உலைவிடத்து ஊறஞ்சா வன்கண்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், படையில், படைமாட்சி குறள் 762 உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது
குறள் 762
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது
[பொருட்பால், படையில், படைமாட்சி]

பொருள்
உலைவு - அழிவு; நடுக்கம்; வறுமை; கலக்கம்; தோல்வி; அலைவு; ஊக்கக்குறைவு

இடத்துஇடம்  -தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

ஊறு - உறுகை; தொடுஉணர்வு; இடையூறு; கொலை; உடம்பு; காயம்; வல்லூறு; நாசம்

அஞ்சா- அஞ்சாத ; பயம் கொள்ளாத 

வன்கண் - மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை

தொலைவு - அழிவு; சோர்வு; குறைகை; தோல்வி; முடிவு; தூரம்.

இடத்து - இடம் -  தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

தொல்படைக் - அரசனுடைய முன்னோர் காலத்திலிருந்து தொடர்ந்து வரும்படை

கல்லால் - ஓர்ஆலமரம்; கல்லாலமரம்; குருக்கத்தி; பூவரசு.

அல்லால் - அல்லால் 

அரிது - அருமை; பசுமை

முழுப்பொருள்
ஒரு போரினில் எதிரிநாட்டைவிட படை வலிமையில் குறைவாக இருப்பினும் அழிவினை அஞ்சாமல் தேசத்தையும் அரசரையும் காக்கும் பொருட்டு தன்னுயிர்க்கும் அஞ்சாமல் நெஞ்சுறுதியுடன் வீரமாக போர் புரிந்து உயிரை விட தயாராக உள்ள போர் வீரர்கள் ஒரு ஆலமரம் போல தொன்று தொட்டு அந்த நாட்டிலே பிறந்து வளர்ந்த வீரர்களை அன்றி வேறு யாரும் இருப்பது மிக அரிது.

தத்துவார்த்த ரீதியாக பார்த்தால் நமக்குள் நாம் நம் வாழ்வில் சந்திக்கும் போர்களை வேறு யாரும் வந்து சந்திக்க மாட்டார்கள். நாம் தான் நெஞ்சுறுதியுடன் நமக்கான போரை அஞ்சாமல் சந்திக்க வேண்டும். செய் அல்லது செத்து மடி.

மேலும்: அஷோக் உரை 

ஒப்புமை
”ஒற்கம் வந்துத வாம லுறுகென
விற்கொள் வெம்படை வீரரை யேவினான்” (கம்ப.முதற்போர்.93)

“அழிபடை தாங்க லாற்றும் ஆடவர்” (கம்ப.நிகும்பலை 163)

பரிமேலழகர் உரை
தொலைவிடத்து உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண் - தான் சிறியதாய வழியும் அரசற்குப் போரின்கண் உலைவுவந்தால் தன் மேலுறுவதற்கஞ்சாது நின்று தாங்கும் வன்கண்மை; தொல்படைக் கல்லால் அரிது - அவன் முன்னோரைத் தொடங்கிவரும் படைக்கல்லது உளதாகாது. (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப்படையுள்ளும் சிறப்புடையது மூலப்படை யாகலான் அதனை அரசன் 'வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும் - கொல்களிறும் மாவும் கொடுத்தளிக்க.' (பு.வெ.மா.தும்பை2) என்பது குறிப்பெச்சம். இப்படையை வடநூலார் 'மௌலம'¢ என்ப.).

மணக்குடவர் உரை
அரசர் கெடுமிடத்து வழிவந்த படைக்கு அல்லது பிறபடைக்குப் போர்க்களத்து அழிவு வந்தவிடத்து, உயிர்க்கு வரும் ஊறு அஞ்சாத வன்கண்மை இல்லை. வழிவந்த படை-வீரன் மகன் வீரன்.

மு.வரதராசனார் உரை
போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.

சாலமன் பாப்பையா உரை
தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்‌, தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain