குறள் 937
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்
[பொருட்பால், நட்பியல், சூது]
பொருள்
பழகுதல் - பயிலுதல்; உறவுகொள்ளுதல்; பதப்படுதல்; சாதுவாதல்; இணக்கமாதல்; ஊடாடுதல்; நாட்படுதல்.
செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.
பழகிய செல்வமும் - கற்ற கல்வியும், சான்றோர்கள் / பெரியோர்கள் நட்பும் (உறவும்)
பண்பும் - பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.
கெடுக்கும்- கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.
கழகத்துக் - கழகம் - கல்விபயிலும்இடம், கல்விச்சங்கம்; படை, மல்முதலியனபயிலும்இடம்; சூது; சூதாடுமிடம்; ஓலக்கம்; புலவர்கூடியசபை.
காலை - பொழுது; வாணாள்; தருணம்; முறை; விடியற்காலம்; சூரியன்; பகல்; பள்ளியெழுச்சிமுரசம்; அடைப்பு; மீன்வகை.
புகின் - அடைதல், தொடங்குதல், தாழ்நிலை யடைதல், உட்படுதல், அகப்படுதல்
முழுப்பொருள்
ஒரு மனிதனுக்கு செல்வம் எனப்படுவது தான் கற்ற கல்வியும், உறவாடிய நண்பர்களும், சான்றோர்களும், பெரியோர்களும் ஆகும். அது மட்டும் இன்றி அவனது இயல்பான குணமும் அவனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இவற்றை பேணி காப்பது அவனது கடமையாகும்.
ஆனால் ஒருவன் சூதாடினால் அல்லது சூதில் பொழுதை கழித்தால் அது அவனுக்கு அழிவை கொடுக்கும், தாழ்நிலையை கொடுக்கும், அவனுடை செல்வங்களான கல்வி, நண்பர்கள், சான்றோர்கள் மற்றும் தன்னுடைய நற்குணத்தை இழப்பான். ஆதலால் சூதில் பங்கேற்க கூடாது.
மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
காலை கழகத்துப் புகின் - அறம் பொருள் இன்பங்கட்கு அடைத்த காலம் அரசனுக்குச் சூதாடு களத்தின்கண் கழியுமாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அக்கழிவு தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும். ('பழகிய' என்பது பண்புடனும் இயையும். தான் செய்து கொள்ளும் அறம் முதலியவேயன்றி முன்னோரைத் தொடங்கிவருகின்ற செல்வமும் முன்செய்த நல்வினையின் பயனாய பண்பும் இலவாம் என்பதாம்.).
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
காலை கழகத்துப் புகின் - ஒருவன் அறம் பொருளின்பங்கட்குச் செலவிட வேண்டிய காலத்தில் சூதாடுகளம் புகுந்து ஆடுவானாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அது தொல்வரவாகிய பழஞ் செல்வத்தையும் நற்குணங்களையும் நீக்கும்.
களம் என்றே பொருள்படும் கழகம் என்னும் பொதுச்சொல், இங்கு இடம்பற்றிச் சூதாடு களத்தைக் குறித்தது, 'பழகிய' என்னும் அடை பண்பையுந் தழுவும், ஆதலால் பண்பென்றது இங்கு வழிமுறைப் பண்பை. முன்னோர் தேட்டு முதுசொம் எனப்படும். தான் புதிதாகச் செய்துகொள்ளும் அறம்பொருளே யன்றிமுன்னோரிடமிருந்து வழிவழி வந்த செல்வமும் நற்பண்பும் இல்லாமற்போ மென்பதாம்.

மணக்குடவர் உரை
சூதுகழகத்தின்கண்ணே காலைப்பொழுது புகுவானாயின், அது தொன்றுதொட்டு வருகின்ற செல்வத்தினையும் தமக்கியல்பாகிய குணத்தினையும் கெடுக்கும்.
மு.வரதராசனார் உரை
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை
சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.
No comments:
Post a Comment