ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை

thirukkural meaning விளக்கம் பொருட்பால், குடியியல், பெருமை, குறள் 971 ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல்.
குறள் 971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.
[பொருட்பால், குடியியல், பெருமை]

பொருள்
ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்.

ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு

உள்ள - உண்டாயிருக்கிற; உண்மையான.

வெறுக்கை- அருவருப்பு; வெறுப்பு; மிகுதி; செல்வம்; பொன்; வாழ்வின் ஆதாரமாயுள்ளது; கையுறை; கனவு.

இளி - இகழ்ச்சி; குற்றம் சிரிப்பு இகழ்ச்சிக்குறிப்பு; நகை யாழின்நரம்புகளுள்ஒன்று; ஒருவகைச்சுரம்; இழிவு

ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு

அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

இறந்து - இறந்துபடுகை; சாவு

வாழ்தும் - வாழ்வது

எனல் -  என்று சொல்லல் ; அது போல் இருத்தல்

முழுப்பொருள்
ஒருவனுக்கு பெருமை (நன்மதிப்பு, புகழ்) எனப்படுவது மற்றவர்களுக்கு நல்லது பயக்கும் கடினமான ஒரு செயலை என்னால் முடியும் என்று எடுத்துக்கொண்டு அதற்கு தேவையான மன ஊக்கத்தை வாழ்வின் ஆதாரமாய் (வெறுக்கை) கொண்டு செயலை செய்து வாழ்வது ஆகும். இப்படி பட்டவர்களை விதிசமைப்பவர்கள் என்றுக்கூட சொல்லலாம்.

ஆனால் வாழ்வில் அத்தகைய உயரிய சிந்தனைகள், கொள்கைகள் ஏதும் இன்றி பயனற்று வாழ்ந்து இறப்பது என்பது ஒரு இழிந்த வாழ்க்கையாகும்.

இதையே பாரதியும்” தேடிச் சோறுநிதந் தின்று” என்று கூறினான்
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
            - மகாகவி சுப்ரமணிய பாரதியார்

மேலும்: விதிசமைப்பவர்கள் (ஜெயமோகன்)
மேலும்: தேர்வு செய்யப்பட்ட சிலர் (ஜெயமோகன்)
மேலும் அஷோக்  உரை

ஒப்புமை

“கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம்.” (மூதுரையில் )

பரிமேலழகர் உரை
ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனுக்கு ஒளியாவது பிறராற் செயற்கரிய செய்வேம் என்று கருதும் ஊக்கமிகுதி; ஒருவற்கு இளி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர் வாழக்கடவேம் என்று கருதுதல். (ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை. 'ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்யான்' (நாலடி.செல்வம் நிலையாமை. 9) என்றார் பிறரும், மேலும் 'செயற்கரிய செய்வார் பெரியர்'(குறள்.26)என்றாராயினும் ஈண்டு அவை அளவறிந்த ஒப்புரவு ஈகை முதலியவாம். அவற்றினானாய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு 'உள்ளவெறுக்கை' என்றும், அது தன்னையே அதன் காரியமாகிய ஒளிஆக்கியும் கூறினார். இவ்வாறு அதன் எதிர்மறைக்கண்ணும் ஒக்கும். இதனால் பெருமையின் சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனைச் சிறப்பித்து அவன் பெயரை விளங்கச் செய்யும் பெருமை, பிறராற் செயற்கரிய செய்வேம் என்னும் ஊக்க மிகுதியால் ஏற்படுவதே; ஒருவற்கு இளி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்கு இழிவாவது, அவ்வருஞ்செயலும் அதற்கேதுவான ஊக்கமுமின்றி எளிதாய் வாழக்கடவோம் என்றெண்ணுவதே.

ஒருவன் பெயரை விளங்கச் செய்வதால் அவன் பெருமையை 'ஒளி' என்றும், அப்பெருமைக்குக் காரணமாகிய அருஞ்செயற்கு ஏதுவான ஊக்கமிகுதியை அதன் மும்மடிக் கருமியமாகிய ஒளியொடு சார்த்தியும் கூறினார். ஒளி,இளி என்பன இங்கு ஒன்றிற்கொன்று எதிராகவந்த சொற்கள் "செயற்கரிய" என்று முற்கூறியது (குறள். 26) துறவு பற்றிய தென்றும், இங்குக் கொள்வது புரவு பற்றிய தென்றும்,வேறுபாடறிக. வெறுக்கை- செல்வம். அது இங்கு மிகுதியைக் குறித்தது. வெறுத்தல் செறிதல், புரவு பற்றிய அருவினைகள் ஈகையும் ஒப்பரவும், 'வாழ்தல்' என்னும் பன்மை நெஞ்சோடு கிளத்தல்பற்றிய எண் வழுவமைதி, இக்குறளாற் பெருமைக்கு ஏது கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
ஒருவனுக்கு மனப்பெருமை புகழாம்: அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான். இது பெருமையாவது நிறையுடைமை யென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain