குறள் 426
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு
[பொருட்பால், அரசியல், அறிவுடைமை]
பொருள்
எவ்வது - எவ்விதம், எவ்வாறு, adv. id. How? inwhat manner?
உறை - II. v. i. abide, live; தங்கு; 2. dwell or be in the natural element as fishes in water etc, இரு; 3. haunt, சஞ்சரி;
உறைவது - இயங்குகிறதோ
உலகம் - இவ்வுலகம், இவ்வுலக மக்கள், நாம் சென்று வாழும் உலகம்
உலகம் - உலகிலுள்ள உயர்ந்தோர் ஒழுக்கம்; உயர்ந்தோர்; உயர்குணம்; வானம், உலகு, உலகப்பொது, பூமி; நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு; மக்கள்தொகுதி;
உலகத்தொடு - அந்த உலகத்தோடு ஒன்று பட்டு
அவ்வது - adv. id. In that way;அவ்வாறு
உறைவது - இயங்குவதே
அறிவு - சிறந்த அறிவு
முழுப்பொருள்
இவ்வுலகத்தில் உயர்குணம் கொண்ட உயர்ந்தோர் ஒழுக்கத்துடன் எவ்வாறு இயங்குகிறார்களோ வாழ்கிறார்களோ அவ்வாறு அவ்வழியில் நம்மை ஒன்று பட்டு இயங்குவதே வாழ்வதே கற்ற அறிவுக்கு சிறப்பாகும். இதில் நான் அரசன் நான் தலைவன் எனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் இல்லாமல் உயர்ந்தோர் வழி வாழ வேண்டும்.
அது மட்டும் இன்றி இவ்வுலகம் மாறிக்கொண்டே இருக்கும். புதிய புதிய வளர்ச்சிகள் புதிய புதிய தொழில்நுட்பங்கள் புதிய புதிய வியூக முறைகள் புதிய புதிய வாழ்வியல்கள் வந்துக்கொண்டே இருக்கும். அத்தகைய நல்ல மாற்றங்களை உதாசினப்படுத்தக்கூடாது. பாரதி கூறியது போல "பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை" ஆதலால் "திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்". ஆதலால் நற்புதிய மாற்றங்களை ஏற்று வாழ்வில் ஒழுகி வாழ வேண்டும். அதுவே அறிவுக்கு சிறந்ததாகும்.
(கீழ்காணும் பாடலின் பகுதி மகாகவி பாரதியின் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்" பாடலில் இடம்பெறும்)
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
அது மட்டும் எல்லாது ஒரு வெளிநாட்டிற்கு சென்றாலோ வெளி மாநிலத்திற்கு சென்றாலோ அங்கு இருந்து கற்க வேண்டும். அங்கு சென்று எங்க ஊர் எப்படி இருக்கும் தெரியுமா என்று நம்மூர் புராணம் பாடக் கூடாது. அந்த ஊர் மக்களை இழிவு செய்ய கூடாது. அங்கு உள்ளோர்க்கு படி வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். இது போர் புரிந்து நாட்டை ஆளும் அரசனுக்கும், வெளிநாட்டில் வந்து தொழில்/ வணிகம் செய்யும் மக்களுக்கும் பொருந்தும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று, உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு. ('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது.
அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உலகம் எவ்வது உறைவது - உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றாரோ; அவ்வது உலகத்தோடு உறைவது அறிவு - அவ்வாறே அவரொடு பொருந்தியொழுகுதல் அறிவுடைமையாம்.
உயர்ந்தோரைப் பின்பற்றுவது பொதுமக்கட்கு ஒழுக்கவுயர்வாம்; அரசர்க்கு அதனொடு புகழும் பதவிப்பாதுகாப்புமாம்.
மு.வ உரை
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்
சாலமன் பாப்பையா உரை
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.
நன்றி: ரிஷ்வன்
எவ்வாறு உலகம் நடைபெறுகிறதோ
அவ்வாறே அதனுடன் ஒன்றி
தப்பாது தொடர்வதே அறிவாம்
நன்றி: கீற்று
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மொழியின் உருவாக்கம் பெரும் முதன்மைத்துவம் வாய்ந்தது. மரபனுக்களில் (டி.என்.ஏ) மட்டுமே சேமித்து வைக்கப்பட்டிருந்த வாழ்வதற்கான அறிவு, மொழியின் மூலமும் எழுத்தின் மூலமும் புதியதொரு வடிவம் பெற்றது. மனித சமூகத்தின் வளர்ச்சியில் எழுத்தின் பங்கும், மொழியின் பங்கும் மகத்தானது. கால மாற்றத்தில் 'எழுதுகோலின் முனை வாள்முனையை விட கூர்மையானது' என்ற நிலை ஏற்பட்டது. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சியைப் பெரும் பாய்ச்சல்களில் கொண்டு சென்றன இலக்கிய மற்றும் விஞ்ஞான நூற்கள். ஆனால் காலப்போக்கில் பல்வேறு மொழிகள் தோன்றியும் அழிந்தும் போயின. 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவள கால வகையின நானே' என்ற நன்னூல் கூற்றுக்கேற்ப, எவ்வளவு பழமை மிக்க செறிவு கொண்ட மொழியாயினும், காலத்துக்கேற்றவாறு தம்மை தகவமைத்துக் கொள்ளாமல் இருப்பவை அழிந்து போயின, போகின்றன. மொழியுடன் சேர்ந்து அதனூடாக வளர்க்கப்பட்ட மரபார்ந்த அறிவும், கலாச்சாரமும், வரலாறும் அழிந்து போகின்றன.
'எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு'.
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க பல்வேறு மாற்றங்களை செரித்து ஆயிரமாண்டுகளாக மக்களின் மொழியாக மக்களுடன் பீடு நடை போட்டு வரும் தமிழ் மொழி, கணினி எனும் உலகை ஆளும் அசுர இயந்திரத்திற்குள்ளும் தன்னைப் பொருத்தி கொள்வதன் மூலமே இனி வரும் தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்க முடியும்.
'மறைவாக பழங்கதைகள் நமக்குள்ளே சொல்வதிலோர் மகிமையில்லை
திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்' என்று பாரதி கூறியது போல,
No comments:
Post a Comment