Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்

குறள் 431
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
[பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
செருக்கும் - அகந்தை; மகிழ்ச்சி; ஆண்மை; மயக்கம்; செல்வம்; செல்லம்.
சினமும் - சினம் - கோபம்; நெருப்பு; போர்; வெம்மை (கடுமை).
சிறுமையும் - சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை.
இல்லார் - இல்லாதவர்
பெருக்கம் - வளர்ச்சி; மிகுதி; செல்வம்; வெள்ளம்; நிறைவு; நீடிப்பு.
பெருமித - பெருமிதம் - பேரெல்லை; மேம்பாடு; தருக்கு; உள்ளக்களிப்பு; கல்விமுதலியபெருமைகளில்மேம்பட்டுநிற்கை.
நீர்த்து - நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.


முழுப்பொருள்
தான் என்னும் அகந்தை, மயக்கம் ஆகிய செருக்ககளும்; கோபம், கடுமை ஆகிய சினங்களும், கீழ்மை, பிறர் மனத்தை வருத்துகை, கயமை, அளவிற்கு மீறிய காமம் (பிறர் மனைவியை விரும்புதல், விரைவன்மகளிருடன் உறவுக்கொள்ளுதல் ஆகியவையும் அடங்கும்) ஆகிய சிறுமைகளும் இல்லாத ஒருவரிடம் வாழ்வில் கடல் அளவு மேம்பாடு (செல்வம்) உண்டாகும், (மனம்) நிறைவு தரும். இந்த மேன்மையான செல்வம் நல்வழிகளில் செலவிடப்பட்டு, நிலையான பேற்றினை அளிக்கவல்லது. ஆதலால் அறுவகை உட்பகைகளாகக் கூறப்படும், காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் இவையாவும் அறுதல் எல்லோருக்குமே நல்லதுதான். 

பிறன்மனை நயத்தலால் கெட்டான் இராவணன். வெகுளியால் கெட்டான் சனமேசயன். நுகர்ச்சியால் கெட்டான் சசந்தான்.

ஒருவிதத்தில் பார்த்தால் இராவணனுக்கு பிறன் மனைவி சீதையின் மீது கொண்ட மோகமே(இச்சை) அவனை சிறுமை செய்யவைத்தது. ஆனால் அதற்கு அவனுடைய அகந்தையும் ஒருவிதக்காரணம். பிறன் மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் செருக்கு என்றார்.

சினம் குரோதத்தால் வருதல். சிறியார் செய்வன செய்தலாவது காமநுகர்ச்சியும் சூதும் கள்ளும் வேட்டையும் முதலானவற்றின் மிக்கொழுகுதல். இதனை வடநூலார் இந்திரிய சயமின்மை என்பர். இவை பெரியாரால் கடியப்படுதலின் சிறுமை என்றார்.

செருக்கு, சினம், சிறுமை ஆகிய இம்மூன்று குற்றங்களை மனிதன் கவனத்தை சிதைக்கும். சலனங்களை உண்டுப்பன்னும். ஆக்கப்பூர்வமான செயல்களில் இருந்தும் குறிக்கோள்களில் இருந்தும் திசைத்திருப்பும். கேடு வரும். ஆதலால் இம்மூன்று குற்றங்கள் இல்லாதவர்கள் ஆக்கம் உடையவர்கள் ஆவர். 


உரையாசிரியர்கள் சிறுமை என்பதை அளவிறந்த இச்சையென்று கூறுகிறார்கள். அதுவும் சரியே. ஏனெனில் இச்சையே மற்ற இழிகுணங்களின் பிறப்பிடம். திருமூலர் சொல்லிய வாக்கு, “ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள், ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்” எல்லோருக்கும் பொருந்துவது,  குறிப்பாக ஆட்சிக்கட்டிலில் இருப்பவர்களுக்கு மிகவும் தேவையானது. சனகராஜனைப் போல் பற்றற்று ஆட்சியாளர்கள் இருக்கவேண்டும் என்பார்கள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம், பெருமித நீர்த்து - மேம்பாட்டு நீர்மையினை உடைத்து.
(மதம் : செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின், அளவறிந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான் , இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறும் உடைமையின் , மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய்தொழுகுதலும் இல்லாதார்க்கு ஆக்கம் தலையெடுக்கும் நீர்மையுடைத்து என்றவாறு. பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் செருக்கு என்றார்.

மு.வரதராசனார் உரை
செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who does not have ego, anger and attachment to trivial and bad things would be able to focus on improving his or heath greatness and wealth to the same extent as the sea. Because ego, anger and attachment will create distractions in one's mind, deplete one's energy and will not let one to focus on his or her work or goals.

Questions that I ask to the kid
What (Are the 3 things) one should overcome in order to achieve greatness and wealth? Why are those 3 things act as hurdles to greatness/productivity?

No comments:

Post a Comment