Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

மனைவிழைவார் மாண்பயன் எய்தார்

குறள் 901
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
மனை - வீடு; வீடுகட்டுதற்குரியநிலம்; நிலஅளவுவகை; குடும்பம்; மனைவி; இல்வாழ்க்கை; சூதாடுபலகையின்அறை; நற்றாய்.

விழைதல் - மிகவிரும்புதல்; மதித்தல்; நெருங்கிப்பழகுதல்.

விழைவார்  - விரும்புவர், மதிக்கிரவர், நெருங்கிப்பழகியவர்

மாண்  - மாட்சிமை; பெருமை, மாணம், மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.

பயன்  - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

எய்தார் - அடையமாட்டார்கள்.

வினை  - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னை வினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக் குறிக்கும் குழூ உக்குறி.

விழைவார் - விரும்புவர், மதிக்கிரவர், நெருங்கிப்பழகியவர்
வேண்டாப்  - வேண்டாத; விரும்பாத

பொருளும்  - பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு; atu   pron. (pl. அவை, அவைகள், அவற்று) that, it, that thing; 2. termination of the sixth or possessive case as அவனது கை.

முழுப்பொருள்
இக்குறள் முக்கியமான குறள். அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லுவார்கள். நமது கடமைகளை சரிவர ஆற்றினால் தான் அறம் பூர்த்தியாகும். அப்போது தான் பொருள் கிட்டும். கடமை ஆற்றவில்லை என்றால் பொருள் கிடைக்காது. பொருள் இல்லை என்றால் வறுமை வீட்டில் (நாட்டில்) குடிப்புகும். வறுமை இருந்தால் இன்பம் இல்லை. இன்பம் இல்லை என்றால் வீடு பேறு கிட்டாது. ஆதலால் இன்பத்திற்கு அறமும் பொருளும் அவசியம்.

ஆதலால் தான் திருவள்ளுவர் சொல்லுகிறார் மனைவியுடன் (அல்லது கணவனுடன்) கூடும் போது கிட்டும் காம சுகத்தை மட்டும் விழைவோர் பெருமை புகழ் தனையும் பொருள் என்னும் பயன் தனையும் அடைய மாட்டார்கள் என்று. வெறும் காமசுகத்தையும் மட்டும் விழைவது மாணம் அற்ற செயல் என்பதை இங்கு காண்க. 

உலகில் பெரியதாய் சாதிக்க வேண்டும் என்றவர்கள், பெருமை வேண்டுபவர்கள் தன் இல்ல சுகத்தை தாண்டி அறம் பொருள் தனை நாடுவர். அவர்கள் காமசுகத்தை மட்டும் நாட மாட்டார்கள். ஆனால் சரியாக அறம் செய்வோர்க்கு பொருள் கிட்டும். அதுமட்டுமின்றி இயற்கையாக இன்பமும் கிட்டும் என்று. அவர்கள் இல்லறத்தையும், வினையாற்றலையும் சரியான பங்கீட்டிலேயே கையாளுவார்கள் என்பதையும் உணர்த்துகிறார் வள்ளுவர்.

கம்பர் அரசியல் படலத்தில் கூறுவதையும் பார்க்கலாம். மகளிர் காரணமாக, ஆடவர்க்கு மரணம் ஏற்படும் என்று கூறும் என்று வாலியை எடுத்துக்காட்டாகக் கூறி, பிறகு தயரதனும் இராமனும் அது காரணம்பற்றியே அல்லலுற்றதையும் உணர்த்துகிற பாடலிது.

"மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்” என்றல்,
சங்கை இன்று உணர்தி; வாலி செய்கையால் சாலும்; இன்னும்,
அங்கு அவர் திறத்தினானே, அல்லலும் பழியும் ஆதல்
எங்களின் காண்டி அன்றே; இதற்கு வேறு உவமை உண்டோ?" (கம்ப.அரசியல்.33)

தமிழ் இணையக் கல்விகழகத்து இணையதளத்து கம்பராமாயண உரையில், இப்பாடலுக்கு விளக்கவுரை இவ்வாறு அளிக்கப்பட்டுள்ளது.

பிறர் மனைவியை விரும்புவதால் மரணம் ஏற்படும் என்பதை வாலி,
சுக்கிரீவன் மனைவியை விரும்பி அதனால் இறக்க நேரிட்டால் அறியலாம்.
எங்களில் என்றது மனைவி சொல்லைக் கேட்டு உயிர் துறந்த தயரதனையும்
உளப்படுத்திக் கூறியதாகும்.  அல்லலும் பழியும் ஆதல் – தயரதன்
 கைகேயிக்கு வரம் அளித்துத் துன்புற்றுப் பழிக்கஞ்சி இறந்தான்.  சீதையின்
சொல்லைக் கேட்டுப் பொன்மானைத் துரத்திச் சென்றதால் மனைவியைப்
பிரிந்து வருந்திப் பிறர் கூறும் பழிக்காளானான் இராமன்.  "சீதை என்று
 ஒருத்தியால் உள்ளம் தேம்பிய பேதையேன்" (8772), "எம்பி வாய்மையான் 
தூயன உறுதிகள் சொன்ன கொல் கொளேன் போயினென்; பெண் உரை
மாறாது போகலால் ஆயது.  இப்பழியுடை மரணம்"(8773); "பெண்மேல் 
வைத்த காதலின் இப்பேறுகள் பெற்றேன்" (8651) என இராமனே பின்னர்
வருந்திக் கூறுவன காண்க.  இலக்குவனும் சீதை கூறிய சுடுமொழியால் அஞ்சி
 இராமனைத் தேடிச்சென்றதால் அல்லல்களே ஏற்பட்டன.  எனவே,
 மகளிர்மாட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது 
உணர்த்தப்பட்டது.

"தூமகேது புவிக்கு எனத் தோன்றிய, வாம மேகலை
 மங்கையரால் வரும், காமம் இல்லை எனின், கடுங்கேடு எனும் நாமம் இல்லை;
நரகமும் இல்லையே" (1427) என்பது வசிட்டர் கூறிய அறிவுரை.  மாந்தர் 
என்பது ஆடவர்க்கும் மகளிர்க்கும் பொதுவான சொல்லாயினும் இங்கே
 ஆடவரைக் குறித்தது, ‘பெண்ணிற் பெருந்தக்க யா உள’ (குறள் 54) என
 அறத்துப்பாலில் கூறிய வள்ளுவர், பொருட்பாலில் பெண்வழிச் சேறல் (அதி.
91) என ஓர் அதிகாரமே வகுத்து எச்சரித்துள்ளார்.  தாரையைப் படைத்த
 கம்பரே இங்கும் பேசுகிறார் என்பது எண்ணுதற்குரியது.   கம்பர் தம் மகன் அம்பிகாபதியின் காதல் கதையின் காரணமாகவும் இவ்வாறு செய்திருக்கக்கூடும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[இனிக் காமத்தான் வருவன நேரே பகையல்லவாயினும, ஆக்கம் சிதைத்தல் அழிவு தலைத்தருதல் என்னும் தொழில்களால் பகையோடு ஒத்தலின், பகைப்பாற்படுவனவாம்; ஆகலான், அவற்றைப் பகைப்பகுதியது இறுதிக்கண்கூறுவான் தொடங்கி ,முதற்கண் பெண்வழிச் சேறல் கூறுகின்றார்.அஃதாவது, தன்வழி ஒழுகற்பாலளாய இல்லாள் வழியே தான் ஒழுகுதல் .]
மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார், தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம். (மனையும், விழைதலும், பயனும் ஆகுபெயர். அவ்வின்பம் - அவள் தன்மையராதற்கு ஏதுவாய இன்பம். அஃது, அவளாற் பயனாய அறத்தினும், அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்ல விடாமையின், விடற்பாற்று என்பதாம்.).

மணக்குடவர் உரை
மனையாளைக் காதலித்தொழுகுவார் நற்பயனைப் பெறார்: யாதானும் ஒருவினையைச் செய்து முடிக்கவேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை. இஃது அறத்தினும் பொருளினும் காதலின்றி அவர்தம்மையே காதலிப்பார்க்கு அறனும் பொருளும் இல்லையாமென்றது.

மு.வரதராசனார் உரை
கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை
மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.

No comments:

Post a Comment