ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல் குறள் 873 ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்
குறள் 873
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]

பொருள்
ஏமுறு-தல் - ēmuṟu-   6 v. intr. ஏமம்¹ + உறு-.1. To be delighted; மகிழ்வுறுதல். ஏமுறு விளையாட் டிறுதிக்கண்ணும் (தொல். பொ 147). 2. To bechanged in nature or disposition; தன்மை திரிதல் ஏமுற விரண்டு முளவென மொழிப (தொல். பொ 109). 3. To be vexed; வருத்தமுறுதல். ஏமுறு கிளவி(தொல். பொ 146). 4. To be mad, insane; பித்துறுதல். ஏமுற்றவரினு மேழை (குறள், 873). 5. Tobe perplexed, bewildered; மயக்கமுறுதல். ஏமுறுஞாலந் தன்னிற் றோன்றி (திருமுரு. 163). 6.To be protected, saved; காப்படைதல். எஞ்சியபொருள்களை யேமுற நாடி (திருமுரு. 97). 7. Tobe suited, be appropriate; பொருத்தமுறுதல். காமமும் பொருளு மேமுறத் தழுவி (இலக். வி 704).

ஏமுற்றவரினும் - மதி மயங்கி பித்துற்றுற்றிந்தாலும்

ஏழை  - அறியாமை; அறிவிலான்(ள்); வறியவன்; பேதை; பெண்

தமியன் - திக்கற்றவன்; தனித்தவன்.

தமியனாய்ப் - திக்கற்றவனாய் ; தனித்தவனாய்

பல்லார் - பலர்

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

கொள்பவன் - உடையவன் ; உருவாக்குபவர்

முழுப்பொருள்
பகை கொள்பவர் எப்படி பட்டவர் என்று இக்குறளில் கூறுகிறார் திருவள்ளுவர். ஒருவருக்கு பித்துப்பிடித்து இருந்தால் அவரை அறிவில்லாதவர்கள் என்று சொல்வோம். ஆனால் அப்படிபட்ட பித்துபிடித்தவரைவிட அதாவது புத்திஸ்வாதீனம் இல்லாத அறிவில்லாதவரை விட அறிவில்லாத அறிவிலி யார் என்றால் அது தனித்திருந்தும் தனியாய் விடப்பட்டிருந்தும் துணையில்லாமல் இருந்தும் பலரிடம் பகை கொள்வோர் ஆவர்.

அப்படி என்றால் சற்று கூட்டத்துடன் இருப்பவர்கள் மற்றவர்களிடம் பகை கொள்ளலாமா? இல்லை. மற்றவரிடம் பகை கொள்ள கொள்ள நாம் தனித்துவிடபட்டுக்கொண்டு இருக்கிறோம். அவ்வாறு இருப்பின் அது அறிவிலித்தனம். உதாரணமாக ஒரு நாடு மற்ற சில நாடுகள் தனக்கு உறவாக இருப்பதனால் தனது அண்டை நாட்டுடன் நியாயமற்று சண்டையிட்டுக்கொண்டு இருந்தால் உலகளவில் பிறநாடுகளின் ஆதரவை பெறமுடியாமல் தனித்துவிடப்படுவார்கள். ஒரு சில நாடுகளை நம்பி உலகநட்பை இழப்பார்கள். அரசரை நம்பி புருஷனை விட்ட கதையாகிவிடும். ஆதலால் பகை என்பது தீதே. பகை கொள்பவர் பித்துபிடித்த அறிவில்லாதவரைவிட அறிவில்லாதவர்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன் - தான் தனியனாய் வைத்துப் பலரோடு பகை கொள்வான்; ஏமுற்றவரினும் ஏழை - பித்துற்றாரினும் அறிவிலன். (தனிமை - சுற்றம்,நட்பு, படை முதலிய இன்மை. மயக்கத்தால் ஒப்பாராயினும் ஏமுற்றவர் அதனால் தீங்கு எய்தாமையின் தீங்கெய்துதலுமுடைய இவனை 'அவரினும் ஏழை' என்றார். தீங்காவது துணையுள் வழியும் வேறல் ஐயமாயிருக்க ,அஃது இன்றியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருதற்கண்ணும் அழிந்தே விடுதல். இவை மூன்று பாட்டானும் பகைகோடற் குற்றம் பொதுவினுஞ் சிறப்பினும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பித்து உற்றவரினும் அறிவிலன், தனியனாயிருந்து பலரோடு பகை கொள்ளுமவன். இது பலரோடும் பகைக்கொள்ளலாகா தென்றது.

மு.வ உரை
தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain