பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின்

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை, குறள் 1156 பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை.
குறள் 1156
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]

பொருள்
பிரிவு - பிரிகை, பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின் வேறுபட்ட உட்பேதம்; இறப்பு.
உரைக்கும் - உரை - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்
வன்கண்ணர் - வன்கண் - கொடும்பார்வை, பொறாமை, கொடுமை, வீரத்தன்மை

ஆயின் -  ஆனால்
அரிது -  அரியது, அருமை; பசுமை
அவர்
நல்குதல் -  கொடுத்தல், விரும்புதல், படைத்தல், To show deep love -> தலையளி செய்தல் [தலையளி - ideal love - உத்தம அன்பு],  To rejoice -> உவத்தல்
நல்குவர் - தலையான அன்பிற்கு பாத்திரமானவர் - விருப்பதிற்கு உரியவர்
என்னும் - என்கிற
நசை - ஆசை; அன்பு; நம்பிக்கை; எள்ளல்; குற்றம்; ஈரம்.

முழுப்பொருள்
வேலை நிமித்தமாகவோ, போரின் நிமித்தமாகவோ நான் உன்னை பிரியப்போகிறேன் என்று மணந்துக்கூடிய என்னிடம் கூறக்கூடிய கொடுமையான நெஞ்சத்தினை கொண்டவர் என்றால் அருமையான அவர் தன்னுடைய தலையாய அன்பினை என் மீது வந்து செலுத்துவார் என்ற என் நம்பிக்கை எள்ளலுக்கு உண்டானது என்று தலைவி கூறுகிறாள்.

இவ்வுலகில் வேலைக்காக வேறு வேறு ஊரிகளில் வசிக்கும் கணவன் மனைவிமார்கள் எவ்வளவு கொடுமைக்காரர்கள். குடும்பத்திற்காக உழைக்கிறேன், பணம் ஈட்டுவிட்டால் எல்லாம் சரி ஆகிவிடும், சிறிது காலம் தியாகம் செய்தால்  நல்ல காலம் பிறக்கும் என்று எண்ணித் தங்கள் இளமையை இழக்கும் இவர்கள் எல்லாம் கொடுமையானவர்கள்.

ஒரு பிரிவு என்பது உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக எவ்வளவு கொடியது என்பது பெண் எவ்வளவு சொன்னாலும் ஆண்களுக்கு புரியாது. ஒருவேளை புரிந்தால் ஆண்கள் பிரியபோகிறேன் என்று சொல்ல மாட்டார்கள்.


(திரைப்படம்: தளபதி; பாடல்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குச் சொல்லியது.) அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின் -நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்று தம்பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; நல்குவர் என்னும் நசை அரிது - அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும். (அருமை: பயன்படுதல் இல்லாமை.. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது'? என்பதாம். அழுங்குவித்தல் : பயன்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(தலைமகன் பிரிவுணர்த்தியதைத் தெரிவித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.)

அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின்-என் காதற்பெருக்கையுங் கவவுக்கை யிறுக்கையும் கண்டறிந்த தலைவர் தாமே, நம் முன்நின்று தம் பிரிவை யுணர்த்தும் வன்னெஞ்சராயின்; நல்குவர் என்னும் நசை அரிது-அத்தன்மையர் பின்பு நம் ஆற்றாமையறிந்து வந்து பேரன்பு செய்வரென்னும் ஆசையை விட்டுவிட வேண்டியதுதான்.

இது தலைமகள் தன் இளமையினாலும் இல்லறத் தொடக்கநிலையினாலும், பொருளின் இன்றியமையாமையையும் ஆடவர் கடமையயும் உணராது காதலொன்றையே கருதிக்கூறிய கூற்றாகும். அருமை பெரும்பாலும் நிறைவேறாமை, செலவழுங்குவித்தல் பயன்.

மணக்குடவர் உரை
பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின் அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை. இது தலைமகன் பிரிந்தானென்று கேட்டவிடத்து நின்னிற் பிரியேனென்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.

சாலமன் பாப்பையா உரை
நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain