Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்

குறள் 271
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் 
ஐந்தும் அகத்தே நகும்
[அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்]

பொருள்
வஞ்ச  - தந்திரம், சூது, விரகு; ஏமாற்றம்; மறைவு; நரி
மனத்தான்  - மனதுடைய
படிற்று  - படிறு - வஞ்சனை; பொய்; அடங்காத்தனம்; குறும்பு; களவுப்புணர்ச்சி; கொடுமை
ஒழுக்கம் -  நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம் ஓம்பிய நெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.
பூதங்கள்  - பூதம் - pūtam   n. bhūta. 1. The fiveelements of nature. See பஞ்சபூதம். (திவா.)2. The deities presiding over the fiveelements; பஞ்சபூதங்களின் அதிதேவதைகள். ஐம்பூத மன்றே கெடும் (ஆசாரக். 16). 3. Body; உடம்பு.தம்பூத மெண்ணா திகழ்வானேல் (ஆசாரக். 16). 4.Ghost of a deceased person; இறந்தவரின் பேயுருவம். 5. Demon, goblin, malignant spirit, described as dwarfish with huge pot-belly and verysmall legs; பூதகணம். பூதங்காப்பப் பொலிகளந்தழீஇ (புறநா. 369, 17). 6. The second nakṣatra.See பரணி. (பிங்.) 7. Anything big or monstrous;பருத்தது. Colloq. 8. Any living creature; உயிர்வர்க்கம். (பிங்.) அகில பூதங்காப்பானவனே யென்ன(கலிங். 198). 9. See பூதவேள்வி. 10. Devotee;பக்தன். கடல் வண்ணன் பூதங்கள் (திவ். திருவாய்.5, 2, 1). 11. Being, used in compounds; இருப்பு.ஆதார பூதமாக (திருப்பு. 326). 12. The past time;இறந்த காலம். பூதந் தன்னினிகழ்ந்த புன்மைமொழி யொன்றுரைப்பான் (பாரத. வாரணா. 37). 13.Common snipe; உள்ளான் புள். (அக. நி.) 14.Spikenard. See சடா

ஐந்தும் - ஐந்து (பூதங்கள், பொறிகள்)
அகத்தே  - அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.
நகும் - நகு-தல்
naku-   6 v. [T. K. nagu.] intr.1. To laugh, smile; சிரித்தல் நகுதற்பொருட்டன்று நட்டல் (குறள், 784). 2. To rejoice;மகிழ்தல். மெய்வேல் பறியா நகும் (குறள், 774). 3. Tobloom, as a flower; மலர்தல் நக்க கண்போ னெய்தல் (ஐங்குறு. 151). 4. To open or expand;கட்டவிழ்தல். நக்கலர் துழாய் நாறிணர்க் கண்ணியை(பரிபா. 4, 58). 5. To shine, glitter; பிரகாசித்தல் பொன்னக்கன்ன சடை (தேவா. 644, 1). 6.To hoot, as an owl; to sing, as a bird; புள்ளிசைத்தல். நட்பகலுங் கூகை நகும் (பு. வெ 3, 4).--tr.1. To despise; அவமதித்தல் ஈகென்பவனை நகுவானும் (திரிகடு. 74). 2. To surpass, overcome,defeat; தாழ்த்துதல் மானக்க நோக்கின் மடவார்(சீவக. 1866).  

முழுப்பொருள்
வஞ்சகமான, தந்திரமான, சூழ்ச்சிகள் செய்யும் நேர்மையற்ற மனதையுடையவன், வெளியுலகிற்கு போடும் பொய்யான ஒழுக்க வேஷத்தை (தவநெறியில் ஒழுகுபவராக போலியாக காட்டிக்கொள்ளுதல்) கண்டு தன் உடம்பில் உள்ள ஐந்து பூதங்களுமே உள்ளுக்குள் சிரிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.  பிறருக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் தன்னுடைய உடம்பில் உள்ள ஐம்புதங்களில் இருந்து ஒடவும் முடியாது ஒளியவும் முடியாது ஆதலால் தான் ஐம்புதங்களில் அகத்தே என்கிறார் திருவள்ளுவர்.

பிறருக்கு தெரியாது ஆனால் தன் உடம்பிற்கு தெரியும் தான் செய்யும் தீது, அதில் இருந்து தப்ப முடியாது.

இங்கே திருவள்ளுவர் மனதில் வஞ்சனை வைத்துக்கொள்வதுக்கூட தீயது, ஒருவரது ஒழுக்கதிற்கு எதிரானது என்கிறார்.  இங்கே ஏன் படிற்று ஒழுக்கம் என்கிறார் என்றால்? வெளியுலகிற்கு ஒன்று உபதேசித்து விட்டு, உள்ளுக்குள்ளே வஞ்சனை சுமப்பது இரட்டை வேடமாகும்.

ஜெயமோகன் உரை [இந்திய சிந்தனை மரபில் குறள் 4]
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
‘வஞ்சமனத்தவன் தன்னுள்ளே ஒளித்து ஆற்றும் பொய்யொழுக்கத்தைக் கண்டு ஐம்பூதங்களும் உள்ளூரச் சிரித்துக்கொள்ளும்’ இக்குறளுக்கு அளிக்கப்பட்டுள்ள மரபான உரைகளில் இருந்து நெடுதூரம்செல்லும் தன்மை கொண்ட வரிகள் இவை. ஒருவன் பிறருக்குத் தெரியாமல் செய்யும் தீயொழுக்கத்துக்கு ஐம்பெரும்பூதங்களும் சாட்சியாதலால் அவன் பெறப்போகும் தண்டனையை எண்ணி அவை நகைத்துக்கொள்ளும் என்று பரிமேலழகர் உரைசொல்கிறது. பூதங்கள் என்று குறள் சொல்வது பூதங்களை அறியும் ஐம்பொறிகளை என்று மணக்குடவர் உரை வகுக்கிறார்.

இக்குறளுக்குப் பொருள் காண நாம் தத்துவத்துக்குச் செல்வதைவிட வாழ்க்கைக்குச் செல்வதே பொருத்தமானதாகும். ஒருவனின் உண்மையான ஒழுக்கத்தை அவனே அறிவான். உலகின் கண்களில் இருந்து முழுமையாகவே தன் தீயஒழுக்கத்தை ஒருவன் மறைத்துவிடமுடியும். அந்நிலையில் தீய ஒழுக்கத்தின் எந்த சமூக விளைவையும் அறியாமல் அவனால் வாழ்ந்துவிட முடியும். அப்படியானால் அவன் தப்பிவிடமுடியுமா? அவன் ஒழுக்கங்களை அறியக்கூடிய, அதன் இன்பதுன்பங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று அவனுடன் உள்ளது. அவன் உடல். அது அறியும். அது அச்செயல்களின் எல்லா எதிர்விளைவுகளையும் அது அனுபவிக்கும்.

ஆசீவக, சமண மரபுகளின் மானுட உடல் ஐம்பூதங்களின் கலவை மட்டுமே என்று சொல்லப்பட்டிருப்பதை இங்கே நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். பூதங்கள் ஐந்தும் உடலெனும் வடிவிலிருந்து அடையும் விடுதலையையே மரணமென்று சமண மரபு சொல்கிறது. பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் என்ற சொல்லாட்சி மூலம் நாம் ஒவ்வொருவரும் உள்ளூர அறியும் ஓர் உண்மையைச் சென்று தொடுகிறது இக்குறள். இத்தகைய நுண்பிரதியின் கவித்துவம் கொண்ட பல குறள்களை நாம் காணமுடியும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”மனத்தொடு நகையா” (பெருங் 4.13:213)

பரிமேலழகர் உரை
[அஃதாவது, தாம் விட்ட காம இன்பத்தை உரன் இன்மையின் பின்னும் விரும்புமாறு தோன்ற , அவ்வாறே கொண்டு நின்று தவத்தோடு பொருந்தாததாய தீய ஒழுக்கம் . அது விலக்குதற்கு , இது தவத்தின்பின் வைக்கப்பட்டது.)

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் - வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை; பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் - உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும். (காமம் தன் கண்ணே தோன்றி நலியா நிற்கவும், அதனது இன்மை கூறிப் புறத்தாரை வஞ்சித்தலின் வஞ்சமனம் என்றும், அந்நலிவு பொறுக்கமாட்டாது ஒழுகும் களவு ஒழுக்கத்தைப் 'படிற்று ஒழுக்கம்' என்றும் உலகத்துக் களவு உடையார் பிறர் அறியாமல் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையும் அறிந்து, அவனறியாமல் தம்முள்ளே நகுதலின், 'அகத்தே நகும்' என்றும் கூறினார். செய்த குற்றம் மறையாது ஆகலின், அவ்வொழுக்கம் ஆகாது என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
கள்ள மனத்தை யுடையானது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தைப் பிறரறியாராயினும், தன்னுடம்பி னுண்டான பூதங்களைந்தும் அறிந்து தம்முள்ளே நகாநிற்கும். பூதங்களைந்தும் அவையிற்றின் காரியமாகிய பொறிகளை.

மு.வரதராசனார் உரை
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

சாலமன் பாப்பையா உரை
வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.

No comments:

Post a Comment