வெண்மை எனப்படுவ தியாதெனின்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை, வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. குறள் 844
குறள் 844
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]

பொருள்
வெண்மை வெண்ணிறம்; தூய்மை; ஒளி; இளமை; மனக்கவடின்மை; அறிவின்மை; புல்லறிவுடைமை
எனப்படுவது - அறியப்படுவது
யாது?' - எது?
எனின் - என்றால்
‘ஒண்மை - விளக்கம்; இயற்கையழகு; நன்மை; மிகுதி; ஒழுங்கு; நல்லறிவு.
உடையம் - உடை - ஆடை; செல்வம் உடைமை குடைவேலமரம்:சூரியன்மனைவி.
யாம் - தனக்கு
என்னும் - என்கிற
செருக்கு - அகந்தை; மகிழ்ச்சி; ஆண்மை; மயக்கம்; செல்வம்; செல்லம்.

முழுப்பொருள்
அறியாமை (அறிவின்மை, புல்லறிவு) என்பது என்னவென்றால் தனக்கு நல்லறிவு (மிகுதியாகவோ) இருப்பது என்று நினைத்துக்கொள்ளும் மன மயக்கம்  (அகந்தை, மாயை, தற்பெருமை). இவ்வகந்தை மற்றவர்களிடம் காண்பிக்க வேண்டும் என்று இல்லை. தன்னுள் அந்த மயக்கம் இருந்தாலே அது அறியாமை ஆகும். (சில நாட்களில் வெளியேயும் வெளிப்பட்டுவிடும் என்பது வேறு விஷயம்).

தன்னுணர்வு இருப்பதில் தவறில்லை. ஆனால் மயக்கம் கொள்ளுதல் அறிவின்மையாகும். 

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வெண்மை எனப்படுவது யாது எனின் - புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; யாம் ஒண்மை உடையம் என்னும் செருக்கு - அது தம்மைத் தாமே யாம் நல்லறிவுடையம் என்று நன்கு மதிக்கும் மயக்கம். (வெண்மையாவது அறிவு முதிராமை. ஒண்மை எனக் காரியப் பெயர் காரணத்திற்காயிற்று. உலகத்தார் இகழ்தல் அறிந்து வைத்தும் அவ்வாறு மதித்தலான், 'மயக்கம்' என்றார்.).

ஒப்புமை
“ஒண்மை உடையார்” (நாலடியார் 196)
“ஒண்மையும் நிறையும்” (பெருங் 1.34.151)
“ஒப்பின் மாநகர் ஒண்மை” (சீவக 535)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வெண்மை எனப்படுவது யாது எனின்-புல்லறிவுடைமை யென்று சொல்லப்படுவது,என்னது என்று வினவின்; யாம் ஒண்மை உடையம் என்னுஞ் செருக்கு--அது யாம் விளங்கிய அறிவுடையேம் என்று தாமே தம்மை உயர்வாக மதிக்கும் மடம் பட்ட ஆணவம்.

'வெண்மை' என்பது இங்கு விளையா மரம் போன்ற முதிரா அறிவு; பண்பாகுபெயர். ஒற்றுமைபற்றிக் காட்சிப் பொருளின் தன்மையாகச் சார்த்திக் கூறப்பட்டது. ஒண்மை ஒளியுடைமை;அதாவது விளங்கிய அல்லது தெளிந்த அறிவுடைமை. புறக்கண்ணிற்குப் பொருளை விளக்கும் ஒளிபோல் அகக் கண்ணிற்குப் பொருளை விளக்கும் அறிவு , புறவொளிக்கு இனமான அகவொளியாகக் கொள்ளப்பட்டது செருக்கு உண்மையொடு கூடியதும் கூடாததும் என இருவகைப்படும். ஒரு நல்லறிவாளன் தன்னை உயர்வாக மதிப்பது உண்மையொடு கூடியது ;ஒரு புல்லறிவாளன் அங்ஙனம் தன்னை மதிப்பது உண்மையொடு கூடாதது. இரண்டுங் குற்றமே. ஆயின் ,பின்னது இருமடிக் குற்றமாம்.

மேலையாரியர், சிறப்பாக அமெரிக்கர், யாம் அறிவியலைக் கண்டு வளர்த்தேமென்றும் , திங்களை யடைந்தேமென்றும், எல்லாத்துறையும் வல்லேமென்றும், தருக்கியும் செருக்கியும் வரலாற்று மொழிநூலைப் புறக்கணித்து, ஆரிய அடிப்படையில் வண்ணனை மொழி நூலை வளர்த்து வருவதும் வெண்மையின்பாற் பட்டதே.

மணக்குடவர் உரை
புல்லறி வென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாம் அறிவுடையோ மென்று தம்மைத் தாம் மதிக்குங்களிப்பு.

மு.வரதராசனார் உரை
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain