இகலென்னும் எவ்வநோய் நீக்கின்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், நட்பியல், இகல் குறள் 853 இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும்
குறள் 853
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்
[பொருட்பால், நட்பியல், இகல்]

பொருள்
இகல் - பகை; போர் வலிமை சிக்கு அளவு புலவி

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

எவ்வ - எவ்விடம் - evviṭm   inter. Where? எந்தவி டம்.  

எவ்வ  - எவ்வை - எம்தங்கை; கவலை.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

நீக்கின் - நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

தவல் - குறைவு; கேடு; குற்றம்; இறப்பு; வறுமையால்வருந்துகை.
தவலுதல் - நீங்குதல்

இல்லாத் - இல்லாத்தனம் - வறுமை.

தா - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஆ)வலிமை; வருத்தம்; கேடு; குற்றம்; பகை; பாய்கை; குறை.
தாவு - பாய்கை; செலவு; குதிரைநடை; எதிர்ப்பு; கேடு; வலிமை; பற்றுக்கோடு; துறைமுகம்; உறைவிடம்; பள்ளம்.
tāvu   n. தாவு²-. Ruin; கேடு தாவில்விளக்கந் தரும் (குறள், 853).  

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

விளக்கம் - தெளிவானபொருள்; தெளிவு; ஒளி; சந்திரகலை; மோதிரம்; புகழ்; விசாரணை; நீதிமன்றம்; அதிகம்; விளக்கு.

தரும் - கொடுக்கும் 

முழுப்பொருள்
ஒருவருக்கு ஒருவர் பகையாக இருந்தால் அது நமக்கு கேட்டினை தரும். ஏனெனில் பகையினால் வெறுப்பு உண்டாகும் கோபம் வரும். மன அமைதி கெடும். உடல் நலம் கெடும் (இரு நாட்டிற்கு இடையே என்றால் போர்) உண்டாகும். ஆதலால் விளைவது கேடே. பகை என்பது கவலையை தரும். கவலை என்பது நோய் ஆகும். 

ஆதலால் இந்த நோயை நாம் நீக்க வேண்டும் என்றால் நாம் பகையை நீக்க வேண்டும். அப்படி பகையை நீங்கினால் என்றும் நீங்காத கேடில்லாத வலிமையான அமைதியான தெளிவான குடியையும் (நாட்டினையும்) புகழையும் இருவருக்கும் (இரு நாட்டிற்கும்) தரும். முக்கியமாக மனதளவில் பகை இருக்க கூடாது. பகை இருந்தால் நிம்மதி போச்சு. பகையை மனதில் நீங்கி அமைதியாக வாழ்க. புகழ் பெறுக. 


இதை தான் மகாத்மா காந்தி அடிகள் அஹிம்சை முறையில் செயல்படுத்தினார். இரு தரப்பிற்கும் சமரசம் செய்ய எப்போதும் முற்பட்டார். பிரிட்டிஷார்களை அவர் எதிரிகளாக பார்க்கவில்லை. அவர்களுடன் உரையாடி சமரசம் செய்து முன்னேறினார். அஹிம்சை பாதையை உலகிற்கு காட்டினார். அதன் விளைவு இந்தியா மட்டும் இன்றி தென்னாபிரிக்கா போன்ற நாடுகளும் அஹிம்சை முறையில் சுதந்திரம் பெற்றது. 

வெறுப்பு, கோபமாகி, முடிவில் மாறாத பகையாகும் என்பதாலேயே, “தீராக் கோபம் போராய் முடியும்” என்பது கொன்றை வேந்தனில் ஔவையின் வாக்கு. அத்தகைய நோயை நீக்கினால், ஒருவருக்கு அது மாறாத புகழைத் தரும்.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்ற முதுமொழிக்கேற்ப, பகைதருவது வெறுப்பென்னும் நோயென்று அறிந்து, அதன் தொடக்கக் காரணத்தை அறிந்து, அதைத் தணிவிக்கும் வழியை நாடி, அதைத் தணிப்பதற்கு ஆவன செய்தாலே, எவ்வித எவ்வ நோயும் தீருமல்லவா? அம்முயற்சியால் நீங்காத, கேடு இல்லாத புகழும் வருவது உறுதியே.

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் - அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும். (தவல் இல்லாமை, அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாஇல் விளக்கம் - வெளிப்படை. யாவரும் நண்பராவர், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களால் புகழ் பெறும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
மாறுபடுதலாகிய இன்னாத நோயை நீக்குவானாயின், அந்நீக்குதல் கேடில்லாத குற்றமற்ற ஒளியினைத் தரும். இது தோற்றமுண்டா மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain