முயங்கிய கைகளை ஊக்கப்

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல் குறள் 1238 முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல்.
குறள் 1238
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]

பொருள்
முயங்கிய  - முயக்கம் -  muyakkam   n. முயங்கு-. 1.Embrace; தழுவுகை. பொருட்பெண்டிர் பொய்ம்மைமுயக்கம் (குறள், 913). 2. Copulation; புணர்ச்சி.முயக்கம் பெற்றவழி (ஐங்குறு. 93, உரை). 3. Connection; uniting, joining; சம்பந்தம். ஆணவத்தின் முயக்கமற்று (தணிகைப்பு. நந்தி. 110).

கைகளை - கைகள் தனை

ஊக்க - ஊக்குதல் - ஆட்டுதல்; நெகிழ்த்துதல்; தப்புதல்; ஆர்வமூட்டுதல்; முயலுதல்; கற்பித்தல்; நினைத்தல்; ஏறுதல்; நோக்குதல்.

பசந்தது - பசத்தல் - பசுமையாதல்; காமத்தால்மேனிபசலைநிறமாதல்; ஒளிமங்குதல்; மங்கிப்போதல்; பொன்னிறங்கொள்ளுதல்.

பை - ஓர்உயிர்மெய்யெழுத்து(ப்+ஐ); நிறம்; அழகு; பசுமை; இளமை; உடல்வலி; துணி, தோல்முதலியவற்றால்அமைந்தகொள்கலம்; பாம்புப்படம்; குடல், மூத்திரப்பைமுதலியஉடல்உறுப்பு; நாணயவகை.

தொடி - toṭi   n. தொடு²-. 1. Curve, bend;வளைவு. தொடிவளைத் தோளும் (சிலப். 10, 128). 2.Bracelet; கைவளை (பிங்.) குறுந்தொடி கழித்தகைச்சாபம் பற்றி (புறநா. 77). 3. Armlet;தோள்வளை.நீப்ப நீங்காது வரின்வரை யமைந்து . . . போக்கில்பொலந்தொடி (நற். 136). 4. Armlet, warrior'sarmlet; வீரவளை வலிகெழு தடக்கை தொடியொடுசுடர்வர (மதுரைக். 720). 5. [T. toḍi.] Ring,ferrule, ornamental knob of an elephant's tusk;பூண். தொடித்தலை விழுத்தண்டூன்றி (புறநா. 243). 6.Circular projections in stone-wells serving assteps; பாறைக்கிணறுகளில் படியாக உதவ வெட்டப்படும் சுற்றுவட்டம். Loc. 7. A standard weight.See பலம் தொடிப்புழுதி கஃசா வுணக்கின் (குறள்,1037).  
பைந்தொடி -  s. A bracelet, an orna ment of the arm, கைவளை. 2. See தொடி.

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம்.

முழுப்பொருள்
தலைவன் தலைவியை அன்பினால் இறுகத் தழுவிக் கொண்டு இருக்கிறான். அதனில் மெய்மறந்துள்ளாள் தலைவி. தலைவன் தான் தலைவியை சற்று இறுகத் தழுவியுள்ளதை உணர்ந்து தலைவிக்கு வலிக்குமே என்று தன் கைகளை மெல்ல சற்று தளர்த்தினான். அப்போது, தலைவியால் தலைவனின் கைகள் சற்று விலகியதை கூட தாங்கமுடியவில்லை. அதனால் பொன் வளையங்களை அணிந்த இந்தப் பேதை தலைவியின் அழகிய நெற்றியின் ஒளி குறைந்து பசலை நிறம் தழுவியது!

தலைவனின் பிரிவை சற்றும் (இம்மி அளவுக்கூட) தாளமுடியாத தலைவியின் அன்பை காட்டுகிறது. அதுமட்டும் இன்றி இதற்கு முன் அவள் அனுபவித்த பிரிவு தந்த துயரின் ஆழத்தையும் நினைவு படுத்துகிறது.

ஒப்புமை
”பைபயப் பசந்தன்று நுதலும்”  (அகநா.95:1)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(வினைமுடிதது மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ? ('இனிக்கடிதிற் செல்லவேண்டும்' என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
யான் பிரிவதாக நினைத்து அவள் முயங்கிய கைகளை நீக்கினேனாக; அதனை யறிந்து பசுத்ததொடியினையுடைய பேதை நுதல் பசந்தது.

மு.வரதராசனார் உரை
தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.

சாலமன் பாப்பையா உரை
முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain