குறள் 871
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]
பொருள்
பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை
என்னும் - என்கிற/ என்று சொல்லப்படும்; , யாவும், எல்லாம்; யாதும்; சிறிதும்.
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.
இலதனை - அல்லாத வற்றை
ஒருவன் - ஒருத்தன், ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்
நகை - நகை - சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்லறு; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு.
நகையேயும் - வேடிக்கைக்காக கூட
வேண்டற்பாற்று - வேண்டுதல் - விரும்புதல், விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்
அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.
முழுப்பொருள்
தீங்கு, எதிர்ப்பு, காமகுரோதம், உட்பகை என்கின்ற பகை என்னும் தீய பண்பு, தீய குணம், தீய மனத்தன்மை ஆகியவற்றை ஒருவன் எக்காரணம் கொண்டும் சிறிது நேரத்திற்காக கூட விளையாட்டாக வேடிக்கைக்காக கூட (சிறவர் போன்று) செய்யக்கூடாது.
பிறரை வெறுப்பதும், அழிக்கத்தூண்டுவதுமான, பகையென்பது பண்பிற்கொவ்வாதது; அதனால் வெறும் விளையாட்டுக்குக்கூட ஒருவர் அதை விரும்பக்கூடாது என்கிறது இக்குறள்.
பகை கொள்ளுதல் என்றுமே தீமையே பயப்பதால், அது பண்பற்றதாகிறது. அதை விளையாட்டுக்காகவே கொண்டாது, அது வினையாகி விடக்கூடுமாதலால், அதை வேடிக்கைக்காகக் கூட கொள்ளக்கூடாது என்று சொல்வதன் மூலம், பகையென்பதன் தீத்திறத்தை தெளிவாகக் காட்டும் குறள்.
"விளையாட்டு வினையாகக் கூடும்" என்று ஒரு பழமொழி உண்டு. அதனை அறிக. அதுமட்டுமின்றி பிறருடைய மனநிலை எவ்வாறு உள்ளது என்பதனை நாம் அறிவது அவ்வளவு எளிதல்ல. அது பிறருக்கு அந்த மனநிலையில் துன்பம் தரலாம்.
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
[அஃதாவது, மாணாதபகையை ஆக்குதற் குற்றமும், முன் ஆகிநின்ற பகையுள் நட்பாக்கற்பாலதும், நொதுமலாக்கற் பாலதும், அவற்றின்கண் செய்வனவும், ஏனைக்களைதற் பால தன்கண் செய்வனவும், களையும் பருவமும், களையாக்காற் படும் இழுக்கும் என்று இத்திறங்களை ஆராய்தல். 'இரட்டுற மொழிதல்' என்பதனாற் பகையது திறமும், பகையிடத்து ஆக்கும் திறமும் என விரிக்கப்பட்டது. இவையெல்லாம் மாணாப் பகைய ஆகலின், இது பகை மாட்சியின் பின் வைக்கப்பட்டது.]
பகை என்னும் பண்பு இலதனை - பகை என்று சொல்லப்படும் தீமை பயப்பதனை; ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று - ஒருவன் விளையாட்டின் கண்ணேயாயினும் விரும்புதல் இயற்கைத்தன்று. (மாணாத பகையை ஆக்கிக் கோடல் எவ்வாற்றானும் தீமையே பயத்தலின், 'பண்பிலது' என்றும், அதனை விளையாட்டின்கண் வேண்டினும் செற்றமே விளைந்து மெய்யாம் ஆகலின், 'நகையேயும்' என்றும், வேண்டாமை தொல்லையோரது துணிவு என்பார் நீதி நூல் மேல் வைத்தும் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.).
மணக்குடவர் உரை
பகை யென்று சொல்லப்படுகின்ற குணமில்லாததனை, ஒருவன் விளையாட்டின்கண்ணும் விரும்பற்பாலதன்று. இஃது எவ்விடத்தும் பகைகோடல் தீது என்றது.
மு.வ உரை
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.
சாலமன் பாப்பையா உரை
பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.
No comments:
Post a Comment