குறள் 1258
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை
[காமத்துப்பால், கற்பியல், நிறையழிதல்]
பொருள்
பன் - பன்மை - ஒன்றுக்குமேற்பட்டது; தொகுதி; ஒருதன்மையாய்இராமை:நேர்குறிப்பின்மை; பொதுமை; பார்த்தும்பாராமை.
மாய - மாயம் - மாயை; வஞ்சனை; பித்தளை; பாசாங்கு; அறியாமை; கனவு; பொய்; நிலையின்மை; வியப்பு; அழகு; தீமை; கயமைத்தன்மை; கறுப்பு; உயரம்; நீளம்; தொகை.
கள்வன் - திருடன்; கரியவன்; நடுச்செல்வோன்; முசு; நண்டு; கற்கடகராசி; யானை.
பணி - செயல்; தொழில்; தொண்டு; பணிகை; பரக்கை; பயன்தரும்வேலை; நுகர்பொருள்; அணிகலன்; மலர்களால்அலங்கரிக்கை; பட்டாடை; தோற்கருவி; வேலைப்பாடு; வகுப்பு; சொல்; கட்டளை; விதி; வில்வித்தைமுதலியவற்றைக்கற்பிக்குந்தொழில்; ஈகை; நாகம்; தாழ்ச்சி.
மொழி - சொல்; கட்டுரை; சொற்றொகுதி; பேச்சுமுறை; வாக்குமூலம்; பொருள்; மணிக்கட்டு, முழங்கால், கணுக்கால்முதலியவற்றின்பொருத்து; மரக்கணு.
பணிமொழி - தாழ்ந்தசொல்; மென்மொழி; பெண்; கட்டளை.
அன்று -அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.
அன்றோ - அதுவல்லவா
நம் - எல்லாம் என்னும் சொல் உயர் திணையாயின் அஃது உருபேற்கும் போது கொள்ளுஞ் சாரியை; வணக்கம்
பெண்மை - பெண்தன்மை; காண்க:பெண்பிறப்பு; பெண்ணுக்குரியகுணம்; பெண்இன்பம்; அமைதித்தன்மை; நிறை.
உடைக்கும் - உடைத்தல் - தகர்த்தல்: அழித்தல்: வருத்துதல்: தோற்கச்செய்தல்: வெளிப்படுத்துதல்; குட்டுதல்: பிளத்தல்: கரைஉடைத்தல்: புண்கட்டியுடைதல்; முறுக்கவிழத்தல்.
படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.
முழுப்பொருள்
நம் பெண்மையின் உறுதி தான் எத்தனை வலிமையுடையது . எக்கணத்திலும் குலையாத அப்பென்மையின் உறுதி கூட ,இந்த மாயங்கள் செய்வதில் வல்லவனான ,கள்வன் (தலைவன்) கூறும் அன்பு கலந்த இனிமையான, மொழியினில் உடைந்து கரைந்து விடுகின்றதே!!! என ஆச்சரியத்தில் தலைவி விளிப்பதாக கூறுகிறார் வள்ளுவர்.
நம் அன்றாட வாழ்விலும் கூட கணவன் மனைவி இடையே ,ஊடல் ஏற்படும் சமயத்தில், மிகைப்படுத்தப்பட்ட சொல்லோ ஆனாலும் கூட இனிமையாக ,இணக்கமாக,இகழ்வாக பேசும் மொழியே மனைவியின் இறுக்கத்தை உடைக்கும். :)
ஒப்புமை
”கள்வர் போலக் கொடியன் மாதோ” (நற் 28:4)
“யாரும் இல்லைத் தானே கள்வன்” (குறுந் 25:1)
“கள்வனும் கடவனும் புணைவனும் தானே” (குறுந் 318:8)
“இவன்எனது, நெஞ்ச நிறையழித்த கள்வன்” (முத்தொள் 102)
“என் உள்ளங் கவர்கள்வன்” (சம்பந்தர்.சீகாழி 1)
“கண்வழி நுழையுமோர் கள்வ னேகொலாம்” (கம்ப.மிதிலைக்காட்சி 55)
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நம் பெண்மை உடைக்கும் படை - நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை; பல் மாயக் கள்வன் பணிமொழியன்றோ - பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? ஆனபின் அது நிற்குமாறென்னை? (பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல் நின்றது. 'வந்தாற் புலக்கக் கடவேம்' என்றும், 'புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும் நீங்கேம்' என்றும், இவை முதலாக எண்ணிக்கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக்கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், 'பன்மாயக்கள்வன்' என்றாள். பணிமொழி - தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள். 'அவன்அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறையழியாயது ஒழியுமோ'? என்பதாம்.).
மணக்குடவர் உரை
பலபொய்களையும் பேசவல்ல கள்வனது தாழ்ந்த மொழியல்லவோ நமது பெண்மையை அழிக்குங் கருவி?. இது பெண்மையல்ல என்ற தோழிக்கு அவன் என்னோடு கலந்த நாளில் சொன்ன சொற்கள் காண் நம் பெண்மையைக் கெடுக்கின்றது: அல்லது கெடாதென்று தலைமகள் கூறியது.
மு.வரதராசனார் உரை
நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?.
சாலமன் பாப்பையா உரை
என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!.
No comments:
Post a Comment