Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

குறள் 505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல்
[பொருட்பால், அரசியல், தெரிந்துதெளிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பெருமைக்கும் பெருமை மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை

ஏனைச் ஒழிபு, மற்றையெனும்இடைச்சொல்; ஒழிந்த; மற்று; எத்தன்மைத்து; மலங்குமீன்.
ஏனைய, neut. pl. the other things, the rest, ஏன; 2. adj. as ஏனை.

சிறுமைக்கும் சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை.

தத்தம் நீர்வார்த்துக் கொடுக்கும் கொடை

தத்தம் - tttm   s. Theirs, respectively--as தம் தம். (p.) அவரவர்தத்தமிடஞ்சேர்ந்தார். They went to their respective places.

கருமமே - கருமம்செயல்; வினைப்பயன்; தொழில்வேதசம்பந்தமானசடங்கு; இறுதிக்கடன்; செயப்படுபொருள்; வெம்மை; மும்மலங்களுள்ஒன்றாகியகன்மவிதி.

கட்டளைக்கல்பொன்னை உரைத்து மாற்றறியப் பயன்படும் உரைகல்; நிறைகல், படிக்கல்; தங்கம் போன்ற உலோங்களின் தரத்தினை பரிசோதிப்பதற்கு ,பயன்படுத்தப்படும் கல்.

முழுப்பொருள்
“உயிரென்று வந்தமையால் இங்கு செயலாற்ற கடமை கொண்டிருக்கிறீர். தனக்கென்றில்லாது விளைவுகளில் சித்தமில்லாது விழைவிலாது ஆற்றும் செயலே தவம். ஆடும் துலாக்கோல்களின் நடுவே அசைவிலாது நின்றிருத்தலே யோகம்.” (வெண்முரசு - ஜெயமோகன்)

எங்கும் வேள்விகள் எழுக! அடைவதற்கான வேள்விகளல்ல, அளிப்பதற்கான வேள்விகள். இங்கு நாம் கொண்டவற்றை எண்ணி இம்மண்ணை வாழ்த்துவோம். நம்மைச் சூழ்ந்து காத்தவற்றை எண்ணி திசைகளை வணங்குவோம். நம்மை கனிந்து நோக்குவதன்பொருட்டு   தெய்வங்களை வழுத்துவோம். இங்கு எழும் வேள்வி அதன்பொருட்டே. இந்த வேள்வியால் தேவர்கள் பெருகுக! அத்தேவர்கள் நம்மை பெருகச்செய்க! ஒருவரை ஒருவர் பெருகச்செய்து முழுமைகொள்வோம்.” (வெண்முரசு - ஜெயமோகன்)

பொற்கொல்லன் ஒருவன் தன்னிடத்தே கிடைத்த பொன்னின் தகுதியை உரைகல் ஒன்றினைக் கொண்டு பார்ப்பதுபோல், ஒருவரது பெருமையையும், சிறுமையையும் அறிவதற்கு உரைகல்லாக இருப்பது அவரவர் செய்யும் செயல்களே ஆகும். ஆகவே, ஒருவன் குற்றம் உடையவன், குணம் உடையவன் என்று ஆராய்வதற்கு அவனுடைய செயலே கருவியாக உள்ளது. 

ஒருவரை அறிவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகக் இக்குறளை கொள்ளவேண்டும். ஒருவர் பொதுவாக ஈடுபடும் செயல்கள் என்ன, அவற்றில் அவர்களின் ஈடுபாடு என்ன, அவற்றை அவர்கள் எவ்வாறு செயலாற்றுகிறார்கள் (செய்வன திருந்த செய் என்பதற்கு ஏற்றவாரு செயலாற்றுகிறார்களா?) என்பதை கவனிக்கும்போது, அவர் கொள்ளப்போகும் பெருமை அல்லது சிறுமைப் புரிந்துவிடும்.

பிறப்பு, சூழ்நிலை, கல்வி, உற்றார், உறவினர்கள், வசதிகள், வாய்ப்புகள், பணம், சொத்து போன்றவை எல்லாம் ஒருவனின் பெருமையையோ சிறுமையையோ தீர்மானிக்காது. ஆதலால் அவற்றை எல்லாம் காரணம் காண்பிக்க முடியாது காண்பிக்க கூடவும் கூடாது. ஒருவரின் செயலே ஒருவரின் பெருமையையும் சிறுமையையும் தீர்மானிக்கும். 

You are not your brain. நீ உமது அறிவோ/கல்வியோ அல்ல. அறிவு ஆற்றல் மட்டுமே. நீ உனது செயல்தான்.

அமைந்தவற்றை வைத்து என்ன செய்தாய் என்பதே அளவுக்கோல். நீ அச்செயலை செய்ய முழுமனதாக எல்லா முயற்சிகளையும் சோம்பலின்றி மேற்கொண்டாயா? நீ சோம்பலின்றி ”செய்வன திருந்தச் செய்”தாயா? என்பதே இங்கு கேள்வி. 

ஒருவரின் பெருமைக்கும் / வளர்ச்சிக்கும் அவருடைய செயலே (முயற்சியே) காரணம். வளர்ச்சிக்கு நாணயம் உழைப்பே. வேறு ஏதும் அல்ல.

கம்பன் இயற்றிய காவியங்களான கம்பராமாயணம், வள்ளுவனின் திருக்குறள், இராஜராஜசோழன் காலத்தில் கட்டபட்ட தஞ்சை பெரிய கோயில், ஆயிரம் ஆண்டு காலம் தாண்டி நிற்கும் கல்லணை போன்றவை இங்கே நிற்பது செயலால். செயலே இங்கு நிற்கிறது. வெற்று புகழுரைகள் கொஞ்ச காலம் தான். காலம் அதை தாங்காது

தனது உண்மையான செயல்களின் வழியே மற்றவர்களின் ஏளனத்தைக் கடந்து செல்ல முடியும் என்பதை நிரூபணம் செய்திருக்கிறார் மகாத்மா காந்தியடிகள் அவர்கள்.

சொல்லுக்கும் சிந்தனைகளும் மதிப்புகள் வேறு. செயலிற்கே மதிப்பு அதிகம். ஒருவர் ஆயிரம் பேசலாம் ஆனால் எவர் ஒருவர் செயலாற்றுகிறாரோ அவருக்கே மதிப்பு அதிகம். சொல்லிலே நிறுத்திவிட்டால் ஒரு பயனும் இல்லை. அப்படிச் செய்தால் அவர்களை வாய்ச்சொல்லில் வீரர்களடி என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். 

எல்லாம் நம்மால் தான் என்றும் சொல்லலாம். 

(0) “தருமம் பற்றிய தக்க வர்க்கெல்லம்
கருமம் கட்டளை யென்றல் கட்டதோ” (கம்ப.அரசியல்.16)

(1) இதையே 
"தீதும் நன்றும் பிறர் தர வாரா,
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன"

இவை புறநானூற்றுப் பாடல் ஒன்றில் வரும் வரிகள்.

கெடுதலோ, நன்மையோ நமக்குப் பிறரால் உண்டாகாது. நமக்கு உண்டாகும் வருத்தமும், அது தணிந்த மகிழ்வும் அதுபோலத் தான். பிறரால் உண்டாவதில்லை என்று இந்தப் பாடல் வரிகள் நமக்கு அறிவுறுத்துகின்றன.


(2) இதனையே "அறநெறிச்சாரம்" என்னும் நூலில் கூறியுள்ளது காண்க.

“...........................தன்னை
இறைவனாச்செய்வானும் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானும் தான்” (அறநெறி 171)

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி.          (அறநெறி 174)

இதன் பொருள்
தனக்குத் துன்பம் செய்யும் பகைவனும், இன்பம் செய்யும் நண்பனும் தானே ஆவான்.  பிறர் அல்ல. தனக்கு மறுபிறவியில் உண்டாகக் கூடிய இன்பத்தையும், இந்தப் பிறவியில் அனுபவிக்கும் இன்பத்தையும் செய்து கொள்பவனும் அவனேதான். தான் செய்த வினைகளின் பயனாக, இன்ப துன்பங்களைத் தானே அனுபவிக்கின்றான். எனவே,  தான் செய்த வினைகளுக்குச் சான்றாக உள்ளவனும் அவனே தான்.

(3) இது, "நறுந்தொகை" என்னும் நூலில் பின்வருமாறு காட்டப்பட்டது.

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.
பெருமையும் சிறுமையும் தான்தர வருமே.

உருவத்தால் பெரியவர், வயதில் பெரியவர், செல்வத்தால் பெரியவர், பட்டத்தால் பெரியவர், பதவியால் பெரியவர் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் பெருமைக்கு உரியவர் ஆகமாட்டார்.

அவ்வாறே, உருவத்தால் சிறியவர், வயதில் சிறியவர், செல்வத்தால் சிறியவர், பட்டத்தால் சிறியவர், பதவியால் சிறியவர் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் சிறுமைக்கு உரியவர் ஆகமாட்டார்.

ஒருவருக்கு உண்டாகும் மேன்மையும், சிறுமையும், அவரவர் செய்யும் செயல்களால் உண்டாகும்.

அறிவினாலும், பிறர்க்கு உதவி செய்தல் முதலியவற்றாலும் பெரியவரே, பெரியவர். அவரே பெருமை உடையவர்.

(4) இதையே நாலடியார் 248 கூறுமாறு காணலாம்...

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழ் இடுவானும், நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.

எல்லோரும் போற்றும்படியாக சிறந்த நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்பவனும், தனது முன் நிலையையும் குலையச் செய்து, தன்னைக் கீழ்நிலையில் தாழ்த்திக் கொள்பவனும், தான் முன் இருந்த சிறந்த நிலையில் இருந்து, மேன்மேலும் உயர்ந்த நிலையில் தன்னை மேம்படுத்தி நிலைசெய்து கொள்பவனும், தன்னை அனைவரினும் தலைமை உடையவனாகச் செய்து கொள்பவனும் தானே ஆவான்.

(5) இதுவரை உலகியல் நிலை காட்டப்பட்டது. இனி, அருளியல் நிலையும் அவ்வாறே என்பதைக் காட்டுவோம்...

"தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே". (அறநெறி.172)

என்கின்றார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார்.

தனக்கு துன்பம் செய்யும் பகைவனும் இன்பம் செய்யும் நட்பு உடையவனும் தானே ஆவான்.  பிறர் காரணம் அல்ல. தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்துகொள்பவனும் தானே ஆவான். தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத் தானே அனுபவிப்பவனும் அவனே. அதனால், தனக்குத் தானே தலைவனாக இருந்து தன்னை நல்ல நெறியில் செலுத்திக் கொள்பவனும்,  தீய நெறியில் செலுத்திக் கொள்பவனும் அவனே தான். உயிர்களின் பக்குவத்தைப் பொறுத்தே நன்மையும் தீமையும் அமையும்.

(6) மேற்குறித்த அறநெறிகளை எல்லாம் வலியுறுத்தி, பொய்யான உலக வாழ்வை விடுத்து, மெய்ந்நெறியில் நின்று, இறைவன் திருவடியைச் சாருகின்ற வழியில், இனியாவது நில்லுங்கள் என்று நம்மை மேலும் நன்னெறிப் படுத்துகின்றார் மணிவாசகப் பெருமான்.

திருவாசகத்தில், "யாத்திரைப் பத்து" என்னும் பகுதியில் வரும் பின்வரும் பாடலைத் தெளிந்து கொள்ளலாம்.

தாமே தமக்குச் சுற்றமும்,
         தாமே தமக்கு விதிவகையும்,
யாம் ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்?
         என்ன மாயம்? இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
         அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமாறு அமைமின் பொய்நீக்கி,
         புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.

இதன் பொருள்
தமக்குச் சுற்றமும் தாமே --- ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே, தமக்கு விதி வகையும் தாமே --- நடைமுறைகளை வகுத்துக் கொள்பவரும் அவரே; ஆதலால், அடியவர்களே, நீங்கள், யாம் ஆர் --- நாம் யார், எமது ஆர் --- எம்முடையது என்பது எது, பாசம் ஆர் --- பாசம் என்பது எது, என்ன மாயம் --- இவையெல்லாம் என்ன மயக்கங்கள்? என்று உணர்ந்து, இவை போக --- இவை நம்மை விட்டு நீங்க, கோமான் பண்டைத் தொண்டரொடும் --- இறைவனுடைய பழைய அடியார்களோடும் கூடி, அவன் தன் குறிப்பே --- இறைவனது திருவுளக் குறிப்பையே, குறிக்கொண்டு --- உறுதியாகப் பற்றிக்கொண்டு, பொய் நீக்கி --- பொய் வாழ்வை விட்டு, புயங்கன் --- பாம்பினை அணிந்தவனும், ஆள்வான் --- எம்மை ஆள்வோனுமாகிய பெருமானது, பொன் அடிக்கு --- பொன் போல ஒளிரும் திருவடிக்கீழ், போம் ஆறு அமைமின் --- போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

இறைவன் திருக்குறிப்பாவது, ஆன்மாக்கள் எல்லாம் வீடுபேறு எய்த வேண்டும் என்பது, இதனை உணர்ந்து அவனது திருவடியைப் பற்றிக்கொள்ள வேண்டும்

ஆக, புறநானூறு, திருக்குறள், அறநெறிச்சாரம், நறுந்தொகை, நாலடியார் ஆகிய நூல்கள் கூறுவது உலகியல் நிலை.  

திருமந்திரம், திருவாசகம் கூறுவது உலகியல் நிலையில் இருந்து உயரவேண்டிய அருள்நிலை.

நல்லதையே நினைப்போம், நல்லதையே சொல்வோம், நல்லைதையே செய்வோம்.

உலகியல் நிலையில் உயர்ந்து வாழ்ந்து, இறைவன் திருவடிக்குப் பாத்திரம் ஆவோம்.

(7) “கோதில் நல்வினை செய்தவர் உயர்தவர் குறித்துத்
தீது செய்தவர் தாழ்குவர் இது மெய்ம்மை தெரியின்” (கம்ப.இரணியன்.53)

(8) இராமன் கூட சீதையை சந்தேகம் கொண்டு நெருப்பினில் செல்ல சொல்லும் "அக்னி பரீட்சை" செயலினால் , அக்கணத்தில சிறுமை அடைகிறான்.

தன செயல்கள் தான் தனக்கு பெருமையோ பழியோ தரப்போகிறது என உணர்ந்து அரசன் அரசாள வேண்டும் என்பதற்காகவே இக்குரல் "அரசியல் "இயலில் உள்ளது 

கம்பராமாயண வாலி வதைப்படலத்தில், வாலி இறந்ததும், அவனுடைய மனவி தாரை இராமனைப் பார்த்து கேட்பதாக வரும் பாடல் இது. அருமையான மருந்தாய் மற்றவர்க்கு துயரம் அகற்றும் வில்லினை உடைய இராமா எந்த ஒரு தருமவானுக்கும் பொருந்தாத செயலைச் செய்திருக்கிறாய். தருமம் பற்றி நிற்பவர்களுக்கு அவர்கள் செய்யும் செயல்களே உரைகல்லாக அமையும் என்பதெல்லாம் கட்டுரையாகச் சொல்லப்பட்டதோ என்று கேட்கிறாள், இக்குறளின் கருத்தையே எதிரொலிக்கும் படியாக. – ‘அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார்,ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார்;தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம்,கருமம் கட்டளை என்றல் கட்டதோ?’. 

(8) திருமந்திரப்பாடல், “தானே தனக்கு பகைவனும் நட்டானும் தானே தனக்கு மறுமையும் இம்மையும் தானே தான் செய்த வினைப் பயன் துய்ப்பானும் தானே தனக்கு தலைவனும் ஆமே” என்கிற திருமந்திரப்பாடல் ஒவ்வொருவரும் செய்கிற செயல்களுக்கும் அவர்களே உரைகல்லாகவும் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கிறது.


9) தருமம் பற்றிய தக்க வர்க்கெல்லம்
கருமம் கட்டளையென்றல் கட்டதோ (கம்ப.அரசியல் 16)

10) “கோதில் நல்வினை செய்தவர் உயர்குவர் குறித்துத்
தீது செய்தவர் தாழ்குவர் இது மெய்ம்மை தெரியின்” (கம்ப.இரணியன் 53)



மேலும் அசோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகனின் எச்சம் [சிறுகதை] வாழ்வில் செயலை, எச்சத்தை பற்றி பேசும் ஒரு நல்ல கதை

எழுத்தாளர் ஜெயமோகனின் நிறைவிலி [சிறுகதை] வாழ்வில் செயலைபற்றியும் தொடர்ந்து செயலூக்கத்துடன் இருக்கவேண்டியதை பற்ரியும் பேசுகிறது.

எழுத்தாளர் ஜெயமோகன் மொழிபெயர்த்த எமர்சனின் இயற்கையை அறிதல் புத்தகத்தில் செயல் பற்றி சில வார்த்தைகள் 
அனைத்திற்கும் மையமாக உள்ள ஒருமை செயல்களில் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. சொற்கள் என்பவை முடிவற்ற மனதின் எல்லைகளுக்குட்பட்ட சிறு உறுப்புகள் மட்டுமே. அவை ஒருபோதும் உண்மையின் முழுமையைக் கூறிவிட முடியாது. அவை உண்மையை உடைக்கின்றன; செதுக்குகின்றன; மடித்துக் குறுக்குகின்றன. செயல்களோ சிந்தனையின் முழுமையான வெளிப்பாடுகள். ஒரு சரியான செயல் நம் கண்களை நிறைத்து இயற்கை முழுக்க தொடர்புகொண்டு விரிந்திருப்பதாகத் தோன்றுகிறது. 'ஞானி ஒரு விஷயத்தை செய்யும்போது அனைத்தையும் செய்துவிடுகிறான். அல்லது சரியாகச் செய்யும் ஒரு செயலில் சரியாகச் செய்யப்படும் எல்லா செயல்களையும் காட்டிவிடுகிறான்'


நான் அனைத்தையும் ஒளிகொள்ளச் செய்யும் சாந்தீபனி குருகுலத்தின் மாணவன். வேதமுடிவே மெய்மை என்றுரைக்கும் கொள்கை கொண்டவன். வேட்டும் வென்றும் கொண்டு எவரும் நிறையமுடியாதென்றும், அறிந்தும் ஆகியும் அவிந்துமே அமையமுடியும் என்றும் சொல்பவன். அழியாத வேதமுடிவெனும் மெய்ப்பொருளை இங்கும் நிலைநிறுத்தவே வந்தேன்” என்றார்.

“ஏன் இவ்வேள்விக்கு நான் தலைவனாகக் கூடாது? ஆம், நான் இங்கு அறைகிறேன். நான் வேதத்தை முழுதேற்பவன் அல்ல. பாலுண்பவன் பசுவின் ஊனையும் உண்டாகவேண்டும் என்பதில்லை.  பசுவுக்கு புல்லும் நீரும் ஊட்டிப் புரப்பவன் அதன் பாலைமட்டும் உண்ணும் மைந்தனென்றே ஆகமுடியும்” என்றார் இளைய யாதவர். “அவையோரே, கேளுங்கள்! வேதங்களுக்காக சொல்லாடி அதைவிட மேலானதென்று ஏதுமில்லை என்று சொல்லும் மணமுள்ள சொற்களுக்குரியவர்கள் யார்? இவ்வுலக இன்பங்களில் முடிவிலாது திளைத்து விண்ணுலகையும் விழைந்து அங்குமிங்குமாடும் முடிவிலா ஊசலில் ஆடி அழியும் சிறியோர் அல்லவா?  இவர்கள் விழைவதென்ன? இங்கும் அங்கும் இன்பம், பிறிதேது? இவர்களின் உள்ளம் எங்கு மையம் கொள்ளமுடியும்?”

“கேளுங்களிதை! வேதங்கள் நேர், எதிர், நிகர் என்னும் முக்குணங்களை பேசுபவை. மூன்று துலாக்களின் முடிவிலா ஆடல் கொண்டவை. அந்த முக்குணங்களை வென்று செல்பவனே யோகி என்றறிக! இருமையறுத்து தன்னொளியில் தான் விழிகொள்பவனே மெய்மைக்கு அணுக்கமானவன். அரசரே, எதை விழைகிறீர்? வைதிகரே, எதை வேட்கிறீர்? முனிவரே, எதை எண்ணி தவம் கொள்கிறீர்? இலைநுனிதொட்டு பெருவெள்ளம் பரந்தொழுகுகையில் உங்கள் கிணறுகளுக்கு என்ன பொருள்?”

“உயிரென்று வந்தமையால் இங்கு செயலாற்ற கடமை கொண்டிருக்கிறீர். தனக்கென்றில்லாது விளைவுகளில் சித்தமில்லாது விழைவிலாது ஆற்றும் செயலே தவம். ஆடும் துலாக்கோல்களின் நடுவே அசைவிலாது நின்றிருத்தலே யோகம்.”

“வேள்விகள் காமகுரோதமோகங்களெனும் முக்குணங்களால் ஆனவை. ஏனென்றால் அச்சரடுகளின் ஊடுபாவால் ஆனதே இப்புடவி.  அரசர்களே, இங்குள்ளவை அனைத்தும் நெறிநின்று நாடாளும் நல்லோர் பொருட்டே என்றுணர்க! எனவே வேட்டு அடைவது விழுப்பொருள் மட்டுமாகவே இருக்கவேண்டுமென்று இங்கே அறைகிறேன். அவையீரே, தன்னை வென்று பொதுநலனுக்கென ஆற்றப்படும் எச்செயலும் வேள்வியென்றே அறிக!”

“ஆம், மேழிபிடிப்பது வேள்வி. ஆழிகொண்டு கலம் வனைவதும் வேள்வியே. ஆபுரப்பது வேள்வி. மீன்பிடிப்பதும் வேள்வியே. செயலென்று தன்னை முழுதுணரும் அழிவிலா வேள்வியால் இனி இப்புவி தழைக்கட்டும். அனைவருக்குமென சமைக்கப்படும் அன்னமெல்லாம் வேள்விமிச்சமே.  வேள்வியென ஆற்றப்படும் செயல்களன்றி பிறவற்றால் சிலந்திவலையில் சிறகுள்ள பூச்சிகள் என சிக்கிக்கொண்டிருக்கின்றனர் மானுடர்.  எனவே வேள்வி நிகழ்க! நிகழ்வனவெல்லாம் வேள்வியென்றே ஆகுக!”

“அரசர்களே, முன்பு முதற்பிரஜாபதி இவையனைத்தையும் படைத்தது விழைவுடன் அல்ல. விளைவெண்ணியும் அல்ல. ஆகவே அது வேள்வியாயிற்று. அவர் ஒவ்வொரு உயிரிடமும் சொன்னார். நீங்கள் பெருகுவீராக! இங்கு உங்கள் விழைவுகள் நூறுமேனி எழுக! உங்கள் குலங்கள் முடிவிலாது வளர்க என்று. நாம் இங்கு உருவானோம்.  இங்கு நாமியற்றும் வேள்வி அதன்பொருட்டே அமைக! வெற்றிக்கோ புகழுக்கோ அல்ல. வெண்குடைக்கோ அரியணைக்கோ அல்ல. இங்கு அன்னம் பெருகுக என்று எரி மூளுக! அன்னம் சொல்லாகுக என்று அவிசொரிக! சொல் மெய்மையாகுக என்று முகிலெழுக! மெய்மை விண் தொடுக என்று சொல்இசை ஓங்குக!”

“எங்கும் வேள்விகள் எழுக! அடைவதற்கான வேள்விகளல்ல, அளிப்பதற்கான வேள்விகள். இங்கு நாம் கொண்டவற்றை எண்ணி இம்மண்ணை வாழ்த்துவோம். நம்மைச் சூழ்ந்து காத்தவற்றை எண்ணி திசைகளை வணங்குவோம். நம்மை கனிந்து நோக்குவதன்பொருட்டு   தெய்வங்களை வழுத்துவோம். இங்கு எழும் வேள்வி அதன்பொருட்டே. இந்த வேள்வியால் தேவர்கள் பெருகுக! அத்தேவர்கள் நம்மை பெருகச்செய்க! ஒருவரை ஒருவர் பெருகச்செய்து முழுமைகொள்வோம்.”



முற்றிலும் பயனுறுதி கொண்ட ஒன்றை மட்டுமே இயற்றவேண்டுமென்று எண்ணி எவரும் எதையும் செய்ய இயலாது” என்றான். “பிறகெதற்கு பணியாற்றவேண்டும்?” என்று அவள் கேட்டாள். “எனது நிறைவுக்காக. நான் வாழ்கிறேன் என்பதற்காக” என்றான் பூரிசிரவஸ்.

நண்பர் நாகமணியின் விளக்கம்:
ஒருவன் பெரியவனாக மதிக்கபடுவதும், சிறியவனாகதூற்றப்படுவதும், அவனவன் செய்யும் செயல்களை கொண்டே மதிப்பிடப்படுகிறது.  உரைகல் எவ்வாறு தங்கம், வெள்ளி போன்ற உலோங்களின் தரத்தை மதிப்பிட பயன்படுகிறதோ, அதே போன்று ஒருவரது செயல்களே அவர்களின் தரத்தை தெரிவிக்கின்றது . அதை கொண்டே அவர் பெரியவர் என்றும் சிறியவர் என்றும் அறியப்படும் என எடுத்து உரைக்கின்றது இக்குறள் .

பிறப்பினாலோ ,அல்லது கட்டமைக்கப்பட்ட சில பிம்பங்களிநாலோ , எவரையும் பெரியவராகவும்,சிறியவராகவும் பிரிக்க முடியாது . அது அவர்கள் செய்யும் செயலின் தரத்தினால் மட்டுமே அறிய முடியும்.

உதாரணமாக  
குப்பை அள்ளும் தொழிலாளி கூட, அத்தொழிலை ,உண்மையாக மக்களுக்கு பயன் பெரும் விதத்தில் செய்யும் பொழுது பெருமை அடைகிறான். அதே சமயம், நாட்டை ஆளும் அரசன் கூட மக்கள் நலன் கருதாமல் ,சுயநலம் கொண்டு செய்யப்படும் செயல்களினால் சிறுமை அடைகிறான்.

பரிமேலழகர் உரை
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - பிறப்பு குணம் அறிவு என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது, தத்தம் கருமமே - தாம் தாம் செய்யும் கருமமே,பிறிதில்லை.
(இஃது ஏகதேச உருவகம். மக்களது பெருமையும் சிறுமையும் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற கருவிகளும் உளவாயினும், முடிந்த கருவி செயல் என்பது தேற்றேகாரத்தால் பெற்றாம். இதனால் குணம் குற்றங்கள் நாடற்குக் கருவி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவனைப் பெரியனாக்குதற்கும் மற்றைச் சிறியனாக்குதற்கும் வேறு தேறவேண்டா; அவரவர் செய்யவல்ல கருமந்தானே அதற்குத்தக ஆக்கும் படிக்கல்லாம். இஃது ஒருவனை ஒரு காரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு பின்னைப் பெரியனாக்க அமையுமென்றது. இது குற்றங்கூறாமை பலவற்றிற்கு முள்ள வேறுபாடென்று கொள்ளப்படும்.

மு.வரதராசனார் உரை
(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.

பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் என்ற குறளில் கருமம் என்ற சொல்லை முன்னைவினை என்ற பொருளில்தான் எல்லா உரையாசிரியர்களும் கொள்கிறார்கள். கருமம் என்பதை செயல் என்று எடுத்துக்கொள்வதே மேலும் பொருத்தமானதாக இருக்கமுடியும்.


ஜெயமோகன் தளத்தில் இருந்து சில பத்திகள் - செயலின்மையின் இனிய மது (கீழ்க்காண்பவை சில பத்திகள் மட்டுமே. முழுகட்டுரையையும் சுட்டியில் சென்று வாசிப்பது இன்னும் சிறப்பு)
மிகமிக அரிதான நுண்ணுணர்வும், அறிவாற்றலும் கொண்டவர் நீங்கள். நான் உண்மையில் உங்கள் அளவுக்கு ஆற்றல்கொண்ட மிகச்சிலரையே கண்டிருக்கிறேன். ஆனால் என்னால் சரியாக புரிந்துகொள்ளமுடியாத ஒரு சோம்பலால் மூடப்பட்டிருக்கிறீர்கள்.

கூர்ந்து அவதானித்தால் அந்தச் சோம்பலுக்குப்பின்னால் உள்ளது உங்கள் அறிவாற்றல்மீதுள்ள பெருமிதம் என்றே தோன்றுகிறது. தன்னைப்பற்றிய நம்பிக்கை அளிக்கும் மிதப்பிலேயே எதையும்செய்யாமல் இருப்பதற்கான ஒரு இயல்பு கைகூடிவிடுகிறது. நான் இயல்பிலேயே கலைஞன் அல்லது அறிஞன், ஒன்றுமே செய்யாவிட்டாலும்கூட என்ற எண்ணமா அது என்று ஐயமாக இருக்கிறது.

இல்லை என நீங்கள் மறுக்கலாம். ஆனால் கூர்ந்துபாருங்கள், உங்கள் வயதுக்குள் சொல்லும்படியான சாதனைகளைச் செய்தவர்களைப் பார்க்கையில் என்ன தோன்றுகிறது என்று. அது ஒன்றும்பெரிய விஷயமல்ல, நானும் எளிதாக இதையெல்லாம் செய்துவிடுவேன் என்றுதானே? ஒரு அலட்சியம் மட்டும்தானே?

அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் சாத்தியங்கள் மட்டும்தான், சாதனைகள் அல்ல. சாதனைகள் செயல்மூலமே உருவாகின்றன. சாத்தியங்கள் நடைமுறையைச் சந்திக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு வெளியாகிறது. எந்த ஒரு தளத்திலும் செய்துபார்ப்பதே முக்கியமானது. செயல் மூலம் கிடைக்கும் படிப்பினைகளைக்கொண்டுதான் ஒவ்வொரு ஆளுமையும் தன்னைக் கண்டடைகிறது. சொல்லப்போனால் ஒரு எண்ணம் செயலாக்கப்படுகையில் கண்டுகொள்ளும் தடைகள்மூலமே அவ்வெண்ணத்தின் உண்மையான சாத்தியக்கூறு கண்டடையப்படுகிறது.

நான் இதை எப்போதுமே சொல்லிவருகிறேன். தடைகளே ஒரு விஷயத்தின் இயல்பைத் தீர்மானிக்கின்றன. பிறந்தகுழந்தை வெறும் சாத்தியக்கூறுகளின் தொகை மட்டுமே என்பார்கள். அச்சூழலில் உள்ள அனைத்துமே அதற்குத்தடைகள்தான். அங்குள்ள பருவநிலை, பாக்டீரியா , பாரம்பரியம் , மொழி எல்லாமே. அவை அக்குழந்தையுடன் கொள்ளும் மோதல் மற்றும் வெற்றி மூலமே அக்குழந்தை ஓர் ஆளுமையாக ஆகிறது.

செயலாற்றுவதால் வரும் பணம்,புகழ், கௌரவம் எல்லாம் பெரியவைதான். ஆனால் ஒருகட்டத்தில் தெரியும் அவற்றுக்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை என்று. தேரோட்டிக்கு அது தெரியும், ஆகவேதான் அதை முதல் அத்தியாயத்தில் நாலைந்து வரிகளில் சொல்லித் தாண்டிச்செல்கிறான். செயலாற்றுவதால் கிடைப்பது ஒரு தன்னிறைவு. என்னுடைய சாத்தியங்களை நான் முழுமையாக நிகழ்த்தும்போதுதான் எனக்குள் இருந்து என்னை கவனித்துக்கொண்டிருக்கும் ஒன்று நிறைவடைகிறது. என்னுடைய சாத்தியங்கள் முழுவெளிப்பாடு கொள்ளும் களமே தன்னறம் என்பது. அதில் இறங்கிச் செயலாற்ற நான் என் பிறப்பால் பணிக்கப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு புல்லும் அதைத்தான் செய்கிறது, தன் முழு ஆற்றலாலும் இந்தபூமியைப் புல்லால்மூட அது முயல்கிறது.

ஆகவே செயல்புரிக என்று சொல்லவே இவ்வளவையும் எழுதினேன். melancholic idleness ன் இனிய வெறுமையில் திளைக்க இன்னும் காலமிருக்கிறது, ஒரு ஐம்பதுவருடம்

Thirukkural - Management
Our actions follow our thoughts. When our thoughts are positive and our beliefs in our thoughts are strong, our actions will be meaningful and the outcome will be possible.

A person is known by and for his behavior. The meaning of behavior is action, that is., what one says and what one does. One’s action is a touchstone to judge one’s qualities, clarifies Kural

A  man's conduct  is the touchstone
Of his greatness and littleness.

We can understand whether our thoughts are great or little based on our actions since our actions are the outcomes or reflections of our thoughts. If our thoughts are positive, our actions will be positive. Positive thoughts will not lead to negative outcomes and negative thoughts will not lead to positive outcomes. 


அப்பால் மெல்லிய சரடொன்றில் இறங்கிவந்த சிலந்தி “அதனினும் பெரிய விடுதலை நாம் பின்னிய வலையில் நாமே மாட்டியிருப்பது. ஒவ்வொரு கணமும் நெய்துகொண்டிருப்பதை நிறுத்தியபின் என் கால்கைகளை தூக்கி பார்த்தேன். இவற்றால் நான் என்னென்ன செய்யமுடியும் என எண்ண எண்ண என் உள்ளம் கிளர்ந்தெழுகிறது” என்றது. “காலைமுதல் வெறுமனே சரடில் தாவிக்கொண்டிருக்கிறேன். நேற்றுவரை என் குலம் செய்துவந்த செயல்கள்தான் இவை. ஆனால் வேட்டைக்கென அன்றி விளையாட்டென செய்கையில் இவற்றிலிருந்து எதிர்பார்ப்பும் பதற்றமும் அச்சமும் அகன்றுவிட்டன, தூய உவகை பெருகுகிறது.”


"ஆற்றல்மிக்க எண்ணக்குவையென இங்கிருந்தீர், வசுஷேணரே. அங்கே உங்களில் ஒரு துளியே வெளிப்பட்டது. எஞ்சியவை இங்கு மீண்டன. அவற்றின் எடையே இங்கு உங்கள் இருப்பு.”

“ஆனால் நான் பெரும்வில்லவனாக இருந்தேன். கல்விப்பெருமையும் கொடைச்சிறப்பும் கொண்டிருந்தேன்” என்று வசுஷேணர் சொன்னார். “மண்ணிலுள்ள அத்தனை விதைகளும் காடென்று எழும் வாய்ப்புள்ளவையே. கோடிகளில் சிலவே முளைத்தெழுந்து கிளைபரப்பி பூத்துக் காய்த்து காடாகின்றன” என்றான் சுகாலன். “முளைக்காதவை தெய்வங்களால் கைவிடப்பட்டவை.” வசுஷேணர் சினத்துடன் “நான் உலகை வெல்லும் ஆற்றல் கொண்டிருந்தேன்” என்று கூவியபின் அச்சொல்லின் வெறுமையை உணர்ந்து பெருமூச்சுவிட்டார்.

கர்ணன் கால்மடித்து அமர்ந்துகொண்டு தலையை தாழ்த்தினான். பெருமூச்சுகள் அவன் நெஞ்சை உலைத்தபடி எழுந்தன. இளைய யாதவர் அவன் முகத்தை நோக்கியபடி புன்னகை மாறா முகத்துடன் சொல்லலானார். மிக அண்மையில் செவிக்குள் என அவர் சொற்கள் ஒலிக்க அவன் கைகளைக் கோத்தபடி கேட்டிருந்தான்.

அங்கரே, எளியோருக்கும் பெரியோருக்கும் இல்லை இந்த அகக்குழப்பம். நீங்கள் எளியோர் என துயர் கொள்கிறீர்கள். அறிந்தோர் போல் பேசுகிறீர்கள். அறிக, துயரின்மையே மெய்மை எனப்படும். இறந்தவர்க்கோ இருப்பவர்க்கோ துயர்கொள்ளார் அறிவர்.

ஒருநோக்கில் ஒருதருணத்தில் ஒருவருக்கென நிகழ்வது மெய்யல்ல என்று உணர்க. அனைத்துநோக்கில் காலப்பெருக்கில் எவருக்குமென நிகழ்வதே மெய்மை. ஒருவர் அதை அறிந்துணர வழி ஒன்றே. அறிந்தவற்றை தொகுத்தல். முரண்கொள்வனவற்றை இணைத்தல். ஒன்றென்றாக்கி மேலேறிச்செல்லுதல். இணைப்பறிவே யோகம் எனப்படும்.

தனக்கென ஒருவர் அறிவதும் அனைவருக்கென அனைவரும் அறிவதும் ஒன்றென்று அமையும் நிலையே யோகம். இணைத்தறிக! தனித்திருந்தறிக! யோகம் எதிரெதிர் நிற்கும் இருமுனையிலும் ஒன்றே நிலைகொள்வது.

யோகமென்று அறிந்தவை மட்டுமே மெய்யென்று அமையும். ஆகவே அங்கரே, யோகம் புரிக. யோகத்தமைக. யோகமில்லாதவருக்கு மெய்மையும் உளமேன்மையும் இல்லை. அமைதியும் மகிழ்வும் அவரிடம் அமைவதில்லை.

ஒவ்வொன்றும் வகுக்கப்பட்டே மானுடனுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் அவன் உடல் வடிவம் வகுக்கப்பட்டுள்ளது. அவன் உள்ளமும் எல்லை வகுக்கப்பட்டது. அவனுக்கான களமும் வாய்ப்புகளும் மட்டும் வகுக்கப்படாதமையவேண்டும் என்று எப்படி கோரமுடியும்?

வகுக்கப்பட்ட களத்தையே சாமானியம் என்றனர். அங்கே நிகழும் எல்லைக்குட்பட்ட மெய்மையை சாமானிய ஞானம் என்றனர். அது உங்களுக்கு மட்டுமே உரியது. உங்கள் கிணற்றில் ஊறும் கடல். துளியும் கடலே.

வகுக்கப்படாத வெளியில் திகழ்வது விசேஷ ஞானம். முடிவிலியில் நீள்வது அது. இயல்வெளியும் தனிவெளியும் என இவை அறியப்படுகின்றன. இயல்வெளியில் திரள்வது தனிவெளி. தனிவெளியின் மெய்மையின் ஒரு துளித்தோற்றமே இயல்வெளியின் உண்மை.

இயல்உலகின் வினாக்களுக்கு தனிமெய்மையை விடையெனக் கொண்டு இங்கு பேசினீர்கள். அலகிலா தனிமெய்மையை உங்களுக்கான இயலுண்மை என மயங்கியதே உங்கள் முதற்பிழை. அறிக, மெய்யறிதலில் முதற்பிழை நிகழ்ந்தால் வாயில்கள் அங்கேயே மூடிவிடுகின்றன. பிறகெப்போதும் அவை திறப்பதே இல்லை.

உங்களுக்கு வகுக்கப்பட்ட களம் உங்களுக்கான வாய்ப்பென்று கொள்க. உங்களுக்கு  அளிக்கப்பட்ட ஆற்றலும் அந்த எல்லைக்குட்பட்டதே. அவ்விரண்டும் முரண்கொண்டு முடைந்துகொண்டு மட்டுமே உங்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும். உங்கள் எல்லைக்குட்பட்ட ஆற்றல்களுடன் எல்லையின்மை முன் எப்படி நிற்பீர்கள்? கடுவெளிமுன் நறுமணம் என கரைந்தழிவீர்கள்.

உடலால், உள்ளத்திறனால், பிறப்பால், சூழலால் வகுக்கப்படாது இங்கு வரும் மானுடர் எவருமில்லை. தனக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் திரட்டி உச்சமென வெளிப்பட்டு தன் களத்தில் நின்றாடுபவன் நிறைவடைகிறான். அவனுக்கு இங்கே வெற்றியும் தோல்வியுமில்லை. ஏனென்றால் வெளிப்படுகையிலேயே அவன் வென்றவனாகிறான். அவன் அடைவன அவனுக்கு வெளியே இல்லை.

வேழங்களைத் தடுக்கும் பெருங்கிளைகளை கீரிகள் அறிவதேயில்லை. சிறுதவளைகள் சிம்மங்களுக்குமேல் ஏறிவிளையாடுகின்றன. உங்களுக்கு அமைந்த களத்தின் அனைத்து எதிர்விசைகளும் உங்கள் ஆற்றலைக் கோரியே அப்பேருருக் கொண்டன என்று உணர்க!

உங்களுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லும் உங்கள் பெருமையின் விளைவாக எழுந்தவைதான். உங்களை நோக்கிவரும் அத்தனை அம்புகளும் உங்கள் புகழ்ச்சொற்களாக மறுபிறப்பு கொள்ளவிருக்கின்றன. அளிக்கப்பட்டுள்ளது உங்கள் களம் என்பதன் பொருள் அனைத்தும் அளந்தமைக்கப்பட்டுள்ளன என்பதே.

வெல்க, வெல்லும்பொருட்டு களம்நின்று பொருதுக! இழப்பதனால், வீழ்வதனால் எவரும் தோற்பதில்லை, முற்றாக வெளிப்படாமையால் மட்டுமே தோற்கிறார்கள் என்று உணர்க!

கொல்லாதொழியும் எவரும் வெல்லாதொழிவர். உயிர்க்கொலை ஒன்றே கொலையல்ல. உணர்வுக்கொலை, ஆணவக்கொலை, கருத்துக்கொலையென கொலைநிகழா கணமே இங்கில்லை. அங்கரே, உங்கள் உறவுகளைக் கொல்வதை எண்ணி கலங்குகிறீர்களா? அன்புடையோனுக்கு இவ்வுலகே உறவு அல்லவா? அறத்தோனுக்கு அனைத்துயிரும் நிகரல்லவா?

நீங்கள் காப்பவருக்காக எதிர்ப்பவரை கொல்கிறீர்கள் என்றால் கடமையை செய்தவராகிறீர். நீங்களும் கொல்லப்படக்கூடும் களம் என்றால் அறத்தையே இழைத்தவராகிறீர். ஒருகணமும் திரும்பி எண்ணி வருந்தமாட்டீர் என்றால் நற்செயலையே இயற்றுகிறீர்கள்.

இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள்?

இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை.

அங்கரே, உணர்வுகளில் உயர்ந்தது அஞ்சாமை. மானுடரில் சிறந்தவன் வீரன். தன் செயல்களில் ஐயமற்று, முழுவிசையுடன் வெளிப்படுவதே வீரம் எனப்படுகிறது. இருத்தலில் முழுமைகொள்பவன் என்பதனால் வீரனுக்கு சாவுமில்லை.

வில்லவர் அனைவரும் அறிந்த ஒன்றுண்டு. அம்பில்தான் அவர்களின் திறன் செல்கிறது. இலக்குகளை தெய்வங்கள் ஆள்கின்றன. ஆனால் அதை எண்ணி வில் தாழ்த்துவோர் கோழைகள் என்றோ அறிவிலிகள் என்றோ அழைக்கப்படுவர். இயற்றும் பொறுப்பே மானுடருக்கு, எய்துவது முடிவிலியை ஆளும் வல்லமையின் ஆணையால்.

விழைவினால் அல்ல, வெறுப்பினால் அல்ல, செயலாற்றும் பொருட்டு இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதனால் செயலாற்றுக! தசைகளில் உள்ளது தோளின் செயல். கால்களில் உள்ளது நடத்தல். பிறிதொன்றுக்காக அவை இங்கு எழவில்லை. அவற்றுக்குரிய விசையை அளிப்பதே நம் உள்ளத்தின் அறம்.

இங்குள்ள ஒவ்வொரு பொருளும் தனக்கென்று ஓர் செயல்வழியும் இலக்கும் கொண்டுள்ளது. அதுவே அதன் தன்னறம். அதிலேயே அதன் முழுவிசையும் வெளிப்படுகிறது. அதன் ஒவ்வொரு அணுவும் அப்போது மட்டுமே செயல்படுகிறது. அதை இயற்றுகையிலேயே நிறைவடைகிறது. நிறைவுக்கு மறுபெயர் மகிழ்வு.

அங்கரே, உங்கள் தன்னறம் எங்கு உங்கள் தோள்களும் விழிகளும் நெஞ்சமும் பிறிதொன்று தேராது நின்றிருக்குமோ அங்கு உள்ளது. தன்னறத்தை ஆற்றுபவர் தன்னில் மகிழ்கிறார். அறிக, மகிழ்வென்பது வெளியே எதிலிருந்தும் எழவியலாது! தன்னுள் தான் முற்றிலும் நிறைவதே மகிழ்வென்று உணரப்படுகிறது.

இல்லத்தில் தொலைத்ததை பள்ளிச்சாலையில் தேடுகிறீர்கள். இங்கு, இப்பொழுதில் உள்ளது உங்கள் இடர் என்றால் பிறிதெங்கு நோக்குகிறீர்கள்? இயல்தளத்தில் நிலைகொள்பவர் நீங்கள். உங்கள் மெய்மையும் இங்கு எழுவதாகவே அமையலாகும்.

தோற்கடிக்கப்பட்டோர், வீழ்த்தப்பட்டோர், அடக்கப்பட்டோர் அனைவருக்கும் இதுவே என் சொல். தோற்றீர்கள் எனில் வெல்க! வீழ்ந்தீர்கள் எனில் எழுக! அடக்கப்பட்டிருந்தால் ஆள்க! சிறுமைப்படுத்தப்பட்டீர்கள் என்றால் விரிக! அதற்குரிய இயலறிவே உங்களுக்குரியது. தனியறிவு அதற்கு உகந்தது அல்ல. கூரியதென்றாலும் ஒளியைக் கொண்டு காலில் தைத்த முள்ளை அகழ்ந்தெடுக்கவியலாது.

இங்குள்ளவை அனைத்தும் மீறவியலாதன என்றால் உங்கள் தோள்களுக்கு ஆற்றல் ஏன் அளிக்கப்பட்டது? உங்கள் சொற்களுக்கு ஏன் அனல் கூடுகிறது? களத்தை அமைத்த அதுவே கைகளையும் ஆக்கியது என்று உணராதவர் பேதைகளே.

பேதைகளே கட்டுண்டிருக்கிறார்கள். மெய்யுணர்ந்தோர் ஒவ்வொரு கணமும் விடுதலையை நாடுகிறார்கள். அறிவு என்பது விடுதலை என்றே பொருள்படும். எவ்வண்ணம் எவர் உரைத்தாலும் அறிவு விடுதலையை அன்றி பிறிதொன்றை அளிக்காது. அறிவினால் விடுதலை அமைவதில்லை, அறிதலே விடுதலையாகும்.

அங்கரே, அறிவில் தீயது, பயனற்றது என்றொன்றில்லை. அறியப்படாத அறிவுகளே பயனற்றவை. குறையாக அறியப்பட்டவையே தீங்கிழைப்பவை. அவை அறிவென கொள்ளப்படுவதில்லை.

விலங்கு நிலையிலிருந்து மானுடரை விடுதலை செய்தது என் முன்னோடிகளின் அறிவு. இருபாற்பிரிவு நோக்கிலிருந்து விடுதலை செய்வது என் அறிவு. நாளை எழும் அறிவோ இன்மையும் இருப்பும் ஒன்றென்று எழும் பேரறிவாகும். அதை கல்கி என்றும் மைத்ரேயர் என்றும் உரைப்பர் நூலோர்.

இங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இன்னும் மானுடர் எஞ்சியிருக்கிறார்கள். இன்னமும் வினாவும் விடையுமென அறம் ஆராயப்படுகிறது. அங்கரே, மீண்டும் மீண்டும் அது வெவ்வேறு இடங்களில் உருவுகளில் கண்டடையப்படுகிறது.

இங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இங்கு ஒவ்வொன்றும் நிலைகொள்கின்றன. மானுடர் இணையாமல் எதுவும் எழுந்து வளர்ந்து நீடிக்காதென்று அறிக! அறத்தின்பொருட்டன்றி எதன்பொருட்டும் மானுடர் இன்றுவரை ஒருங்குதிரண்டதில்லை. அறமென்பது அவர்கள் ஒருங்குதிரட்டுவதே. அவர்கள் ஒவ்வொருவரிலும் வாழ்வது அது.

அழிக்கப்படுகையில், கைவிடப்படுகையில், சிறுமைகொள்கையில் பிறிதொன்றை நோக்கி உதவிகோருபவன் தன்னை அறியாதவன். அழைக்கப்படாத தெய்வமொன்று இருண்ட ஆலயத்தில் துயருடன் அவனுக்காக காத்திருக்கிறது.

இவ்வறம் அவ்வறம் என்று நோக்குவோர் அறத்தை காண்பதில்லை. முழுதும் காணப்படாத அறம் மறமென்று தோன்றலாகும். முழுதறத்தை உணர்ந்தவர் மறமும் அறத்தின் கருவியென்றே உணர்வர். எங்கும் திகழும் ஒன்றின் ஆடலை எதிலும் நோக்குபவரே யோகத்தமர்ந்து அறிந்தவர்.

முன்பொருமுறை இனிய புலரியில் குடில்விட்டு வெளியே வந்த தொல்வியாசர் குருவியின் மென்குஞ்சை தன் கூரலகால் கிழித்து உண்டுகொண்டிருந்த கழுகொன்றை கண்டார். புவிபேணும் பசியெனும் தெய்வத்தின் பேருருவைக் கண்டவராக மகிழ்ந்து கைகூப்பினார்.

பிறிதொருநாள் காட்டில் செல்கையில் கௌதமர் என்னும் முனிவர் தன் குருளையைக் கொன்று தின்றுகொண்டிருந்த அன்னைப் பெரும்பன்றியை கண்டார். அதன் முலைகளை முட்டிக்குடித்துக்கொண்டிருந்தன பிற குட்டிகள். அன்னையே, எத்தனை கனிந்திருந்தால் தன்னையே உண்டு உருக்கி உணவாக்குவாய் நீ என்று அவர் உவகையில் கண்ணீர் விட்டார்.

பறவைச் சிறகெரித்து புழுக்குலம் அழித்து மரங்களில் நாசுழற்றி மூண்டு எரிந்தெழும் காட்டுத்தீயைக் கண்டு தொல்முனிவராகிய காசியபர் கூறியதை அறிக! அனலவனே, மென்மையான புதிய பசுந்தளிர் புற்களின் காவலனே, உன் அருளுக்கு வணக்கம் என்றார் அவர்.

பற்றுகொண்டோன் நோக்குகையில் அனைத்தும் பற்றினாலேயே பொருள்கொள்ளப்படும். இருள்விழைவோன் இருளை அடைகிறான். மருள்விழைவோனை அதுவே அணைகிறது. ஒளிநாடும் புட்கள் மட்டுமே புலரியை அறிகின்றன. வணங்கும் வடிவில் வந்தணைகிறது தெய்வம்.

முற்றிலும் பற்றறுத்த முனிவருக்கே முழுமை புலனாகும். குந்தியின் மைந்தரே, முனிவரிலும் முழுதமைந்த தவம்கொண்டோர் சிலரே. முழுமையறிவு உலகவாழ்வுக்கு எவ்வகையிலும் பயனற்றது என்பதனால் முழுதறிந்த பின்னரும் அதை சிறிதாக்கிக்கொள்பவரும் முனிவருள் உண்டு.

இப்புவியில், விழைவுகளுடன் நிற்பவர்களுக்கு அக்களத்திற்குள் அமையும் உண்மையே உகந்ததாகும். அது பசிக்கையில் உணவென்றும், அஞ்சுகையில் அரண் என்றும், போரில் படைக்கலமென்றும், தனிமையில் துணையென்றும், துயரில் உறவென்றும் வந்தமையவேண்டும். அதை நாடுக!

உணவில் பகிர்தலாக, இடரில் நட்பாக, எளியோர் முன் அளியாக, அவையில் நெறியாக, போரில் சினமாக, நோக்கில் நடுநிலையாக, குடிகளுக்குமேல் ஆணையாக, குலங்களுக்குமேல் நம்பிக்கையாக, விண்ணவருக்கு முன் அறமாக அது வந்தமைக! அதை அடைபவர் வெல்வர்.

ஒவ்வொருவருக்கும் அது தன் முகம் காட்டுகிறது. எதன்பொருட்டு வந்தீர்களோ அதை முழுதியற்றுக! கைவிரல்களைக் கண்டவன் அவற்றின் செயலென்ன என்று அறிந்துகொள்வான். தன்னை நோக்குபவன் தன் இலக்கென்ன என்று தெளிவுகொள்வான்.

அவ்வறிதலை செயலென்றாக்குக! செயல்கள் ஒவ்வொன்றும் மறுசெயல்களால் ஆனவை. செயலாற்றுக, விளைவை கொள்க! அறிக, செயல் விடுதலையென்றாகவேண்டும்! கட்டுறுத்தும் செயல் அரைச்செயலே. முழுமை நம்மை அதை கடந்துசெல்ல வைக்கும்.

வெல்லுங்கள், ஆனால் வென்றவருக்கு அருள்கையிலேயே கடந்துசெல்கிறீர்கள். கொள்க, எனில் கொடுக்கையில்தான் நிறைவுறுகிறீர்கள்! சினம் கொள்க, ஆயின் கனியும்போது மட்டுமே முழுமை அமைகிறது!

அங்கரே, மானுடர் அடைந்த எதையும் இழப்பதில்லை. அறியாமையை, ஐயத்தை, சினத்தை, துயரைக்கூட அவர்கள் உடைமையென்றே கொள்கிறார்கள். கைவிட மறுக்கிறார்கள். இழக்க அஞ்சுகிறார்கள். கைவிடப்படாத எதுவும் சுமையே. இழக்கப்படாத எதுவும் தளையே.

நிகர்கொண்ட வேலே இலக்கடைகிறது. உணர்வுகளால், ஐயத்தால், மிகைவிழைவால் நிலையழியாது இயற்றும் செயல் வெல்கிறது. தோள்விசையை முழுதும் பெற்ற அம்புகளே நெடுந்தொலைவை கடக்கின்றன.

எழுக! உங்கள் தோள்களில் வெல்லும்விழைவு நிறைக! உங்கள் ஆற்றல் முழுமையும் களத்தில் நிகழ்க! வெற்றியால் இவ்வுலகனைத்தையும் அடைவீர்கள். சிறுமைகளை அத்திருவால் நிரப்புவீர்கள். வீழ்ந்தால் அச்சிறுமைகளை பெரும்புகழ் எழுந்து அழிக்கும்.

இறுதிமூச்சையும் இசையாக்கிய பின்னரே குயில் வானில் முழுதெழுகிறது . எச்சமின்றி விட்டுச்செல்வதன் விடுதலை உங்களுக்கு அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!

இளைய யாதவர் சொல்லி முடித்த பின்னரும் கைகட்டி அமர்ந்திருந்த கர்ணன் நெடுநேரம் உளம் மீளாமல் தலை குனிந்திருந்தான். பின்னர் நீள்மூச்சுடன் எழுந்து கைகூப்பினான். “ஒரு வினாவும் எஞ்சாது நிறைவுற்றேன், யாதவரே. விடுதலை நோக்கிய நேர்ப்பாதையை என்முன் காண்கிறேன்” என்றபின் திரும்பி முதற்புலரி எழுந்துவிட்டிருந்த முற்றத்தில் இறங்கி நடந்தகன்றான்.

அனைத்தையும் சுவைத்த பின்னும் தனக்கென சுவையேதுமில்லாதிருக்கும் நாக்கு அவன். புதுச் சுவையை நாடுபவன். இனிமையில் முற்றிலுமாகத் திளைக்க அறிந்தவன். தன்னில் தான் இன்புறுபவன்.

அவன் தன்னில் தான் நிறைவுகொள்பவன். தன்னிலே தான் உவகையடைபவன். தானன்றி பிறிதிலானுக்கு செயலென்று ஏதுமில்லை. அவனே முடிவிலாது செயலாற்றுபவன். புடவியில் பிரம்மம் என உயிர்களில் அவன் உறைகிறான்.

பிறரை மட்டுமே எண்ணி அளிக்கையில், தன்னை மட்டுமே எண்ணி அன்புகொள்கையில், இரண்டும் எண்ணாமல் அறம்புரிகையில் செயல் வேள்வி என்றாகிறது. அனைத்தையும் அவியாக்கும் வேள்வி. அனைத்து தெய்வங்களும் பேணப்படும் வேள்வி. வேள்வியல்லா செயலனைத்தும் வீணே. வேள்வியன்னம் அல்லாதவை உணவே அல்ல.

செயலினூடாக செயலை கைவிடுக! செயல்நிறைவென்பது செயல்கடத்தலென்றாகுக! செயலில் எழும் அறிவும் செயல்மிச்சமே. எஞ்சாச் செயலே வீடுபேறளிக்கும் என்று அறிக!

செய்யப்படாத செயல் துன்பத்தை அளிக்கிறது. செய்துமுடித்த செயல் புதிய துன்பத்தை கொண்டுவருகிறது. செயலை அறியாமல் செயலாற்றுபவனே அத்துன்பத்தை தவிர்க்கிறான். முற்றிலும் நிகர்கொண்ட படையாழியே முழுவிசையில் சுழலும். தன்னை ஏந்தும் சுட்டுவிரல் அறியாதபடி எடையற்றிருக்கும்.

இங்கு செயல், மறுசெயல், தொடர்செயல் என இயங்கும் இந்தப் பெரும்பொறியை அமைத்த சிற்பி அதில் ஓசையின்றி உராய்வின்றி தான் எண்ணியதை முற்றியற்றும் உறுப்பையே விரும்புகிறான். அதை தன் வெற்றியென்று கொள்வான்.

அப்பொறியின் அமைப்பையும் இயக்கத்தையும் இலக்கையும் அவ்வுறுப்பு முழுதறியவியலாது. முற்றமைந்தால் அறியமுடியாது. பிறழ்வதனூடாகவே அதை அறியமுடியும். பிறழ்கையில் அது அமைந்திருக்கும் இடமே அதன் சிறையென்றாகும். அப்பொறியின் அனைத்து பிற உறுப்புகளாலும் அது உரசப்பட்டு அனல்கொள்ளும். அப்பொறியின் முழு எடையையும் தாங்கி உடைந்தழியும்.

தன் பணியை முற்றியற்ற அது அமையுமென்றால் அது அமைந்திருக்கும் இடமே முற்றிலும் உகந்ததென அறியும். அனைத்துறுப்புக்களும் அதற்கு உதவுவதை காணும். முழுமையுடன் பொருந்துவதனால் முழுமையின் ஆற்றல்கொண்டதாக மாறும்.

ஒரு செயல் அனைத்துச் செயல்களுடனும் முற்றிணைகையில் அது யோகம் என்றாகிறது. யோகமென அமைந்த செயலே செயல்களில் தூயது. செயல் சிறையிடுவது. யோகச்செயல் விடுவிப்பது.

ஆகவே அறிவமைந்தவளே, செயலில் அமைக! செயலால் எழுக! செயல் யோகமென்றாகுக!


சிகண்டியின் அசையா விழிகளை நோக்கியபடி இளைய யாதவர் சொன்னார் “பாஞ்சாலரே, எது செயல் எது செயல் அல்ல என்ற வினாவுக்கு முன் ஞானியரும் உளமயக்கு கொள்கிறார்கள். அறிபவர்களுக்கு செயலின் இயல்பு தெரிந்திருக்கவேண்டும். அதற்கும் மேலாக செயற்கேட்டின் இயல்பு தெரிந்திருக்கவேண்டும். செயலின்மையை மேலும் நுணுகியறிந்திருக்கவேண்டும். செயலின் வழி மிகவும் இடர்மிக்கது. எளிதில் எண்ணி எய்தமுடியாதது.”

இந்த நைமிஷாரண்யத்திலமர்ந்து இரண்டு நாட்களாக செயலைப் பற்றியே சொல்லாடிக்கொண்டிருக்கிறேன். செயலின் விளைவை அஞ்சியவராக அங்கநாட்டரசர் இங்கு வந்தார். அவருக்கு செயல் எனும் போரைப் பற்றி சொன்னேன். செயல்மேல் தயக்கம் கொண்டவராக பீஷ்மர் நேற்று வந்தார். அவருக்கு செயலெனும் யோகத்தைப் பற்றி சொன்னேன். எய்துவனவற்றை அங்கருக்கும் இயற்றுவதன் முழுமையைப்பற்றி பீஷ்மருக்கும் கூறினேன். பாஞ்சாலரே, செயல்மேல் ஐயம் கொண்டவராக நீர் வந்திருக்கிறீர். செயலெனும் அறிதலைப் பற்றி வினவுகிறீர்.

தழல் தான் தொடும் அனைத்தையும் தானென்றே ஆக்கிவிடுகிறது. அறிவு அனைத்தையும் அறிவென்றாக்குகிறது. தழல் தூயது, ஒளிகொண்டது. அனைத்தையும் தழலாக்குவதையே வேள்வி என்கிறோம். ஞானத்திலமைந்தவன் செயலனைத்தையும் வேள்வியாக்குகிறான். சிலர் அனலில் வேள்விசெய்கிறார்கள். சிலர் அலகிலா அனலை ஓம்புகிறார்கள். அவர்களையே ஞானிகள் என்கிறோம்.

எது பிற அனைத்தும் தானே எனக் காட்டுகிறதோ, பிற அனைத்துக்கும் மாற்றென தான் நின்றுகொள்கிறதோ அதுவே அறிவு. விதையை தன் தோளிலேற்றிக்கொண்டு முளைத்தெழுகிறது சிறுசெடி. நோக்குபவனாக தான் ஆகும் ஆடி. அறிபவன் அறிவே அனைத்துமென்றும் அதில் தான் ஒரு துளியே என்றும் உணர்கிறான். அறிபவனை அறிவென்றாக்குவதே அறிவு. முழுமையற்றது அறிவல்ல. அறிவனைத்தும் முழுமையின் ஒரு துளியே. அனைத்து நீர்த்துளிகளும் கடல்நோக்கியவையே.

முழுமைதேடும் செயல்களெல்லாம் வேள்விகளே. ஆனால் பொருட்களால் ஆற்றப்படும் வேள்விகளைவிட அறிவால் இயற்றப்படும் வேள்வி சிறந்தது. அனைத்துச் செயல்களும் அறிவுச்செயல்பாடுகளே. நதியைவிட முகில் விரைவுகொண்டது. விண்ணில் அலையும் கடல்கள் எடையற்றவை. அறிவின் பாதை பயின்று மேம்பட்டு அடையவேண்டியது. நீந்தியபடியே பிறக்கின்றன மீன்கள். பிறந்ததுமே ஓடுகின்றன கால்கள் கொண்டவை. பறவைக்குஞ்சு அன்னையிடமிருந்தே சிறகுகளைப் பற்றி அறிகிறது. சிறகுகளினூடாக வானை பயில்கிறது. நீந்தியும் ஓடியும் தாவியும் கற்றவற்றைக் கொண்டே உயிர்கள் பறவைகளாயின.

வணங்கியும் எட்டுத்திசையும் வினாவெழுப்பியும் தொண்டுசெய்தும் அறிந்துகொள்க! உண்மை காணும் ஞானிகளே உமக்கு ஞானத்தை அளிக்கவியலும். ஞானத்தை அடைந்தபின்னர் இந்த ஐயங்கள் இயல்பாக அழிந்துவிடும். அனைத்து உயிர்களையும் உம்முள்ளே காணச்செய்வதே அறிவு. எனவே அனைத்துக்கும் விடையென்றாகி நின்றிருப்பதே அதன் இயல்பு. பழி, இழிவு, துயர் எனும் மூன்று கடல்களை கடக்கச்செய்யும் பெருங்கலம் ஞானம். வெளிவிரியும் புலன்களை உள்நோக்கி தொகுத்துக்கொண்டு, துயிலிலும் ஒலிக்கு அசையும் பூனைச்செவியென உளம் கூர்ந்திருப்பவன் ஞானத்தை அடைகிறான். ஞானம் அமைதியை அளிக்கிறது.

ஐயம் கொண்டவனுக்கு செயல் இல்லை. செயலில் திரள்வதே ஞானம். ஞானமில்லையேல் ஐயம் அழிவதில்லை. ஐயம்கொண்டவனுக்கு இவ்வுலகில் எதுவுமில்லை, மாற்றுலகுகளிலும் எஞ்சுவதேதுமில்லை. அனைத்தையும் ஐயப்படுபவன் தனக்குத்தானே விலங்குகளை பூட்டிக்கொள்பவன். ஐயம் அறிவின்பொருட்டே எழவேண்டும். விடையின்பொருட்டு மட்டுமே வினா எழவேண்டும். வினாவுக்குள் விடையின் வடிவும் இலக்கும் பொதிந்திருக்கின்றன. அறிவின் மீதான நம்பிக்கையையே அறிபவனின் அனைத்து ஐயங்களும் வெளிப்படுத்துகின்றன. அறிவை நம்பி ஐயங்களை எதிர்கொள்பவன் தன்னை மீட்டுக்கொள்கிறான். ஐயத்தை நம்பி அறிவை எதிர்கொள்பவன் ஐயத்தையே பெருக்கிக்கொள்கிறான்.

விடைதேடுவதென்பது கேள்விகளை மேலும் மேலும் கூர்ந்து தெளிவுபடுத்திக்கொள்வது மட்டுமே. ஐயங்களை கூர்ந்து நோக்கி உறுதிகளை சென்றடையலாம். வலையைக் கட்டும் சிலந்தி இரை சிக்கிக்கொண்டதும் கண்ணிகளை தானே அறுத்துவிடுகிறது. ஐயம்கொள்பவன் தன் ஐயம் குறித்து பெருமிதம் கொள்வதே அறிதலின் பாதையின் பெரும்புதைகுழி. ஐயப்படுதல் என்பது ஓர் அறிவுநிலை அல்ல. ஐயம் அறிவின் கருவியும் அல்ல. அறிதலின் ஏதேனும் ஒரு படியில் நின்றிருப்பதே அறிவுநிலை எனப்படும். ஐயம் அறிவில்லாநிலை மட்டுமே. அறிவின்மையை அறிவு விழைகிறது, தான் பெய்தமையும் கலம் அது என்பதனால்.

புறத்தே நோக்கி ஐயப்படுபவன் அறிவன் அல்லன். தன்னுள் ஐயம் எழ அதை ஊர்தியெனக் கொண்டு முன்செல்பவனே அறிவை நாடுபவன். பிறர் அடைந்தவற்றின் மேல் ஐயம் கொள்வதென்பது கங்கைப்பேரலைகளை எதிர்த்து நீந்துவது. சொல்லுக்கு சொல்வைப்பது சொல்லை மறுப்பது மட்டுமே. வெற்றுச்சொல்லில் மகிழ்வதே அறிவுநாடுபவனின் இருட்டறை. ஐயத்தை கருவியாகக் கொண்டவன் எதிரொலிகள் மட்டுமே நிறைந்திருக்கும் கூரைக்குவடு போன்றவன். அவன் கொள்ளும் அமைதியும் ஓசைகளாலானதே.

அறிவின் ஆணவம் மேலும் அறியவே வைக்கும். அறிவுத்தேடலல்லாத செயல்களை விலக்கும். ஆனால் அறிந்தவற்றைச் சூழ்ந்த வேலியென்றாகி அறிவை ஆளுமையெனத் திரட்டி நிறுத்தி மேலும் செல்வதை தடுக்கும் என்பதனால் செல்லும்தோறும் விலக்கவேண்டியது அது. ஐயத்தின் ஆணவமோ தொடங்கும்போதே களையப்படவேண்டியது. எல்லா அறிவும் தன்னுள் உறையும் அறியாமைக்கு எதிரான போரே. தன்னுள் ஐயம் கொண்டவன் அறிந்துகொள்ளக்கூடும். ஐயத்தை கவசமென்றும் வாளென்றும் கொண்டவன் வெல்லப்படுவதே இல்லை. தன்னைவிடப் பெரியவற்றால் வெல்லப்படுவதே கல்வி என்பது.

பாஞ்சாலரே, நூறாண்டுகள் நீங்கள் அமர்ந்தது ஐயத்தை பீடமெனக் கொண்டமையால்தான். சொல்லை தவமெனக் கொள்பவன் சொல்பெருக்குகிறான். ஐயத்தை தவமெனக் கொள்பவன் ஐயத்தையே பெருக்குகிறான். அடையவேண்டியவற்றை தவம் செய்பவனே சென்றடைகிறான். பாஞ்சாலரே, பெருநதியின் நீர்ப்படலத்தில் விளையாடும் நீர்ச்சறுக்கிப் பூச்சிகள் நீரிலிருந்து விடுபட்டவை. அவை மூழ்குவதோ அலைக்கழிவதோ ஒழுகுவதோ இல்லை. நோக்குக, அவை நதியை அறிவதுமில்லை.

“அவ்வண்ணமென்றால் நான் அறியவேண்டியது எதை?” என்று அவர் மூச்சொலியில் கேட்டார். “அதையா?”

“அதை மட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அறிதலுக்கேற்ப வெளிப்படுவதும், வெளிப்படுமென்ற மாறாமையை தன் நெறியாகக் கொண்டதுமான ஒன்று. ஐயங்கள் கோடி, விடை ஒன்றே. அதை அறிந்தவர் மட்டுமே செயல்களை முழுமையாக அறிவென்றாக்கிக் கொள்பவர். செயல்களை ஆற்றி அதன் தொடர்விளைவுகளிலிருந்து விடுபடுபவர். துயரும் உவகையுமின்றி அலைகடலுக்குமேல் துருவமீன் என உலகச்செயலில் நின்றிருப்பவர். ஞானமென்பது நிலைகொள்ளுதலே. நிலைகொள்ளாமையே துயரம் எனப்படுகிறது. துயர்நீக்குவதே ஞானம் என்றனர் முனிவர்.”

அழிக்கப்படுவதில் எழுகிறது அழிவற்ற ஒன்று. அடக்கப்படுவதில் தோன்றுகிறது மீறிச்செல்வது. புரிந்துகொள்ளப்படாததில் விளைகிறது எளிதினும் எளிதானது. சிறுமை செய்யப்படும் ஒன்றில் எழுகிறது பெரிதினும் பெரிது.

ஒவ்வொன்றும் பிறிதொன்றின் எடைநிகர் என நிற்பன. ஒவ்வொன்றும் பிறிதொன்றின் மறுபக்கம் என நிகழ்வன. ஒன்றில் நின்று நாமறிவதற்கு அப்பால் நிகரான அறியப்படாமை உள்ளது.

பிழையற்ற கருவி தனக்கென விசையேதும் அற்றது. தன்னை ஏந்தியவனின் ஆற்றலை முழுக்க தான் ஏற்றுக்கொண்டது. இலக்குகளும் வஞ்சங்களும் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் தன்னுடையவை அல்ல என்று அறிந்தது. அது ஐயத்தால் விசைகுன்றுவதில்லை. களத்தில் சுழல்கையிலும் முற்றிலும் விடுதலைபெற்றிருக்கிறது.

அறிதலென்பது ஆதலே. முற்றறிதல் எச்சமின்றி ஆதல். உண்டு உமிழ்ந்து கடலை அறியமுடியாது மீனால். கடலென்றாகும் மீன் அலைகளில் இருந்து விடுதலை பெறுகிறது.

“அறிவால் ஐயங்களை அகற்றி தன் பாதையை தெளிவுசெய்க! அறிவு முழுமையாகவே செயலென்று ஆகும் நிலையே யோகம்” என்றார் இளைய யாதவர்


 இளைய யாதவர் “காமகுரோதமோகம் இல்லாத மானுட உள்ளங்களே மெய்மையை அறியமுடியும் என்றால் மெய்மை மானுடருக்கு உரியதே அல்ல” என்றார்.

முகம் சற்றே எளிதாக, ஆம் என விதுரர் தலையசைத்தார். “காமத்தை எவ்வண்ணம் வெல்வீர், விதுரரே?” என்றார் இளைய யாதவர். “அறியேன். முனிவரும் அறியாது தவிக்கும் மாயவெளி அது” என்றார் விதுரர். “குரோதத்தை? மோகத்தை?” என்று இளைய யாதவர் கேட்டார். “அதற்கும் சொல்லப்பட்ட மறுமொழிகளே என்னிடமுள்ளன” என்று விதுரர் சொன்னார். “அன்பால் குரோதத்தை. எளிமையால் மோகத்தை.” இளைய யாதவர் புன்னகைத்து “காமத்தை அடக்கத்தால் என்பர் நூலோர். அமைச்சரே, அவ்வண்ணம் வென்ற எவரையேனும் எப்போதேனும் பார்த்திருக்கிறீர்களா?” என்றார். விதுரர் திகைத்து பின் எண்ணத்திலாழ்ந்து “நான் பார்த்தவர்கள் சிலரே” என்றார்.

“விதுரரே, காமம் கொண்டவர்கள் அனைவருமே அதை அஞ்சுகிறார்கள். அடக்கப்படாத காமம் விலங்குகளுக்கு மட்டுமே இயல்வது. குரோதத்தை நிகர்செய்யவே அன்பை பயில்கிறார்கள் மானுடர். தன்னவர்பால் அன்பையும் அல்லவரிடம் சினத்தையும் கொள்பவர் எளியோர். எதிரிகளிடமும் அன்பை கொள்கிறார்கள் அறத்தோர். மோகத்தை வெல்ல எளிமையில் அமைகிறார்கள் தவத்தோர். காமமும் சினமும் விழைவும் அனைத்து மானுட உள்ளங்களிலும் இருபால்பிரிவு கொண்டே அமைந்துள்ளன. இரு முனைகளும் பூசலிடுகின்றன. அல்லது ஒன்றின் வாலை பிறிதொன்று விழுங்கி சுற்றிவருகின்றன.”

“இருபாற்பிரிவு கொண்ட நெஞ்சில் அமைதி என்பதே இல்லை” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். “அறிக, காமமோ சினமோ விழைவோ துயரளிப்பதில்லை! அதை தடையின்றி அடையும் விலங்குகள் தெய்வத்துயரையும் உலகத்துயரையும் மட்டுமே அடைகின்றன. அவை எவ்வுயிரும் தவிர்க்கவியலாதவை. மானுடத்துயர் என்பது காமமும் சினமும் விழைவும் நிகர்விசைகளால் எதிர்கொள்ளப்படும்போது உருவாகும் கொந்தளிப்பே. குற்றவுணர்வாக, குழப்பமாக, கொந்தளிப்பாக, சோர்வாக அது மானுடரை அலைக்கழிக்கிறது.”

ஆம் என விதுரர் தலையசைத்தார். “இருமையொழிதலே அந்தத் துயரிலிருந்து விடுபடச்செய்யும். காமம் அடக்கம் என்னும் இருமையிலிருந்து, சினம் அன்பு என்னும் இருமையிலிருந்து, விழைவு துறப்பு என்னும் இருமையிலிருந்து எழுவதொன்றே மீளும் வழியாகும். ஒளிநாடுபவனே இருளை சென்றடைகிறான். இருளும் ஒளியும் அற்றதை, இருளும் ஒளியும் ஒன்றானதை நாடுக! அதுவே அறிவின் வழி.”

“அறிதொறும் தீமையை கண்டேன் என்றீர் விதுரரே, நீங்கள் கண்டது இருமையை. நீங்கள் கண்ட ஒவ்வொன்றிலும் தீமையிடம் தோற்றுச் சுருங்கி அமர்ந்திருந்தது நன்மை. ஏனென்றால் உங்களுக்குள் இருந்தது அதே இருமை. இருமையழிந்த அறிவே அறிவெனப்படும். இருமையில் எழுவன அனைத்தும் அறிவின்மையே” என்றார் இளைய யாதவர். “நோக்குக, அஸ்தினபுரியின் அந்த எளிய அமைச்சரை!”

...............
..............
இளைய யாதவர் “விதுரரே, இதனால் நீங்கள் அந்த அருமணிமேல் கொண்ட பற்றை இழந்துவிட்டீர்கள் என்று பொருளா? நாளை மீண்டும் அதன்பொருட்டு சினம் கொள்ளமாட்டீர்கள் என்று சொல்லமுடியுமா?” என்றார். விதுரர் “இல்லை, இது ஓர் அலை. இது அந்தச் சினத்தின் மறுபக்கம். இதன் மறுபக்கமென மீண்டும் பிறிதொரு சினமே எழும்” என்றார். “இங்கிருந்து மட்டுமே அதை காணமுடியும், அமைச்சரே” என்று சொல்லி இளைய யாதவர் புன்னகை செய்தார். “இது ஒரு கணம். ஒரு துளியை நதியென நீட்டுவதைப்போல் இதை காலமென்றாக்குபவரே மெய்யறிதலை பெறுகிறார்.”

“நான் இவற்றை அறிந்துகொண்டேன்” என்றார் விதுரர். அதிலிருந்த உட்பொருளை உணர்ந்து இளைய யாதவர் புன்னகை செய்தார். “ஆம், அறிதலைப்போல் எளிது வேறில்லை. ஓரிரு சொற்றொடர்களில் சொல்லிமுடிக்கத்தக்கவையே மெய்மையென மானுடம் அறிந்த அனைத்தும். மெய்யுணர்தலும் மெய்யிலமைதலுமே யோகம். யோகமென்பது ஒவ்வொரு கணமும் என, ஒவ்வொரு எண்ணத்தாலும் என பயிலப்படவேண்டியது. ஒவ்வொருவரும் எதில் உளம் ஈடுபட்டிருக்கிறார்களோ அதையே யோகமென்று பயில்வதே தொடக்கம். முழுமைநோக்கிய இலக்குடன் பயில்வன அனைத்தும் யோகமே” என்றார் இளைய யாதவர்.

அறிதலின் மாயங்களில் சிக்கி அலைக்கழிபவன் அறிஞன். நான் அறிகிறேன் என்னும் மயக்கம் அறிதலனைத்தையும் அறிபவனில் கோக்கிறது. அறிவனைத்தையும் அவன் இயல்புக்கேற்ப உருமாற்றுகிறது. அறிபவன் தன்னையே மீளமீள அறியும் சுழலில் சிக்கவைக்கிறது. அறிவது தானென்பதனால் அவ்வினிமையை அறிதலின் இனிமையென எண்ணச் செய்கிறது. தானற்ற ஒன்றை அறியமுடியாதவனாக ஆக்குகிறது. அறிவை அறிவின்மை என ஆக்கி விளையாடுகிறது.

அறிந்தவை அறிவனவற்றுக்கு முன்சொல்லாக அமைவதன் மயக்கம் சொல்லுக்கு பொருள் அளிக்கும் புலமென்றாகி அனைத்தையும் தானெனக் காட்டுகிறது. முன்னறிவால் வருமறிவு வகுக்கப்படுவதனால் முன்னறிவே அறிவின் எல்லையென்றாகிறது. கலமென்று சமைந்து கவிந்தவற்றை தள்ளிவிடுகிறது. அறியப்படுவன அனைத்தும் அறிந்தவற்றால் தொடங்கிவைக்கப்படுபவையாகின்றன. அறிவனவற்றை மதிப்பிட அறிந்தவற்றால் இயலுமென்பது அறிதலின் மயக்கம். வென்றவை அனைத்தையும் தன் கோட்டைக்குள் கொண்டுவரும் அரசன் கோட்டை ஒன்றையே உண்மையில் வென்றிருக்கிறான்.

அறிதலின் நெறிகளை அறிதலினூடாக வகுக்க முயல்வதனால் அறிதல்களின் பொதுமைகள் மட்டும் கருத்தில்கொள்ளப்படுகின்றன. பொதுமையே மெய்மை என்பது மயக்கம். நெறிகள் அனைத்தும் தொகுப்புத்தன்மை கொண்டவை. தொகுப்புச்செயல் சாரம் தேடுவது. சாரமென மட்டும் மெய்மை வெளிப்படுவதில்லை. தொகுப்புகள் அனைத்தும் தொகுப்பவனிடம் ஆணைபெற்றுக்கொள்பவை. நெறிகளின் திசைவழி தொடங்கிய இடத்தையே சுற்றிவந்துசேரும் வளைகோடு. நெறிகள் அறிதல்களை ஏற்றும் மறுத்தும் பகுக்கின்றன. இரண்டென்றானவை தங்களுக்குள் ஆடத் தொடங்கிவிடுகின்றன.

அறிவின் முழுமை அதன் முடிவில் உள்ளது என்னும் மயக்கம் அறிவதனைத்தையும் அறியப்படாத ஒன்றைக்கொண்டு மதிப்பிடச் செய்கிறது. மறுத்து மறுத்து முன்னேறுபவன் சென்றடைவதில்லை. ஏற்று ஏற்று சென்றடைபவன் வழியில் நின்றுவிடுகிறான். ஏற்பும் மறுப்பும் இரு நிலை. அதை கடத்தலே யோகம்.

ஒன்றுபிறிதுடன் சொல்லாடுமென்றால் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று பிறிதுடன் இணையுமென்றாலும் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று தன்னை முழுமையென்று காட்டுமென்றாலும் அது அறிவல்ல. கன்று முலையை அறிவதுபோல் நிகழ்வதே அறிதல். ஆன்மா உடலை அடைவதுபோல் ஆதலே அறிவு.

அறிதலை அறியவியலும் என்னும் மயக்கம் அறிதலை ஓர் ஆடலென்றாக்குகிறது. அடைந்தவற்றில் மகிழ்வும் அடைவன குறித்த எதிர்பார்ப்பும் தவறுவன குறித்த பதற்றமும் அறிதலை மறைக்கின்றன. அறிதலில் வெற்றிதோல்வி இல்லை. நல்லது அல்லது என்றில்லை.

எவரும் உடல்வளர்வதை உணர்வதில்லை. ஆற்றும் செயல்கள் அனைத்தையும் அறிதலென்றாக்கியவன் தன்னுணர்வின்றி அறிவடைந்து அறிவிலமைந்துகொண்டிருக்கிறான். அறிதலென்பது ஆதல். அறிந்த பின்னரும் அறிந்ததென்ன என்று அறியாதிருத்தல். அறிவென்று தனித்து ஒன்றை கொண்டோர் அறிவை அடையாதவர்.

புறத்தே அறியும் அறிதல்களனைத்தும் தொடக்கமும் முடிவும் கொண்டவை. அறிவமைந்தவன் அவற்றில் களிப்புறுவதில்லை. ஒவ்வொரு அறிதலும் ஒரு முழுமை. ஒவ்வொரு அறிதல்கணமும் ஒரு வாழ்வு. ஒன்று பிறிதல்ல. ஒன்றிலிருந்து பிறிதும் இல்லை. ஒவ்வொன்றிலும் திகழ்பவன் முழுமையிலிருந்து முழுமைக்கு செல்பவன். அவன் முழுமையில் இருக்கிறான். முழுமையே அறிவெனப்படும்.

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரிடம் வியாசர் கூறினார் “யாதவரே, என் வினாவை இப்போதுதான் சொல்தீட்டிக்கொண்டேன். என் இடர் என்ன என்று அவ்வினா திரண்டதுமே உணர்ந்தேன். காவிய ஆசிரியனின் கைக்குறை அது. இக்கணம் வரை என் வினாக்களை உணர்வுகளாகவும் கனவுகளாகவும் பெருநோக்குகளாகவும்தான் தொகுத்துக்கொண்டேன். அவை ஒவ்வொன்றும் சொல்லுக்கரியவை என்பதனால் சொல்பெருக்கினேன். சொற்கள் பெருகுகையில் அவற்றுக்கு ஒழுங்கு தேவையாகிறது. ஒழுங்கு அழகென்றாகிறது. காவிய ஆசிரியனின் தப்பவியலாத் தீயூழ் என்பது அவன் சொல்லணியாக மட்டுமே பார்க்கப்படுவது.”

“அரசித்தேனீயை அதன் சுற்றம் என உணர்வுகளையும் கனவுகளையும் பெருநோக்குகளையும் சொற்கள் மொய்த்திருக்கின்றன. தேன்நிறை அறைகளில் தவம்கொள்கின்றன. சிறகுமுளைத்தெழுகின்றன. ரீங்கரிக்கின்றன. நச்சுக்கொடுக்குகளுடன் காவல் காக்கின்றன. சொல்தொடுத்து அல்ல சொல் விலக்கியே என் வினாவை எழுப்பமுடியும் என இப்போது கண்டுகொண்டேன். இதோ என் வினாவை பசிக்குரல்போல், வலியலறல்போல் நேரடியாக சொல்லாக்கிக்கொள்கிறேன்” என்றார் வியாசர் .

“இங்கு உயிர்க்குலங்கள் பிறக்கின்றன, போராடுகின்றன, பிறப்பித்துப் பெருக்கிய பின் மடிகின்றன. இதன் பொருள் என்ன?” தலையசைத்து முகத்தசைகள் இறுக “ஆம், இவ்வாறு எளிமையாகக் கேட்டாலொழிய இதற்கு விடை தேடமுடியாது. இதை கேட்கும் எவரும் ஆம், இதுவே என் வினா என்று சொல்லவேண்டும். இவ்வினாவின் முன் எந்த இலக்கியமும் தத்துவமும் மெய்யுரையும் அணிகொண்டு நின்றிருக்க முடியாது. இதற்கான விடையும் இவ்வாறே எளிமையாக அமையவேண்டும், உணவுபோல, உழுபடைபோல, வாள்போல வெளிப்படையாக, பிறிதொன்றிலாததாக” என்றார்.

இளைய யாதவர் ஒன்றும் சொல்லாமல் அவரை மலர்ந்த விழிகளால் நோக்கி புன்னகைத்துக்கொண்டிருந்தார். வியாசர் மேலும் சொல்வார் என அவர் அறிந்திருந்தார். வியாசர் இளைய யாதவரின் விழிகளை நோக்கியதும் சீண்டப்பட்டு சினம்கொண்டார். “நீர் என்னிடம் மெய்யை மட்டுமே உரைக்கமுடியும். அரசன் என்றோ, கவிஞன் என்றோ, அறிஞன் என்றோ, மெய்யுசாவி என்றோ அல்ல தெய்வமென்று நின்று கூறுக! உயிர்க்குலங்கள் இங்கு பிறந்துவாழ்ந்து மீள்வதன் பொருள் என்ன? மானுட வாழ்வுக்கு என தனிப்பொருள் ஏதேனும் உண்டா? இங்கு அறிவு, பண்பாடு, தவம் என பெருகியிருக்கும் இவற்றுக்கெல்லாம் நோக்கம் என்பது யாது? யாதவரே, நான் வாழ்வதற்கு உடல்கொண்டு பிறந்தேன் என்பதல்லாமல், உயிர்விசைகளால் உந்தப்பட்டேன் என்பதல்லாமல் ஏதேனும் அடிப்படை உண்டா?”

“அனைத்து விடைகளையும் நீங்களே அறிந்திருப்பீர்கள், வியாசரே” என்றார் இளைய யாதவர். “ஆம், நான் அறிவேன். சொற்கடல்அலை நான். என்னில் இல்லாத எண்ணமே இல்லை. யாதவரே, அவற்றின் மெய்யான பெறுமதி என்னவென்றும் நான் அறிவேன். இறப்புக்கு மாற்றில்லை என்று அறிந்த பின்னர் நோய்க்கு மருந்து அளிக்கும் மருத்துவன் நான்” என்றார் வியாசர். “செவிகொள்வீர் என்றால் சொல்கிறேன். நான் கேட்ட வினாவுடன் ஒவ்வொருநாளும் என் நூலை அணுகுகிறார்கள் மானுடர். விடைகளை அவரவர் தேவைக்கும் தகுதிக்கும் ஒப்ப நான் அளிக்கிறேன். ஒவ்வொரு துயருக்கும் தவிப்புக்கும் தனிமைக்கும் அதற்குரிய வகையில் வகுக்கிறேன்.”

“ஒன்றை மறுப்பவர் பிறிதொன்றை கொள்வார், ஒன்றை மறுப்பதனாலேயே பிறிதொன்றை ஏற்றாகவேண்டும் என அவர் உளப்பழக்கம் கொண்டிருப்பதனால். சிலவற்றை மறுத்தமையாலேயே சரியானதை ஏற்கும் நுண்மை தன்னிடம் உள்ளது என எண்ணிக்கொள்வார். தான் மறுத்தவற்றை ஏற்றுக்கொண்டவர்களைவிட தான் மேலென்றும் ஆகவே ஏற்றது தானறிந்த உண்மை என்றும் கருதிக்கொள்வார். அதன்பொருட்டு பிறருடன் சொல்லாடுவதன் வழியாக அனைத்து ஐயங்களுக்கும் விடைகண்டு அதை தனக்கென உறுதி செய்துகொள்வார். அறிவுக்கான விழைவை அறிகிறேன் என்னும் ஆணவம் ஓர் அடி முந்திச் செல்கிறது, விடையை தான் பற்றிக்கொள்கிறது.”

“அனைத்துக்கும் மேலாக ஒன்றை ஏற்று தன் துயரிலிருந்து மீளவேண்டும் என முன்னரே முடிவுசெய்த பின்னரே என்னிடம் வருகிறார். எளிதில் கிடைப்பது தூண்டில் புழு என எண்ணும் மீன் இது. எளிதில் ஏற்கலாகாதென்னும் அவருடைய ஆணவத்தின்பொருட்டு அணிகளில் மறைத்து, ஆயிரம் முறை மறுத்து, ஊடுசுழற்பாதைகளுக்கு அப்பால் அதை சமைத்து வைத்திருக்கிறேன்.”

“தேடிவந்து கொள்பவர் இவ்விடைகளினூடாக துயர் நீப்பார், இந்தப் புணை பற்றி நீந்தி உலகியலை கடப்பார். எவரையும்போல் இயற்றி ஓய்ந்து மடிவார். காலத் துயரும் கருத்துத் துயரும் கோடியில் சிலருக்கே உரியவை. அவர்கள் உள்ளிருக்கும் அறியாத் துளியை அறிந்து, நோற்று, பெருக்கி, சூழப்பரப்பி அதில் திளைப்பவர். தேடி, எழுந்து, கடந்து கண்டடைபவர். பிறர் வாழ்க்கை நிகழ்வதன் அலைகளால் அறியாமல் அவற்றின் நுனியை தொடநேர்ந்தவர். தெய்வத் துயரால் அறைபட்டு சித்தம் சிதறி பெருவினாக்களைச் சென்று முட்டியவர்கள்.”

“அவர்களுக்குத் தேவை விடை அல்ல. அவ்வினாவிலிருந்து திசைதிருப்பி கொண்டுசெல்லும் சொற்கள். மீண்டும் அவர்களின் உலகியல் அலைகளுக்கே சென்றமையச் செய்யும் ஆற்றுப்படுத்தல். நான் அளிப்பது அதையே” என்று வியாசர் சொன்னார். “பல்லாயிரம் பூக்களில் சிலவே காய்க்கின்றன. அவற்றில் சிலவே கனிகின்றன. அவற்றில் சிலவே விதைமுளைக்கச் செய்கின்றன. மலர்கள் வண்ணமும் இனிமையும் நறுமணமும் கொண்டு இங்கே அழகு நிறைக்கின்றன, அனைத்தையும் இனிதெனக் காட்டுகின்றன. கவிதை என்பது மலர்.”

“நன்கு மலர்ந்த நான்கு விடைகள் என்னிடம் உள்ளன” என்றார் வியாசர். “இது ஒரு தேர்வுக்களம் என்பது முதல் எளிய விடை. எங்கோ தந்தையே ஆசிரியரென அமைந்து நம்மை மதிப்பிடுகிறார். நன்று செய்க, நலம் கொள்க. தீதியற்றுக, துயர் பெறுக. இன்று பெறுவது நேற்று இழைத்தவற்றின் நிகரி. இன்று ஈட்டுவது நாளைக்கென உடன் வரும். பிறவிச்சுழலின் ஒரு களம் இவ்வாழ்க்கை. பிறந்து பிறந்து முதிர்ந்து சென்றடைவது முழுமை. இலக்கு அது. வீடுபேறென்பது பிறப்பொழிதல். முன்வினை நிகழ்வினை வருவினையின் முச்சுழற்சியால் ஆனது வாழ்க்கை. துயர் வருகையில் கடன் தீர்ந்ததென்று கொள்க. இன்பம் நிகழ்கையில் ஈட்டியதைப் பெற்றோம் என்று நிறைக. நன்றுசெய்து தீதுநீக்கி நல்வாழ்வு பெறுக. தீதும் நன்றும் பிறர் தர வாரா.”

“இது ஒரு சுழல் என்பது இரண்டாவது விடை” என்று வியாசர் தொடர்ந்தார். “ஒவ்வொன்றும் எங்கோ நிகர் செய்யப்படுகின்றன. இன்பம் துன்பத்தை, துன்பம் இன்பத்தை, நன்மை தீமையை, தீமை நன்மையை நிகர்செய்கிறது. துயர் வரின் இன்பம் ஒருங்கிக்கொண்டிருக்கிறது என மகிழ்க. இரவு சூரியனை கரந்திருப்பதுபோல பகலில் இரவு நிழலென குடியிருப்பதுபோல. இன்பதுன்பங்களினூடாகச் சென்று நிறைவடையும் வாழ்க்கையின் ஒட்டுமொத்தமே அதன் பயன். துலாநிலைகொள்ளும் கணமே எடைகாட்டுவது.”

“இப்பெரும் களத்தில் ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு துளி. அது பிறிதொரு வாழ்க்கையால் நிகர்செய்யப்பட்டிருக்கும். அவ்வண்ணம் முடிவிலா கோடி நிகர்களால் ஆனது இவ்வாழிச் சுழல். அதன் இலக்கை, விசையின் நெறியை, மையத்தை நாம் முழுதறியவியலாது. ஆனால் அறியும் ஒவ்வொன்றிலும் அதை உணரமுடியும். அந்நெறியை ஏற்று அவ்விசைக்கு தன்னை அளித்துக்கொள்க. அவ்வாறு முழுதளிக்கையில் அவ்விசையின் இலக்கும் பொருளுமே நம்முடையதுமென தெளிவோம். நாமென்று நாம் யாத்துள்ள எண்வகை பூண்களைக் களைந்து அவ்விசையே நாமென்று அறிந்து அமைவதே இறுதி. அதுவே முழுமை.”

“இங்கு நிகழ்வன அனைத்தும் அறிதல்களே என்பது மூன்றாவது விடை” என்றார் வியாசர். “துயரும் மகிழ்வும், இழப்பும் பெறுகையும், கசப்பும் இனிப்பும் அறிதல்கள் மட்டுமே. அறிபவனுக்கு அறிபடுபொருள் அனைத்தும் நிகரே. அறிவை அளிப்பதனால் நிகழ்வன அனைத்தும் நன்று. அனைத்தும் அறிவாவதை உணர்ந்தவன் ஏற்றலும் விலக்கலும் என வாழ்வைப் பகுத்து இடருறுவதில்லை. கசக்கும் அருமருந்துகள் உண்டு. இனிக்கும் நஞ்சுகளும் உண்டு. இருமையகற்றியவன் இவ்வாழ்வை அவ்வண்ணமே ஏற்கும் நடுநிலை கொள்கிறான். அறிந்தறிந்து முதிர்வதே வாழ்க்கை. முற்றறிந்து நிறைவதே வீடுபேறு. முழுதறிந்த பின் நோக்குபவன் சிற்றறிவுகள் அனைத்தும் முழுதறிவின் படிநிலைகளே என்று உணர்வான்.”

“நான்காவது விடை இவையனைத்தும் கனவே என்பது. கனவின் துயர்களும் அச்சங்களும் அலைக்கழிவுகளும் விழித்தெழுந்ததும் பொருளிழந்துவிடுகின்றன. கனவில் பெற்றவை அனைத்தும் இல்லையென்றாகின்றன. ஆனால் நனவிலிருந்தே கனவுகள் எழுகின்றன. நனவின் ஒலிகளே கனவில் பொருள்மாறு கொண்டு துயரும் மகிழ்வுமென நிகழ்கின்றன. கனவினூடாக நனவின் மெய்மையை அறிக. விழித்தெழுதலே விடுதலை” என்றார் வியாசர்.

“யாதவரே, உலகியலானுக்கு முதல் விடை. தேடுபவனுக்கு இரண்டாவது விடை. அறிஞனுக்கு மூன்றாவது விடை. மெய்யுசாவிக்கு நான்காம் விடை. இந்நான்குக்குமேல் சென்று எவரும் கேட்பதில்லை. இந்நான்கும் நால்வகை அறிவின் வழிகள். ஒருவன் முற்றிலும் பின்திரும்பி நின்று அறிவின்மையால் என் வாழ்வுக்கென்ன பொருள் என்று கேட்பான் என்றால் அவனிடம் சொல்ல என்னிடம் விடை ஏதுமில்லை. நான் கேட்பது நான்கென சொல்திரளாதவனின் அக்கேள்வியையே. சொல்க, இங்கு வாழ்வு நிகழ்வது எதனால்?” என்று வியாசர் கேட்டார்.

இளைய யாதவர் “வியாசரே, துறவியிடமன்றி மெய்மை உரைக்கப்படலாகாது” என்றார். “யோகமே துறவெனப்படும். அனலோம்பாதவனும் சடங்குகளைச் செய்யாதவனும் துறவி அல்ல. தன் கொள்கைகளை துறத்தலே துறவை யோகமென்றாக்குகிறது. கற்பவன் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளவேண்டும். நம்பிக்கைகளில் இருந்து, பழக்கங்களில் இருந்து, தேய்சொற்களிலிருந்து, முன்னறிவுகளில் இருந்து. தன்னை இழிவுறுத்திக்கொள்பவன் கவிழ்த்தப்பட்ட கலம் கொண்டவன். தன்னை தான் வெல்லாதவன். தன்னை தனக்கே பகைவனாக்கிக் கொண்டவன்” என்றார்.

இருவகை அறிதல்களினூடாக மானுட உள்ளம் பின்னிச் செல்கிறது. இவ்வுலகில் நலம்பெறும் முறையை அறிதல் சாங்கியம். இவ்வுலகு என்னவென்று அறிதல் விஞ்ஞானம். இவையனைத்தையும் முழுமையில் அறிதல் ஞானம். விஞ்ஞானமும் ஞானமும் ஒன்றுபிறிதை விலக்கா நிலையே யோகம். ஞானம் விஞ்ஞானத்திற்கு மறுமொழியென்றாகவேண்டும். விஞ்ஞானம் ஞானம்நோக்கி கொண்டுசெல்லவேண்டும்.

வாள்முனை நடையே யோகிக்குரியது. விழிப்போனும் துயில்வோனும் உண்மையை காண்பதில்லை. உண்போனும் நோற்போனும் மெய்யை சுவைப்பதில்லை. அகன்றோனும் உழல்வோனும் அதை உணர்வதில்லை.

அசைவிலாச் சுடரால் படித்தறிக. நிலைகொண்ட உள்ளத்தால் வாழ்ந்தறிக. இவையனைத்திலும் இறையுறைகிறது. எங்கும் அதை காண்கிறவன் அனைத்தையும் அதில் காண்கிறான். அவனுக்கு அது அழிவற்றது. அதற்கு அவன் அழிவற்றவன்.

முதலாசிரியரே, நீங்கள் முன்னர் கூறிய நால்வகை விளக்கங்களும் பொய்களல்ல, அவை நால்வகை உண்மைகள். நான்கு நிலைகளில் நிற்பவர்களுக்கு மெய்யமைவு அவ்வண்ணம் வெளிப்படுகிறது. யார் எவ்வடிவில் எண்ணுகிறார்களோ அவ்வகையில் அவர்களுக்கு தோற்றமளிப்பது அது. தன் பேரளியால் அது திரிபுறவும் குறைவுறவும்கூடும். தன் ஆடலால் உருவுறவும் உறவாடவும்கூடும். மைந்தரின் சிறுகைகளுக்கு ஏற்ப சிறுதேர் செய்து அளிக்கிறான் பெருந்தச்சன்.

அதன் வடிவங்கள் முடிவிலாதவை. துன்பம்கொள்பவருக்கு அன்பென. ஒடுக்கப்பட்டோருக்கு அறம் என. தனியருக்கு துணை என. வெறுமையிலமர்ந்தோருக்கு விழுப்பொருள் என. எதுவும் அது அல்லாதது அல்ல. அறிவு மட்டுமல்ல அறியாமையும் அதுவே. தெளிவும் மயக்கமும் அதுவே.

உங்கள் வினாக்கள் விடைகளை வாங்கும் கலங்கள். அறிவோனால் வகுக்கப்படாத விடை அறியப்படுவதில்லை. முதல் முழுமையெனும் விடை இன்மையெனும் பெருங்கலத்திலேயே இறங்கியமைய இயலும்.

நான்கு விடைகளை சொன்னீர்கள். நன்மை நாடுவோர் முதல் விடையை அடைகிறார்கள். ஒழுங்கை நாடுவோர் இரண்டாம் விடையை அடைகிறார்கள். உண்மை நாடுவோர் மூன்றாம் விடையை கொள்கிறார்கள். குறைவின்மை நாடுவோர் நாலாவது விடையை சென்றடைகிறார்கள்.

மானுடர் கேட்பதில்லை, கோருகிறார்கள். கோரும் வடிவில் பெறுகிறார்கள். தன் அளியின்மையால் அது முழுமையை மறைத்துக்கொள்ளவில்லை. இங்கு வாழும் உயிர்களின் மீதான பேரளியாலேயே கரந்துறைகிறது. அறிந்தமையாலேயே அளந்து அளிக்கிறது. அருள்வதனால் அளித்தவற்றில் நிறைகிறது.

வியாசரே, நீங்கள் கவிஞர். ஒருபுறம் எளியோனாய் உலகாடி, மறுபுறம் ஞானியென மெய்நாடி, இரண்டுக்கும் நடுவே உழல்பவர். நலம்பயக்கும், மகிழ்வளிக்கும், காக்கும், புரக்கும் ஒன்றை மண்ணில் நின்று விழைகிறீர்கள். இரண்டற்ற ஒன்றை நோக்கி ஞானத்தால் எழுகிறீர்கள்.

இன்மையின் கலமேந்தி நின்றால் அறிவீர்கள். அது நலம்பயப்பதல்ல. அளிகொண்டதல்ல. அழகும் ஒழுங்கும் இசைவும் அதில் இல்லை. அது உண்மை அல்ல. உள்கடந்த ஒருமை அல்ல. அது மானுடர் எண்ணும் எவ்வியல்பையும் தான் கொண்டது அல்ல. இன்மையென விரியும் யோகியின் உள்ளத்தில் இன்மையென எழுவது. இன்மையின்மேல் மட்டுமே முடிவிலா இயல்புகளை ஏற்றமுடியும்.

பல்லாயிரம்கோடியினரில் ஒருவரே அதை அறிய முயல்கிறார்கள். பிறர் அதை விடையெனக் கொண்டு வாழ்ந்து கடக்க விழைபவர்கள் மட்டுமே. முயல்பவர்களில் மிகச் சிலரே அதை முழுதுணர்கிறார்கள்.

உயிர்க்குலங்களை படைத்தாளும் பெருநெறி என்று கொண்டால் தொழுவீர் எனில் அதை அறியமாட்டீர். உயிர்க்குலங்களை கொன்று களியாடும் கட்டின்மை என்று கொண்டால் அஞ்சுவீர் எனில் அதை அறியமாட்டீர். ஒளியென்று வணங்குவீரென்றால் இருளென்று விலக்குவீரென்றால் அதை அறியவேமாட்டீர். விழிநீருக்கு இரங்கும் என்றும் விளித்தால் அணுகும் என்றும் எண்ணுவீரென்றால் அதுவல்ல உங்களுக்குரியது.

விழிதிறந்துவிட்டீர் என்பதனால் காண்க. உங்கள் துயர்களை அறிவதை, உங்கள் நலன்களை புரப்பதை, உங்கள்மேல் கனிவதை அங்கே தேடவேண்டாம். உங்கள்மேல் வஞ்சம் கொண்டதை உங்களை அழிப்பதை, உங்கள்மேல் கனிவற்றதை அங்கே எதிர்பார்க்கவேண்டாம்.

உங்களை அது அறியாதென்றே கொள்க. உங்கள் இருப்பு அதற்கு ஒரு பொருட்டில்லை என்றே கொள்க. உங்களுக்கு இரங்குவதோ உங்களை அணுகுவதோ அல்ல என்றே கொள்க. உங்களால் அறியப்பட இயலாததென்றே கொள்க. அவ்வெறுமையை எதிர்நிலையென கொள்ளாதிருக்க பழகுக. வெறுமை இயல்பென அமைதலே இன்மை. இன்மையே அறிவோன் ஏந்தவேண்டிய கலம்.

அங்குளது பிறிதொன்று. இங்குள எதனாலும் விளக்கப்படாதது. ஆகவே இங்குள எதற்கும் விடையல்லாதது. இங்குள அனைத்திலிருந்தும் அகன்றாலொழிய அணுகவொண்ணாதது. அதுவே இங்குள அனைத்துமென்றாகி சூழ்ந்துள்ளது. மறைவும் வெளிப்பாடும் கொண்டது அது என்பதே மெய்மயக்கம்.

பருவென, பொருளென இங்குள்ள அனைத்துமே நூலில் மணிகள் என அதன்மேல் கோக்கப்பட்டவை. அனைத்துக்கும் பொருளென்றமைவது ஒன்றே. அதை அறிந்தவர் அனைத்தையும் அறிந்தவராகிறார். இயல்பற்றது மூவியல்பால் இயக்கம்கொண்டு தன் முழுமையை மறைத்தாடுகிறது. அதன் மாயை கடத்தற்கரியது.

பிறந்திறந்து பெருகிச்செல்லும் இவ்வொழுக்கின் பொருளே புடவியென்றாகி சூழ்ந்துள்ளது. ஒவ்வொரு கணத்திலும் விளங்காத பொருள் என்று ஒன்று காலமுடிவிலியில் இல்லை. ஒவ்வொரு பருவிலும் திகழாத பொருள் என்று ஒன்று கடுவெளியில் இல்லை.

பிறப்பின் வாழ்வின் இறப்பின் பொருளை ஒவ்வொரு கணத்திலும் உணராத ஒருவர் எப்போதும் உணரப்போவதில்லை. தன் உடலில் ககனத்தை உணராதவர் வானில் எதையும் காண்பதில்லை. முழைத்து முனைகொண்டு எவரும் அறிவதில்லை. இயல்தலும் இசைதலுமே அறிவின் நெறி.

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் கிருஷ்ண துவைபாயன வியாசரிடம் சொன்னார் “கவிமுனிவரே, பிரம்மத்திற்கு ஆயிரம் யுகம் ஒரு பகல், ஆயிரம் யுகம் ஓரிரவு. ஆயிரம்கோடி பகலிரவுகளாலான ஆயிரம்கோடி யுகங்கள் அரைக்கணம். நாம் கோருவதனைத்தும் காலத்தில், இடத்தில், கருத்தில் விளையும் விடைகளை. நம்மால் கோரப்படுவது காலமும் இடமும் கருத்தும் கடந்த ஒன்று. அது துளித்துச் சொட்டும் ஒரு துளி இப்புவியை ஆயிரம் துண்டுகளென சிதறடிக்க வல்லது.”

ஆயிரம் மடங்கு எடைகொண்டுவிட்டதென தன் உடலை உணர்ந்தபடி அமர்ந்திருந்த வியாசரிடம் இளைய யாதவர் சொன்னார் “அறியவேண்டுமென்றல்ல, வாழவேண்டுமென்றே மானுடர் விழைகிறார்கள். வாழ்வுக்கு உதவுவது என தன்னை அளிக்கும் இரக்கம் கொண்டிருப்பதனாலேயே அது மேலும் முழுமைகொள்கிறது.”

வடிவங்களால் ஆனது இவ்வுலகு. அதன் உட்பொருட்களாலானது. அதன்மேல் எழுந்த ஒலியாலானது. யோகத்தை அறிய வேண்டுமென்ற விருப்பத்தாலேயே யோகிகள் ஒலியுலகத்தைக் கடந்து செல்கிறார்கள். அதை ஒலியென்று குறைக்கிறார்கள். பொருளென்று சமைக்கிறார்கள். வடிவென்று புனைகிறார்கள். முனிவரும் அறிஞரும் கவிஞரும் அமைத்த இவ்வனைத்தும் அதுவே.

அது அறியப்படாமை. அறியப்படுவன அனைத்தும் அதிலிருந்து எழுகின்றன. இரவிலிருந்து புலரியில் பொருட்கள் முளைத்தெழுவதுபோல. இரவில் அவை மூழ்கியணைவதுபோல. அறிவால் அறியப்படுவதும் அறிபுலன்கள் அனைத்தையும் கடந்தமைந்ததுமான அறிவே அது. மண், நீர், தீ, காற்று, வான், உளம், மதி, தன்னிலை என்னும் எட்டு வகையாக பிரிந்து இயற்கை என்றாகிறது.

அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம். அழிவிலாத அறிவைப் பற்றியது தேவ ஞானம். உடலுக்குள் அதை அறிதல் யாக ஞானம். நீங்களே அது என்றுணர்க! நான் எனச் சொல்லி விரிக! உங்கள் வடிவுகொண்டவனை அறிக! கவிஞனை, பழையோனை, ஆள்வோனை, அணுவின் அணுவை, அண்டப்பேரண்டத்தை, அனைத்தையும் சூடுபவனை, அலகிலா வடிவுடையோனை, இருளுக்கப்பால் கதிர்என நிற்பவனை வாழ்த்துக! உங்களுடையது சொல்வேள்வி.

இங்கு என்றுமுளது ஒளிவழியும் இருள்வழியும். மீளாதது முதல் வழி. மீள்வது இன்னொன்று. உங்கள் வழி இங்கு மீள்வதே. அது அழகின், அளியின் வழி. அள்ளி அணைப்பது, ஆடி மகிழ்வது. இங்கு என்றுமிருக்கும் பூமரக் காடு உங்கள் சொற்கள். தன் வழியை அறிந்தவனே யோகி. வேதங்களிலும், தவங்களிலும், கொடைகளிலும் இயலும் தூய்மை வழியல்ல உங்களுடையது. சொல்லில் எழுவது. அது முதல்பெருநிலையே.

வாழ்வுக்குப் பொருள் தேடுபவன் கவிஞனல்ல. பொருள் அளிப்பவன் அவன். வினாக்களால் ஆனதல்ல காவியம், அழியா விடைகளாலானது. உசாவவேண்டாம், புனைந்தளியுங்கள். சுருக்கவேண்டாம், விளக்குங்கள். உளம்விரிந்து நீங்கள் புனைவதெல்லாம் மெய்யே. தன் சொல்லில் எழுந்த மெய்யை கவிஞன் தன் கனவால் ஒப்புகையில் அதுவே முதற்சான்றாகும். ஆம் ஆம் ஆம் என மும்முறை ஒப்பி பிரம்மம் மறுசான்றுரைக்கும்.

விண்ணுக்கெழும் ஆணையை அனலுக்கு அளித்ததே மண்ணில்வீழும் ஆணையை மழைக்கு அளித்தது. உங்கள் சொற்களாலேயே இங்கு மானுடம் வாழ்வை பொருள்கொள்ளும், கனவுகளை விரித்தெடுக்கும், கண்டடையும், கடந்துசெல்லும். ஆம், அவ்வாறே ஆகுக!


நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரிடம் யுதிஷ்டிரர் கேட்டார் “யாதவனே, நான் உன்னை காணவேண்டுமென எண்ணிய தருணத்தை சொல்கிறேன். விழியிலாதாயிற்றெனச் செறிந்த இருளை நோக்கி நின்றபோது என்னை எண்ணி வியந்தும் மருகியும் இகழ்ந்தும் அலைபாய்ந்தேன். ஒரு தருணத்தில் தோன்றியது நான் இந்திரன் அல்லவா என்று. அக்கணத்தில் ஏற்பட்ட நடுக்கில் நான் அவனென்றே ஆனேன். அவனென நின்று அனைத்தையும் நோக்கி மீண்டேன்.”

“விஸ்வஃபுக் ஏன் மேலும் விழைவுகொண்டான்? பிரம்மத்தின் பேருருவை கண்ட தேவர்க்கிறைவன். முடிவிலிகளாலான முடிவிலி என்று நூல்கள் சொல்வதை, அறிதல்களுக்கு அப்பாற்பட்ட அறிதல் என்று முனிவர் நவில்வதை அறிந்தவன். அவனுக்கு ஏன் விழைவெழுந்தது? ஏன் அவன் கணமொழியாமல் ஆட்டுவிக்கப்பட்டான்?” என்றார் யுதிஷ்டிரர்.

“அவன் அரசன் என்பதனால்” என்று இளைய யாதவர் மறுமொழி சொன்னார். “அரசன் பெருவிழைவால் ஆற்றல் கொள்பவன். இந்திரன் அரசர்களுக்கு முன்வடிவான அரசன். கணம் என தோன்றி விண் முழுதளக்கும் மின்படை கொண்டவன். அரசன் கற்பதும் முழுமைகொள்வதும் விழைவின் பாதையிலேயே. அவர்களுக்கான வழியை அரசமெய்மை என்றனர் நூலோர்.”

யுதிஷ்டிரர் தன்னுள் எழுந்த வினாக்களால் மேலும் மேலுமென சீற்றம் கொண்டபடியே சென்றார். “எளிய விடைகளுக்காக நான் இங்கே வரவில்லை, யாதவனே. நான் யுதிஷ்டிரனல்ல, நான் பெரும்பசி கொண்ட விஸ்வஃபுக். இந்திரனென்றமைந்து நான் கேட்பதற்கு மறுமொழி சொல்க!” என்றார்.

மூன்று முதற்தெய்வங்களும் எண்ணியறிய முடியாத அதன் எல்லையின்மையை நான் அறிவேன். ஒரு முழு பால்வழியே துகளென நொறுங்கியழிந்தாலும் அதற்கு கணத்திலும் கணத்திலும் கணமென்றமையும் துளியினும் துளியினும் துளியான நிகழ்வல்ல அது. அதன் விரிவில் நிகழ்வது நிகழாமைக்கு சற்றும் மாறுபட்டதே அல்ல.

அது இரக்கமற்றது. தன் அலகிலா பேருருப் பெருக்கினாலேயே நோக்கும் விழியற்றது. கேட்கும் செவியற்றது. அறியும் உளமற்றது. ஆனால் சிற்றெறும்புக் கூட்டுக்குள்ளே ஆற்றலின் நெறி ஒன்று இலங்குகிறது. பெருங்கரி மந்தையையும் அன்னையே ஆள்கிறது. நெறியிலாத ஒரு துளி இடத்தையும் எங்கும் காணமுடிவதில்லை. நீரில் கலப்பதில்லை எண்ணை. அனலில் எரிவதில்லை கல். முறை வகுக்கப்படாத எதுவுமில்லை இங்கே.

அவை எவருடைய ஆணை? எவருடைய விழைவை சூடியிருக்கின்றன இங்கெனத் திரண்டிருக்கும் இவையனைத்தும்? வினாக்களென நம்முள் எழுவன அனைத்தும் இங்கிருக்கும் நெறிமேல் நம் சித்தம் சென்றுமுட்டுவதனால் எழுவன. விடையென அமையவேண்டிய அது அப்பாலென பேருருக்கொண்டு நின்று அஞ்ச வைக்கிறது. சித்தம் பேதலிக்கச் செய்து விலகிச் செல்கிறது.

இதோ போர்ச்சூழல் இறுகி விம்முகிறது. பல லட்சம் மக்கள் செத்துக் குவியவிருக்கிறார்கள். அவ்விருளில் நின்றபோது என் நெஞ்சு அச்சம்கொண்டு உறைய ஒருகணத்தில் அனைத்தையும் உணர்ந்தேன். தலைமுறை தலைமுறையென பிறந்து பிறந்து பெருகிப்பெருகி இப்போர் நோக்கி வந்துகொண்டிருக்கின்றது பாரதவர்ஷத்தின் மக்கள்திரள். போர்வெறியும் போரின்மீதான அச்சமும் அங்கே செல்வதற்கான விசையே. வஞ்சமும் அமைதிக்கான விழைவும் அதை நோக்கிய நகர்வே.

அங்கு நிகழவிருப்பதென்ன? வில்வல்லமையும் எண்ணிக்கைவல்லமையும் உளவல்லமையும் ஊழ்வல்லமையும் நின்று மோதிக்கொள்ளும். வெல்வர், தோற்பர். அதற்கேற்ப பாரதவர்ஷத்தின் எதிர்காலம் மாறும். இன்னமும் கருபுகாத கோடிமக்களின் ஊழை இங்கு முடிவுசெய்யவிருக்கிறோம். யாதவனே, இவ்விசையின் ஊற்று எது? இங்கு இதை ஆற்றுவது அது என்றால் அந்த அலகிலி சொல்லவேண்டும் இவனையனைத்துக்கும் என்ன பொருள் என்று. இவற்றுக்கெல்லாம் அந்த அறியமுடியாமை வரை செல்லும் ஒரு நெறி இருக்கவேண்டும்.

நாளை அக்களத்தில் இளமைந்தர் நெஞ்சுபிளந்து செத்துக்கிடப்பார்கள். இறப்பை அஞ்சி, வலியில் துடித்து வான்நோக்கி கைவிரித்து ஓலமிடுவார்கள் சிலர். அன்னையரும் மனைவியரும் குழல் விரித்திட்டு ஓடிவந்து களம்பட்டோர் மீது விழுந்து அலறியழுவார்கள். தலையை நிலத்தில் அறைந்து கூவி கதறி மயங்கி விழுந்து மண்ணில் புரள்வார்கள்.

இல்லங்களெங்கும் இருள்பரவும். கைம்பெண்கள் மூலைகளில் ஒடுங்குவர். இளமைந்தர் தந்தையைத் தேடி அழுதுதிரிவர். பெருந்துயர் நிறைந்த நகரில் நகையெழ ஆண்டுகளாகும். குருதிமண்மீது மீள மீள மழைபொழிந்து பசுமையெழவேண்டும்.

அத்தனைபேரும் விண்ணை நோக்கியே கூவுவர். இரக்கம் கோரி. விளக்கம்கோரி. அப்பெருவெளிநோக்கி இதுவே உன் நெறியா, அளியே உனக்கில்லையா என்ற குரலெழாத ஒருகணமேனும் இம்மண்ணில் உண்டா?

இரக்கமற்ற பெருவிரிவு. இங்கிருக்கும் எவற்றுக்கும் பொருள் அலாத அலகிலாமை. எச்சொல்லும் எவ்வெண்ணமும் எவ்வுணர்வும் எவ்வூழ்கமும் சென்றடைய முடியாத ஆழிப்பேராழி. ஆனால் அங்கிருந்து வருகின்றன இங்கிருக்கும் ஒவ்வொரு கணத்தையும் ஆளும் நெறிகள். என்றால் அது பொறுப்பேற்கட்டும் அறத்திற்கு. அதுவே அறமழிவுக்கும் பொறுப்பேற்கட்டும். இருளுக்கும் ஒளிக்கும் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் அடிப்படையென வந்து நிற்கட்டும்.

அதன் முன் எளியோர் நாம் ஏன் நம் செயல்களுக்கு பொறுப்பேற்கவேண்டும்? நாம் ஏன் குற்றவுணர்வு கொண்டு கலுழவேண்டும்? நன்றென்றும் தீதென்றும் அறமென்றும் அலவென்றும் ஏன் உசாவவேண்டும்? ஏன் அளிகொள்ளவேண்டும்? எதன்பொருட்டு நாம் கட்டுண்டிருக்கவேண்டும்?

என் ஆணவமே அறமென்று என்னைச் சூழ்ந்தது என்று இன்று அறிகிறேன். நான் அரியவன் என்று பிறர்முன் காட்ட விழைந்தேன். பிறர் வகுத்த களத்தில் ஆடி முதன்மை பெற்று அவர்களின் பாராட்டைப் பெற விழைந்தேன். அறமென்பது பொய்யென்று அறிந்திருந்தமையால் என்னுள் நிறைவிழந்திருந்தேன். பொய்யென அறிந்த ஒன்றுக்காக என் இன்பங்களை கையளிக்கிறேனா என எண்ணி துயர்கொண்டிருந்தேன்.

அதுவே அடிப்படை. அது அறமிலாதது எனில் இங்கு எதுவும் அறமிலாததே. அது அளியிலாதது எனில் இங்கு அளி என்பதே தேவையில்லை. அது அறியமுடியாதது எனில் இங்கு எதையும் அறியமுடியாது. யாதவனே, அது பொருளில்லாதது என்றால் இங்கே பொருள்தேடி பேசுவதெல்லாம் பசப்பே.

நான் கேட்பது ஒன்றே. மிக எளிய சொற்களில் இதுவே. யாதவனே, இங்குள்ள அறங்கள் அனைத்தும் தெய்வங்கள் பெயரைச் சொல்லி நிறுத்தப்படுவன. அவை தெய்வங்களால் அளிக்கப்படுவனவா? இருமையற்றது அது என்றால் எதுவும் அதன் உச்சத்தில் இருமையற்றதே. அவ்வாறென்றால் இங்கே நன்றும் தீதும், அறமும் மறமும் இல்லையென்றே ஆகுமல்லவா?

இளைய யாதவர் புன்னகையுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு யுதிஷ்டிரர் சினம்கொண்டு குரலுயர்த்தினார். “சொல்க, அறமென்பதும் அளியென்பதும் வெறும் உளமயக்குகளன்றி வேறென்ன? அவற்றை உதறிவிட்டு வாழ்ந்தால் வென்றாலும் இழந்தாலும் குற்றவுணர்விலாது, உளக்குழப்பமில்லாது இங்கு வாழமுடியும் அல்லவா?”

“ஆம்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவ்வாறு இயலுமென்றால் அது நல்லதுதான்.” யுதிஷ்டிரர் கையை வீசி “ஏன் இயலாது? விலங்குகள் வாழ்கின்றன. பூச்சிகள், செடிகள் அவ்வாறே வாழ்கின்றன” என்றார். “காமமும் குரோதமும் மோகமும் மட்டுமே அவற்றை இயக்குகின்றன. வேறெந்த நெறியுமில்லை.”

இளைய யாதவர் அதே புன்னகையுடன் “இல்லை. அவ்வாறென்றால் ஒரு தலைமுறையுடன் உயிர்கள் அழியும். வேட்டைக்கு எளியதும் உண்பதற்கு இனியதும் இளங்குழவிதான்” என்றார்.

யுதிஷ்டிரர் திகைக்க “ஆனால் இங்கு குழவிகளே அரசர்களுக்கு நிகராக பேணப்படுகின்றன. அன்னையரின் குருதியை உண்கின்றன. தந்தையர் மீதேறி மறுசொல்லெழா ஆணைகளை இடுகின்றன. குழவிகளின் பொருட்டே அனைத்துக் குலநெறிகளும் அமைந்துள்ளன. குழவிகளின்பொருட்டு அனைத்துயிரும் தங்கள் உயிரை அளிக்கவும் சித்தமாகின்றன” என்றார் இளைய யாதவர்.

எப்போதும் எங்கும் நெறியே ஆள்கிறது, யுதிஷ்டிரரே. அரிதாக சில உயிர்த்தொகைகளில் நெறிகள் அழிகின்றன. அனைத்தும் நிலைகுலைந்து சரிய அந்த அழிவினூடாக கற்றுக்கொண்டு அறத்தை மீட்டுக்கொள்கின்றது அந்த உயிர்த்தொகை.

அறத்தை ஐயப்படாத மானுடனே இல்லை, ஏனென்றால் அதன் வழிகள் மறைவானவை. அறத்தை நம்பாத மானுடனும் இல்லை. ஏனென்றால் அது இன்றி அவன் வாழவியலாது. அறத்தை ஐயம்கொள்பவனே அதை உள்ளூர சார்ந்திருக்கிறான். அறத்தை மறுப்பவன் அதை அஞ்சுகிறான். அறத்தைக் கூவுபவன் அதன்மேல் ஐயம்கொண்டிருக்கிறான்.

உயிர் ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கான அறம் உள்ளது. மானுடருக்குரிய அறம் மானுடரால் உருவாக்கப்பட்டது. குடிகள், குலங்கள், நாடுகள் போல. இல்லங்கள், நகரங்கள் போல. ஆடை போல, அணி போல. அது இனிதென்றும் நன்றென்றும் கண்டமையால் பேணப்பட்டது. அது பல்லென்றும் நகமென்றும் ஆகுமென்பதனால் பூணப்பட்டது.

அறங்கள் மண்ணில் கண்டடைந்து பெருக்கப்பட்டவை. முன்பொருநாள் ஒரு துளிச் செம்பு மண்ணில் மானுடனால் கண்டெடுக்கப்பட்டது. அது நன்றென்று உணரப்பட்டது. மீண்டும் மீண்டுமென செம்பைத் தேடி சேர்த்தனர் மானுடர். அது படைக்கலமும் மனைக்கலமும் அணிகலமும் ஆகியது. அவர்களைக் காத்தது, ஊட்டியது, அவர்கள் உள்ளத்தின் அழகு ஆகியது.

மண்ணிலிருந்தும் அது பிரித்தெடுக்கப்படுகிறது. ஆழங்களில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படுகிறது. எடுக்கப்பட்டது ஒருபோதும் மீள மண்ணுக்கு செல்வதில்லை. அது தொழில் மாறக்கூடும். அதற்கேற்ப உரு மாறக்கூடும். ஒன்றோடொன்று கலந்து ஒளிமாறக்கூடும். ஆனால் ஒருபோதும் கைவிடப்படாமல் என்றும் இங்கிருக்கும்.

செம்பு மென்மையானது. இரும்பு வன்மையானது. வெள்ளி ஒளி கொண்டது. பொன் அரிதானது. செம்பை இரும்பு வெல்லும். வெள்ளியை பொன் மிஞ்சும். மென்மையான பொன் வன்மையான இரும்பை ஆளும். செம்பு பொன்னுடன் கலந்து விலைமிகும். உலோகங்கள் போரிடுகின்றன. உலோகங்கள் வென்றும் தோற்றும் உலகு சமைக்கின்றன.

உலோகங்கள் ஒன்றே. இரும்பு வேர். செம்பு தண்டு. வெள்ளி இலை. யுதிஷ்டிரரே, தங்கம் மலர். ரசக்கலை அறிந்த யோகி ஒருவன் இரும்பை பொன்னாக்கினான். பின்னர் பொன்னை இரும்பாக்கிக்கொண்டான். இரண்டையும் சாம்பலாக்கி காற்றில் கரைத்துவிட்டு அமர்ந்திருந்தான்.

மானுடனின் அனைத்து தெய்வங்களும் மானுடனால் உருவாக்கப்பட்டவை என்பதே வேதச்சொல். நற்செயல்கள் நெறியென ஆற்றப்படுகையில் வேள்விகளாகின்றன. வேள்வியால் தேவர்கள் உருவாகிறார்கள். அவிகொண்டு ஆற்றல் பெறுகிறார்கள். தேவர்களால் தெய்வங்கள் விண்ணில் நிறுத்தப்படுகின்றன. மண்ணில் வேள்வி அழியும்போது தெய்வங்கள் நீர்பெறாத செடிகள் என வாடிக் கருகி அழிகின்றன.

ஆகவேதான் நீங்கள் தெய்வங்களை கைவிடாதிருங்கள், உங்களை தெய்வங்கள் கைவிடாதிருக்கட்டும் என்கின்றன வேதங்கள். தெய்வங்களைக் கைவிடும் குடிகள் தங்களை அழித்துக்கொள்கின்றன. தெய்வங்கள் மானுடனால் ஆற்றல்பெற்று மானுடனை ஆள்கின்றன. அரசன் வரிகொண்டு குடிகளை ஆள்வதுபோல.

கடுவெளியும் காலமும், பொருளும் ஆற்றலும், இன்மையும் இருப்பும் முடிவிலியும் இரண்டிலியும் ஆன அது எதற்கும் விடையல்ல. அது எதையும் ஆற்றுவதில்லை. அது எதற்கும் பொறுப்பல்ல. மானுடவினாக்களுக்கு மானுட தெய்வங்களே விடைகள். மானுடரை மானுட தெய்வங்களே ஆக்கி புரந்து அழிக்கின்றன. அவையே மானுடனுக்கு பொறுப்பேற்கின்றன.

நோக்கிலாததன் நோக்கே தெய்வங்கள். அளியற்றதன் அளி. அலகிலாததன் அறிவடிவு. முடிவிலாததன் கருத்துரு. தெய்வங்களால் ஆளப்படுகின்றது புடவி. எறும்பும் ஈயும் புழுவும் பறவையும் தங்கள் வேள்விகளால் தங்களுக்குரிய தெய்வங்களை சமைக்கின்றன. தங்கள் தெய்வங்களால் படைத்துக் காத்து அழிக்கப்படுகின்றன.

நேர்கொண்ட பார்வையில் தொகுத்து முன்சென்று இதை அறியவியலாது. ஊசலென ஆடி, முரண்கொண்டு திரும்பி அறியவேண்டியது இது. சொல்லடுக்கை கற்பனையால், அறிவை ஊழ்கத்தால், தெளிவை பித்தால் நிரப்பிக்கொண்டு சென்றடையவேண்டியது. கருத்தென அல்ல புதிரென அறியப்படவேண்டியது. அறிந்தவற்றை அறியாமையால், கூர்மையை பேதைமையால் எழுப்பாதவன் இதை உணரமுடியாது.

இந்த முரணே ராஜவித்யை எனப்படுகிறது. அறிதற்கரிதென்பதனால் ராஜகுஹ்யம் எனப்படுகிறது. இது தூய்மையளிப்பதில் மாண்புடையது. கண்முன் என காண்பதற்குரியது. அறத்துக்கு இயைந்தது. இயற்றுதற்கெளியது. அழிவற்றது.

அறியா நுண்மையாய் அது இவ்வுலகை தாங்கியிருக்கிறது. அதிலமைகின்றன ஐம்பெரும் பருக்களும். ஆனால் முற்றிலும் கடந்துறைகிறது அது. பருவெளியை ஆக்கி பருப்பொருட்களின் நெறிகளுக்கே அவற்றை அளித்து தான் அப்பாலிருக்கிறது.

முதலியற்கையின் மூவியல்புகளின் முடிவிலா நிகராடலுக்கு விடப்பட்டுள்ளன அனைத்தும். நிகர்கொண்டு, நிகரழிந்து, புணர்ந்து, பிரிந்து, திரிந்து, திரண்டு, எழுந்து, அமைந்து, குவிந்து, பரந்து இங்கு பருப்பொருள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நீரலைகள் மேல், துளிகள் மேல், துமிகள் மேல் விண்கதிரோன் என அது பருப்பொருளில்  தன்னை நிகழ்த்தி விளையாடுகிறது.

இப்பருவெளியை ஆள்வது பருப்பொருள் தன்னுள் கொண்ட நெறியே. பருப்பொருள் என்பது அந்நெறியின் பொருள்விளக்கம். அந்நெறி அப்பொருளின் கருத்துறைவு. உலகியலின் நெறிகள் உலகை ஆள்கின்றன. உலகியல் நெறிகளை அந்நெறிகளுக்குரிய தெய்வங்கள் ஆள்கின்றன. நெறிபுரப்போரால் அவை அவியிட்டு வளர்க்கப்படுகின்றன.

அனைத்துக்கும் அப்பாலிருக்கும் அதுவே அனைத்துக்கும் முதல் விசை. அதுவே முதல் விதை. அதுவே வயல். அதுவே விளை. அதுவே களை. அதுவே பசி. அதுவே உடல். அதுவே உயிர். ஆயினும் முற்றிலும் அகன்றது. வேள்வி அது. எரிகொடை அது. எரியும் அது. நுண்சொல்லும் அதுவே. உடல் அது. நோய் அது. மருந்து அது. நெய்யும் அனலும் அதுவே. அதுவே ஒளி. ஒளியிருள் என்றிலாததும் அதுவே.

யோகத்திலமைந்தவர் அதை ஒன்றென உணர்கிறார்கள். ஞானத்தில் செல்பவர்கள் அதை பலவென அறிகிறார்கள். செயலில் இருப்பவர் அதை செயல்தருணங்களில் காண்கிறார்கள்.

கவிதையெனும் சோம மது உண்டவர்கள், அரசமைந்து பழிகள் அகன்றோர், வேதமறிந்தோர் எனும் மூன்று தரப்பினர் தங்களுக்குரிய வேள்விகளால் அதை வேட்டு விண்ணுலகு கொள்கிறார்கள். இந்திரநிலை அடைந்து அமைகிறார்கள். விண்ணின்பம் நிறைந்தவுடன் அழிவுடைய மண்ணுலகுக்கே மீள்கிறார்கள். விழைவுகொண்டவர் விழைவிலேயே உழல்வதே நெறி. அவர்களின் தெய்வங்கள் அவர்களை காக்கின்றன, வழிநடத்துகின்றன.

தேவரை வேட்போர் தேவரை எய்துவர். மூதாதையரை நோற்பவர் தென்புலத்தை வெல்வர். பருவுலகை தொழுவோர் செல்வங்களை அடைவார்கள். அதை மட்டுமே நாடுவோர் அதை அடைவார்கள். மங்கலம் மங்கலமின்மை கொண்ட இருபால் பயன்களைத் தருவனவாகிய செயற்சுழலிலிருந்து அவர்களே விடுபடுகிறார்கள்.

wild-west-clipart-rodeo-31இளைய யாதவரின் சொல்கேட்டு திகைத்து அமர்ந்திருந்த யுதிஷ்டிரர் மீண்டும் தன்னை திரட்டிக்கொண்டு கேட்டார் “யாதவனே, சொல்க! வரவிருக்கும் இப்பேரழிவால் நீ துயருறவில்லையா?” இளைய யாதவர் புன்னகையுடன் “இல்லை, நானே கொல்கிறேன்” என்றார். “அவர்கள் மேல் அளிகொள்ளவில்லையா நீ?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “எவர்மீது எவர் அளிகொள்வது?” என்றார் இளைய யாதவர். “இறப்பதும் நானே.”

“எளிய மானுடர் அவர்கள். வாழப்பிறந்தவர்” என யுதிஷ்டிரர் குரல் அடைக்க சொன்னார். நெஞ்சு நெகிழ விழிநீர் வடித்தபடி “மைந்தர், தந்தையர், உடன்பிறந்தார்…” என்றார். “என் நெஞ்சு தாளவில்லை. எதன்பொருட்டு என்ன பொருள் என என் உள்ளம் ஏங்கித் தவிக்கிறது.” “பொருளறிந்தால் துயர் மீள்வீரா, யுதிஷ்டிரரே?” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்றார் யுதிஷ்டிரர்.

“மெய்மை நான்கு வகை துயர்களுக்கு மாற்று என்கின்றன நூல்கள். தெய்வம், பொருள், மானுடர் என்னும் மூன்று வகையில் எழும் உலகத்துயர் அனைவருக்கும் உரியது. இருத்தலை எண்ணும் எளியோன் நிலையாமை கண்டு துயர்கொள்கிறான். அறிஞன் அறியமுடியாமையின் துயரை அடைகிறான். இருமையின் துயர் அடைகிறான் ஞானி.”

“நீங்கள் கொண்டிருப்பது எளியோரின் துயர். அதை நீக்கினால் அறிஞனுக்குரிய துயரையே சென்றடைவீர்கள். யுதிஷ்டிரரே, இங்கிருக்கையில் துயரிலிருந்து துயருக்கே சென்றடைய முடியும். முற்றிலும் துயரற்றவன் இருமை கடந்தவன் மட்டுமே.”

“நான் கோருவது என் துயரை நீக்குவதற்காக அல்ல. இங்கு நிகழும் இப்பேரழிவு என்னும் துயரை நீக்கும்பொருட்டே” என்றார் யுதிஷ்டிரர். “அதன் பொறுப்பை என்னிடமிருந்து அகற்றும் மெய்மை எது என்று மட்டுமே.”

“இவ்வொரு பயணத்தில் வழிநடந்தபோது நீங்கள் பன்னீராயிரம் சிற்றுயிர்களை மிதித்துக் கொன்றீர், யுதிஷ்டிரரே” என்றார் இளைய யாதவர். சினம் கொண்ட யுதிஷ்டிரர் “என்னிடம் அணிச்சொல்லெடுக்க வேண்டாம். நான் மானுடரைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்” என்றார். “உயிர்களில் வேறுபாடு நோக்கும் ஒரு தெய்வத்திடம் எதை கோருகிறீர், தர்மரே?” என்றார் இளைய யாதவர்.

மறுமொழி சொல்லாமல் தலையை அசைத்த யுதிஷ்டிரர் “என் நாவை அடக்குதல் எளிது. கண்ணெதிரே அழிவு நிகழ்கையில் அறிவுக்கு மட்டுமே உகக்கும் கொள்கை பேசி அமர்ந்திருத்தல் அதனினும் எளிது” என்றார். “அரசன் என, தந்தை என நான் உனது விழிநோக்கி கேட்பது இதுவே, அறமென கனியாத மெய்மையால் என்ன பயன்?”

“இமயத்தால் என்ன பயன்?” என்று இளைய யாதவர் கேட்டார். “அம்மியென சமைந்தால் அடுமனைக்காகும். தூணென்று நின்றால் கூரையைத் தாங்கும். சிலையென ஆனால் தெய்வமேயாகும். வடதிசை எழுந்தது தேவதாத்மா என்று முனிவரால் வணங்கப்படுவதோ வெறுமனே வான்தொட்டு நின்றிருப்பதனால்.”

யுதிஷ்டிரர் திகைத்து நோக்க இளைய யாதவர் தொடர்ந்தார் “அறிக, ஆயிரம் பல்லாயிரம் கோடி அம்மிகளும் தூண்களும் தெய்வச்சிலைகளுமாக உருமாறிக்கொண்டே இருக்கையிலும் முகில்சூடி நின்றிருக்கும் இமயமே அனைத்துக் கற்களுக்கும் பொருள் அளிக்கிறது. அனைத்துக் கல்லும் இமயமே என்று உணர்ந்தவனே கல்லை அறிகிறான்.”

“விழிதூக்கி நோக்கி இமயத்தைப் பார்க்கையில் புலன்தொட்டறியும் பிரம்மம் என்று உளமெழாதவர் பாரதவர்ஷத்தில் எவர்?” என்றார் இளைய யாதவர். “கல் தேவையென்றால் கல்லை எடுங்கள். மலை தேவையென்றால் மலை கொள்க! கல்லும் மலையே என்று உணர்வதே யோகம்.”

யுதிஷ்டிரர் “அளியின்மை… அதை ஆயிரம்கோடி சொற்களைக் கொண்டும் எவரும் மறைத்துவிட முடியாது” என்றார். பின்னர் எழுந்துகொண்டு “போதும், இந்தத் தத்துவங்களன்றி எதையும் நீ என்னிடம் சொல்லிவிடமுடியாதென்று உணர்கிறேன். நான் கிளம்புகிறேன்” என்றார். “நான் எவரையும் அருகழைப்பதில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். உடனே “ஆனால் தூண்டிலிட்டு அமர்ந்திருக்கிறேன்” என உரக்க நகைத்தார்.

புரிந்துகொள்ளா விழிகளுடன் நோக்கிய யுதிஷ்டிரர் “நான் விடைகொள்கிறேன், யாதவனே” என தன் மேலாடையை சீரமைத்தார். இளைய யாதவர் எழுந்து நின்று “நன்று யுதிஷ்டிரரே, நற்சொற்களை உரைக்கும் வாய்ப்பு அளித்தீர்கள்” என்றார்.


நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரின் குடில்முற்றத்திற்கு மீண்டு வந்ததுமே யுதிஷ்டிரர் உரத்த குரலில் “எனக்கு ஐயமென ஏதுமில்லை, இத்தெளிவை நான் எப்போதும் அடைந்ததில்லை. யாதவனே, இந்தக் கசப்பு நிறைந்த கனவின்பொருட்டு நான் உனக்கு நன்றியுடையவன்” என்றார். “இங்கு அறமென்றும் நெறியென்றும் மாறாத ஏதுமில்லை. அவையனைத்தும் மானுட உருவாக்கங்களே. அவரவர் இலக்குக்கும் இயல்புக்கும் ஏற்ப கண்டடைவன. அந்தந்த சூழலுக்கேற்ப விளைவன. ஆற்றலுக்கேற்ப நிலைகொள்வன” என்றார்.

“கணமொரு அறம். தருணத்திற்கு ஒன்று. உள்ளத்திற்கு ஏற்ப. இங்கு ஒவ்வொரு கணமும் நிகழ்ந்துகொண்டிருப்பது அறங்களின் மோதல். நாம் கொண்டுள்ள அறம் எதுவோ அதன்பொருட்டு நிற்பதும் களமாடுவதும் வெல்வதும் மடிவதுமே நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. என் வழியின்மேல் ஐயம்கொண்டேன், என் எதிரிமேல் கனிவென்று வெளிப்பட்டது அதுவே. ஐயமில்லாது ஆற்றப்படும் அறமே வெல்கிறது. வெல்லும் அறமே அறமென்று நிலைகொள்கிறது. இப்புவியில் வெல்லும் அறம் தோற்கும் அறம் என இரண்டே உள்ளன.”

“அரசன் என்று நான் என் குடியை, என் நாட்டை, என் கொடிவழியினரை காக்கும் பொறுப்பு மட்டும் கொண்டவன். உலகுக்குப் பொறுப்பென என்னை எண்ணிக்கொண்டதே என் பிழை. இவ்வுலகின் கோடானுகோடி அறங்களை எத்தனை தவம் செய்தாலும் நம்மால் எண்ண முடியாது. ஒரு தருணத்தின் அறங்களை எண்ணி வகுக்கக்கூட எவராலும் இயலாது” என்று யுதிஷ்டிரர் சொன்னார்.

“மாறாத பொதுஅறம் ஒன்றைச் சார்ந்துள்ளது இப்புவிச்செயல் என நம்பியதே என் பிழை. அறிந்தோ அறியாமலோ ஒவ்வொருவரும் அதிலேயே அமைந்துள்ளனர் என்று எண்ணினேன். என்னுள் அமைந்த அவ்வறத்தைக்கொண்டு பிறருள் அமைந்த அவ்வறத்தை நோக்கி பேசமுடியும் என கனவுகண்டேன். அது வெற்றாணவம் என்று அறிந்தேன். யாதவனே, ஓர் அறம் பிறிதொன்றை எவ்வகையிலும் விழிநோக்கி அறிவதில்லை.”

“கல்லுடன் கல் மோதுவதுபோல அறங்கள் மோதிக்கொள்கின்றன” என்றார் யுதிஷ்டிரர். “அங்கே நெகிழ்வுக்கே இடமில்லை. அனைத்துச் சொல்லமர்வுகளும் உளம்பகிர்தல்களும் அறங்களை மூடியிருக்கும் அந்தந்தத் தருணத்து உணர்வுகளை அகற்றி உள்ளிருக்கும் மெய்யான அறத்தை மட்டும் வெளியே எடுப்பதற்காகவே. அனைத்தும் விலகிக்கொண்டபின் இரு அறங்கள் மட்டுமே எதிரெதிர் நின்றிருக்கின்றன. ஒன்று வெல்லும். இன்னொன்று முற்றழியும். வெல்வது வரும்காலத்தில் தானே அறமென்று ஓங்கி நிலைகொள்ளும்.”

“நான் நம்புவதே மெய்யறம் என்று நம்பியதே என் பிழை” என்று யுதிஷ்டிரர் தொடர்ந்தார். “ஆகவே பிற அறங்கள் பிழையென்று கருதினேன். என் அறத்துக்கு தெய்வங்கள் துணைநிற்குமென்றும் பிறவற்றை அவை கைவிடுமென்றும் கற்பனை செய்தேன். என் நிலை அறமென்பதனால் அது இரும்பு செடிகளை என பிறவற்றை அரிந்து செல்லும் என்று தருக்கினேன். என் உள்ளத்தால் எதிரறங்களை எல்லாம் சிறுமைசெய்தேன். பழித்தேன். ஆகவேதான் அவற்றை திருத்த முயன்றேன். நான் பேச்சென்றும் உளம்பகிர்தலென்றும் சொன்னதெல்லாம் பிற அறங்களை சிறுமைசெய்தல் மட்டுமே.”

“இன்று தெளிந்தேன். முதலியற்கை மூவியல்புகளின் நிகரழிய நிலைகுலைந்து நிலைமீண்டு தன்னை நிகழ்த்திச் செல்லும் இப்பயணத்தின் ஒவ்வொரு தருணமும் பலநூறு அறங்களின் முடிச்சுப்புள்ளி என்று. எனக்கு ஆணையிடப்பட்டதை ஆற்றுவதற்கு அப்பால் நான் நோக்கவேண்டியது பிறிதில்லை” என்று சொல்லி யுதிஷ்டிரர் நீள்மூச்செறிந்தார். “நன்று யாதவனே, நான் நிறைவடைந்தேன்” என்றார்.

“பாண்டவரே, ஒவ்வொரு உயிரும் தன் தனியறத்தின்பொருட்டு போராடுகையில் அனைத்துக்கும் உரிய பொது அறத்தைப் பேணுபவர் எவர்?” என்றார் இளைய யாதவர். “குடித்தலைவர் ஒவ்வொருவரும் தங்கள் குடியறங்களை ஓம்புகையில் அவர்களின் பொது அறத்தைப் பேணிநிற்கின்றது அரசனின் கோல். இங்கு வாழும் அனைத்துயிர்கள் மீதும், இப்புடவியின் அனைத்துப் பொருட்கள்மீதும் நிலைகொள்வது எந்தச் செங்கோல்? எது கடுவெளிப்பெருக்கின் அறங்களின் முடிவிலியை ஆள்கிறது?”

யுதிஷ்டிரர் திகைத்தவர்போல் கை எழுந்து அசைவிழந்து காற்றில் நிலைக்க சொல்லிலாது நின்றார். “அவ்வண்ணம் ஒன்று இருக்குமென்றால் அது இங்கிருக்கும் ஒவ்வொரு துளியிலும் வெளிப்பட்டாகவேண்டும் அல்லவா? அதற்கும் உங்கள் தனியறத்துக்கும் என்ன உறவு? நீங்கள் உங்கள் கடமையால், விழைவால் கொள்ளும் அறம் அந்த அறத்துடன் போரிடுமென்றால் என்ன செய்வீர்கள்? ஒவ்வொரு கணத்திலும் ஒன்றுடன் ஒன்று மோதும் அறங்களில் எது அப்பேரறத்தின் முகம்?”

யுதிஷ்டிரரின் கை கீழே சரிந்தது. அவர் இருளை திரும்பிபார்த்தார். “பேரறம் என்று ஒன்று இல்லையேல் எந்த அறத்திற்கும் பொருளில்லை. இவையனைத்தும் முட்டிமோதித் திரண்டெழும் ஒரு மையமில்லையேல் இங்கு நிகழ்வது அழிவென்றே பொருள்” என்றார் இளைய யாதவர். “இப்புடவி இங்கிருப்பதே இது அழிவை நோக்கி செல்லவில்லை என்பதற்கான சான்று. இது வாழ்வதே இது ஆளப்படுகிறது என்பதை காட்டுகிறது.”

ஆள்வது ஒன்று உண்டு. அனைத்தும் அதிலிருந்து எழுகின்றன. மதியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும், துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும் இங்ஙனம் பலமிடும் இயல்புகளெல்லாம் அதனிடமிருந்தே உயிர்கள் அடைகின்றன.

வஞ்சகரின் சூது, ஒளியுடையோரின் ஒளி, ஆள்வோரிடத்தே கோல், வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி, மறைமெய்களில் அது அமைதி. ஞானமுடையோரிடத்தே ஞானம். உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா அது. அவ்வுயிர்களின் முதல் அது. இடையும் அவற்றின் இறுதியும் அதுவே.

அதன் வழிகள் அறியமுடியாதவை. அறியமுடிவது ஒன்றே, அது இங்கே இதை நிகழ்த்துகிறது. இது நிகழவேண்டுமென விழைகிறது. இதில் திகழ எண்ணுகிறது. ஒவ்வொரு துளியிலும் தன் முழுமை திரளும்படி செய்கிறது. விரியும் மலரிலும் வாடும் மலரிலும் அழிவிலாத வண்ணமென நிறைகிறது.

பாண்டவரே, படைப்பழிவினூடாக, நன்மைதீமைகளினூடாக, இருளொளியினூடாக அதன் விழைவெனத் திரண்டு வருவது பொலிக என்னும் செய்தியே. விளங்குக, வாழ்க, வெல்க என்பதே அதன் சொல். இப்புவி ஒவ்வொருநாளும் கதிரெழுகையில் பொலிந்து விரிகிறதென்பதே அதற்குச் சான்று. இங்கு விதைகள் முளைப்பதே அதற்கு உறுதி.

ஒவ்வொரு அணுவிலும் திகழும் அச்செய்திக்கு எதிரான எதுவும் தீமையே. அதனுடன் ஒவ்வாத அனைத்தும் மாசே. எதன்பொருட்டென்றாலும் அழிவை நோக்கும் அனைத்தும் பிழையே. மண்கட்டிகளை பெருநதி என அதன் ஆணை அவற்றை அழித்து பெருகிச்செல்கிறது.

தான் என எழுபவரே அம்முழுமையின் செய்திக்கு எதிர்நிற்கிறார்கள். எழுபவர் வீழ்வர். கொள்ள எழுவோர் விட்டு விலகுவர். வெல்வது தானென்போர் வீழ்ச்சியில் தன்னை அறிவர். பாண்டவரே, முரண்படுபவர் முற்றழிவார்கள்.

தானென்பதை விட்டவர் அதில் அமைகிறார். இவையென்றும் இவ்வாறென்றும் நிற்பதில் தன்னையும் உணர்பவர் அந்த முழுமையை அறிகிறார். அவர் நெஞ்சில் வாழ்க என்ற எண்ணமே வாழும். அவர் வாயில் நா எரிகுளத்தில் வேள்வித்தீ என தழல்கொண்டிருக்கும்.

உயிர்க்குலத்தை வாழ்த்துக! புவிப்பெருக்கை வாழ்த்துக! நீரை காற்றை ஒளியை வானை வாழ்த்துக! வாழ்த்தப்படும் அனைத்தும் அதுவே. வணங்கப்படும் அதுவும் அதுவே. வாழ்த்துபவன் வாழ்த்தப்படுகிறான். நலம் நாடுபவன் நிறைவடைகிறான்.

பொலிக பொலிக என உளமெழாத எந்த எண்ணமும் பழிசேர்ப்பதே. பொலிக என கொள்ளுங்கள். பொலிக என அளியுங்கள். பொலிக என வெல்லுங்கள். பொலிக என அடிபணியுங்கள். பொலிக என வாழுங்கள். பொலிக என்றே மடியுங்கள்.

முழுமையில் நின்று நோக்குபவரிடம் அது சொல்கிறது இணைந்த நலன் என்னால் பேணப்படுகிறது என. அதை அறிந்த யோகிகள் எங்கிருந்தாலும் நிறைநிலை கொள்கிறார்கள். எதுவரினும் மகிழ்கிறார்கள்.



பொறுப்புகளிலிருந்தே பெருஞ்செயல்கள் எழுகின்றன. பெருஞ்செயல்களால் மானுடர் சான்றோரும் வீரரும் ஆகிறார்கள்.

பிறர்போல் இருப்பது ஒரு விடுதலை. தனித்தன்மை என்பது பொறுப்பு


சிறிய ஒற்றையடிப்பாதை குறுங்காட்டுக்குள் ஆடைக்குள் ஊசிநூல்போல புகுந்து வெளிவந்து மீண்டும் புகுந்தது. காலைப்பறவைகளின் ஒலி தலைக்குமேல் பெருகி நின்றது. ஒளிக்குழாய்கள் சரிந்து ஊன்றி நின்ற காட்டுப்பாதையில் மின்னி எரிந்து அணைந்து மீண்டும் மின்னியபடி அவர்கள் சென்றனர். அவர்களின் காலடியோசைகள் எங்கெங்கோ பட்டு எதிரொலித்தன.  “இவ்வழி” என சௌனகர் ஒரு சொல் உரைத்தபோது உடலில் கல்விழுந்தவர்கள் போல அவர்கள் திடுக்கிட்டனர்.

தொலைவிலேயே அவர்கள் பிரமாணத்தை பார்த்துவிட்டனர். ஆயிரம் கைகள் கொண்ட கார்த்தவீரியனைப்போல தன் கிளைகளை நீட்டி பசுந்தழைக்கூரையிடப்பட்ட பெரும் மாளிகைபோல அது நின்றது.  விழுதுகள் ஒவ்வொன்றும் அடிமரம் அளவுக்கே பருத்திருந்தன. அதன் விழுதுகளின் காட்டுக்குள் நிழல் இருளெனச் செறிந்திருந்தது. மேலிருந்து பறவைகளின் பூசல் மழையோசைபோல எழுந்துகொண்டிருந்தது.  அணுகும்தோறும் அந்த மரம் மேலெழுந்து மறைந்தது. அதன் விழுதுகள் மாளிகைத்தூண்களென்றாயின.

SOLVALAR_KAADU_EPI_12

பசுவின் வால்போல சிவந்த முனைக்கொத்துக்கள் காற்றில் ஆடிய இளைய விழுதுகள் தலைதொட்டு ஆட, வேரூன்றி மரங்களென்றான பெருவிழுதுகளுக்கு ஊடாக வளைந்து வளைந்து சென்று அங்கு புடைத்திருந்த வேர்களின் மேல் அவர்கள் அமர்ந்துகொண்டனர்.  அந்தணர்கள் அவர்களைச் சூழ்ந்து அமர்ந்தனர்.  நடுவே சௌனகர் உயர்ந்த வேர்ப்பீடம் ஒன்றில் அமர்ந்தார்.  தருமன் கைகூப்பி “அந்தணரே, தங்களிடம் இந்த மரத்தைப்பற்றி எங்களிடம் சொல்லும்படி முதன்மைச் சௌனகர் ஆணையிட்டார். நான் என் விழைவுகளையும் அச்சங்களையும் வெல்வதெப்படி என்று கேட்டதற்கு மறுமொழியென அதை அவர் சொன்னார்” என்றார்.

“அரசே, இந்த ஆலமரம் பிரமாணம் என்று பெயர் பெற்றது. சான்று என்று பொருள். நேர்ச்சான்றும் ஒப்புமைச்சான்றும் ஆகி நின்றிருக்கிறது இங்கு. இதை மூன்றாவது காத்யாயனர் இங்கே நட்டார். இதனருகே அமர்ந்து இதைச் சான்றாக்கி நால்வேதமுணர்ந்து பெற்ற தன் மெய்யறிவை அவர் மாணவர்களுக்கு அளித்தார். பின்னர் வேதம்கற்று நிறைவுறும் நாளில் மாணவர்களை இங்கு அழைத்துவந்து இதைச் சான்றாக்கி உறுதிபூணும் மரபு உருவானது. பன்னிரு தலைமுறைக்காலமாக வேதச்சான்றாக இது இங்கே நின்றுள்ளது.”

“இதன் தளிரிலைகள் வேதமோதும் நாவுகள். இதன் பச்சை இலைகள் வேதச்சொல் கேட்கக் குவிந்த செவிகள். இதன் வேர் விண்ணில் விரிந்துள்ளது. கிளைகளோ மண்ணில் பரக்கின்றன. இதன் விழுதுகள் மரங்களாகின்றன. மரங்கள் விழுதுகளாகின்றன. தனிமரமே காடானது. இதற்கு இறப்பே இல்லை” என்றார் சௌனகர். தருமன் பெருமூச்சுவிட்டார். சௌனகர் “அரசே, கேள். இத்தருணத்தில் வேதம் உனக்குச் சொல்வதென்ன என்று சொல்லும்படி ஆசிரியர் என்னை பணித்திருக்கிறார்” என்றார்.

“பார், இதோ சூழ்ந்திருக்கும் காட்டின் ஒவ்வொரு இலையும் விண்ணை நோக்கி இறைஞ்சுகிறது. நீர், விண்நீர் என. காற்று, இன்காற்று என. ஒளி, மேலும் ஒளி என. இறைஞ்சுதல் உயிர்களின் அறம் என்றுணர்க! தான் என்று உணர்ந்த அணு மறுகணம் விழைவைச் சூடுகிறது. உயிரை அளிக்கக் கோருகிறது. அன்னத்தைக் கோரிப்பெற்று உடல் சமைக்கிறது. மூச்சை அள்ளிக்கொள்கிறது. வெளிவந்ததும் மொழியை பற்றிக்கொள்கிறது. விழைவின்றி உயிர்கள் இல்லை. விழைவின் புலன் அறியும் வடிவையே உயிர் என்கிறோம்.”

“ஆகவே விழைக! வாழ்வை, வெற்றியை, புகழை, அறத்தை, வீடுபேற்றை. விழைவை வேண்டுதலாக்குக! வேண்டுதலை படையலாக்குக! வேதிக்கப்படுவதே வேதம். வேட்டலே வேள்வி. படைக்கப்படுவதைப் பெற்று விண்ணக தேவர்கள் அளிப்பதே அருங்கொடை. விண்கொடையால் சிறப்புறுக!”

“இங்குள்ள ஒவ்வொன்றும் வேள்வியில் ஈடுபட்டிருக்கின்றன என்று அறிக! மானைக் கொன்று ஊனை வாயில் கொணர்ந்து தன் மைந்தருக்கு ஊட்டிவிட்டு பசித்துக்கிடக்கும் பெண்புலி வேள்வியையே இயற்றுகிறது. கோழிக்குஞ்சை கவ்விச்செல்லும் பருந்து ஆற்றுவதும் வேள்வியே. வயலில் வியர்வையை படைப்பவனும் போர்க்களத்தில் குருதி வீழ்த்துபவனும் அவியளிப்பவர்களே.”

“வேட்கப்படுவதே அருளப்படுகிறது. ஆகவே அரசே,  வெற்றியையும் புகழையும் விழைக! அதன்பொருட்டு படைக்கலம் கொண்டு எழுக! குருதியெனில் குருதி, கண்ணீர் எனில் கண்ணீர், அனலெனில் அனல். அனைத்தையும் அவியாக்குக! வென்றெடுத்த நிலத்தை முடிசூடி ஆள்க! அறம்நின்று குடிகாத்து புகழ்கொள்க! ஆற்றவேண்டியதை ஆற்றியபின் அனைத்தையும் துறந்து அகம்நோக்கி அமர்ந்து உதிர்க! அதுவே உன் அறம் என்கிறது வேதம். பிறிதனைத்தும் வெறும் நடிப்புகளே.”

“இயலாமையை தன் தகுதியெனக்கொள்பவனே செயலின்மையை அறமென மாற்றிக்கொள்கிறான். தோல்வியை எந்நிலையிலும் சிறப்புறுத்துவதில்லை மெய்வேதம். வேதம் வென்றவர்களுக்குரியது. வெல்ல எழுந்தவன் கையில் படைக்கலம், நெறிச்சாலையில் கொலைவாள். காட்டுத்தீ சருகுகளை என வெற்றிக்கு உதவாத சொற்கள் அனைத்தையும் அது எரித்தழித்துவிடும். தயங்கவைப்பது இரக்கமென்றால் அது இழிந்ததே. அஞ்சவைப்பது அறக்குழப்பம் என்றால் அது பழிகொணர்வதே. பின்நோக்கச் செய்வது அன்பு என்றால் அது வெறுக்கத்தக்கதே.”

“வெல்க! அடைக! நிறைக! அதுவே வேதமெய்ப்பொருள் என்றுணர்க! நீ அரசன் என்றால் ஆட்சியே உன் முதன்மைவேள்வி. அறத்தில் நிற்றலே நீ அளிக்கும் அவி. அறம் தழைக்கும் மண்ணில் திகழ்வது வேதம். வேதத்தை வாழச்செய்க என்பதே வேதம் அளிக்கும் அறைகூவல்” சௌனகர் சொன்னார்.

“ஆனால் விழைவே துன்பத்தை அளிக்கிறதென்பதும் உண்மை. எனவே துன்பமில்லாமல் உயிர்களுக்கு வாழ்க்கையில்லை என்று உணர்க! துன்பத்தை முற்றிலும் விட எண்ணும் முனிவர் விழைவை முழுதும் கைவிடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையை முழுமையாக இழந்து சருகுகளைப்போல் மண்ணில் உதிர்கிறார்கள். இன்மையென்றாகி வெட்டவெளியில் உதிர்தலே அவர்களின் அறம்.”

“இன்பத்தை மட்டும் விழைபவன் வேதம் புரப்பவன் அல்ல. துன்பமும் வாழ்க்கையே என்றுணர்ந்து அதையும் வேட்பவனே வேதத்திற்கு இனியவன். நெறியின் பொருட்டு துன்பம் கொள்வதும் இனியதே. நன்றின்பொருட்டு விடும் கண்ணீர் தூய நெய்யென வேதநெருப்பை கிளர்ந்தெழச்செய்கிறது. அறத்தின் பொருட்டு சிந்தப்படும் குருதி உலர்ந்த விறகென வேதக்கனலாகிறது” என சௌனகர் தொடர்ந்தார்.

“தன்பொருட்டு மட்டும் கொள்ளும் விழைவே திருஷ்ணை எனப்படுகிறது. உயிர்களனைத்தையும் ஆட்டுவிக்கும் பெருவிசை அதுவே. புள்ளும் புழுவும் அச்சரடால் கட்டப்பட்டுள்ளன. கைகளும் கால்களும் சிறகுகளும் துடுப்புகளும் கொம்புகளும் அதனால்தான் ஆட்டுவிக்கப்படுகின்றன. விழைவிலிருந்து விலக உயிர்களால் ஆகாது. ஆனால்  திருஷ்ணையிலிருந்து விடுபடுபவனே சிறந்த அரசன். அவனை ராஜரிஷி என்று கொண்டாடுகின்றனர் வைதிகர்.”

“மிதிலையின் ராஜரிஷியான ஜனகனை வணங்குக! அரசே, அறத்தின்பொருட்டு கொள்ளும் விழைவே திருஷ்ணையிலிருந்து விடுபடும் வழி என்று அறிக! இது இங்கு ஆற்றப்படுவதற்கு நான் கருவியாகியுள்ளேன் என உணர்பவன் இதுவே நான் என்று உணரமாட்டான். இது என் விழைவு என்றும் அவன் சொல்லமாட்டான். நீ புலி இரையைத் தேடுவதைப்போல அரசை நாடினால் துயரையே சூடுகிறாய். எரி விறகை அணுகுவதைப்போல சென்றாய் என்றால் அத்துயர் உன்னுடையதல்ல. உன் அறமே நீ!”

“வேள்வி, கல்வி, கொடை, தவம், உண்மை, பொறுமை, புலன்வெல்லல், விழைவின்மை என்னும் எட்டுவகை ஒழுக்கங்களும் தன்னிலிருந்து தன்னை விலக்குவதன் வழியாகவே நிகழும். தன்னை ஆட்டுவிக்கும் பெருவிசையே தானென்னும் உணர்வு என்று உணர்வதொன்றே அவ்வாறு விலகிக்கொள்வதற்கான வழியாகும். உன்னை வழிநடத்துவது நீ கொண்ட அறமே ஆகுக! ஆம், அவ்வாறே ஆகுக!”

சௌனகர் கைகூப்பி ஓங்கார ஒலியெழுப்பி பேச்சை முடித்தார். யுதிஷ்டிரர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். இலைகளினூடாக காற்று பெருகிச்செல்லும் ஒலி அவர்களை சூழ்ந்திருந்தது.


“எது முடிவற்ற பொருள்கொண்டதோ, எது எங்கும் பொருள் அளிப்பதோ அதுவே வேதம் என்றார் எங்கள் முதலாசிரியர். அவரது மெய்ச்சொல் அவரது மாணவர் நிரையின் இருபத்தாறாவது பிரஹஸ்பதியால் உலகியலாக விளக்கப்பட்டது. அது பிரஹஸ்பதி சூத்திரங்கள் என்னும் நூல்வடிவில் இன்றுள்ளது. அச்சொல் இருபத்தெட்டாவது பிரஹஸ்பதியால் மெய்யியலாக விளக்கப்பட்டது. அது பிரஹஸ்பதி ரகசியம் என்னும் நூலாக மறைபொருள் நாடுநரால் மட்டும் பயிலப்படுகிறது.”

“இது மெய்மையின் சொல்வடிவம். அதோ அந்தப் பாறைகளைப்போல பருவடிவம் கொண்டது. இந்த ஒளியைப்போல அனைத்தையும் துலங்கச்செய்வது. காற்றைப்போல மூச்சாவது. நீரைப்போல அமுதாவது. அரசே, மொழியிலமைந்த அறிவுகளில் பொய்கள் உண்டு. பிழைகள் உண்டு. குறைகளும் உண்டு. நிறைமெய்யை அவற்றிலிருந்து பிரித்தறிவது எப்படி? நூறு சொற்கோள் முறைகளைக் கற்றாலும் தெளிவு கிடைப்பதில்லை. ஆயிரம் ஆசிரியர்களை அணுகினாலும் மாறாவிடையை அடையமுடிவதில்லை.”

“வழி ஒன்றே. விடாயே நீர் தேடிச்செல்வதற்கு சிறந்த வழிகாட்டி. பிற அனைத்தும் நீரிலிருந்து நம்மை விலக்குபவையே. அவை அழகிய சொற்களாக இருக்கலாம். தெளிவான சொல்முறைகளாக இருக்கலாம். நீரை அடையவைக்கும் வழியே உண்மையானது. நீரே வழியை மதிப்புக்குரியதாக்குகிறது. அரசே, ஐம்புலன்களுக்கும் உள்ளத்திற்கும் அறிவுக்கும் அகப்படுவதே முதன்மை மெய்மை எனப்படும். பிற அனைத்தும் அந்த மெய்மைக்குமேல் ஏறி நின்றிருப்பவை. முதல் மெய்மை நிலம் போன்றது. வானில் பறக்கும் ஒன்றைக்கூட மண்ணில் எம்பிச்சென்றே பற்ற முடியும். பற்றியபின் மண்ணுக்கே மீள்தலும் வேண்டும். மண்ணில் நின்றிருக்கும் அறிவையே பிரஹஸ்பத்யம் என்கிறோம். அதை எங்கள் மறுப்பாளர்கள் சார்வாகம் என்பதுண்டு.”

தருமன் வணங்கி “அறிவரே, நான் முன்பிருந்த சௌனக குருகுலத்தில் என்னிடம் வேதநெறிப்படி நான் ஆற்றவேண்டியதென்ன என்று சொல்லப்பட்டது. என் தோழர்களைத் திரட்டி இறுதிப்படைக்கலத்தையும் ஏந்தி படைகொண்டுசென்று எதிரிகளை வென்று எனக்குரிய மண்ணை வென்று ஆளவேண்டும் என்றும், வேதச்சொல் வாழ ஆளவேண்டும் என்றும், என் முடியறத்தை நான் பேணினால் என் தனியறத்தை தெய்வங்கள் ஏற்கும் என்றும் கூறினர். உங்கள் நெறி என்ன சொல்கிறது என்று அறிய விழைகிறேன்” என்றார்.

“அரசே, நீ நெறிதேடி இங்கு வந்திருப்பதே உன்னால் இப்போது போர்புரிய முடியாதென்பதனால்தான். உன்னிடம் படைவல்லமை இருந்திருந்தால் நெறியென்ன என்று உசாவமாட்டாய், நெறியமைத்து உன்னைக் காக்கும் அறிஞர்களை சூழ வைத்திருப்பாய். மண்ணில் மானுடர் உருக்கொண்ட நாள்முதல் இன்றுவரை இங்கே வென்றது வல்லமை. வென்றதனாலேயே அது வெல்லத்தக்கது. வெல்லத்தக்கது வெல்லும் என்ற நெறியினாலேயே பிறிதொன்று எண்ணத்தேவையில்லை. சிம்மம் உகிர்களால், கழுகு சிறகுகளால், நாகம் நச்சால், அரசன் படையால், அறிவன் சொல்லால் வெல்கிறான். துலாவின் தட்டு எடையுள்ள பக்கம் தாழ்கிறது, அதை முடிவுசெய்யும் ஆற்றல் துலாமுள்ளுக்கில்லை என்றுணர்க!”

“அரசை வென்று நீ அறம்காக்கவேண்டும் என்றில்லை. புறவயமானதே இருப்பு எனப்படும். அகவயமானது உருவகமே. அறம் என்பது நீ உணர்வது, அறிவர் வகுத்தது, சொல்லில் இருப்பது, அமைச்சர்களால் விளக்கப்படுவது. நெறியோ புறவயமானது. அது அத்தருணத்தில் அங்குள்ள துலாத்தட்டுகளுக்கு நடுவே நிகர்நிலை என உருவாகி எழுந்து வருவது. நெறியைப் பேணுக! அது உன்னைப் பேணும். அரசன் பெறும் வரிக்கும் அவன் அளிக்கும் கொடைக்கும் நடுவே நின்றுள்ளது துலாமுள். உன் அமைச்சர்களுக்கும் உனக்கும் நடுவே, உன் குடிகளுக்கும் கோலுக்கும் நடுவே, உன் உறவுகளுக்கும் அரசக்கடமைகளுக்கும் நடுவே, உன் படைவல்லமைக்கும் வணிகவல்லமைக்கும் நடுவே, உன் எதிரிகளுக்கு நடுவே என்றும் நின்றுகொண்டிருக்கும் துலாமுள்ளைப் பேணுக! அதுவே உன்னை நிலைநிறுத்தும் விசை.”

“தெய்வங்கள் அல்ல, கண்காணா அறமும் அல்ல, மூதாதையர் சொல் அல்ல, சூதர் சொல்லும் புகழுரைகளும் அல்ல, துலாதேரும் தெளிவே அரசனை வெல்லச்செய்கிறது. அந்தத் தெளிவை அடைந்த மன்னனே ஐயமின்றி நாடாள்பவன். அதைத்தான் எங்கள் மெய்மரபைச் சேர்ந்த மாமுனிவர் ஜாபாலி தசரதராமனின் அவையில் நின்று உரைத்தார். அரசமுனிவராகிய ஜனகர் மன்னர்கள் கற்கவேண்டிய மெய்நூல்களில் முதன்மையானது சார்வாகமே என்று உரைத்ததும் அதனால்தான். மண்ணாள்பவன் மண்ணில் காலூன்றி நின்றாகவேண்டும்” என்றார் கணாதர். “அரசே, எளிய சொல் இதுவே. நீ மக்களை வருத்தினால் உன்னை மக்கள் வருத்துவர். நீ எதிரியிடம் பொறுத்தருளினால் உன்னிடம் எதிரி பொறுத்தருள்வான். நீ அளிப்பதே திரும்பி வரும். சிறந்த விதைகளுடன் நிலமிறங்கும் உழவன் கதிர்க்குலை சுமந்து இல்லம் திரும்புவான்.”

தருமன் “தங்கள் சொல்லுக்கும் நால்வேதச் சொல்லுக்கும் வேறுபாடு பெரிதில்லை என்று எண்ணுகிறேன்” என்றார். “ஆம், எங்கள் சொல்லே தொல்வேதம். நால்வேதமென எழுந்தது எங்கள் விழுதுகளில் ஒன்றே” என்றார் கணாதர். “ஒரு தொல்கதை உள்ளது. எங்கள் முதல்குரு பிரஹஸ்பதி தன் தமையன் உதத்யருடன் ஒற்றைக்குடிலில் வாழ்ந்தபோது தமையனின் துணைவி மமதை கருவுற்றாள். அக்குழவி கருவிலேயே வேதச்சொல் கற்றுத்தேர்ந்தது. ஒருநாள் தனியறைக்குள் மமதை துயின்றுகொண்டிருப்பதை பிரஹஸ்பதி கண்டார். ஆனால் மெல்லியகுரலில் வேதச்சொல் ஒலித்துகொண்டிருந்தது. அவர் உள்ளே சென்று அதை செவிமடுத்தார். அது கருவிலிருக்கும் குழவியின் சொல் என்று கண்டார். குனிந்து அவள் வயிற்றில் செவிவைத்து அதன் குரலை கேட்டார்.

“குழவி பாடிய வரிகள் இன்றும் வேதத்தில் உள்ளவை” என்றார் கணாதர். அவர் கண்காட்ட ஒரு மாணவன் அவ்வரிகளை பாடினான்

“நாளின் சுழற்சி என்னை சோர்வுறச் செய்யாதிருக்கட்டும்.
நெருப்பு என்னை எரிக்கலாகாது.
என் வேள்விக்குளம் மண்மூடிப்போகலாகாது.
நீர் என்னை விழுங்காமலாகுக!
ஆம், அவ்வாறே ஆகுக!”

“அம்மைந்தன் தன் சிறிய கைகளால் கருவறைக்குருதியை அள்ளி தன் தொப்புளுக்குக் கீழே எரிந்த மூலாதாரக்கனலில் விட்டு அவியாக்கி வேள்வியை செய்துகொண்டிருந்தான். மமதையின் உள்ளத்தில் குடிகொண்டு அமரமருத்துவர்களான அஸ்வினிதேவர்கள் அதை கேட்டுக்கொண்டிருந்தனர்” என்றார் கணாதர். “அது உயிரின் பெருவிழைவு என்று உணர்ந்த பிரஹஸ்பதி உரத்தகுரலில் மைந்தா, நில்! அழிவின்மை மானுடர் எவருக்கும் உரியதல்ல என்றார். அக்குழவி விலகுங்கள், தந்தையே! நான் வென்று செல்ல, தடையின்றி பெருக, என்றுமிருக்க விழைகிறேன். விழைவே வேதம் என்றது.”

“விழியற்ற விழைவு அது. மறுதுலாவால் நிகர்செய்யப்படாத எதுவும் அழிவே என்று பிரஹஸ்பதி சொன்னார். அதை நான் அறியவேண்டியதில்லை, வேதம் என் கையின் வெல்லமுடியாத படைக்கலம் என்றது குழந்தை. விழைவுமட்டுமேயான வேதமும் விழியற்றதே என்று பிரஹஸ்பதி சினத்துடன் சொன்னார். அவ்விழியின்மையே உன் மறுதுலாத்தட்டாக ஆகுக! என்றார். அம்மைந்தன் விழியிழந்தவனாகப் பிறந்தான். அவனை தீர்க்கதமஸ் என்றனர்.”

“அங்கம் வங்கம் கலிங்கம் சுங்கம் புண்டரம் என்னும் ஐந்து நாடுகளின் முதலரசர்களை ஈன்றவர். கோதமரின் தந்தை என அவரை நூல்கள் சொல்கின்றன” என்றார் தருமன். “அவை பின்னாளில் சூதர்கள் புனைந்த கதைகளாக இருக்கலாம். தீர்க்கதமஸ் வேதமுனிவர். கட்டற்ற மூலாதாரப் பேராற்றலின் மானுடவடிவம். ஆகவே அவரை பெருந்தந்தை என்று வழிபடுகின்றன ஆரண்யகங்கள்” என்று கணாதர் சொன்னார். “கட்டில்லா பெருவிழைவையே தொல்வேதம் என்றனர். தீர்க்கதமஸ் அவ்வேதத்தின் ஆசிரியர்களில் ஒருவர்.”

“அரசே, அன்னம் செயலற்றது. ஏனென்றால் அது விழைவற்றது. அன்னத்தில் விழைவென எழுந்ததே முதல் உயிர். அன்னத்தில் ஏறி அதை ஆட்டுவிக்கிறது அது. வளர்க்கிறது, வாழச்செய்கிறது, கொல்கிறது, உண்கிறது. அவ்வுயிர் விழைவை மட்டும் வழுத்துவதே வேதம். அவ்வுயிர் ஏறிய அன்னத்தையும் வழுத்துவதே சார்வாகம்” என கணாதர் சொன்னார். “அன்னம் தன்னளவில் முழுமையானது. நிலநீர்வளியொளிவிசும்பெனும் ஐந்து பெரும்பருக்களாக தன்னை நமக்குக் காட்டுகிறது. நிகரெதிர்நேர் நிலைகள் எனும் மூன்று இயல்புகளாக இங்கு திகழ்கிறது. என்றும் அழியாதது. தன்னுள் காலத்தை நிகழ்த்திக்கொண்ட பின்னரும் காலத்துக்கு அப்பால் என்றுமென இருப்பது.”

“அன்னத்தை செயல்படச் செய்கிறது உயிர். அன்னமே உயிரைப் பேணுகிறது. அன்னமில்லாத உயிருக்கு இருப்பில்லை. சொல்லின்றி பொருள் நிலைகொள்ள முடியாது. அன்னத்தின் இயல்பென்றே உயிரையும் மானுடர் அறியமுடியும். ஆகவே, அன்னமே முதன்மையானது. எங்கள் நிலைபாட்டை அன்னவாதம் என்றே அறிஞர் அழைக்கிறார்கள்” என்றார் கணாதர். “சௌனக நெறியின் தொல்குரு தீர்க்கதமஸ். நாங்கள் அவர்களுடன் வேறுபடும் இடம் இதுவே.”

“அவர்கள் சொல்வதும் நாங்கள் ஆற்றுப்படுத்துவதும் ஒரே வழியைத்தான். ஏனென்றால் எங்களிடையே இருப்பது மிகச்சிறிய வேறுபாடு மட்டுமே” என்று கணாதர் தொடர்ந்தார். “அவர்கள் பருப்பொருளாக நிறைந்துள்ள இவ்வுலகை, இயக்கவிசைகளை முற்றிலும் தவிர்த்து உள்ளமைந்த அறமென்னும் அருவை மட்டுமே பேசுகிறார்கள். நாங்கள் இப்பருவுலகை, இதன் முறைமையை முன்வைக்கிறோம். உலகியல் வல்லமையை அடைக! உலக நலன்களைப் பேணுக! உலகம் உன்னைப் பேணும்.”

தருமன் பெருமூச்சுடன் கைகூப்பினார். “அரசே, அவர்களின் வேதநெறி அனலை வழிபடுகிறது. அனலை விண்ணிறங்கிய தெய்வமென்று காட்டுகிறது. அனலை ஓம்ப உனக்கு ஆணையிடுகிறது. சார்வாகம் அனலென்பது விறகின் ஒரு நிலையே என உனக்குச் சொல்கிறது. விறகை வளர்க்கவும் பேணவும் ஆற்றுப்படுத்துகிறது. நலம் சூழ்க!” கணாதர் கைகூப்ப அவரது மாணவர்கள் ஓங்கார ஒலி எழுப்பினர்.


காலைச்சொல்லாடலில் தருமன் கணாதரிடம் “மெய்யறிந்தவரே, வேதச்சொல் ஒன்றே என்றால், அது மானுடனுக்கு அமுதம் என்றால், ஏன் அது கிளைகொண்டு பெருகவேண்டும்? முரண்பட்டு நிற்கவேண்டும்? ஒற்றைவழி மட்டும் உள்ள காடல்லவா பயணிக்கு உகந்தது?” என்று கேட்டார். புன்னகையுடன் “அதை பிறகு சொல்கிறேன்” என கடந்துசென்ற கணாதர் அந்த அவை முடிந்ததும் தருமனிடம் “கானுரைக்கு வருக! அங்கு பேசுவோம்” என்றார். கானுரைகளுக்காக ஏழு அரசமரங்கள் துவைதக்காட்டில் தொல்பழங்காலத்திலேயே நடப்பட்டு பேணப்பட்டிருந்தன.

“இளையவனே, மானுடம் ஒற்றை உயிர்விதையில் இருந்து முளைத்தெழுந்து வேர்விரிந்து கிளைபரப்பிய பேராலமரம் என்கிறது வேதம். விண்ணிலுள்ளன அதன் வேர்கள், கிளைகள் மண்ணில் விரிந்துள்ளன என்று விளக்குகிறார்கள் சிலர். அடிமரத்தை விலக்காவிட்டால் கிளைகள் விரியமுடியாது. ஒவ்வொரு இலையும் தனித்து மலராவிட்டால் ஒளியை அள்ளமுடியாது. ஒன்றை ஒன்று விலக்காவிட்டால் மரங்கள் காடெனப் பரவ முடியாது.”

“இங்கு கணந்தோறும் பரந்துசெல்லும் மானுடம் அதன் முரண்பாடுகளாலேயே தன்னைப்பெருக்கி வளர்த்துக்கொள்கிறது. ஒன்று பிறிதுபோல் அல்லாதாகிறது. ஒன்று பிறிதை மறுத்து நிற்கிறது. ஒவ்வொன்றும் தனக்குரிய இடத்தை கண்டடைகிறது. அனைத்தும் நிரப்பாத இடத்தை புதிதொன்று எழுந்து நிறைக்கிறது. ஒருதுளியும் ஓய்ந்திருப்பதில்லை என்பதனாலேயே கடல் அலைகொள்கிறது. ஒவ்வொரு விண்மீனுக்கும் தனியுலகு இருக்குமளவுக்குப் பெரியது விசும்பு” என்றார் கணாதர். “ஆயினும் முதல்விதை ஒன்றே என்று உப்பை அளிக்கும் மண் அறியும். நீரைச் சொரியும் விண்ணும் அறியும். ஆகவேதான் மானுடம் ஒரு குடும்பம்.”

“உறவொருவன் பிறனொருவன்
சிற்றுளத்தோர் சொல்வர்.
உளம் விரிந்து வாழ்பவருக்கோ
உலகோர் ஒரே குடி!”

என்று அவரது மாணவர்கள் தாழ்ந்த சுதியில் பாடி வணங்கினர். “வசுதைவ குடும்பகம்!” என்னும் சொல்லாட்சி மட்டும் மீண்டும் மீண்டும் ரீங்கரித்தது.

“மண்ணுக்கு அடியிலுள்ள உலோகங்கள் அனைத்தும் ஒன்றே என்று அறிக! ஒன்று பொன்னென எழுந்து மன்னர்களின் மணிமுடியாகிறது. அழகிய முலைகள் மேல் தவழும் அணிகலன்களாகிறது. இன்னொன்று செம்பென எழுந்து அடுப்பில் கனல்கிறது. பிறிதொன்று கன்னங்கரிய இரும்பென்று வந்து உழுபடையாகிறது, கொல்லும் படைக்கலமாகிறது. பொன் எத்தனை மதிப்புள்ளதாயினும் அது அடுமனைக்கலமென அமையாது. மேழியோ வாளோ ஆகாது” என்றார் கணாதர். “எங்கள் தொல்மரபு பயன்தரு வேதத்தையே முன்வைக்கிறது. மேழியும் வாளுமாகும் சொல் இது.”

“இங்கிருப்பவை அனைத்தும் எங்கிருந்தோ அளிக்கப்பட்டவை என வேதச்சொல்லை விளக்கிக்கொண்டது சௌனகப்பெருமரபு” என்றார் கணாதர். “அளிக்கப்பட்டவை அனைத்தும் கொண்டு, நுகர்ந்து, அறிந்து, ஆளப்படவேண்டியவை. அளிப்பதோ அறியமுடியாத பெருவிசும்பு. விசும்பென இங்குளது வானம். வானத்தை மண்ணுடன் இணைப்பது எரி. எரிக்கு அவியூட்டுதல் ஒன்றே மானுடன் விசும்புடன் உரையாடும் ஒரே வழி. எனவே வேதித்து வேட்டு எரிச்செயல் ஆற்றுதல் ஒன்றே மானுடர் செய்யக்கூடுவது என்றனர்.”

“எரிக்கு அவியூட்டாத குலமேதும் இம்மண்ணில் இல்லை” என்று கணாதர் தொடர்ந்தார். “தங்கள் வழியில் தங்களுக்குரிய மொழியில் அதை செய்துகொண்டிருக்கிறார்கள் குடிகள். ஆனால் எதுவும் முறைப்படுத்தப்படும்போது முனைகொள்கிறது. முனையிலிருப்பவர் மேலோர் ஆகிவிடுகிறார்கள். சீரமைக்கப்பட்ட எதுவும் எவரோ எதற்கோ அமைக்கும் படைக்கலம்தான். நால்வேதம் முறைப்படுத்தப்பட்டதும் நான்கு குலமும் அமைந்தது. குடிகள் அனைவரும் நான்கெனப் பிளந்து மேல்கீழென அடுக்கப்படலாயினர். தொல்காலத்தில் குலம் நான்கும் வேதம் ஓதின. பின்னர் நான்கு குலம் மட்டுமே வேதமோதலாம் என்றாயிற்று. பிறர் ஓதுவது வேதமே அல்ல என்றும் வகுக்கப்பட்ட வேதத்தை அவர்கள் ஓதலாகாது என்றும் சொல்லலாயினர். வேதம் கொண்டவரும் வேதம் மறுக்கப்பட்டவருமென மானுடம் பிரிந்தது.”

“இளையோனே, இங்கு அசுரரும் அரக்கரும் வேதம் ஓதியுள்ளனர் என்று கற்றிருப்பாய். ராவணனுக்கும் பிரஹலாதனுக்கும் மறுக்கப்படாத வேதம் எப்படி மானுடருக்கு மறுக்கப்பட்டது?” என்றார் கணாதர். “ஏனென்றால் அரசுகள் அடிமைகளின்றி ஆளமுடியாது. என்று இங்கு முடியென்றும் கொடியென்றும் கோலென்றும் நூலென்றும் அமைந்ததோ அன்றே தொழும்பரும் உரிமைமாக்களும் உருவாயினர். வேதம் தூயதென்றால் வேதமோதுபவரை அடிமைகொள்ளலாகாது. எனவே, வேதமிலாதோரை உருவாக்கி வேதமின்மையையே காட்டி அவர்களை வென்று அடிமைகொண்டனர் பிருது முதல் யயாதி, பரதன் எனத்தொடர்ந்து பிரதீபன் வரையிலான மாமன்னர்கள். நீ ஆளும் பாரதவர்ஷம் அவ்வாறு உருவானதே.”

“எனவே முறைப்படுத்தப்பட்ட நால்வேதத்தை முற்றெதிர்ப்பதே சார்வாகம் என அமைந்தது. எரியூட்டுதலை, மூவேளை நீர்வணக்கத்தை அது மறுத்தது. தெய்வங்களை செறுத்தது. பூசகர்களை, அவர்களின் சடங்குகளை இகழ்ந்தது. இங்குள்ளது பருவெளி. மானுடன் அதிலொரு துளி. அதை ஆக்கி, உண்டு, அதில் இன்புற்று மறைவதே அவனுக்குரிய கடன். இதற்கப்பாலுள்ள எதன் ஆணையையும் நிறைவேற்றும் பொறுப்பு அவனுக்கில்லை” என்றார் கணாதர். “அரசனே, மேல் கீழ் என்றில்லை. மானுடர் என்னும் ஒற்றைச்சொல்லில் உள்ளது சார்வாகம். நாற்குலம் இல்லை. குலமிலாதோர் எவருமில்லை. மெய்வேதமென்று ஒன்றில்லை, வேதமெல்லாம் மெய்யே என்கிறது அது.”

“இன்புறுதல் என்பது இங்குள உயிர்களனைத்திற்கும் உள்ள உரிமை. எனவே எரிநீர்வளியொளிவிசும்பு எவருக்கும் உரியதல்ல. எவர் தெய்வமும் மண்ணையும் விண்ணையும் முழுதாளவில்லை. ஆற்றல் வெல்கிறது என்பதுதான் பருப்பொருளின் மாறா நெறி. பெரியபாறை சிறியபாறையை உடைக்கும். யானை முயலை மிதித்துக் கடந்துசெல்லும். எனவே ஆற்றல்கொண்டவராகுக. வெற்றிகொள்க. அதையே மானுடருக்கு நாங்கள் சொல்கிறோம். இங்கு எளியோர் எவருமில்லை. பெருந்திரளாகச் சூழ்ந்த எறும்புகளின் புற்றைக்கண்டு யானை அஞ்சும். அதிலுள்ளது இயற்கை அளிக்கும் செய்தி.”

“அந்த ஒன்றே இவையனைத்தும் என்னும் ஒற்றைச்சொல்லில் இருந்து வேதத்தை பொருள் கொள்ளலாயிற்று தொன்மையான கௌஷீதக மரபு” என்று கணாதர் தொடர்ந்தார். “இது அது என தொட்டுத்தொட்டுச் சென்று அனைத்தையும் வளைத்து அவை ஒன்றே என்றாக்கியது. அதன் பெயர் அறிபடுபொருள். அறிபடுபொருளை அறிவது இங்கிருந்து தானென்று உணர்ந்து தன்னை அறிவென்றாக்கிக்கொள்வது. அதை அறிவது என்றனர். அகன்று நோக்கினால் அதுவும் அறிபடுபொருளில் அடக்கம். ஏனென்றால் அலை கடலில் இருந்து வேறல்ல என கூறினர்.”

“எனவே இங்கிருப்பது அறிபடுபொருளாகிய அது ஒன்றே என்பதே கௌஷீதக மரபின் கூற்று. அது தன்னைத் தானே அறிந்துகொள்வதே அறிவென்றாகிறது. எனவே அறிபடுபொருளும் அறிவதும் அறிவும் ஒன்றே என்றனர். இங்கிருப்பது முதலும் முடிவுமற்ற அறிவொன்றே எனச் சொல்லாடினர்” கணாதர் சொன்னார். “ஒவ்வொன்றாய்த் தொட்டெண்ணி எண்ணுவதனைத்தையும் ஒன்றெனக்காட்டி நிறுவுவது அவர்களின் வழி. ஒன்றிலிருந்து விரித்து அனைத்துக்கும் பொருள்காண்கின்றனர்.”

“அறிவதெல்லாம் அறிவொன்றையே என்னும் அவர்களின் வரியுடன் முரண்பட்டு எழுந்ததே சார்வாகப் பெருநெறி. அறிபடுபொருள் என்றும் அறிவதற்கு அப்பால் மட்டுமே உள்ளது. அவை இணைவதே இல்லை. அறிவதனைத்தும் நம் புலன்களினூடாகவே. ஆகவே அறிவு எல்லைக்குட்பட்டது. அலகிலாத அறிபடுபொருளை அது ஒருபோதும் முற்றறிவதில்லை” என்றார் கணாதர். “எனவே ஓர் அறிதல் உண்மையா என்னும் வினாவுக்கே எங்கும் இடமில்லை. அது பயனுள்ளதா என்பது மட்டுமே உசாவப்படவேண்டும்.”

“ஆகவே எப்போதைக்குமான உண்மை என ஏதும் இப்புவிமீது இருக்கமுடியாது. காலத்தில் இடத்தில் தருணத்தில் அறிபவனால் அறியத்தக்க ஒன்றே அறிவெனப்படுகிறது. அது அவனுக்கு நலன்பயக்குமெனில் உண்மை, அல்லதெனில் அரையுண்மை. பொய்யென்று ஏதும் இப்புவியில் இல்லை. கிணற்றுக்குள் இருப்பவன் சிறிய உலகை அறிகிறான். மண்மீது நிற்பவன் மேலும் பெரிய உலகை காண்கிறான். மரம் மீது ஏறியவனை விட மலையுச்சியில் நிற்பவன் மேலும் பெரிய உலகை காண்கிறான். மருந்து விளையும் மலையுச்சியில் நின்றிருக்கிறீர்கள். உங்களுக்கு இச்சொற்கள் நலம் பயக்கட்டும்!” அவரது மாணவர்கள் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்கள். தருமன் கைகூப்பினார்.

“வேதமெய்ப்பொருள் உசாவும் இருபெரும் தரப்புகளையும் முழுக்க மறுத்து நின்றிருக்கிறோம். ஒவ்வொரு அவையிலும் சாலைமுனையிலும் நாங்கள் அவர்களிடம் சொல்தொடுக்கிறோம். ஒரு தருணத்தையும் தவறவிடுவதில்லை. வேதத்தை பசுவென்கிறார்கள் அவர்கள். அதன் மெய்யறிதலை பாலென்கிறார்கள் கௌஷீதக மரபினர். தங்களை அதன் இனிய அகிடு என்கிறார்கள். அவ்வாறென்றால் சார்வாகம் அதன் கொம்பு” என்றார் கணாதர் புன்னகையுடன்.

“ஐந்து இருமைகளை அறிதளத்தில் சந்திக்கிறோம். அவற்றை மெய்யென்று உணர்ந்தவரே சார்வாகத்தை அறியமுடியும்” என்றார் கணாதர். “அறிபொருளும் அறிபவனும் கொண்டுள்ள வேறுபாடு, அறிவும் அறிபடுபொருளும் கொண்டுள்ள வேறுபாடு, அறிவும் அறிபவனும் கொண்டுள்ள வேறுபாடு, அறிபவர்களுக்குள் உள்ள வேறுபாடு, அறிபடுபொருட்களுக்குள் உள்ள வேறுபாடு. பஞ்சபேதம் என எங்கள் நூல்கள் அழைக்கும் இவ்வைந்து வேறுபாடுகளால் எல்லை வகுக்கப்பட்டதே எந்த அறிதலும்.”

“இப்பருவுலகு முதற்பேரியற்கை என்னும் அறியப்படாத ஒன்றின் தோற்றப்பெருக்கம். அதுவே இவையனைத்துக்கும் அடிநிலை. என்றோ எங்கோ அது உயிர்களால் அறியப்படலாயிற்று. அவ்வாறு அறியும் சித்தமே கிளைநிலை. அடியும் கிளையும் இணைந்துருவானதே நாம் வாழும் இப்புவிச்சூழ்கை. எல்லா பொருட்களும் நிகரானவை அல்ல என்பதுபோல் எல்லா அறிதல்களும் நிகரானவை அல்ல. மண்புழுவறிவதும் மாமுனிவர் அறிவதும் வேறுவேறு அறிதல்களை. உரிய அறிவை அடைந்து அதை ஆள்வதே விடுதலை.”

“அறம் பொருள் இன்பம் வீடு என நான்கு விழுப்பொருட்கள் மானுடருக்குண்டு என்று வகுத்துள்ளனர் வைதிகர். இன்பத்திற்கு உதவாத அறம் பயனற்றது. பொருள் பொருளற்றது. வீடு என்பது நிலைபேறான இன்பமே. எனவே இன்பமன்றி விழுப்பொருள் பிறிதில்லை. புல்லுக்கும் புழுவுக்கும் மாக்களுக்கும் மானுடருக்கும் அதுவே மெய்யான இலக்கு. நாங்கள் உரைப்பது இந்நெறியையே. காமமே புருஷார்த்தம் என்பதனால் எங்களை காமிகர் என்று கூறுவதுண்டு. சார்வாக மெய்நெறி உனக்கு உரைக்கும் வழியும் அதுவே” கணாதர் சொல்லி முடித்து கைதூக்கி வாழ்த்துரைத்தார்.


அவையில் நெறிநூல் உரைத்துப் பரிசில் பெற்றதும் அவர் “அரசே, உனக்கு மட்டும் என ஓர் அரசநெறிநூலை உரைக்கவிருக்கிறேன். கோல்கொண்டு அரசமரும் தகுதி அற்றவர்கள் அதை கேட்கலாகாது. இத்தொன்மையான நூல் வேதங்களுடன் பிறந்தது. வேத ரிஷியாகிய பிரஹஸ்பதியால் இயற்றப்பட்டது. அவரது மாணவர்களால் முழுதும் பயிலப்படுகிறது. அவர்கள் அறிவது காட்டுமதயானை. நான் சங்கிலி அணிந்த வேழத்தை உனக்கு அளிக்கிறேன்” என்றார். அன்றுமாலை அரசரின் வசந்த மண்டபத்தில் அமர்ந்து அந்நூலை உரைத்தார்.

“அரசே, பிறந்து பசித்து அழுது முலைநோக்கி உதடு குவிக்கும் கணம் முதல் இறுதி நீருக்காக கைகளை அசைத்து உதடுகளை நீட்டும் தருணம் வரை மானுடர் செயல்தொடரில் கட்டுண்டிருக்கிறார்கள் என்று அறிந்தவனே இப்புவியின் கணக்குகளை அவிழ்க்கும் முதல் எண்ணை கண்டடைந்தவன். தான் மேன்மையுறும் வழியையும் இழிவுறும் முறையையும் அறியாத உயிரென ஏதுமில்லை இவ்வுலகில். எனவே மானுடன் எங்கும் நோக்கவேண்டியதில்லை, தன்னுள் நோக்குவதே அனைத்துக்கும் விடையளிப்பது.”

தாபகர் சொன்னார் “தெய்வத்தையே அனைத்துக்கும் இழுப்பவன் மூடன். தெய்வமில்லை என அவனுடன் பேசப்புகுபவன் பெருமூடன். இங்கு ஆற்றுவன அனைத்தும் எதிர்வினை கொண்டவை என உணர்ந்தவனே அறிஞன். முதற்செயலின் மறுசெயலே மானுடனின் மறுகணம். ஒருதுளி முலையுண்டதுமே அன்னை எனும் உறவும், இனிமை எனும் சுவையும், பசி எனும் தேவையும், பால் எனும் பொருளும் உருவாகி வந்துவிடுகின்றன. பகையும் ஐயமும் அச்சமும் பிறக்கின்றன. இன்பம் பிறந்ததுமே துன்பம் உடன் தோன்றிவிடுகிறது.”

“வலைநடுவே இருக்கிறோம் என உணர்ந்தவனே உண்மையில் இருக்கிறான். பிறந்து இறந்து செயலாற்றி அவ்வலையைப் பின்னுவது தானும்தான் என்றுணர்ந்தவன் அறியத்தொடங்குகிறான். அறிதலும் வலைபின்னுவதே என்று கண்டவன் விடுதலைபெறுகிறான்” என்றார் தாபகர். “எனவே ஒவ்வொரு சொல்லையும் அதன் எதிர்ச்சொல் என எழுந்து சொல்வெளியெனப் பெருகப்போவது என்ன என்றுணர்ந்து சொல்க! ஒவ்வொரு செயலையும் எதிர்ச்செயல்நிரை என்ன என்றுணர்ந்து செய்க!”

“ஆம், எதிர்வருவது அறியமுடியாத காலப்பெருக்கில் உள்ளது. காலமே என்றான செயலெதிர்ச்செயல் என்னும் வலைப்பின்னலில் உள்ளது. ஆகவே அறியமுடியாமையே இங்கு எஞ்சுகிறது என்று உரைப்பவன் பேருண்மை ஒன்றை சொல்கிறான். ஆனால் அரசே, பேருண்மைகளைக்கொண்டு நூல்களை எழுதலாம். சொல்லெனச் சுருக்கி காட்டிலமர்ந்து ஊழ்கம் கொண்டு விண்ணேகலாம். அவை அரசனுக்கு உதவாது. அவை அரிய மணிகள். அணிகளெனச் சூடுதற்கே உரியவை. எளிய உண்மை சந்தையில் உணவாக மாறும், வழித்துணையாக உடன்வரும் நாணயம் போன்றது. அது நீ வாழும் காலத்தில் உன் விழியெட்டும் தொலைவுக்குள் நீ ஆற்றி பயன்கொய்யும் செயல்வட்டத்திற்குள் மட்டுமே பொருள்கொள்வது. உடைந்த உண்மைகளைப் போற்றுக! அவையே இவ்வுலகை ஆற்றியுள்ளன.”

“அறியமுடியாமையை பீடமாக்கி அறிவு நின்றுள்ளது. இவ்வலையின் கண்ணிப்பெருக்கு நீ அறியமுடியாதது. ஆனால் உன்னருகே உள்ள முதல்கண்ணியை நீ அறியமுடியும். அதன் அறியா எல்லையில் உள்ள கண்ணியும் அந்த முதற்கண்ணியின் தொடர்ச்சியே என்று உணர்க! வலையையே அறியமுடியும் என்பதனால் அதை அறிக! தேவையானவற்றை அறிந்தவன் ஆவாய்” தாபகர் பின்னர் சொல்லெண்ணி அவைகூடவும், விளைவறிந்து செயலாற்றவும் உதவும் பதினெட்டு நெறிகளை அவையில் எடுத்துரைத்தார்.

காம்யகத்தில் சப்தகர் பிரஹஸ்பதி நீதியின் மெய்ப்பொருளை நோக்கி சென்றார். “அரசே, இப்புடவி ஒரு இடமல்ல, ஒரு பொருளல்ல, ஒரு இருப்பல்ல. எனவே இதற்கு முதல்முடிவில்லை. வடிவம் இல்லை. முக்காலமென்றும் ஏதுமில்லை. இது ஒருநிகழ்வு. தன்னைத்தானே பின்னி விரிந்துகொண்டே இருப்பது. அப்பின்னலின் ஒரு கண்ணியில் நீங்கள் இருந்தால் அது உங்கள் உலகம். அங்கிருப்பவற்றுடன் தொடர்புள்ளவற்றால் ஆனது அதன் வடிவம். அங்கு நீங்கள் உணர்வது இருப்பு. அதுவே காலத்தை முன்பின் என வகுத்து உங்களுக்கு அளிக்கிறது.”

“இது இடமல்ல என்பதனால் மையம் என ஏதுமில்லை. பொருண்மை அல்ல என்பதனால் நிலை என ஏதுமில்லை. இருப்பல்ல என்பதனால் நோக்கமென ஏதுமில்லை. இந்நிகழ்வின் நெறியென்பது செயல்கள் முற்றிலும் நிகரான விளைவுகளாக மாறியே ஆகவேண்டும் என்பதே. ஏனென்றால் இது கூடுகிறதென்றாலும் குறைகிறதென்றாலும் அலகிலா காலப்பெருவெளியில் இது முன்னரே அழிந்துவிட்டிருக்கும். இது நீடிக்கிறதென்பதனாலேயே இது மூவா முதலா சுழற்சி என அறியலாம். செயலே காரணம், விளைவு அதன் காரியம். காரியம் அனைத்தும் பிறிதுக்குக் காரணம். காரியகாரண உருமாற்றமெனும் அலகிலாப் பெருந்தொடரையே இங்கு புடவியென நாம் அறிகிறோம். அதையே பிரஹஸ்பதியின் மெய்யியல் கர்மம் என்கிறது.”

“நம் ஒவ்வொரு காலத்துளியும் அடுத்த காலத்துளிக்குக் காரணம். நம் இக்கணத்து உடல் முந்தைய கணத்து உடலின் காரியம். கர்மத்தில் உள்ளன அனைத்தும். கர்மமே அனைத்தும். இச்சொற்களைக் கேட்ட நீங்கள் முந்தைய நீங்கள் அல்ல. ஒவ்வொன்றும் பறக்கும் பெரும்புயலை ஒரு கணமின்னலில் ஓவியமெனக் காண்பதே இப்புடவி என்று உணர்ந்தவன் விழிகொண்டவன். காரணம் காரியமென மாறும் என்னும் நெறியே மாறுதலே ஆன இப்புடவியின் மாறாமை என்றறிக! அரசே, கர்மத்தை அறிந்து கர்மமென உணர்பவனே தன்னையறிந்தவன்.”

“இப்பெரும் சுழற்பெருக்கிற்கு வெளியே இதை ஆக்கியதும் ஆட்டுவிப்பதும் அழிப்பதுமென ஏதுமில்லை. அவ்வாறு ஒன்றிருந்தால் அதன் காரணம் என்ன? அது காரணம் என்றால் அதன் காரணம் என்ன? அது வளர்கிறதென்றால் மறையவும்கூடும். அழியாதது எனில் செயலற்றது. செயலாற்றுகிறது எனில் அதுவும் கர்மத்திற்குள் அமைந்ததே. கர்மத்திற்குள் அமைந்தது கர்மத்தை ஆக்கி ஆட்டி அழிப்பது அல்ல. இங்கு இவ்வண்ணம் இருக்கும் இது என்றுமுள்ளது. இது சுழற்சி. எனவே இதன் இறுதியே தொடக்கமும் ஆகும். எனவே இதற்கு முழுமுதற்காரணம் என ஒன்றில்லை.”

காம்யகக் காட்டில் ஒன்பது மாதகாலம் தங்கி பிரஹஸ்பதி சூத்திரங்களைக் கற்றுத்தேர்ந்தார் தருமன். அவற்றுக்கு உரையென எழுதப்பட்ட பன்னிரு நூல்களையும் பாடம் கேட்டார். ஒருநாள் சொல்லாடுகையில் சப்தகரிடம் கேட்டார் “அனைத்தும் காரணம் கொண்ட காரியங்களே என்றால் பிரஹஸ்பதியின் கர்மவாதத்திற்குக் காரணமாக அமைந்தது எது?” சப்தகர் சிரித்து “உணவு உடலாக மாறுவதைக் கண்ட மூதாதை வேடர்களாக இருக்கலாம்” என்றார். பின்பு “உண்மையில் அதை தொல்கர்மவாதம் என்றே சொல்வதுண்டு. பழங்குடிகள் எதுவும் அழிவதில்லை என்று எண்ணுகிறார்கள். ஒவ்வொன்றும் இன்னொன்றாக ஆகிக்கொண்டிருக்கிறது. இறந்தவர்கள் மண்ணுக்குள் புகுந்து கருவாகி உடல் திறந்து திரும்பி வருகிறார்கள் என்பதே அவர்களின் முதல்மதம்.”

தருமன் “பிரஹஸ்பதிய மெய்யியலின் காரியம் எது?” என்றார். “இது விதையல்ல, ஒற்றைமுளையென எழ. இது அனல். தொட்டதையெல்லாம் அனலாக்கிக்கொண்டிருக்கிறது. வைதிகமரபிலுள்ள அனைத்துக் கர்மவாதங்களும் சார்வாகத்திற்கு கடன்பட்டவைதான். ஆயினும் சூரியனை முதற்காரணமாக முன்வைத்து புவியைத் தொகுக்கும் வைதிகமரபான ஐதரேயம் சார்வாகத்திற்கு அணுக்கமானது. சார்வாகமளவுக்கே தொன்மையானது” என்றார் சப்தகர்.

....
....
“பிரம்மத்தை அறியக்கூடுவதில்லை என்பதே அதைப்பற்றிய முதல் அறிவென்று அறிக! ஏனென்றால் அறிந்ததுமே அது அறிவென்றாகிறது. எல்லைக்குட்பட்டதாகிறது. அலகிலியான அது அப்படி தன்னை அடைத்துக்கொள்வதில்லை.”

அப்போது கையில் ஒரு குடத்துடன் அவர் கல்விச்சாலை முன்வந்து நின்றான் மகிதாசன். அவனைக் கண்டதுமே அடையாளம் கொண்ட விசாலர் திகைப்புடன் எழுந்தார். “ஆசிரியரே, உங்களுக்கு என் ஆசிரியக்கொடையென ஒன்றை கொண்டுவந்தேன். நிகரற்றது, முடிவிலாதது. விசும்பு” என அக்குடத்தை காட்டினான். “இதற்குள் நிறைந்துள்ள விசும்பைப் பெற்றுக்கொண்டு என்னை வாழ்த்துங்கள்!” அக்குடத்தை அவர் காலடியில் வைத்தான். அவர் அவன் சொல்வதென்ன என்று புரிந்துகொண்டார். மெல்லிய உடல்நடுக்கத்துடன் நோக்கி நின்றார்.

சினம் கொண்ட கிருபன் வெளியே வந்து கைநீட்டி “மூடா, உன் குடத்தில் அடங்குவதா விண்ணகம்? ஆணவத்திற்கு எல்லை இல்லையா?” என்றான். “அவ்வாறென்றால் இக்குடத்திற்குள் இருப்பதென்ன?” என்று மகிதாசன் கேட்டான். “எங்குமுளது விசும்பு என்றால் இது விசும்பே.” மூத்தமாணவனாகிய சூக்தன் “இது வானென்றால் வெளியே இருப்பது என்ன?” என்றான். “அதுவும் வானே. குடத்தில் அள்ளப்பட்டமையால் இது குடவானம். வெளியே இருப்பதை விரிவானம் என்று சொல்லுங்கள். சொல்வதுதான் பொருளாகிறது.”

விசாலர் கைகளைக் கூப்பியபடி அணுகி தனயன் முன் கால்மடித்து மண்டியிட்டு தளர்ந்த குரலில் “ஆசிரியனே, அழியாத மெய்யறிவை எனக்கு அருள்க!” என்றார். அவரது மாணவர்கள் மெய்விதிர்த்து அதை நோக்கி நின்றனர். விசாலரின் நெற்றிப்பொட்டில் கைவைத்து வாழ்த்தினான் மகிதாசன். அவர் தலையை கைவளைத்து காதில் அப்பெருஞ்சொல்லை சொன்னான். “பிரக்ஞையே பிரம்மம்.”

“அஞ்சுகிறாயா?” என்று அவர் கேட்டார். “இப்புவியே அஞ்சுபவர் அஞ்சாதோர் என இருவகைப்பட்ட மானுடருக்கானது. தனித்தனிப்பாதைகள்.” இருளுக்குள் அவருடைய பற்கள் சிரிப்பில் மின்னி அணைந்தன. “அஞ்சுதல் உன்னை குடும்பத்தவன் ஆக்கும். விழைவுகளால் நிறைக்கும். அள்ளி அள்ளி குவிக்கவைக்கும். அடைந்ததை அறியமுடியாது அகவிழிகளை மூடும். அஞ்சாமை உன்னை யோகியாக்கும். அறியுந்தோறும் அடைவதற்கில்லை என்றாகும்.”


English Meaning - As I taught a kid - Rajesh
One's accolades/greatness/excellence and one's negative things/ trivialness/mediocrity are by his work alone. Nothing else. Not by money earned, followers, number of known people etc. WORK is the only measuring yardstick of fame and meaning. Talent is just a potential. Talent it is only a possibility. Gain Talent is not achievement. Achieving something through work is the real accomplishment and a meaningful thing. Hence, focus on your work

Questions that I ask to the kid
Where does your reputation, fame, greatness comes from ?
What is key for greatness? (ans: work. underline the word consistency)

No comments:

Post a Comment