குறள் 422
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு
[பொருட்பால், அரசியல், அறிவுடைமை]
பொருள்
செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.
சென்ற - (மனம்) செல்லும் / பயணப்படும் / வேண்டுகின்ற / அலைகின்ற
இடத்தால் - இடங்களில் எல்லாம் /
செலவு - பணவழிவு; போக்கு; ஓட்டம்; நடை; குதிரைநடை; பயணம்; படையெடுப்பு; ஐந்தொழில்களுள்கொள்ளும்நிலம்அறிந்துகொள்ளுகை; நீட்சியளவு; ஆலாபனம்; வழி; ஒழுக்கம்; தேவை; மொய்; ஆணை; சிறந்தகாலம்; பிரிவு; சாவு; காலங்கழிவு; எலிவளைமுதலியன; வீட்டிக்குவேண்டியஉணவுப்பண்டம்
செலவிடாது - செல்ல விடாது - பயணிக்க விடாமல்; போக விடாமல்
தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு
ஒரீஇ - ஓரீ - ஓரீற்றா - ஒருமுறையீன்ற பசு.
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.
நன்றின்பால் - இன்பம் தருகின்ற அறத்தின் பால், நல்லனவற்றி பால்
உய்ப்பது - உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல் சேர்த்தல் நடத்துதல் அமிழ்த்தல் நுகர்தல் கொடுத்தல் அனுப்புதல் குறிப்பித்தல் அறிவித்தல் ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல்
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
முழுப்பொருள்
மனம் என்பது அலைபாய்கின்ற ஒன்று. அதற்கு எண்ணுவதற்கு ஒன்றும் இல்லாத பொழுதே அது பலவற்றை எண்ணிக்கொண்டே இருக்கும். அதற்கு கல்வி என்ற பெயரிலே, அனுபவங்கள் என்ற பெயரிலே பலவற்றை புகட்டுகிறோம். இவையாவும் மேலோட்டமாக சொன்னால் தகவல்கள் என்று தான் சொல்லவேண்டும். அறிவு அல்ல. இந்த தகவல்களைக்கொண்டு நாம் என்ன செய்கின்றோம் என்பதே விஷயம். உதாரணமாக அணு உற்பத்தித்திறனை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அதேப்போல் பேரழிவை தரக்கூடிய அணுகுண்டையும் செய்ய முடியும். இரண்டையும் அறிவு என்று நாம் சொல்ல முடியாது என்பதையே திருவள்ளுவர் கூறுகிறார். இது ஒரு பெரிய உதாரணம் என்றாலும் வாழ்வில் சின்ன சின்ன விஷயங்களுக்கும் பொருத்தமாகும் - உதாரணமாக கோபம், மோகம் போன்றவை நமக்கு தீமை விளைவிப்பவை (அதனால் உறவுகளையும், ஆரோக்கியத்தையும் இழப்போம்). சமூகவலைத்தளத்தையும், தகவல் தொழில்நுட்பத்தையும் ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்த முடியும் அதை வைத்துக்கொண்டு நேரத்தை விரயம் செய்து வெட்டி பேச்சு பேசி பிறரை வசைப்பாடவும் முடியும். தேர்வு நம்முடையது தான். அதுவே அறிவு.
ஞானம் / அறிவு என்றெனப்படுவது அலைபாயும் மனதை செல்லும் இடங்களிலெல்லாம் செல்லவிடாது, குறிப்பாக (நமக்கோ, நமது சுற்றத்திற்கோ, உலகிற்கோ விளைவிற்கும்) தீமையின் பக்கம் செல்ல விடாது தடுத்து, நல்லனவற்றின் பால், (இன்பம் பயக்கும்) அறத்தின்பால் கொண்டு செல்வது ஆகும்.
திருமந்திரத்தில் திருமூலர் ஐம்புலன்களை அடக்கவேண்டாம் என்கிறார். ஏனெனில், அடக்கினால், உயிரற்ற சடப்பொருள் அல்லது சடலப்பொருள் ஆகிவிடுவோம். அடக்குவதற்கு பதிலாக, புலன்களை தகுந்த வழியில் பயனுறுத்த வேண்டும். இதைத்தான் வள்ளுவரும் கூறுகிறார். திருமந்திரப்பாடல் இதுதான்.
அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.
அறிவில்லாதவர்களே புலனடக்கம் வேண்டுமென்பார். அறிவுள்ளவர்கள் புலனொழுக்கம் வேண்டுமென்பார்கள். புலன்களை அடக்கிய வானோர்கள் கூட இல்லை. ஐம்புலன்களையும் அடக்கிவிட்டால், சடப்பொருளாகிவிடுவோம் அதனால் அவற்றை அடக்காமல், இயல்பான செயல்களைச் செய்யும், அறிவே ஒருவர் பெறவேண்டும் இதைத்தான் வள்ளுவரும் சொல்லுகிறார்
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”விழையா உள்ளம் விழையும் ஆயினும்
கேட்டவை தோட்டியாக மீட்டாங்
கறனும் பொருளும் வழா அமைநாடித்
தற்றக வுடைமை நோக்கி மற்றதன்
பின்னா கும்மே முன்னியது முடித்தல்” (அகநா.286:8-12)
பரிமேலழகர் உரை
சென்ற இடத்தால் செலவிடாது - மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது, தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு - அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின் நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு.
(வினைக்கு ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப் புலம் ஐந்தாயினும் ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது செல்லாமையின், 'இடத்தால்' என்றார். 'விடாது' என்பது கடைக்குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன் போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார், அஃது உயிர்க்குணம் ஆகலான்.).
மணக்குடவர் உரை
உள்ளஞ் சென்ற விடத்தே உடம்பையுஞ் செல்லவிடாது, தீமையை நீக்கி நன்மைப் பகுதியிலே செலுத்துவது அறிவாவது. இது காம நுகர்ச்சியின்கண் பழியும் பாவமும் பொருட்கேடும் வாராமற் செலுத்துவது அறிவென்றது
மு.வரதராசனார் உரை
மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை
மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.
உங்கள் அரும்பணி எனது திருக்குறள் வகுப்பிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. இதற்குச் செய்ந்நன்றி அறியேன், எனவே சொல் நன்றியை ஏற்றருள்க.
ReplyDeleteநன்றி.
ReplyDelete