கல்லாதான் சொற்கா முறுதல்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், அரசியல், கல்லாமை குறள் 402 கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று
குறள் 402
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று
[பொருட்பால், அரசியல், கல்லாமை]

பொருள்
கல்லாதான் - கல்வி கற்காதவன்; 
சொற் - பேச்சு, சொற்கள்
காமுறுதல் - விரும்புதல்; வேண்டிக்கொள்ளுதல்.
முலை - பெண்களின் மார்பகம்; கொங்கை, தனம்; பாலூட்டுஇனங்களின்உடலில்பாலுண்டாகும்இடம்; 
இரண்டும் - (கொங்கை) இரண்டும்
இல்லாதாள் - இல்லாத
பெண் - பெண்ணிடம்
காமுற் றற்று - காமம் கொள்ள முடியாததை போன்றாம்

முழுப்பொருள்
சில வருடங்கள் முன்பு (கேளடி கண்மணி, ஆசை, ரிதம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய) திரைப்பட இயக்குனர் வஸந்த் ஒரு பேட்டியில் கூறியிருப்பார் - பெங்காலி மொழியில் ஒரு flat chest (தட்டையான மார்பு) கொண்ட ஒரு பெண்னை ஒரு ஆண் நிராகரிக்கிறான். ஆனால் பின்னாலில் அவள் திருமணம் செய்துக்கொண்டு குழுந்தைப் பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறாள். ஆதலால் மார்பகங்கள் எவ்வளவு பெரிதாகவும் வடிவாகவும் இருக்கிறது என்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. அது ஒரு (/தன்) குழந்தைக்கு பால் ஊட்ட பயன் உள்ளவனவாக இருக்கிறதா என்பதே முக்கியம் என்ற கருத்தை திரைப்படம் பதிவு செய்கிறது.

இங்கே திருவள்ளுவர் பெண்ணின் (மார்பு) மீது கொள்ளும் ஈர்ப்பினை காட்டி கல்வியின் சிறப்பை (கல்லாதவரின் இழிவை) சொல்லவேண்டுமா என்ற கேள்வி எழாமால் இல்லை. ஏன் கூறுகிறார் என்றுதான் பார்க்க வேண்டும். உலகில் எல்லோரும் மார்பின் (அளவின் வடிவின்) மீது ஈர்ப்பு கொண்டவரல்ல. அவர்கள் மார்பின் சிறப்பை அறிந்தவர்கள். அவர்கள் பெண்ணின் மார்பு பால் ஊட்ட படைக்கபட்ட உறுப்பு என்பதை அறிவர். அத்தகையவர்கள் அப்பெண்ணின் எல்லா திறனையும் உள்ளத்தின் அழகையும் அறிவர். அதனைப் போற்றுவர். ஆனால் பெண்ணின் மார்பை மட்டும் விரும்புபவர்கள் அப்பெண்ணின் திறனை போற்றாதவர்கள். அப்படிப்பட்ட ஆண்களை பெண்களும் விரும்ப மாட்டார்கள். ஒரு பெண்ணை முழுமையாக விரும்பும் தலைவனையே பெண் விரும்புவாள்.

இப்போது குறளுக்கு வருவோம். கல்வி கற்காதவர்கள், கல்வியின் சிறப்பை அறியாதவர்கள், கல்வியின் பயனை அறியாதவர்கள் பிறரிடமோ அல்லது ஒரு அவையில் பலர் முன்பு பேச வேண்டும் என்று நினைப்பது என்பது நகைக்கதக்கது. ஏன் எனில் பிறருக்கு தெரியும் கல்லாதவர்கள் பேசும் பேச்சு பயனற்றது என்று. கல்லாதவர்கள் அவையில் பேச வேண்டும் என்று நினைப்பது மார்பு இல்லாத பெண்ணிடம் உறவு வைத்து குழந்தைப்பெற்று பால் கொடுத்து வளர்க்க விரும்பவது போல் ஆகும்.

சிறு குழந்தைக்கு பல் கிடையாது. அதற்கு உணவை கடித்து உண்ண முடியாது. அதன் செரிமான குழாய்கள் நன்றாக வளர்ந்து இருக்காது. திட உணவு எளிதாக அதில் செல்ல முடியாது. அதன் ஜீரண உறுப்புகள் முழுதும் வளர்ச்சி பெற்றிருக்காது. அதனால் கடின உணவை ஜீரணம் செய்ய முடியாது.

தாய் என்ன செய்கிறாள், உணவை தான் உண்டு, செரித்து, அதை இரத்தமாக்கி, அதை பாலாக்கி , அதில் குழந்தைக்கு வேண்டிய சத்து மட்டும் நோய்  எதிர்ப்பு பொருள்களை கலந்து குழந்தை எளிமையாக ஜீரணம் பண்ணும் வகையில் பாலாக, திரவ வடிவில் தருகிறாள். குழந்தைக்கு உடம்பு சரி இல்லை என்றால், தான் பத்தியம் இருக்கிறாள். குழந்தைக்கு எப்போது தர வேண்டும் (நினைந்து ஊட்டும்), எவ்வளவு தர வேண்டும் என்று அறிந்து தருகிறாள்.

அது போல, ஒரு படித்தவன் , பல நூல்களை படித்து, உள்வாங்கி, ஒன்றோடு ஒன்று  இணைத்து, கடின பதங்களை எளிமையாக்கி, கேட்பவர் எளிதில் அறிந்து கொள்ளும் வண்ணம்  பேச வேண்டும். அவர்களுக்கு எவ்வளவு தர வேண்டும், எப்போது தரவேண்டும் என்று அறிந்து தரவேண்டும்.

அதனால் தான் கல்வி அறிவு உள்ளவனை தாய்க்கு உதாரணமாக கூறினார். ஒரு தடவை பால் தந்து விட்டாள் போதாது. குழந்தை பெரிதாக வளரும் வரை தாய் தன் பாலை தந்து கொண்டே இருப்பாள். அதற்காக அவள் மேலும் மேலும் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு சொல்லுபவனும் அது போல படித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாளும் புதிய செய்திகளை கொண்டு தர வேண்டும்.

தாய் எப்படி உணவை தான் ஜீரணம் செய்து பிள்ளைக்கு அதை பால் வடிவில் தருகிறாளோ அது போல பேச நினைப்பவன் புத்தகங்களை மேற் கோள் காட்டிக் கொண்டிருக்கக் கூடாது. படித்து, உள்வாங்கி, அவனுடைய அறிவினால் படித்ததை எளிமையாக்கி , செறிவூட்டி தரவேண்டும்.

பால் புகட்டும் தாய் கண்டதையும் சாப்பிடக் கூடாது. மது, புகை பிடித்தல் போன்றவற்றை தவிர்த்து விடுவது குழந்தைக்கு நலம் பயக்கும். அது போல கற்று அறிந்தவன்  நல்ல விஷயங்களை மட்டும் படிக்க வேண்டும்.  கண்டதையும் படித்து  தன் அறிவையும், மனதையும் குழைப்பிக் கொள்ளக் கூடாது.

தாய் தன் பிள்ளைக்கு வேளா வேளைக்கு பால் தருவாள். ஆனால் குழந்தைக்கு ஜீரணக் கோளாறு இருந்தால், சரியாக மலம் கழிக்கவில்லை என்றால் மேலும் மேலும் பால் புகட்ட மாட்டாள். முதலில் தந்தது உள்ளே சென்று ஜீரணமானதை அறிந்த பின் தான் அடுத்த முறை பால் தருவாள் தாய்.

அது போல , ஒரு மாணவனோ அல்லது கேட்பவனோ ஒரு விஷயத்தை உள்வாங்கிக் கொண்டான் என்று அறிந்த பின்பே அடுத்த விஷயத்தை சொல்ல வேண்டும். நான் பாட்டுக்கு சொல்லிக் கொண்டே போகிறேன், நீ புரிந்து கொண்டால் சரி, இல்லை என்றால் அது என் பாடு இல்லை என்று இருக்கக் கூடாது.

முலை இரண்டும் இல்லாதாள் காமுறுதல் என்பதற்கு பின்னால் எவ்வளவு இருக்கிறது பாருங்கள். இன்னும் சிந்தித்தால் மேலும் பல பொருள் விரியும்.

இக்குறள் கூறவரும் மைய கருத்து என்பது கல்லாதவர்கள் நகைப்புக்கூறியவர்கள். அவர்களின் பேச்சும் பயனற்றது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”இன்னா முலையில்லாள் பெண்மை விழைவு” (இன்னா.13)

பரிமேலழகர் உரை
கல்லாதான் சொல் காமுறுதல் - கல்வியில்லாதான் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல், முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று - இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும்.
('இனைத்தென அறிந்த சினை' (தொல்.சொல்.33) ஆகலின், தொகையோடு முற்று உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதாள் என்பதாம். அவாவியவழிக் கடைப் போகாது, போகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று.).

மணக்குடவர் உரை
கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல், இரண்டு முலையுமில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும். 
இது தன்னாசையல்லது சொன்னாலும் விரும்புவாரில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
எண் (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain