Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண்

குறள் 381
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் 
உடையான் அரசருள் ஏறு
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]

பொருள்
படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிட
கூழ் - மாவினாற் சமைத்த உணவு; பல வகை உணவு; பொருள்; பொன்.
அமைச்சு - அமைச்சன்; அமைச்சுஇயல்; மந்திரித்தொழில்.
நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.
அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்
ஆறும் - ஆறு 
உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்
அரசருள் - அரசர்களில் 
ஏறு - எருது; இடபராசி; எருமைக்கடா; சங்கு; அசுவினிநட்சத்திரம்; விலங்கின்ஆண்; உயர்ச்சி; ஆண்சுறா; ஆண்சங்கு; பனைமுதலியமரத்தின்ஆண்; கவரி; பன்றி, மான்இவற்றின்ஆண்; விலங்கேற்றின்பொது; நந்திதேவர்; தழும்பு.

முழுப்பொருள்
பொருட்பாலில் ஏழு இயல்கள் உள்ளன - அவை அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல். பொருட்பாலின் முதல் இயல் அரசியலில் முதல் அதிகாரம் இறைமாட்சி. முதல் குறளிலேயே அரசருக்கு சிறப்பு சேர்ப்பது என்பது படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

இக்குறளில் நாட்டைப் பாதுக்காக்கின்ற வீரமிக்க படை, நல்ல குடிமக்கள், பொருளாதார வசதிகளுக்கான வலிமையான அடித்தளம் (அதாவது எடுக்கக் குறையாத செல்வம் - இயற்கை செல்வங்களும் அடங்கும்), அரசரை எல்லாத்துறைகளிலும் நல்வழி நடத்தும் அமைச்சர்கள், அண்டை நாடுகளுடனான நல்ல நட்பு, நாட்டின் எல்லைகளை பாதுக்காக்கும் வலிமையான அரண் ஆகியவை அரசருக்கு சிறப்பு சேர்க்கும், உயர்ச்சித் தரும். இந்த ஆறு அம்சங்களையும் சிறப்பாக அமைத்துக்கொள்ளும் பொறுப்பு அரசருக்கும் உண்டு.

நல்ல குடிமக்கள் எனில் நாட்டின் நலன் கருதி நாட்டின் இயற்கை வளங்களை போற்றி பாதுக்காத்தல் (மாசு படுத்தாது இருத்தல், சூறையாடாது இருத்தல்), விதிகளை பின்பற்றுதல், வரிகளை முறையே கட்டுதல், நாட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், சக குடிமக்களுடன் இயந்து வாழ்தல் என்று பலவற்றை கூறலாம்.

கி.வா.ஜவின் ஆராய்ச்சிப் பதிப்பில் அவர் ஒப்புமையாக இரண்டு திரிகடுகப்பாடல்களை மேற்கோளாக இடுகிறார். அவை இவ்வாறையும் மும்மூன்றாய் பிரித்துக் கூறுகின்றன.

ஆள்பவர் கைவிடலாகதவை யாவை? நல்லத்தனார் கூறுவது:
கோலஞ்சி வாழும் குடியும் குடிதழீஇ
ஆலம்வீழ் போலும் அமைச்சனும் – வேலின்
கடைமணிபோல் திண்ணியான் காப்பும் இம்மூன்றும்
படைவேந்தன் மற்று விடல். (திரி.33)

ஆளுபவருக்குரிய உறுப்புகள் எவை? நல்லத்தனார் கூறுவது:
பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்துஅமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாகும் மேந்தர்க்கு உறுப்பு. (திரி.100)

”தாழுஞ்செய லின்றொரு மன்னவன் தாங்க வேண்டும்
கூழுங்குடியும் முதலாயின கொள்கைத் தேனும்
சூழும் படைமன்னவன் தோளினைக் காவலின்றி
வாழும் தகைத்தன்றிந்த வையகம் என்று சொன்னார்” (பெரிய.மூர்த்தி.28)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது அவன்றன் நற்குண நற்செய்கைகள் , உலக பாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின் , ' இறை ' என்றார் : 'திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும் , '(திருவாய் 4,4,8) - (திருவாய் 34,8) என்று பெரியாரும் பணித்தார்.]
படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் - படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன், அரசருள் ஏறு = அரசருள் ஏறு போல்வான். 
(ஈண்டுக் 'குடி' என்றது, அதனை உடைய நாட்டினை. கூழ் என்றது, அதற்கு ஏதுவாகிய பொருளை. அமைச்சு , நாடு, அரண், பொருள், படை , நட்பு என்பதே முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். 'ஆறும்' உடையான் என்றதனால், அவற்றுள் ஒன்று இல்வழியும் அரசநீதி செல்லாது என்பது பெற்றாம். வடநூலார் இவற்றிற்கு 'அங்கம்' எனப்பெயர்கொடுத்ததூஉம் அது நோக்கி. 'ஏறு' என்பது உபசார வழக்கு.
இதனால் அரசற்கு அங்கமாவன இவை என்பதூஉம், இவைமுற்றும் உடைமையே அவன் வெற்றிற்கு ஏது என்பதூஉம்கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்னும் ஆறுபொருளினையும் உடையவன் அரசருள் ஏறுபோல்வன்.
ஈண்டுக் குடியுள் நாடு அடங்கிற்று. இஃது அரசனுக்கு உண்டாக்குவன கூறிற்று.

மு.வரதராசனார் உரை
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.

சாலமன் பாப்பையா உரை
வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.

No comments:

Post a Comment