குறள் 816
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]
பொருள்
பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்
பெரிய - பெரிதான; மூத்த; இன்றியமையாத
கெழுவு - நட்பு
பெருங்கெழீஇ - பெரு + கெழீ (கெழுவு -. பொருந்த, நிறைய) -> மிக பொருந்திய / சிறந்த
நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம் ஆறனுள் ஒன்றாகிய நட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடு நட்புச்செய்கை.
நட்பின் - நட்பு
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
உடையார் - - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.
அறிவுடையார் - அறிவுள்ளவர்கள்(உடன்)
ஏதின்மை - அன்னியம், பகைமை, அயலாந்தன்மை
கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்கூழை; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை
உறும் - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.
கோடி உறும் - கோடி மடங்கு நன்மை பயக்கும்
முழுப்பொருள்
அறிவற்றவர்கள் /மூடர்களுடனான மிக பொருந்திய நட்பை விட அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் பகைமை கோடி மடங்கு நன்று.
அதாவது அறிவற்றவர்களுடன் கொள்ளும் நட்பு பல்வகை தீங்கை விளைவிக்கும். ஆனால் அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் பகைமை (அன்னியத்தனம்) எந்த தீங்கும் விளைவிக்காது. ஆதலால் அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் பகைமை அறிவற்றவர்களுடன் கொள்ளும் நட்பைவிட நன்மையே.
அறிவற்றவர்கள் /மூடர்களுடனான மிக பொருந்திய நட்பை விட அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் பகைமை கோடி மடங்கு நன்று.
அதாவது அறிவற்றவர்களுடன் கொள்ளும் நட்பு பல்வகை தீங்கை விளைவிக்கும். ஆனால் அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் பகைமை (அன்னியத்தனம்) எந்த தீங்கும் விளைவிக்காது. ஆதலால் அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் பகைமை அறிவற்றவர்களுடன் கொள்ளும் நட்பைவிட நன்மையே.
”இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்
பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்” (நாலடி 187)
“இழிந்த மாக்களொ டின்பம் ஆர்தலின்
உயர்ந்த மாக்களொ டுறுபகை இனிது” (பெருங் 4:4:21-2)
ஆத்திச்சூடி
பையலோடு இணங்கேல் - சிறுபிள்ளைத்தனம் உள்ளவர்களோடு இணங்காதே
பேதைமை அகற்று - அறியாமையை போக்கு
சேரிடம் அறிந்து சேர் - சேரத்தக்கவர்களை நன்கு அறிந்து சேர வேண்டும் .
இணக்கம் அறிந்து இணங்கு - நற்குண நற்செய்கை உடையவர் என்பது தெரிந்து கொண்டு .
பரிமேலழகர் உரை
பேதை பெருங்கெழிஇ நட்பின் - அறிவிலானது மிகச் சிறந்த நட்பின்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்- அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று.
விளக்கம்
('கெழீஇய' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. பன்மை உயர்த்தற்கண் வந்தது. அறிவுடையான் பகைமை ஒரு தீங்கும் பயவாமையானும், பேதை நட்பு எல்லாத் தீங்கும் பயத்தலானும், 'கோடி உறும்' என்றார். 'பெருங்கழி நட்பு' என்று பாடம் ஓதுவாரும் உளர்..) -
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பேதை பெருங் கெழீஇ நட்பின் - அறிவிலானது மிக நெருங்கிய நட்பினும்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் - அறிவுடையானின் பகைமை கோடி மடங்கு நல்லதாம்.
பேதை நட்பு பல்வகைத் தீங்கை விளைத்தலானும், அறிவுடையான் பகை ஒரு தீங்கும் விளைவிக்காமையானும், ' கோடியுறும் ' என்றார். பன்மை உயர்வு பற்றி வந்தது. ஏதின்மை' இங்கு ஏதும் அன்பின்மை. கெழி நட்பு. "ஒருவன் கெழியின்மை கேட்டாலறிக" என்பது நான்மணிக் கடிகை (93). கெழீஇ என்பது கெழி என்பதன் அளபெடை வடிவம். பகைவனைக் கெழீஇயிலி என்பது இலக்கிய வழக்கு (தொல். சொல். 57, இளம். உரை). பெருங்கெழீஇ நட்பு என்பது பேருழுவலன்பு என்பது போன்ற பல்சொற்றொடர். "பெருங்கழிநட்பென்று பாடமோதுவாருமுளர்." என்றார் பரிமேலழகர். அது பெருங்கெழி நட்பு என்றுமிருந்திருக்கலாம். "கெழீஇய வென்பத னிறுதிநிலை விகாரத்தாற் றொக்கது." என்று கொள்ளத் தேவையில்லை.
மணக்குடவர் உரை
அறிவில்லாதார் மிகவும் கெழுமிய நட்பாகுமதனினும், அறிவுடையார் பகைமை கோடிமடங்கு மிக்க நன்மையை உண்டாக்கும். இது பேதைமையார் நட்புத் தீமை பயக்கு மென்றது,
மு.வரதராசனார் உரை
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.
அருமையான பதிவு
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2020/04/blog-post_27.html?m=1