அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]
பொருள்
அவா - அது ; ஆசை, அவாவு, இச்சி, விரும்புதல், பற்றுச்செய்தல், ஒன்றைவேண்டிநிற்றல், இறங்குதல்
அவாவினை - ஆசை தனை
ஆற்ற - ஆற்று, மிகவும், முற்றும், Greatly,exceedingly, entirely
ஆற்றல் - வலிமை, முயற்சி, மிகுதி, ஞானம், நிலையுடைமை(stability),
அறு - அரிதல், ஊடறுத்தல், நீக்குதல், இல்லாமற்செய்தல், வெல்லுதல்,
அறுப்பின் - இல்லாமல் செய்தால், வென்றால்,
தவாநிலை - வழு வாநிலை, a firm condition
தவா வினை - மீண்டும் பிறவாத நிலை அல்லது துன்பம் அல்லாத இன்பம் மட்டும் பயக்கும் நிலை
தான் வேண்டும் - தான் வேண்டியது; தான் விரும்பிய
ஆற்றான் - வலியில்லாதவன்
வரும் - வந்து சேரும்
முழுப்பொருள்
ஒருவன் தன் வாழ்வில் ஆசைகளை, இச்சைகளை, விருப்பங்களை, பற்றுகளை முற்றிலுமாக நீக்கி வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் அவனுக்கு தவ நிலை எனப்படும் மறுபிறவி அல்லாத நிலை வாய்க்கும். இந்நிலை என்பது ஒரு நிலையான நிலை (வழுவாநிலை). இந்நிலை அவன் வேண்டிய அவன் விரும்பிய துன்பம் இல்லாதவனாக அவனை ஆக்கும். அவனை வலிமையாக்கும். அத்தகைய நிலை (ஆசையில்லாமல் இருந்தால்) அவனை வந்து சேரும்.
மேலும்: அஷோக் உரை (நன்றி)
“எதையும் மிச்சமில்லாமல் விட்டுச்செல்வதற்கு பெயர் தவம். அது முனிவராலேயே இயலும்” என்றார் இளைய யாதவர். “பிறர் தங்கள் விழைவுகளையும் கனவுகளையும் விட்டுச்செல்கிறார்கள். ஏக்கங்களையும் வஞ்சங்களையும் நிலைநாட்டிச் செல்கிறார்கள்.” யுதிஷ்டிரர் “நான் எதிலிருந்தும் விடுபட்டவனல்ல. என் துயரெல்லாம் என் பற்றுகளால் உருவாவதே. பற்றறுக்க என்னிடம் சொல்லவேண்டியதில்லை. என் குடிகளை, நிலத்தை, இளையோரை, அரசியரை, மைந்தரை உளம்துறந்துவிட்டு நான் அடைவதொன்றுமில்லை” என்றார். “எங்கு பற்றிருக்கிறதோ அங்கே துயருள்ளது. எதில் பற்று மிகுகிறதோ அதிலேயே மிகுதுயரும் எழுகிறது. துயரென்பது பற்றின் மறுவடிவம் மட்டுமே” என்றார் இளைய யாதவர்.
பரிமேலழகர் உரை
அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவினை அஞ்சித் துவரக் கெடுக்க வல்லன் ஆயின், தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும் - அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை, தான் விரும்பும் நெறியானே உண்டாம். (கெடாமை - பிறவித் துன்பங்களான் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினை என்றது, மேற்சொல்லிய துறவறங்களை. 'வினை' சாதி யொருமை. தான் விரும்பும் நெறி மெய்வருந்தா நெறி. 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறுஅறஞ்செய்ய வேண்டா, செய்தன எல்லாம் அறமாம்' என்பது கருத்து. இதனால் அவா அறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.).
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவிற்கு அஞ்சி அதை முற்றுங் கெடுக்க வல்லனாயின்; தவா வினைதான் வேண்டும் ஆற்றான் வரும் - அவன் கெடாமைக் கேதுவாகிய வினை அவன் விரும்பியவாறே உண்டாகும்.
கெடாமை பிறவித்துன்பங்களால் அழியாமை. அதற்கேதுவாகிய வினை மேற்கூறிய துறவறங்கள். 'வினை' வகுப்பொருமை. விரும்பியவாறாவது துன்பமில்லாதவகை.
மணக்குடவர் உரை
ஆசையை மிகவும் போக்குவானாயின், கேடில்லாத வினைதான் வேண்டின நெறியாலே வரும்.
வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: அவாவினை ஆற்ற அறுப்பின்-(ஒருவன்) ஆசையை முற்ற ஒழிப்பின், தவா(த)வினைதான் வேண்டும் ஆற்றான் வரும் - கெடாத வினைகள் தான் விரும்பிய நெறியால் வரும்.
அகலம்: கெடாத வினைகள் - அறங்கள்
கருத்து: அவாவினை விட்டார் அறங்களைப் புரிவர்.
ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.
சாலமன் பாப்பையா உரை
ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.
No comments:
Post a Comment