுண்டு, உறுதொழிலென ஏதும்செய்யாது, மூன்று தீ வளர்த்து மட்டுமே வாழவேண்டிய கடும் நெறி அது. அதைச் செய்யாதவர்கள் பிராமணர்களே அல்ல, அவர்களால் நாடு கெடும் என்ற நம்பிக்கையை சங்ககாலம் முதலே காணலாம். எங்கெல்லாம் பார்ப்பான் குறிப்பிடப்படுகிறானோ அங்கெல்லாம் அவனைத் தவசீலன், மெலிந்தவன், பசலை படிந்தவன், தீ கர்மம் செய்பவன் என்றே தமிழிலக்கியம் சொல்கிறது. அங்கே சொல்லப்படும் பிறப்பொழுக்கம் அதுவே.
சௌம்யநாராயணன்: அது சரிதான்…  வேளாப் பார்ப்பான் என்ற ஒரு குறிப்பும் உள்ளது.  அவர்கள் சற்று கீழாகவே கருதப்பட்டனர்
ஆனால், இதே பார்ப்பனர்கள் வாயில்களாகவும் இருந்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது
நான்: வள்ளுவரின் காலகட்டத்தில்- அதவாது சிலம்பின் காலகட்டத்தில் – வேள்விநெறியை நிராகரிக்கும் பார்ப்பார்கள் இருந்தனர். சிலம்பில் கோவலனின் மதுரைப் பயணத்தில் சந்திக்கிறான்.
குறள் வருண நெறியை இறுக்கமான ஒரு நியதியாக முன்வைக்கிறதென்பதற்கு ஆதாரங்களேதும் இல்லை. ஆனால் அது வருண சாதிக்கு நேர் எதிரான கலகக்குரலை எழுப்பவும் இல்லை.
சௌம்யநாராயணன்: வேள்வி நெறியை நிராகரிக்கும் என்று சொல்வதைவிட… பார்ப்பனர்களுக்கென்று ஒத்துக்கப்பட்டிருந்த தொழில் என்பதாகக் கொண்டு பார்க்கையில் கோயில் வழிபாடுகளில் பூசாரிகளாக இருந்தவர்களை எங்கே பொருத்துவது என்பது வினாவாகிவிடும்..
குறள் எந்த கலகக் குரலையும் எழுப்பவில்லை என்பது உண்மை..
ஆனால், அது சமத்துவத்தைப் போதிப்பதாக, அதுதான் தமிழ் நெறி என்பதாக ஒரு உருவேற்றம் நிகழ்ந்துள்ளது. அது சரியல்ல
அரச குலத்தவர்களில் மகுட தியாகிகள் என்றொரு பிரிவினர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.. அவர்களை அரச வர்ணத்தில் அல்லாது வேறிடத்தில் வைக்க முடியாது…
நான்: கோயில்களில் பார்ப்பார் பூஜைசெய்ய ஆரம்பித்ததெல்லாம் 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர், பல்லவ சோழ காலகட்டத்தில். முற்காலத்தில் அவர்களுக்கும் கோயில்களுக்கும் சம்பந்தமில்லை. அவர்கள் வைதிகர்கள். வேத வேள்விசெய்பவர்கள். ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னால் கோயில்களில் வள்ளுவர் [பறையர்ப்பிரிவினர்] கூடப் பூசை செய்துள்ளனர். உவச்சர்கள் பூசை செய்துள்ளனர். தென்னகக் கோயில்களில் 17 ஆம் நூற்றாண்டுவரைகூட அப்படித்தான்
வேதவேள்வியும் ஆலயவழிபாடும் ஆகமங்கள் மூலம் இணைக்கப்பட்ட காலகட்டம் மிக மிகப் பிந்தையது. அதுவே சைவ வைணவ பெருந்தெய்வ உருவாக்கக் காலகட்டம்…….. புராணங்கள் உருவான காலகட்டம்.
சௌம்யநாராயணன்: சங்ககாலத்தில் பறையர்கள் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர் என்பதுதான் பல்வேறு சான்றுகள் காட்டுகின்ற உண்மை.. இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்ப்பித்துள்ளோம்.
நான்: ஓ   அப்படியா? அனுப்ப முடியுமா?
சௌம்யநாராயணன்:   அனுப்புகிறேன்..
பெருந்தெய்வ உருவாக்கம் என்று சொல்லும்போது அது திட்டமிட்ட உருவாக்கம் போலதொனிக்கிறது..
தொல்காப்பியத்தில் சொல்லப்படுவனவற்றில் பெருந்தெய்வங்களும் உண்டு…
மாயோன்
முருகன்
நான்:  நான் உருவாக்கம் என்பதை ஒரு வரலாற்றுநிகழ்வு என்றே பொருள்கொள்கிறேன்
அது சுவாரசியமான ஒரு விஷயம்…பறையர் x பார்ப்பார் மோதல். அயோத்திதாசர் அதைப்பற்றிச் சொல்கிறார். பிராமணர்களை வேஷப்பார்ப்பார், அதாவது பூசைத்தொழிலை மோசடியாகக் கவர்ந்துகொண்டவர்கள் என்றே சொல்கிறார்.
இரு துருவ சாதிகள். ஆனால் பலவகையிலும் இணையானவை. தமிழ்ச்சாதிகளில் இரு ‘இண்டெலக்சுவல்’ சாதிகள் இவர்களே. இன்றுகூட தமிழிலக்கியத்தில் ஒரு தனிச்சாதி எனப் பார்த்தால் பறையர்சாதி எழுத்தாளர்களே அதிகம்
சௌம்யநாராயணன்: தங்கவேல், சிதம்பரநாதன் மற்றும் நான் சேர்ந்து சமர்ப்பித்தது..
நான்: ஓ
சௌம்யநாராயணன்: ஆம், அது உண்மை..
இடைக்காலத்தில் அவர்கள் பௌத்தத்தைத் தழுவியதால் சைவ, வைணவர்கள் அவர்களை ஒதுக்கியிருக்கலாம்..
பறையர்கள் இன்றைக்கும் உடலுழைப்புக்கு சற்று தயங்குபவர்கள் என்றே கூறலாம்..
குறிப்பாக, வட மாவட்டங்களில் வன்னியர்கள் கட்டுமானத் தொழிலாளர்களாக அதிக அளவில் ஈடுபட்டு ஒரு குறைந்தபட்ச கௌரவமான வாழ்க்கையை மேற்கொள்ளும்போது, பறையர் சமூகத்தவரில் குறைந்த எண்ணிக்கையிலேயே அத்தொழிலில் ஈடுபட முனைகின்றனர்.
விவசாயத் தொழிலுக்கு அவர்கள் வந்தது கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் என்பதாகக் கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து தெரிகிறது..
நான்: அந்தக் கட்டுரையை அனுப்புங்கள்
சௌம்யநாராயணன்: இணையத்தில் இல்லை.. பின்னர் நகல் எடுத்து அனுப்புகிறேன்
நான்: பார்ப்போம்.   நன்றி


=============================
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”
(தொல்காப்பியல் – மரபியல் – சூத்திரம் 571)

என்று சொன்ன தொல்காப்பியரோ தனக்கு முன்பே மரபியற்கூறு தமிழ் நிலத்தில் வகுக்கப் பட்டிருந்தமை அறிவிக்க “நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே” என்றே முடிக்கின்றார். மெய், வாய், மூக்கு, கண், செவி என்ற ஐம்புலன்களோடும், நினைவு மற்றும் பகுத்துணர்ந்து ஒப்புநோக்கும் ஆற்றலும் கொண்ட மனத்தையும் சேர்த்து இந்த உயிர்ப் பகுப்பு வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. வள்ளுவர் சொல்லும் “எல்லா உயிர்க்கும்” என்ற சொல்லாட்சி இந்த அறுவகை உயிரினங்களைப் பற்றியதே என்று எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment