சுற்றத்தால் சுற்றப் படஒழுகல்

thirukkural meaning meaning விளக்கம் பொருட்பால், அரசியல், சுற்றந்தழால் குறள் 524 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்
குறள் 524
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்
[பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரிய துணையில் ஒன்று; கூட்டம்; ஆயத்தார்.

சுற்றத்தால் - சுற்றத்தினால்; உறவினர்களால், பரிவாரங்களால், அரசரின் துணைகள்

பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப் புறப்பற்றுகளாகிய விருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.

சுற்றப்பட - சுற்றுப்பட்டு- பற்று 

ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல்.

செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

தான் - தன்னுடைய

பெற்றம் - பெருமை; காற்று; எருது; மாடு; இடபராசி
பெற்றத்தால் - பெற்று - செல்வாக்கு; அடுக்கு; பெருக்கம்; எருது.

பெற்ற - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

முழுப்பொருள்
ஒருவர் தன்னுடைய பெருமைகளால் செல்வாக்கினால் பல செல்வங்களை பெறலாம்.  அவற்றினால் பல பயன்களை நாம் அடையக்கூடும். செல்வம் என்பது நிலையில்லாத ஒன்று. ஆதலால் அது நம்மை விட்டு விலகிவிடும். ஆதலால் அது உண்மையான நிலையான செல்வம் கிடையாது என்று நாம் சொல்லலாம்.

உண்மையான செல்வம் எது என்று சொன்னால் நம்மை சுற்றி இருக்கின்ற சுற்றத்தின் அன்பு. இங்கே திருவள்ளுவர் சுற்றப்பட்ட என்று சொல்லி பற்றினை முன்னிலை படுத்தி அன்பை அடிக்கோடிடுகிறார். ஏனெனில் பிரச்சனை நோய் பணத்தட்டுப்பாடு என்றால் மனிதர்களும் நம்மை விட்டு விலகக்கூடியவர்கள். சுயநலவாதிகள். ஆனால் உண்மையான அன்பு அப்படி இல்லை. அது என்றென்றும் நம்முடன் இருக்கும். அதனால் நம்மை சுற்றி இருக்கின்ற சுற்றங்களின் (உறவினர்களின், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின்) உண்மையான அன்பினால் நாம் அடையக்கூடிய உயர்ச்சியே நாம் அடையும் உண்மையான செல்வம். அந்த அன்பு தான் உண்மையான செல்வம். அதுவே அவர்கள் பெற்ற பெருமையாலும் செல்வாக்கினாலும் பெற்ற பயன்.

ஒப்புமை
“தொலையாக் கொள்கைச்சுற்றம்  சுற்ற” (பதிற் 70:17)

“சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி” (கலி.10:2)

“நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால்” (நாலடி.93)

”செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப் வெனின்” (நாலடி 170)

நாலடியார் பாடல் ஒன்று இவ்வாறு சொல்கிறது. படிக்கும் போதே விளங்கும் பாடல்.
அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் – பழுமரம்போல்
பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன். (நாலடி 202)

”மல்லற் பெருஞ்செல்வம் மாண்டவர் பெற்றக்கால்
செல்வழியும் ஏமாப்பச் செய்வதாம்” (பழமொழி 289)

“தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க் குற்ற
தெமக்குற்ற தென்றுணரா விட்டக்கால் என்னாம்” (பழமொழி 368)

அறநெறிச்சாரப் (76) பாடலொன்றும், இதே கருத்தை எளிதாக இவ்வாறு சொல்கிறது.

செல்வத்தைப் பெற்றார்சினங்கடிந்து செவ்வியராய்ப்
பல்கிளையும் வாடாமல் பாத்துண்டு – நல்லவாம்
தானம் மறவாத தன்மையரேல் அஃதென்பார்
வானகத்து வைப்பதோர் வைப்பு (அறநெறி 76)

“ஆரியன் அருளில் போயவ் வகன்மலை யகத்த னான
சூரியன் மகனும் மானத் துணைவரும் கிளையும் சுற்ற” (கம்ப.அரசியல் 52)

“அடைந்தவர்க் கருளா னாயின் அறமென்னாம் ஆண்மையென்னாம்” (கம்ப.விபீடணன்.111)

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் - செல்வம் பெற்ற அதனால் ஒருவன் பெற்ற பயனாவது, சுற்றத்தால் தான் சுற்றப்பட ஒழுகல் - தன் சுற்றத்தால் தான் சூழப்படும் வகை அதனைத் தழீஇ ஒழுகுதல்.
(பெற்ற என்பதனுள் அகரமும் அதனான் என்பதனுள் அன்சாரியையும்தொடைநோக்கி விகாரத்தால் தொக்கன. இவ் வொழுக்குப்பகையின்றி அரசாள்தற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப்பயன் என்றார். இவை மூன்று பாட்டானும் சுற்றந் தழால்செல்வத்திற்கு ஏதுவும் அரணும் பயனும் ஆம் என்பதுகூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சுற்றத்தாராலே சூழப்பட ஒழுகுவது, செல்வத்தைப் பெற்றவதனால் உண்டான பயன். இது சுற்றஞ் சூழ்ந்து வருவதாக ஒழுக வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை
தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
The true love and affection of people around us during both ups and downs is the real valuable wealth we could earn. Note: we should earn such relationships by being true to the relationship and contributing to the relationship. We should not take it granted for us. 

Questions that I ask to the kid
What is the real wealth that we could earn?

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain