குறள் 624
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து
[பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]
பொருள்
மடு - maṭu n. prob. மடு-. Udder, especiallyof a cow; பசு முதலியவற்றின் முலையிடம்.
மடுத்த - மடுத்தல் - உண்ணுதல்; நிறைத்தல்; சேர்த்தல்; அடக்கிக்கொள்ளுதல்; ஊட்டுதல்; தீமூட்டுதல்; அமிழ்த்துதல்; குத்துதல்; மோசம்பண்ணுதல்; விழுங்குதல்; மயக்குதல்; செலுத்துதல்; இடையூறுஎதிர்ப்படுதல்.
வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.
எல்லாம் - அனைத்தும்
பகடு - பெருமை; பரப்பு; வலிமை; எருது; எருமைக்கடா; ஏர்; ஆண்யானை; தெப்பம்; ஓடம்; சந்து.
அன்னான் - அன்னவன்; அவன், அத்தன்மையன், ஒத்தவன்
உற்ற - உற்று - வந்த
இடுக்கண் - மலர்ந்த நோக்கமின்றிமையல் நோக்கம்பட வரும் இரக்கம்; துன்பம் வறுமை
இடர்ப்பாடு - இடர்ப்படுதல்; துன்புறுகை.
உடைத்து - உடைதல் - இருக்கும்
முழுப்பொருள்
மடுத்த என்றால் இடையூறு ஏற்படுதல் என்று பொருள். வாய் என்றால் வழி என்று பொருள். பகடு என்றால் எருது என்று பொருள். வழியேல்லாம் மேடு பள்ளம் என்று இடையூறு ஏற்பட்டாலும் ஒரு எருது அல்லது மாடு அல்லது காளை எவ்வாறு அதனை பொருட்படுத்தாமல் தான் தூக்கிக்கொண்ட சுமையை சுமந்து சென்றுக்கொண்டே இருக்கிறதோ அதே போன்று ஒரு மனிதன் வாழ்வில் ஒரு வினையை செய்யும் பொழுது துன்பங்களும் இடர்களும் வரும்பொழுது அவ்விடர்ப்பாடுகளை தாண்டிச் சென்று அவற்றை உடைத்துச் சென்று இலக்கை அடைய வேண்டும்.
அதுமட்டும் இன்றி பொதுவாகவே துன்பத்தில் எண்ணம் குவியக் குவிய அது பெருகிக்கொண்டே செல்லும் ஆற்றல் உடையது. ஆதலால் அதில் எண்ணத்தை குவிக்காது அடுத்த காரியத்திற்கு செல்ல வேண்டும்.
தன் புண்ணைக் கடித்துக் கடித்துப் பெரிதாக்கி ஒரு மாபெரும் புண்ணாக மாறி வாழ்ந்து மடிந்து போகும் தெரு நாய்களைப் போல் நாமாகிவிடகூடாது. இருளைக் கூர்ந்து கூர்ந்து பார்ப்பதால் ஒளி பிறந்துவிடும் என்று நம்பும் குருடர்கள் போல் நாம் இருக்க கூடாது.
எருது இழுக்கும் வண்டிப்பாரத்தை வாழ்க்கைச் சுமைக்கு ஒப்பாய் சொன்னது, சங்கப்பாடல்கள் தொட்டு, இன்றுவரை தொடர்வது. கி.வா.ஜ அவர்களின் ஆராய்ச்சிப் பதிப்பில் இப்பாடலுக்கான உரையிடலில் அவை சுட்டப்பட்டு இருக்கின்றன. அவற்றுள் சில:
“அள்ளல் தங்கிய பகடுறு விழுமம், கள்ளார் களமர் பெயர்க்கும்ஆர்ப்பே” (மதுரை.259-60)
“கானற் கழியுப்பு முகந்து கல்நாடு மடுக்கும்,
ஆரைச் சாகாட்டாழ்ச்சி போக்கும்,
உரனுடை நோன்பகட்டன்ன, எங்கோன்” (புறநானூறு: 60: 7-9)
“அச்சொடு தாக்கிப் பாருற் றியங்கிய
பண்டச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய
வரிமணல் ஞெமரக் கற்பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ” (புறநானூறு: 90: 6-9)
”குண்டுதுறை இடுமணல் கோடுற அழுந்திய
பண்டிதுறை ஏற்றும் பகட்டினைப் போல” (பெருங்.1.53:53-4)
“நிரம்பாத நீர்யாற் றிடுமணலுள் ஆழ்ந்து
பெரும்பார ஆடவர்போல் பெய்பண்டம் தாங்கி
மருங்கொற்றி மூக்கூன்றித் தாள்தவழ்ந்து வாங்கி
உரங்கெட்டு டுறுப்பழுகிப் புல்லுண்ணா பொன்றும்” (சீவக.2784)
மேலும்: அஷோக் உரை
வரி:
துயரத்தை வெல்வதற்கு மிகச்சிறந்த வழி என்பது அதை ஒரு கதையாக ஆக்கிக்கொள்வதுதான்
கதை:
‘நான் கடவுள்’ படத்தின் படப்பிடிப்பின்போது அதில் நடிக்க ஏராளமான துறவிகள் தேவைப்பட்டனர். துணை நடிகர்களை துறவிகளாகவோ அல்லது அதைப் போன்ற விசேஷமான வாழ்க்கைமுறை கொண்டவர்களாகவோ நடிக்க வைக்க முடியாது. எத்தனை வேடம் போட்டாலும் அவர்களுடைய கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சினிமா ஒரு காட்சிக் கலை. ஒரு ஏழையை பணக்காரனாக சினிமாவில் நடிக்க வைப்பது மிகவும் கடினம். தோரணைக்கு அப்பால், கண்களுக்கு அப்பால், பாவனைக்கு அப்பால் நமது மனம் உணரக்கூடிய ஏதோ ஒன்று இவர் பணக்காரனல்ல என்று சொல்லிவிடும்.
......
......
......
‘நான் கடவுள்’ படத்தில் பெரும்பாலான துறவிகள் உண்மையிலேயே துறவு வாழ்க்கை கொண்டவர்கள். அவர்களுக்கு நடிப்பில் எந்த ஆர்வமும் இல்லை. பெரும்பாலான நேரம் சும்மாதான் இருந்தார்கள். பணமும் அவர்களுக்குப் பெரிதாக ஈர்ப்பை அளிக்கவில்லை. அவர்களை நடிக்கக் கொண்டு வரும் பொறுப்பை அன்றைய உதவி இயக்குநராக இருந்த தியாகராஜன் எடுத்துக்கொண்டார். தியாகராஜன் அவர்களைச் சந்தித்து பலவிதமாகப் பேசி அவர்களில் ஒருசிலரை நடிக்க கூட்டிக்கொண்டு வந்தார்.
அவர்கள் அனைவரும் தமிழர்கள். அவர்கள் பிறரை நடிக்க அழைத்துக்கொண்டு வந்தனர். பிச்சை எடுப்பதுதான் அவர்களுடைய தொழில். காசியின் பெரும்பாலான படித்துறைகளில் அவர்கள் பேசாமல் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அவர்களுக்கு உணவுக்கு பணம் தேவையில்லை. ஏனென்றால் காசி முழுக்க பல்வேறு இடங்களில் அவர்களுக்கு உணவு அளிக்கப்படும். அவர்கள் பிச்சை எடுப்பது பெரும்பாலும் கஞ்சா தேவைக்காக மட்டுமே.
மற்றபடி மருத்துவத் தேவையோ உடைத் தேவையோ உறைவிடத் தேவையோ அவர்களுக்குக் கிடையாது. அவர்களுடைய தேவைக்கு மேலேயே எப்போதும் பணம் கைக்கு வருவது வழக்கம். சினிமா என்ற துறையின் ஆர்வம் காரணமாகத்தான் பெரும்பாலும் அவர்கள் வந்தார்கள். அங்கென்ன நிகழ்கிறது என்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் பேசி சிரித்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்.
படத்தில் அவர்களுடைய நடிப்பு என்பது ஆங்காங்கு அமர்ந்திருப்பதும் கஞ்சா குடிப்பதும் மட்டும்தான். படப்பிடிப்பு இடைவேளையிலே அவர்கள் கூடி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தமிழர். சைவ மடாதிபதிகளுக்கு உரிய முறையில் மிகப்பெரிய பாணியில் மிகப்பெரிய சடைமகுடம் ஒன்று வைத்திருந்தார். அந்தச் சடையை அவிழ்த்துவிடும்படி கோரியபோது எழுந்து அவிழ்த்துவிட்டார். அதன் நுனி தரையைத் தொட்டது. தடித்த புகையிலை சுருள்கள் போன்ற சடைமுடி. பாலா அவரை இடுப்பளவு நீரில் இறங்கி நிற்கச்செய்து குளிக்க வைத்தார்.
அவர் அந்த சடையை நீட்டி நீராடிக்கொண்டிருக்கும்போது கேமிரா அவரில் இருந்து தொடங்கி அந்தப் படிக்கட்டைக் காட்டி மேலெழுந்து சென்று படிக்கட்டில் ஏறிச்செல்லும் ருத்ரனைக் காட்டும் அந்தக் காட்சியை பலரும் அந்தப் படத்தில் நினைவு கூரலாம். வருத்தமான விஷயம் என்னவென்றால் அவர் நீராடுவதே இல்லை. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் குளித்ததோடு சரி. அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது அருகே இருந்த இன்னொரு துறவியிடம் எங்களுடன் இருந்த நடிகர் சிங்கம்புலி, ‘‘சாமி உங்க கதையை சொல்லுங்க’’ என்று கேட்டார்.
அவர் சாதாரணமாக “சொல்றதுக்கென்ன இருக்கிறது? எல்லாரையும் போலத்தான் வீட்டை விட்டு கிளம்பி வந்தேன்’’ என்றார். ‘‘இல்லை சாமி, ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி. சொல்லுங்கள்’’ என்று கேட்டபோது மிக உணர்ச்சியற்ற, ஆனால் புனைவுத்தன்மை மிகுந்த மொழியில் தன் கதையைச் சொன்னார். அவருக்குத் தென்னிந்தியாவின் ஐந்து மொழிகள் தெரியும். வட இந்தியாவின் இந்தியும் மராத்தியும் போஜ்புரியும் தெரியும். இந்தியா முழுக்க ஐம்பது முறைக்கு மேல் சுற்றி வந்திருக்கிறார்.
வயது எழுபதை ஒட்டி. சாமியாராக ஆகி நாற்பதாண்டு காலமாகிறது. சொந்த ஊர் கடப்பா அருகே ஒரு சின்ன இடம். அங்கே அவருக்கு நிறைய நிலம் இருந்தது. மனைவியும் குழந்தைகளும் இருந்தனர். குண்டூர் அருகே கிருஷ்ணா நதிப்பாசனத்தில் மிகவும் வளமான நிலம் அது. விவசாயம் செய்வது அவருடைய பரம்பரைத் தொழில் என்பதால் அதை மிகச்சிறப்பாகவே செய்து வந்திருந்தார். ஆறு குழந்தைகள். அதில் நான்கு பெண். மனைவியிடம் இனிமையான உறவு இருந்தது. விவசாய வேலைகளைத் தவிர வேறு எதுவுமே தெரியாது.
இரண்டு முறை சிவசைலத்துக்குச் சென்று வந்திருக்கிறார். திருப்பதிக்குச் சென்று சாமி கும்பிட வேண்டுமென்று ஆசை இருந்தது. ஆனால், விவசாய வேலைகளை விட்டு அதைச் செய்ய முடியாது என்பதனால் அது தட்டிப்போய்க் கொண்டே இருந்தது. மத விஷயங்களில் எந்த ஆர்வமும் இல்லை. அரசியலில் எதுவும் தெரிந்து கொள்வதில்லை. நன்றாக வயலில் காலை முதல் மாலை வரை வேலை செய்வதும், வயிறு புடைக்கும்படி சாப்பிடுவதும், தூங்குவதும்தான் அவருடைய வாழ்க்கை.
அதுதான் வாழ்க்கையிலேயே மிகச் சந்தோஷமான விஷயம் என்று அவர் சொன்னார். வயிறு புடைக்கும்படி சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் அளவுக்கு வேலை செய்பவர்கள்தான் உலகத்திலேயே மகிழ்ச்சியானவர்கள் என்றார். அவருடைய நிலத்தில் பொன் விளையும் என்று சொன்னார். இன்றைக்கும் அந்த நிலத்தை கண்ணால் பார்க்க முடிகிறது என்றார். அந்த நிலத்தை அவர் நெய்க்கரிசல் என்று சொன்னார்.
‘‘மண்வெட்டியால வெண்ணையை வெட்டுவது போல புரட்டிப்போடலாம். உழுது போட்ட நிலம் ஆயுர்வேத வைத்தியர்கள் வைத்திருக்கும் லேகியம் போல இருக்கும். கால் புதைந்த இடமெல்லாம் வெண்ணையில் பதிந்தது போல். உழுது புரட்டும்போது ஒவ்வொரு அடிக்கும் மண்புழுக்கள் கத்தைகத்தையாக நெளியும். நீரூற்றி உழுது மண் மரமடித்துவிட்டு கரையில் ஏறி நின்று பார்த்தால் பளிங்கால் ஆனது போல் இருக்கும் வயல்’’ என்றார்.
அதன் மேல் சிறிய பறவைகள் வந்து அமர்ந்தால் கூட உடம்பு உலுக்கிக்கொள்ளும். வயலைப் பார்ப்பதுதான் தன்னுடைய வாழ்க்கையில் அவருக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் வயல் அருகே சென்று பார்த்துக் கொண்டிருப்பார். வேலை இல்லை என்றாலும் கூட வரப்பிலேதான் அமர்ந்திருப்பார். பாயை அங்கேயே விரித்து படுத்து தூங்கிக்கொள்வதும் உண்டு. வயலை விரும்புகிறவன் அதில் விழுந்துவிடுவான். பெண்ணாசையைவிட பொன்னாசையைவிட மண்ணாசை மிகப்பெரியது என்றார் அவர். பசுமை தழைத்து மேலே வரும் பயிர் வேறு எதையுமே நினைக்கவிடாது.
இரவில் கனவில் கூட அதுதான் வந்து கொண்டிருக்கும். காலை எழுந்ததுமே தண்ணீர் கூட குடிக்காமல் வயலை நோக்கித்தான் ஓடத்தோன்றும். ஒருமுறை அவர் வயல் நன்றாக விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தது. பொன்நிற மணிகள். ஒரு சாண் அளவுக்கு நீளமானவை அவை. மாலையில் காற்று கடந்து செல்லும்போது ஆயிரம் கொலுசுகள் குலுங்கும் ஒலி கேட்டது. அறுவடைக்குத் தயாரான வயல் என்பது பொன்னேதான். கரையில் இருந்து பார்க்கும்போது அந்தி வெயிலில் அது பொன்னைவிட அதிகமான வெளிச்சத்தை, பிரகாசத்தைக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.
அறுவடைக்கு ஆட்கள் ராயலசீமாவில் இருந்துதான் வரவேண்டும். அவர்கள் ஒரு பகுதியிலிருந்து அறுவடை செய்துகொண்டே வருவார்கள் அவர்களுக்காக அவர் காத்திருந்தார். அந்த முறை அறுவடை செய்து முடித்த பிறகு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு திருப்பதி சென்று வரவேண்டுமென்று எண்ணியிருந்தார். ஆனால் யாரும் நினைத்திருக்காதபடி வானம் கறுத்து மழை வந்தது. அந்த வருடத்தின் மிகப்பெரிய புயல் அது. மழை வருவதை தெரிந்துகொண்டதும் அவர் மடைகளைத் திறந்துவிடுவதற்காக வயலுக்குச் சென்றார்.
வயலில் அனைத்து மடைகளையும் திறந்து விட்டபிறகு கூட அங்கிருந்து வர மனமில்லாமல் குடையுடன் வரப்பிலேயே நின்று கொண்டிருந்தார். வானமே கிழிந்து தலைமேல் விழுவது போல மழை பொழிந்தது. மிகப்பெரிய அருவிக்கு அடியில் நின்று கொண்டிருப்பது போல. கை நீட்டிப்பார்த்தால் அந்தக் கையைப் பார்க்க முடியாத அளவுக்கு மழைத்திரை. ஆனாலும், வீட்டுக்கு போகத் தோன்றவில்லை. இரவில் நெடுநேரம் வரை அங்கிருந்துவிட்டு நள்ளிரவில்தான் வீட்டுக்குச் சென்றார்.
பிள்ளைகளை வீட்டுக்குள் செல்லும்படி சொல்லிவிட்டு ஏரியைத் திறப்பதைப் பற்றி பேசுவதற்காக அருகிலிருந்த கோயிலுக்குச் சென்றார். கோயிலிலேயே பேச்சு முடிந்து விடியற்காலையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது ஏதோ ஓசை கேட்டது. பலர் அலறுவது போன்ற சத்தம். நல்ல இருள். ஓடிச் சென்று ஒரு மண்டபத்தின் மேலேறி பார்த்தபோது அருகிலிருந்த கல்மண்டபங்கள் அனைத்தும் மூழ்கும்வரை வெள்ளம் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தார். கிருஷ்ணா பெருகிக் கரைக்கு வந்துவிட்டது.
தன்னுடைய குடும்பம் என்ன ஆகும் என்று பயம் வந்தது. ஆனால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. எந்த திசை என்பது கூடத் தெரியவில்லை. ஒவ்வொரு மின்னலுக்கும் தண்ணீர் கூடிக் கொண்டே இருப்பதைப் பார்க்க முடிந்தது. அங்கேயே நின்று அலறித் துடித்தார். தண்ணீரில் பாய்ந்து நீந்திச் சென்றாலும் கூட தண்ணீரின் ஒழுக்கு அவரை அடித்துச் சென்றது. எங்கோ ஒரு பனைமரத்தில் தொற்றி ஏறி அமர்ந்து கொண்டார். காலையில் பார்த்தபோது பனைமரத்தின் முக்கால் பங்கு அளவுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது.
சுற்றிலும் தண்ணீர் அன்றி எதுவுமே இல்லை. இரண்டு நாட்கள் பனைமரத்தின் உச்சியிலேயே தொற்றிக் கொண்டு அமர்ந்திருந்தார். மூன்றாவது நாள் அவரை படகில் வந்து மீட்டுக் கொண்டு சென்று பள்ளிக்கூடத்தில் தங்கவைத்தனர். தன்னுடைய பிள்ளைகள் என்ன ஆயினர் மனைவி குடும்பம் என்ன ஆயினர் என்று தெரிந்து கொள்வதற்காக பள்ளிக்கூடங்கள் தோறும் கதறியபடி அலைந்தார். அவர்கள் தென்படவே இல்லை. ஏழு நாட்களுக்குப்பிறகு வெள்ளம் முழுமையாக வடிந்து நிலம் முழுக்க சேற்றுப்பரப்பாக மாறியது.
அவர் இறங்கி தன் வீடிருந்த இடத்திற்கு சென்றார். மண்ணில் கட்டப்பட்டிருந்த வீடு இருந்த தடமே தெரியாமல் கலைந்து அழிந்து சென்றுவிட்டிருந்தது. கன்றுகள் இல்லை. அவரது வயலும் சேறால் மூடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ஒரு ஊர் வயல் வாழ்க்கை இருந்ததற்கான ஒரு சான்றும் இல்லை. ஆயிரக்கணக்கான வருடங்களாக சேறு இருப்பது போலிருந்தது அந்தப் பகுதி. அவர் அங்கே நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். மனதுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று.
திரும்பி தன் இடுப்பில் கட்டியிருந்த ஆடையை எடுத்து கிழித்து அரை ஆடை மாதிரி கட்டிக் கொண்டார். வடக்கு நோக்கி நடந்தார். இரண்டரை வருடங்களுக்குப் பிறகு காசிக்கு வந்து சேர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை துறவிதான். திரும்பி ஊருக்குச் செல்லவோ அந்த வயலையோ மண்ணையோ பார்க்கவோ இல்லை. இயல்பான குரலில் ‘‘இதுதான் தம்பி கதை’’ என்றார். அப்போதுதான் எனக்கு ஒரு மின்னல் அடித்தது. அவரை நான் முன்பு பார்த்திருக்கிறேன்.
‘‘நான் உங்களை முன்பு பார்த்திருக்கிறேன். இதே கதையை நீங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்’’ என்று சொன்னேன். ‘‘எப்போது?’’ என்றார். ‘‘நான் இளைஞனாக இருந்தபோது இதே போல வீட்டைவிட்டு வந்து காசியிலே ஒரு துறவி மாதிரி இருந்தேன். படிக்கட்டில் வாழ்ந்திருந்தபோது ஒருமுறை உங்களைப் பார்த்தேன். இதே கதையை சொன்னீர்கள்’’ என்றேன். ‘‘சொல்லியிருப்பேன்’’ என்று அவர் சொன்னார்.
அப்போது சொன்ன அதே உணர்வுகளும் அதே வார்த்தைகளுமாக அதைச் சொன்னார் என்று தோன்றியது. ஒரு தேர்ந்த புனைகதையாளனுக்குரிய கதை நுட்பத்துடன், விவரணைகளுடன் அந்தக் கதை இருந்தது. அதைச் சொல்லிச் சொல்லி அவர் பெரிது பண்ணிக் கொண்டாரா அல்லது அவருக்கு மனதில் வார்த்தை வார்த்தையாக அந்தக் கதை அப்படியே பதிந்திருக்கிறதா என்று தெரியவில்லை.
ஆனால் இப்போது யோசிக்கும்போது அப்படி ஒரு கதையைத் துல்லியமாகச் சொல்ல ஆரம்பிக்கும்போதே அந்தக் கதையிலிருந்து அவர் விலகிவிட்டார் என்று தோன்றியது. அந்தக் கதையை சொல்லும்போது, அது ஒரு மனிதனுடைய கதையாகும்போது அது அவருடைய கதையாக அல்லாமல் ஆகிவிட்டது. துயரத்தை வெல்வதற்கு மிகச்சிறந்த வழி என்பது அதை ஒரு கதையாக ஆக்கிக்கொள்வதுதான். அதைத்தான் இலக்கியம் இன்றுவரைக்கும் செய்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன் எனக்கு ஒரு செல்பேசி அழைப்பு வந்தது. அப்துல் ஷுக்கூர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டார். என்னுடைய ‘நூறு நாற்காலிகள்’ என்னும் நீள்கதை மலையாளத்தில் ஒரு சிறு நாவலாக வெளிவந்துள்ளது. அதற்கு பதிப்புரிமை இல்லை என அறிவித்திருந்தமையால் ஏழு வெவ்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. இரண்டு லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கிறது அது. அந்நாவலைப் பற்றி ஒரு விவாதம் நிகழ்த்தவேண்டும் என ஷுக்கூர் அழைத்தார்.
நான் அமைப்பு சார்ந்த இலக்கியக் கூட்டங்களை விரும்பாதவன். கல்லூரிகளின் கூட்டங்களைப் போல வீண் வேலையே வேறில்லை. ஆனால் ஷுக்கூரின் கூட்டம் என்னைக் கவர்ந்தது. காரணம், அவர் நடத்தும் டீக்கடையிலேயே அந்தக் கூட்டம் நடக்கும் என்றார். சென்ற சில மாதங்களாக மாதம் ஒருமுறை அந்த டீக்கடையிலேயே ஷுக்கூர் இலக்கியக் கூட்டங்களை நிகழ்த்தி வருகிறார். கேரளத்தின் கண்ணனூர் மாவட்டத்தில் தலைச்சேரி - கண்ணூர் சாலையில் உள்ள பெடயங்கோடு என்னும் கிராமம் அது.
‘ஜனவரி மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நடைபெறும். பயணச் செலவு ஏதும் தரமுடியாது. விற்கும் நூல்களின் பணத்தைக்கூட நோயுற்றிருக்கும் ஓர் எழுத்தாளருக்கு அளிக்கவிருக்கிறேன்’’ என்றார். அந்த லட்சியவாதம் எனக்குப் பிடித்திருந்தது. ‘‘வருகிறேன்’’ என்றேன். ஒரு மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என்று தோன்றியது.
என் வழக்கமான பயணத் தோழர்கள் கிருஷ்ணன், ராஜமாணிக்கம் இருவரையும் அழைத்தேன். திருப்பூர் நண்பர் கதிரின் காரிலேயே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அதை ஒரு விரிவான பயணமாக ஆக்கிக்கொண்டோம். 2016 ஜனவரி இரண்டாம் தேதி கோவையிலிருந்து கிளம்பி, மானந்தவாடி அருகே உள்ள இடைக்கல் என்னும் கற்கால பாறைச்செதுக்கு ஓவியங்களைப் பார்த்துவிட்டு மாலையில் கண்ணனூரில் தங்கினோம். காலையில் கண்ணனூர் கோட்டையைப் பார்த்துவிட்டு ஷுக்கூர் வாழும் பெடயங்கோடு என்னும் ஊரை விசாரித்து வழிதேடிச் சென்றோம்.
பெடயங்கோட்டை அணுகியபின் ஷுக்கூரைப் பற்றி கேட்கவேண்டுமே என நினைத்து பார்த்துக்கொண்டே வந்தோம். பெடயங்கோடு மிகச்சிறிய ஊர். ஆகவே கடந்து சென்றுவிட்டோம். மீண்டும் வழி விசாரித்துத் திரும்பி வந்தோம். அங்கே சாலையோரத்தில் ஒரு பெட்டிக்கடையில் ஷுக்கூர் பற்றி கேட்டோம். ஆச்சரியமாக, கடைக்காரர் முகம் மலர்ந்து ‘‘ஷுக்கூர் இக்காவா? தெரியாம இருக்குமா?’’ என்றார். அவர் பெயர் லத்தீஃப். அவரும் ஒரு கவிஞர், மூன்று தொகுதிகள் பிரசுரித்திருக்கிறார். ‘‘அதோ அந்தக்கடைதான். நானும் வருவேன்’’ என்றார்.
நாங்கள் மெல்லச் சென்றபோது சாலையோரமாக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நின்றிருந்த ஷுக்கூர், எங்களை மறித்து கை காட்டி அழைத்தார். நாங்கள் கடந்து செல்லும்போதே அவர் பார்த்துவிட்டிருந்தார். என் பெயர் எழுதப்பட்ட தட்டி சாலையோரமாக இருந்தது. ‘‘இதுதான் என் கடை’’ என்றார் ஷுக்கூர். சின்னஞ்சிறிய டீக்கடை. நான் இன்னும் சற்று பெரிய கடையை எதிர்பார்த்தேன். அங்கே எப்படி கூட்டம் நடத்துவது என்று தெரியவில்லை. ஆனால் நான் அதைக் கேட்கவில்லை.
ஷுக்கூர் சைக்கிளில் மீன் வாங்கிக்கொண்டுவந்து தெருத்தெருவாகக் கூவி விற்கும் தொழிலைத்தான் இருபதாண்டுகளாகச் செய்துவந்தார். அதற்குமுன் மண்வெட்டும் கூலித்தொழிலை பத்தாண்டு காலம் செய்தார். அவரது மகன் துபாயில் வேலைக்குப் போனபின் ஓராண்டாகத்தான் டீக்கடை நடத்துகிறார். பெரிய அளவில் வருமானம் இல்லை. ஆனால் எளிய வாழ்க்கைக்கு அது போதும் என்றார்.
ஷுக்கூருக்கு ஐந்தாம் வகுப்புதான் படிப்பு. சுயமாக வாசிக்கக் கற்று, அவரே இலக்கியத்தை வந்தடைந்தார். இலக்கியத்தின் அடிப்படைகளை அவருக்கு எவரும் சொல்லித் தரவில்லை, அவரே வாழ்க்கையைக் கொண்டு இலக்கியத்தை அடையாளம் கண்டார். வாசிக்க ஆரம்பித்தபின் புத்தகங்களையும் வாங்கி, மீன் சைக்கிளின் முன்பக்கம் பையில் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு மீனுடன் புத்தகங்களையும் கூவி விற்றிருக்கிறார்.
‘‘நான் மீன் அளவுக்கே புத்தகங்களையும் விற்றிருக்கிறேன்’’ என்றார் ஷுக்கூர். ‘‘ஆரம்பத்தில் கொஞ்சம் வேடிக்கையாகத்தான் பார்த்தார்கள். ஆனால் என் ஆர்வத்தைப் பார்த்தபின் கம்யூனிஸ்ட்கள் எனக்கு ஆதரவு அளித்தார்கள்’’ என்றார். தான் விற்கும் எந்த நூலையும் முதலில் தானே வாசித்துவிடவேண்டும் என்பது ஷுக்கூரின் நெறி. அந்நூலைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்வார். நூலைப் பற்றி அவரே விரிவாக அறிமுகமும் செய்வார். அவருக்கென ஒரு சிறிய இலக்கிய வாசகர் கூட்டம் உருவாகி வந்தது. அதன்பின்னரே ஷுக்கூர் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.
அடித்தளத்திலிருந்து கஷ்டப்பட்டு வந்தவர்கள், வழக்கமாக தங்கள் போராட்டங்களைப் பற்றிய கவிதைகளையும் அரசியல் கருத்துக்களையும்தான் எழுதுவது வழக்கம். ஷுக்கூர் எழுதியவை அவரது வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய ஆழமான தத்துவநோக்குள்ள கவிதைகள். நவீனகவிதைகள் அவை. டீக்கடை வைத்தபின் கூடவே பெடயங்கோட்டில் வீடு வீடாக இலக்கியத்தை அறிமுகம் செய்து வருகிறார் ஷுக்கூர். என் ‘நூறு சிம்ஹாசனங்ஙள்’ நூலை மட்டும் 450 பிரதிகள் அச்சிட்டு அந்த ஊரில் வெளியிட்டிருக்கிறார். இந்த டீக்கடை இலக்கியம் அவரது கனவுகளில் ஒன்று. இதை ஒரு வகை தனிப்பட்ட தவமாகவே அவர் நினைக்கிறார்.
ஷுக்கூர் இக்காவின் வீட்டுக்குச் சென்றோம். எங்களில் இருவர் சைவர்கள். ‘‘இங்கே அந்த மாதிரி நல்ல சாப்பாடு கிடைக்காதே’’ என்றார் ஷுக்குர். நான் சிரித்துவிட்டேன். நானும் நண்பர்களும் அவர் இல்லத்தில் நெய்ச்சோறும் சிக்கனும் சாப்பிட்டோம். அவரது மனைவியும் திருமணமான மகளும் வீட்டில் இருந்தனர். அவர்களின் சமையல் வடக்கு மலபாருக்கே உரிய மிதமான காரமுள்ள சுவை கொண்டது.
ஷுக்கூர் எங்களை அருகில் உள்ள வளைபட்டணம் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார். நதிக்கரையில் கோயில் கொண்டுள்ள பகவதியின் காவலாளிகளாகக் கருதப்படும் மிகப்பெரிய மீன்கள் நிறைந்த நீர்ப்பெருக்கைப் பார்த்தோம். ‘‘பாதுகாக்கப்பட்ட மீன்கள் இவை. இலக்கியமும் இப்படித்தான் பாதுகாக்கப்படவேண்டும்’’ என்றார் ஷுக்கூர் சிரித்தபடி.
அந்த நதிக்கரையில்தான் படகுகள் வந்து சேரும் படித்துறை இருந்தது. கடலில் இருந்து மீன், படகுகள் வழியாக அங்கே வந்துசேரும். அங்கே அதிகாலையிலேயே சென்று ஏலத்தில் மீனை எடுத்து சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று விற்பதுதான் ஷுக்கூரின் வழக்கம். மழைக்காலத்தில் மீன் விற்பது மிகக்கடினம். முழுநேரமும் நனைந்தாகவேண்டும். ஆனால் மீன் சீக்கிரம் அழுகாது. வெயிலில் மீன் அழுகி நஷ்டம் ஏற்படும்.
‘‘அன்றைக்கெல்லாம் நல்ல மீன் சாப்பிட்டதே இல்லை. மிஞ்சிப் போன அழுகிய மீன்தான் எப்போதும் உணவு’’ என்று ஷுக்கூர் சிரித்தபடி சொன்னார். தன் கஷ்டங்களை முழுக்க அவர் சிரிப்புடன் மட்டுமே சொல்கிறார் என்பதைக் கவனித்தேன். கஷ்டங்களை அவர் கடந்து வந்துவிட்டிருந்தார். ஆகவே அவை எளிய கதைகளாக மாறிவிட்டன. கடந்து வருவதற்கு இலக்கியம் உதவியிருக்கிறது மதியம் இரண்டரை மணிக்குக் கூட்டம். வழக்கமாக முப்பது பேர்தான் வருவார்கள்.
ஆனால் அக்கூட்டம் பற்றி ‘மாத்ருபூமி’, ‘மலையாள மனோரமா’ நாளிதழ்களில் என் நண்பர்களான இதழியலாளர்கள் பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருந்தமையால் அன்று நூறு பேர் வந்திருந்தனர். இரு சக்கர வண்டிகளிலும் கார்களிலும் வந்துகொண்டே இருந்தனர். கணிசமானவர்கள் கண்ணனூர், தலைச்சேரி முதலிய நகரங்களிலிருந்து வந்திருந்தனர். கடைக்குள் இடமில்லாமல் பாதிப் பேர் சாலையில் அமர்ந்திருக்க நேரிட்டது.
வாசகர்களுடன் பரவலாக அறியப்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் பலர் கலந்துகொண்டனர். நால்வர் நூலைப் பற்றிப் பேசியபின், நான் சிற்றுரையாற்றி கேள்விகளுக்குப் பதிலளித்தேன். அத்தனை பேரும் அந்நாவலை வாசித்திருந்தனர். அதற்குச் சமானமான பிற நாவல்களுடன் ஒப்பிட்டும் பேசினர். உற்சாகமான உரையாடல். கூரிய மதிப்பீடுகள். மாலை ஆறு மணிக்கு சந்திப்பு முடிந்த பின்னரும் நின்றபடியே பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் நக்கலும் கிண்டலும் இல்லாமல் கேரளத்தில் இலக்கியக்கூட்டங்கள் முடிவடைவதில்லை.
‘‘நவீன இலக்கியத்தை நாங்கள் டீக்கடைகளில்தான் பேசிப் பேசி உருவாக்கினோம்’’ என்றேன். ‘‘முன்பு கேரளத்தில் கம்யூனிசமும் டீக்கடைகளில் உருவானதுதான்’’ என்றார் தாஹா மாடாயி என்னும் விமர்சகர். ‘சிங்கிள் டீ இலக்கியம்’ என்றுதான் நவீன இலக்கியத்தை பழைய இலக்கியவாதிகள் சொல்வார்கள்.
ஏழு மணி வரை அங்கே நின்றபடியே இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு விடைபெற்றுக் கிளம்பினேன். ஷுக்கூர் இக்கா என் கைகளைப் பற்றிக் கொண்டு, ‘‘முதல் கூட்டத்தை கன்னட எழுத்தாளர் சிவராம காரந்தின் ‘சோமனதுடி’ பற்றி நடத்தினோம். அந்த அளவுக்கு தார்மீக வேகம் உள்ள நாவல் இது. எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’’ என்றார். நான் சம்பிரதாயமாக ஏதும் சொல்ல விரும்பவில்லை. ‘‘இக்கா... மறுபடியும் சந்திப்போம்’’ என்று மட்டும் சொன்னேன்.‘
‘மாத்ருபூமி’ நாளிதழ் இந்த நிகழ்ச்சிக்காக தங்கள் நிருபரையும் புகைப்படக்காரரையும் அனுப்பியிருந்தது. அவர்களின் காரிலேயே நான் கோழிக்கோடு கிளம்பினேன். அங்கிருந்து எர்ணாகுளம் வழியாக நாகர்கோவில் வந்தேன். திரும்பும் வழி முழுக்க ஒரே விஷயத்தைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழகத்தில் இலக்கியமென்பது உணவும் உறைவிடமும் பிற வசதிகளும் அமைந்துவிட்டவர்களுக்கான ஒருவகை கேளிக்கை என்னும் எண்ணம் உள்ளது. மேலும் மேலும் உலகியல் லாபங்களைச் சம்பாதிப்பதற்கு இலக்கியம் எதிரானது என்னும் எண்ணம் உள்ளது.
ஆனால் ஷுக்கூர் போன்றவர்களை அவர்களின் அடித்தள வாழ்க்கையிலிருந்து கைகொடுத்துத் தூக்கியது இலக்கியம்தான். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும் கனவுகளையும் இலக்கியமே அளித்தது. இத்தனை வயதில் ஷுக்கூர் இக்கா எதற்காக இப்பணியைச் செய்கிறார்? அடையாளமோ, புகழோ தேடி அல்ல. அது அவர் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தை அளிக்கிறது. வெற்றியோ, பணமோ, புகழோ அல்ல... லட்சியவாதமே வாழ்க்கைக்கு இலக்கையும் நிறைவையும் அளிக்கமுடியும். இலக்கியத்தின் சாராம்சமாக இருப்பது லட்சியவாதமே. அதைத்தான் ஷுக்கூர் இக்காவின் கனிந்த முகம் எனக்குக் காட்டியது.
வாசிக்க ஆரம்பித்தபின் புத்தகங்களையும் வாங்கி, மீன் சைக்கிளின் முன்பக்கம் பையில் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு மீனுடன் புத்தகங்களையும் கூவி விற்றிருக்கிறார்.
தன் கஷ்டங்களை முழுக்க அவர் சிரிப்புடன் மட்டுமே சொல்கிறார் என்பதைக் கவனித்தேன். கஷ்டங்களை அவர் கடந்து வந்துவிட்டிருந்தார்.
ஷுக்கூர் போன்றவர்களை அவர்களின் அடித்தள வாழ்க்கையிலிருந்து கைகொடுத்துத் தூக்கியது இலக்கியம்தான். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும் கனவுகளையும் இலக்கியமே அளித்தது.
பரிமேலழகர் உரை
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் - விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும், சகடம் ஈர்க்கும் பகடு போல வினையை எடுத்துக் கொண்டு உய்க்க வல்லானை; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து - வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து. ('மடுத்தவாய் எல்லாம்' என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்று நிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. 'பகடு மருங்கு ஒற்றியும் மூக்கு ஊன்றியும் தாள் தவழ்ந்தும்' (சீவக.முத்தி,186) அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய் வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார் 'பகடு அன்னான்' என்றார்.).
மணக்குடவர் உரை
இடுக்கண் வந்து உற்றவிடத்தெல்லாம் பகடுபோலத் தளர்வின்றிச் செலுத்த வல்லவனை உற்ற துன்பம் இடர்ப்படுதலை யுடைத்து. இது தளர்வில்லாதவன் உற்ற துன்பம் கெடுமென்றது.
மு.வரதராசனார் உரை
தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.
சாலமன் பாப்பையா உரை
செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.
Thirukkural - Management - Perseverance
Valluvar uses a simile in Kural 624. A person who marches ahead towards his goal by shattering or overcoming all the barriers on the way is similar to a determined and powerful bull that pulls its cart in spite of obstacles, challenges, and hardships. Because of a person's determination to achieve his goals, that person's miseries will become miserable.
Trouble is troubled by him who bull like
Drags his cart through every hurdle.
Challenge your challenges to become a person of importance. We all know that a person who moved a mountain did that by cutting away small blocks of stones. Had he thought that the mountain was too big for him to remove, he would have been overwhelmed by that and that thought would have discouraged him from attempting that indomitable task. He achieved that with sheer persistence. Persistence always pays.
No comments:
Post a Comment