வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி, குறள் 1192 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி.
குறள் 1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.
[காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி]

பொருள்
தனிப்படர்மிகுதி - தனிமையில் நினைத்துப் புலம்புந் தலைவியின் நிலை

வாழ்தல் - இருத்தல், சீவித்தல் (ஜீவித்தல்), செழித்திருத்தல், மகிழ்தல்,
வாழ்வார்க்கு  - உலகில் வாழ்பவர்க்கு
வானம்  - விண்; தேவருலகு; அக்கினி; மேகம்; மழை; உலர்ந்தமரம்; மரக்கனி; உலர்ந்தகாய்; உலர்ச்சி; உயிரோடுஇருக்கை; போகை; மணம்; நீர்த்திரை; புற்பாய்; கோபுரத்தின்ஓருறுப்பு.

பயந்து - பயம், அச்சம்; அச்சச்சுவை; வாவி; அமுதம்; பால்; நீர்; பலன்; வினைப்பயன்; பழம்; இன்பம்; அரசிறை; தன்மை.
அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.
பயந்தற்றால்-

வீழ் - வீழு (விழு), ஆசி,
வீழ்வார்க்கு - ஆசைப்படுபவருக்கு (காதலிக்கு)
வீழ்வார்  - ஆசைப்படுபவர் (காதலர்)
அளிக்கும் - அளித்தல் - காத்தல் ; கொடுத்தல்; செறித்தல் ;  சொல்லுதல் ;சிருட்டித்தல். ; அருள்செய்தல். ; விருப்பமுண்டாக்குதல். ; சோர்வை நீக்குதல்
அளி - அன்பு; அருள் ஆசை வரவேற்பு எளிமை குளிர்ச்சி கொடை காய் வண்டு தேன் வண்டுகொல்லி கருந்தேனீ; மாட்டுக்காடி; தேள் கிராதி மரவுரிமரம்.

முழுப்பொருள்
இவ்வுலகில் மனிதருக்கு, விலங்குகளுக்கு, செடிகளுக்கு, கொடிகளுக்கு மற்றும் மண்ணில் வாழ்கின்ற எல்லா தாவரங்களுக்கும் இன்றியமையாத தேவை எனப்படுவது தண்ணீராகும். தண்ணீருக்கு மூலம் ஆறுகளும், ஏரிகளும், குளங்களும். இவற்றுக்கு மூலம் மழையாகும். ஆகவே தான் உயிர்வாழ்வோருக்கு வானம் அளிக்கும் மழை அமூதம் ஆனது. "வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று" (குறள் 11) என்று முன்னமே வான்சிறப்பு அதிகாரத்தில் மழையின் சிறப்பை திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

மழையின் சிறப்பு எனில் -> உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது.  நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே. உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும். மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார். பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.  மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும். பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும். எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது. அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

உலகில் வாழ்வோர்க்கு வானம் அளிக்கும் மழையை போல, தலைவன் மீது (தலைவி மீது) ஆசைப்படும் தலைவிக்கு தன் காதலர் செலுத்தும் அன்பே ஆகும். அந்த காதலும், அன்பும், ஆசையும், நேசமும், ஊடலும், கூடலும் நேரம் தவராது இடைவிடாது மழைப்போல செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் மழை பொய்த்தால் ஏற்படும் துன்பம் போல காதலரின் அன்பில்லாமல் தலைவியின் வாழ்வு (மழைத்துளி விழாது போனால் பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காணமுடியாததுப் போல) அரிதாகிவிடும். நிலத்தில் ஈரம் இல்லை என்றால் உழவனால் ஏரோட்ட முடியாது. அதுப்போல காதலரின் அன்பு இல்லையென்றால் அவளால் நாட்களை ஓட்ட முடியாது.

ஒப்புமை
“..................நாடன்
வந்தனன் வாழி தோழி உலகம்
கயம்கண் அற்ற பைதறு காலைப்
பீளொடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே” (நற் 22:7-11)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி - அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால், தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்யும் தலையளி; வாழ்வார்க்கு வானம் பயந்தற்று - தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற் போலும். ('நம் காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார் போல இறந்து படுதலே நமக்கு உள்ளது' என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)

(இ-ரை,) வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி-அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்துபோன கணவர் தம்மையின்றியமையாத மகளிர்க்கு, காலமறிந்து வந்து இன்புறுத்தும் பேரன்புக் கூட்டம்;வாழ்வார்க்கு வானம் பயந்த அற்று-தன்னையே நோக்கி வாழும் மாந்தருக்கு முகில் காலம் அறிந்து பெருமழை பொழிந்தாற் போலும்.

நம் காதலர் நம்மீது அன்புகொள்ளாமையால் அவர் வந்து கூடப்பெறாது, மழையின்றி வாடும் மாந்தர் போல வாடுகின்றோம் என்பதாம். ’ஆல்’ அசைநிலை.

மணக்குடவர் உரை
காதலித்தார்க்குக் காதலிக்கப்பட்டார் அருளும் அருள், உயிர் வாழ்வார்க்கு, மழை பெய்தாற்போலும்; அஃதில்லார்க்கு வாடுதலே யுள்ளது. இது நின்மேனி பொலிவழிந்த தென்னும் தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain