ஒல்லும் கருமம் உடற்று

thirukkural meaning விளக்கம் பொருட்பால், நட்பியல், தீ நட்பு, குறள் 818 ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்.
குறள் 818
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]

பொருள்
ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்
ஒல்லும் - செய்ய முடிந்த

கருமம் - செயல்; வினைப்பயன்; தொழில்வேதசம்பந்தமானசடங்கு; இறுதிக்கடன்; செயப்படுபொருள்; வெம்மை; மும்மலங்களுள்ஒன்றாகியகன்மவிதி.

உடற்றுதல் - வருத்துதல்; சினமூட்டுதல்; போரிடுதல்; கெடுத்தல் செலுத்துதல்
உடற்றுபவர்  - கெடுப்பவர்

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

ஆடு - அசைதல்; கூத்தாடுதல் விளையாடுதல் நீராடுதல் பொருதல் சஞ்சரித்தல் முயலுதல் பிறத்தல் சொல்லுதல் செய்தல் அனுபவித்தல் புணர்தல் பூசுதல் அளைதல் தடுமாறுதல் எந்திரமுதலியவற்றில்அரைபடுதல்; விழுதல் செருக்குதல்

சொல்லாடார்  - பேச்சு

சோர் - சோர்வு; வஞ்சகம்; பகட்டு.
சோர்தல் - தளர்தல்; மனம்தளர்தல்; மூர்ச்சித்தல்; நழுவுதல்; கண்ணீர்முதலியனவடிதல்; கசிதல்; கழலுதல்; வாடுதல்; தள்ளாடுதல்; தடுமாறுதல்; இறத்தல்; விட்டொழிதல்; துயரப்படுதல்; உடலின்தைலம்முதலியனஇறங்குதல்.
சோரவிடல் - தளர்த்திவிடு

முழுப்பொருள்
நண்பர் எனப்படுபவர் நமக்கு பக்கபலமாக இருக்க வேண்டியவர். குறிப்பாக நெருக்கடியான நேரங்களில் தூணாக இருந்து நம்மை வழிநடத்த வேண்டியவர். முடிந்தால் உதவி செய்யவதே நட்பு. இங்கே உதவி என்பது வார்த்தைகளாலும், மனதாலும், ஊக்கத்தாலும், பொருளாலும், உடல் உழைப்பாலும் என்று தன்னால் ஏதேனும் ஒருவகையில் உதவ வேண்டும். அதுவே நல்ல நட்பாகும்.

ஆனால் நம்மால் செய்யக்கூடிய (நண்பரின் உதவியுடனோ அல்லது உதவி இல்லாமலோ) ஒரு செயலை செய்ய தடையாக இருந்து அல்லது அதனை செய்ய தடைகளை உருவாக்கும் நபருடைய உறவு/ நட்பு நமக்கு தேவையே இல்லை. அவருடனான நட்பை அவருடன் சொல்லிக்கொள்ளாமலே தளர்த்திக்கொள்ளலாம் என்கிறார் திருவள்ளுவர்.

உதாரணமாக ஒரு நண்பருக்கு வணிகம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும் அல்லது வெளியூருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நம்முடன் இருக்கும் நண்பர் பொறாமை குணத்தால் (வறுமையால் அல்லது நேரமின்மையால்  தன்னால்  முடியாதது அடுத்தவரும் செய்யக்கூடாது என்று எண்ணி) தன் நண்பரின் அவாவை களைக்க வஞ்சகமாக பேசி காழ்ப்பு திணித்து அந்த திட்டங்களை முறியடிப்பதுண்டு. அத்தகைய நண்பருடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை - தம்மான் முடியும் கருமத்தை முடியாததாக்கிச் செய்யாதாரோடு கொண்ட நட்பினை; சொல்லாடார் சோர விடல் - அது கண்டால் அவரறியச் சொல்லாதே சோர விடுக. (முடியாதாக்குதல்: முடியாதாக நடித்தல். சோரவிடல்: விடுகின்றவாறு தோன்றாமல் ஒரு காலைக்கு ஒருகால் ஓய விடுதல். அறியச் சொல்லினும் விடுகின்றவாறு தோன்றினும் அதுபொழுது பரிகரித்துப் பின்னும் நட்பாயொழுகக் கருதுவர் ஆகலின், 'சொல்லாடார்' என்றும், 'சோரவிடல்': என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முறையே பேதையார், நகுவிப்பார், இயல்வது செய்யாதார் என்பவர்கள் நட்பின் தீமை கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
'ஒல்லும் கருமம் உடற்றுபவர்' கேண்மை-ஆகும் செயலையும் ஆகாததாக்கிக் கெடுப்பவரின் நட்பை; சொல்லாடார் சோரவிடல்-அவருக்குச் சொல்லாமலே மெல்ல மெல்லத் தளரவிடுக.

இனி, 'ஒல்லும் கருமம் உடற்றுபவர்' என்பதற்கு, தம்மால் இயலுங் கருமத்தையும் இயலாததாகக்காட்டி நடிப்பவர் என்று உரைப்பினுமாம். சோரவிடலைத் தெரிவிப்பின் ஏதேனுஞ் சூழ்ச்சி செய்து அதைத் தடுப்பராதலின், 'சொல்லாடார்' என்றும், நீண்ட காலத்தின்பின் தாமே அறிந்துகொள்ளுமாறு மெல்ல மெல்லத் தளரவிடுக என்பார் 'சோரவிடல்' என்றும், கூறினார். 'சொல்லாடார்' எதிர்மறை முற்றெச்சம். எச்சவும்மை தொக்கது.

மணக்குடவர் உரை
தம்மாலியலும் கருமத்தை முடியாது வருத்துமவர் நட்பை, நட்பென்று சொல்லுவதும் செய்யாராய் வீழவிடுக. இஃது அழுக்காறுடையார் நட்புத் தீதென்றது.

மு.வரதராசனார் உரை:
முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain