பேணாது பெண்விழைவான் ஆக்கம்

thirukkural meaning விளக்கம் குறள் 902 பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும் பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்
குறள் 902
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
பேணுதல்போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

பேணாது - போற்றாமல்  ; மதிக்காமல்

பெண் - பெண்களை ; மகள்; சிறுமி; மணமகள்; மனைவி; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினிஎனநால்வகைப்படும்பெண்; விலங்குதாவரங்களின்பெடை; காண்க:கற்றாழை.

விழைதல் - மிகவிரும்புதல்; மதித்தல்; நெருங்கிப்பழகுதல்.

விழைவான் - விழைபவன்

ஆக்கம் - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

பெரியதோர் - பெரியதாக ; பெரிதான

நாணாக  -நாண்  - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

நாணுத்  - நாணுதல் -வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்

தரும் - கொடுக்கும் 

முழுப்பொருள்
ஒருவன் அறிவையும் பொருளையும் பேணாது அதாவது அறிவுச்செல்வதையும் பொருட்செல்வதையும் ஈட்டாமலும் அதனை பாதுகாக்காமலும்  சோம்பி பெண்ணிடம் சரணாகதி அடைந்து பெண்சுகத்தை மட்டும் விழைபவன் மிகவும் விரும்புவனையும் அவனுடைய (குடி) செல்வத்தையும் கண்டு நாணும் இவ்வுலகம் அவன் மீது. அதாவது பெண்சுகத்தில் மூழ்கி அறத்தையும் பொருளையும் ஈட்டாமல் இருப்பவருக்கும் பெரியதோர் வெட்கக்கேடினை கண்டு வெட்கும் படியாக நடக்கும்.

பொதுவாக "அறம் பொருள் தர்மம் வீடு (புருசார்த்தாவில் தர்மம் (righteousness, moral values), அர்த்தம் (prosperity, economic value), காமம் (pleasure, love, psychological values), மோக்ஷம் (liberation, spiritual values))" என்று கூறுவார்கள். அறம் என்ற தர்மத்தை (ஒருவன் செய்ய வேண்டிய கடமை)  செய்தால் தான் பொருள் ஈட்டமுடியும். பொருள் ஈட்டினால் தான் வாழ்வை நடத்த முடியும். பொருள் இருந்தால் இன்பம் இருக்கும். இவை இருந்தால் தான் வீடுபேறு என்னும் நிலைக்கு நம்மால முயற்சி செய்ய முடியும். இன்பத்தில் (பெண் இன்பம் மட்டும் அல்ல) திளைத்து இருந்து அறத்தை செய்யாது இருந்தால் பொருள் சென்றுவிடும் பின்பு இன்பமும் விலகி விடும். ஆதலால் அந்த சமநிலை தவறாது இருத்தல் வேண்டும்.

நான்கு வேடங்கள் - என்ற ஜெயமோகன் கட்டுரையை வாசித்தால் அறம், பொருள், இன்பம், வீடு பற்றி இன்னும் ஆழமாக அறியலாம். (சுட்டியை தட்டவும்)

ஒப்புமை
“பெண்விழைவார்க் கில்லைப் பெருந்தூய்மை” (அறநெறி. 114)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பேணாது பெண் விழைவான் ஆக்கம் - தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்; பெரியது ஓர் நாண் ஆக நாணுத் தரும் - இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும். (எய்தி நின்றதாயிற்று, படைக்கும் ஆற்றல் இலனாகலின். அச்செல்வத்தால் ஈதலும் துய்த்தலும் முதலிய பயன் கொள்வாள் அவள் ஆகலின், அவ்வாண்மைச் செய்கை அவள் கண்ணதாயிற்று என்று ஆண்பாலார் யாவரும் நாண,அதனால் தன் ஆண்மையின்மை அறிந்து, பின் தானும் நாணும் என்பது நோக்கி, 'பெரியதோர் நாணாக நாணுத்தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் மனை விழைதற் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அறத்தினையும் பொருளினையும் பேணாது மனையாளைக் காதலிப்பானது செல்வம், பெரியதோர் நாணம் உலகத்தே நிற்கும்படியாகத் தனக்கு நாணினைத் தரும்.

மு.வரதராசனார் உரை
கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain