கண்ணின் துனித்தே கலங்கினாள்

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால் கற்பியல் புணர்ச்சிவிதும்பல் குறள் 1290 கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று
குறள் 1290
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் 
என்னினும் தான்விதுப் புற்று.
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
கண்ணின் - கண்ணின் அளவு சிறிதான
துனித்தே - துனி - வெறுப்பு (ஊடல்); சினம்; புலவிநீட்டம்; பிரிவு; துன்பம்; அச்சம்; நோய்; குற்றம்; இடையூறு; ஆறு; வறுமை.

கலங்கினாள் - கலங்குதல் - நீர் முதலியன குழம்புதல்; மனங்குழம்புதல்; தெளிவின்றாதல், மயங்குதல்; அஞ்சுதல்; துன்புறுதல்; தவறுதல்.

புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.

என்னினும் - என்றாலும்

தான் - தான்

விதுப்பு - நடுக்கம்; விரைவு; பரபரப்பு; வேட்கை (Desire, longing).
உற்று - uṟṟu   part. உறு-. A sign of comparison; ஓர் உவமவாசகம் தோளுற்றோர் தெய்வம்(சீவக. 10).  

விதுப்புற்று - விரைந்து வேட்கை தீர்த்துக்கொண்டாள்

முழுப்பொருள்
தலைவனும் தலைவியும் சில காரணங்களால் பிணக்குக்கொண்டு ஊடலில் தவிக்கின்றனர். தலைவியின் ஊடலோ கண்ணின் அளவு மிக மிக மிக சிறிதாக இருக்கிறது. இந்த கோவம் என்பது தீயினைப் போன்றது. எது மெல்ல மெல்ல தான் தணியும்.

ஆனால் ஊடலில் என்னுடன் பேசமுடியாமல் மிகுந்து துன்புற்று இருக்கிறாள் இவள். ஆதலால் என்னை பார்த்தவுடன், என் மீது கொண்ட காதலால், தான் இப்போது ஊடிக்கொண்டு இருக்கிறோம் என்பதனைக்கூட மறந்து, அதனை துட்சமாக எண்ணித், தலைவன் மீது மின்னல் வேகத்தில் துள்ளி குதித்துப் பாய்ந்தாள் புணர்ந்தாள் வேட்கை தீர்த்துக்கொண்டாள். அவளுடைய காதலை தலைவன் புணரும் பொழுது உணரலாம்.  இங்கே ஏன் திருவள்ளுவர் தலைவியை பற்றி மட்டும் தான் சொல்கிறார் என்றால் ஒரு காரணம் இருக்கலாம் - தலைவன் வேலைக்கு செல்கிறான் - அவனுக்கு வீட்டில் உள்ள ஊடலை பற்றி கவலைப்பட நேரமில்லை - ஆனால் தலைவியோ வீட்டில் இருக்கிறாள் - துன்பத்தில் ஏக்க நோய் கொண்டு அவள் மெல்லிய தோளில் பசலை நோயும் படரும் என்று நாம் அறிவோம். இருப்பினும் (என்னை பொருத்த வரையில்) கோபத்தை துட்சமாக எண்ணியவர் (தலைவனாகவும் இருக்கலாம்)  விரைவாக  துள்ளி குதித்து கூடுவர்.

எந்த ஒரு போபத்தை தணிக்க வல்லது அகம் சார்ந்த காதலாகும். நாம் என்ன நினைத்தாலும் நமது அகம் நினைப்பது வேறு. நம் அகம் சொல்வதையே நம் உடல் கேட்கிறது.





Image result for run and hug

Image result for run and hug

Image result for run and hug

மேலும் அஷோக்  உரை

ஒப்புமை
”கவவுக் கடுங்குரையள்” (குறுந் 132:1)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கண்ணின் துனித்தே - காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி; புல்லுதல் என்னினும் தான் விதுப்பு உற்றுக் கலங்கினாள் - புல்லுதலை என்னினும் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யான் இத்தன்மையேனாகவும் விதுப்பின்றி ஊடி நிற்கின்ற இவள் அவளல்லள். (கண் மாத்திரத்தான் ஊடல் - சொல் நிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையே யாதல். 'அவளாயின் இங்ஙனம் ஊடற்கண் நீடாள்' என்பது பயன்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)
கண்ணின் துனித்தே-முன்னொருநாள் தழுவல் விதுப்பினாற் சென்ற என்னொடு கண்ணளவாக மட்டும் காதலியூடி; என்னினும் தான் புல்லுதல் விதுப்புற்றுக் கலங்கினாள்-என்னினும தான் தழுவல் விதுப்புற்றதினால் அக் கண்ணளவூடலையும் மறந்து அப்பொழுதே கூடிவிட்டாள் . அதனால் , யான் இத்தன்மையேனாய் ஏங்கிநிற்கவும் விதுப்பின்றி யூடிநிற்கின்ற இவள் அவளல்லள்.

கண்ணளவாக வூடுதல் சொல் நிகழ்ச்சியின்றிக் கண்சிவத்தல்.அவளாயின் ஊடற்கண் நீடாமை பயன் . ஏகாரம் பிரிநிலை.

மணக்குடவர் உரை
கண்ணாலே புலந்தும் அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற்றாள், புணர்தலை என்னினும் மிகத் தான் விரைதலானே. இது தலமகளூடற் குறிப்புப் புணர்வுவேட்டல் கண்டு தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.

மு.வரதராசனார் உரை
கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.

சாலமன் பாப்பையா உரை
தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain