Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அறிவினான் ஆகுவ துண்டோ

குறள் 315
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் 
தந்நோய்போல் போற்றாக் கடை.
[ அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை ]

பொருள்
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

அறிவினான் - அறிவுடையவன் 

அறிவினான் - ஒருவருடைய கற்றறிவு, நோற்றறிவு இவற்றால்

ஆகுதல் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

உண்டு  - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

ஆகுவ துண்டோ - ஆகக்குடிய (ஆக்குவது), பெறக்கூடிய பயனேதும் உண்டா?

பிறிது - வேறானது

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

பிறிதின்நோய் - மற்றவர்களின் (பிற உயிர்களை சேர்த்து) துன்பத்தினை

தந்நோய் - தன்னுடைய நோய் 

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்

தந்நோய்போல் - தனக்கே உற்றார் போல எண்ணி

போற்றுதல் - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல்.

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

போற்றாக் கடை - அவர்களை அவற்றிலிருந்து காப்பாற்றாமல் இருந்தால்

முழுப்பொருள் (நன்றி: InterestingTamilPoems)
அறிவினான் = அறிவினால்

ஆகுவ துண்டோ = ஆகுவது உண்டோ ?மிக மிக கவனத்துடன் சொல்லப் பட்ட சொல். ஆகுவது என்றால் ஆக்குவது, செய்வது, செயல் படுவது. நிறைய பேர் மற்ற உயிர்களின் துன்பம் கண்டு இரங்குவார்கள். ஐயோ பாவம் என்று பரிதாபப் படுவார்கள். ஆனால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய மாட்டார்கள். வெறும்  அன்பு உணர்வும், அருள் உணர்வும் மட்டும் போதாது. மற்ற உயிர்களின்  துன்பத்தை  போக்க ஏதாவது செய்ய வேண்டும். 

நான் மற்ற உயிர்களை  துன்பம் செய்யாமல் இருக்கிறேன், அது போதாதா என்றால் போதாது. அது பூரணமான அறிவு அல்ல.

மற்ற உயிர்களின் துன்பம் கண்டு பரிதாபப் படுகிறேனே அது போதாதா என்றால் ...போதாது. அது முழுமையான அறிவு அல்ல.

மற்ற உயிர்களின் துன்பத்தை மாற்ற ஏதாவது செய்ய வேண்டும். அதுதான் அறிவு. ஆக்க பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும்.    

பிறிதின்நோய் = நோய் என்றால் துன்பம். (நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் என்பது வள்ளுவம் ​ ). பிறரின் என்று சொல்ல வில்லை. பிறிதின் என்று சொன்னார். புல், பூடு, புழுக்கள், பூச்சிகள், பறப்பன, நீர் வாழ்வன, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் எல்லாவற்றிற்கும் வரும் நோய்.  

தம்நோய்போல் போற்றாக் கடை.= தனக்கு வந்த துன்பம் போல் போற்றி அதை  நீக்கா விட்டால் ? போற்றி என்றால் பாதுகாத்தல், கவனமாக காப்பாற்றுதல்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடும் உள்ளம் அறிவின் பாற் பட்டது. வள்ளலாரை விட ஒரு படி மேலே போய் , வாடிய பியரை கண்டபோது நீயும் வாடிப் பயன் இல்லை, அதுக்கு தண்ணி ஊத்து என்கிறார் வள்ளுவர். அது அறிவு.

நம் வீட்டில் யாருக்காவது உடல் நிலை மன நிலை சரி இல்லை என்றால், நாமும் உடைந்து விடுவது அறிவின்  அழகு அல்ல. அந்த துன்பத்ஹ்டை போக்குவது தான் அறிவு.

ஒரு மருத்துவர் என்ன செய்கிறார் - நோயாளியின் துன்பத்தை, வலியை
குறைக்கிறார்

இப்படி ஒவ்வொரு துறையிலும் வல்லவர்கள் என்ன செய்கிறார்கள் - மக்களின் வலியை  போக்குகிறார்கள்.

நாம் படிப்பது, பரிட்ச்சை எழுதுவது, வேலை பார்ப்பது எல்லாம் மற்றவர்களின் துன்பத்தை குறைக்க என்று நினைக்க வேண்டும்.

எவ்வளவு ஆழமான சிந்தனை. அறிவு என்றால் நிறைய படிப்பது , நிறைய சொல்லுவது , நிறைய சம்பாதிப்பது என்று எல்லாம் சொல்ல வில்லை.

இப்போது சொல்லுங்கள் அறிவில்லாதவனை என்ன என்று சொல்லுவது ?


பிறர் துன்பத்தைத் தன துன்பம் போலக் கருதுவது அறிவு என்றும் பண்பாக்கத்திற்கு அறிவு கருவி என்றும் குறிப்பிடுகின்றார். பிறர் துன்பம் கண்டு இரங்கும் செயலை மட்டும்தான் என்று இல்லாமல் இரக்கத்துடன் புரியும் பிற உதவிச் செயல்களையும் வள்ளுவர் மறுப்பதற்கில்லை. கொடை முதலியவற்றை வள்ளுவர் மனிதர்க்குக் கடமையாகவே சொல்கிறார்.

பண்புகள், புறவுலகத்தால் சூழல்களால் பாதிக்கப்படவே செய்கின்றன. வெறும் சிந்தனை கொண்டே உலகம் திருந்த இயலாது. உலகம் உயர்வதற்குச் செயல்களும் துணை. இக்கருத்துகளும் வள்ளுவரின் அறிவியல் கருத்துகளேயாகும்.

மேலும்: அஷோக்

ஒப்புமை
”பிறர்நோயும் தந்நோய்போற் போற்றி யறனறிதல்
சான்றவர்க் கெல்லாம் கடன்” (கலி 139:2-3)

உதாரணம்: யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி (சிறுகதை - ஆசிரியர்: ஜெயமோகன்)

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஒரு நாள் தக தகக்கும் மாலை நேரம் . ஞாயிறு மஞ்சள் குளித்தாற் போல காட்சி தந்து
கொண்டிருந்தான். வள்ளுவப் பேரறிஞர் முன்னர் நிற்கின்றேன். எனது நண்பர் ஒருவரைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர்.நிறையப் படித்தவர். மிகப் பெரிய அறிவாளி என்றெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருக்கின்றேன். கேட்டுக் கொண்டேயிருந்த வான் புகழ் வள்ளுவர் சிரித்துக் கொண்டேயிருந்தார்.நான் அவர் எழுதியுள்ள நூற்களைப் பற்றியெல்லாம் அவரிடம் வரிசையாகச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன். பேராசான் சிரித்துக் கொண்டேயிருந்தாரே யொழிய ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு நாம் ஏதோ தவறுதலாகப் பேசிக் கொண்டிருக்கி றோம் போல என்ற அய்யப்பாடு வந்து விட்டது.

அமைதியானேன்

வள்ளுவப் பேராசான் கேட்டார் மிகப் பெரிய அறிஞர் உன் நண்பர் அப்படித்தானே என்று.

நான் மீண்டும் அடுக்கலானேன்.

சரி இத்தனை படித்திருந்தால் அவர் ஒரு அறிஞர் என்று யார் உனக்குச் சொன்னது என்றார்

என்ன சாமி அதுதானே உண்மை என்றேன்

மீண்டும் கேட்டார் நிறையப் படித்திருந்தால் அவர் அறிஞர் என்று உறுதி படச் சொல்லுகின்றாயா என்று

திரும்பத் திரும்பக் கேட்கின்றார் என்றவுடன் எனது குரல் அடை பட்டு விட்டது.

சொல் என்றார்.

நான் அமைதியானேன்

அறிவு என்றால் என்ன என்று அடுத்து ஒரு கேள்வி கேட்டார்.

யாருக்கு யார் விடையளிக்க முற்படுவது. அமைதி காத்தேன்

சிரித்தார்

கல்வியல்ல படிப்பதல்ல அறிவிற்கு அடிப்படை. அடுத்த உயிர்கள் படுகின்ற துன்பத்தை தனது துன்பமாகக் கருதி அதனைத் தீர்க்க எவன் முற் படுகின்றானோ அவன்தான்
அறிவுடையவன்.

உனது நண்பர் அப்படி உயிர்க் குலத்தின் மேல் காதல் கொண்டு மற்றவர் துன்பத்தைத் தனக்கு வந்த துன்பம் போலவே கருதி துடிதுடித்து யாருக்கேனும் உதவி செய்து மகிழ்ந்துள் ளாரா. அன்று என்னிடம் வா நான் ஒத்துக் கொள்கின்றேன் அவரை அறிஞர் என்று.

வாயடைத்து நின்றேன். ஆமாம் அறிவு என்பது தன் வயிற்றையும் தன் பெண்டு பிள்ளைகள் வயிற்றையும் நிரப்புவதா. கோடிக்கணக்கில் சொத்துக்களைச் சேர்த்து வைப்பதா.

பேரறிஞர் சொல் எத்தனை உண்மையானது.

குறள்
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தந்நோய் போல் போற்றாக் கடை

பரிமேலழகர் உரை
அறிவினான் ஆகுவது உண்டோ - துறந்தார்க்கு உயிர் முதலியவற்றை உள்ளவாறறிந்த அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ; பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை - பிறிதோர் உயிர்க்கு வரும் இன்னாதவற்றைத் தம் உயிர்க்கு வந்தன போலக் குறிக்கொண்டு காவா இடத்து ? 

விளக்கம்
(குறிக்கொண்டு காத்தலாவது: நடத்தல், இருத்தல், நிற்றல், உண்டல் முதலிய தம் தொழில்களானும், பிறவாற்றானும் உயிர்கள் உறுவனவற்றை முன்னே அறிந்து உறாமல் காத்தல். இது பெரும்பான்மையும் அஃறினைக்கண் நுண்ணிய உடம்பு உடையவற்றைப் பற்றி வருதலின் பொதுப்படப் 'பிறிதின் நோய்' என்றும், 'மறப்பான் அது துன்புறினும் நமக்கு இன்னா செய்தலாம்' என்று அறிந்து காத்தல் வேண்டும் ஆகலின், 'அது செய்யாவழி அறிவினான் ஆகுவது உண்டோ' என்றும் கூறினார். இதனான் செய்தல் விலக்கப்பட்டது.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை- பிறிதோ ருயிர்க்கு வந்த துன்பங்களைத் தமக்கு வந்தன போலக் கருதிக் காவா விடத்து; அறிவினான் ஆகுவதுண்டோ- உயிர்களின் இயல்பைப் பற்றி அறிந்த அறிவினால் ஏதேனும் ஒரு பயனுண்டோ? இல்லை என்றவாறு.

உயிர்களைப் பற்றி அறிந்த அறிவாவது; உயிர்கள் எழுவகைப் பட்டன என்பதும், அவை தொடக்கமிலியாகத் தத்தம் நல்வினை தீவினைக்கேற்ப நால்வகுப்பிற் பிறந்திறந்து துன்புற்று வருகின்றன என்பதும், அப்பிறவித் துன்பத்திற்கு இயல்பாக எல்லையில்லை யென்பதும், அத்துன்பத்தினின்று விடுதலை பெறும் வழி இறைவன் திருவருளைத்துணைக்கொண்டு இருவகை யறங்களுள் ஒன்றைத்தூய்மையாகக் கடைப் பிடித்தலே என்பதுமாம்.

இனி, பிறவுயிர்க்குத் துன்பம் வராமற் காத்தலாவது அஃறிணையில் இயங்கு திணையைச் சேர்ந்த நீர்வாழி, ஊரி, பறவை என்னும் மூவகையுயிர்களுள், கூர்ந்து நோக்கினாலொழியக் கண்ணிற்குப் புலனாகாத நுண்ணுயிரிகளுமிருப்பதால், நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல் முதலிய நிலைகளிலும், உண்டல் பருகல் முதலிய வினைகளிலும், கருவிகள் கொண்டு செய்யும் பல்வேறு தொழிலகளிலும், அந்நுண்ணுயிரிகட்குச் சேதம் நேராதவாறு கவனித்து ஒழுகுதலாம். இதனாற் கவன மின்மையால் நேரும் இன்னா செயல் விலக்கப்பட்டது.

பருவுடம் புள்ள பிறவுயிர்கள் தம்மைத்தாமே காத்துக்கொள்ளுமென்பதும், நுண்ணுயிரிகள் போல் எளிதாய்ச் சேதத்திற்குள்ளாகா என்பதும், கருத்தாம்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: பிறிதின் நோய் தம் நோய் போல் போற்றா(த) கடை - (அறிவுடையார்) பிறிது (ஒர்) உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் (கருதிக்) காவாத விடத்து, அறிவினான் ஆகுவது உண்டோ-(அவரது) அறிவுடைமையினால் ஆகும் பயன் உண்டோ? (இல்லை).

அகலம்: மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘தன்னோய்போல்’.

கருத்து : அறிவுடைமைக்கு அழகு பிற உயிர்க்கு இன்னா செய்யாமை.

மு.வ உரை
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

மணக்குடவர் உரை
பிறிதோருயிர்க்குஉறும் நோயைத் தனக்கு உறும் நோய்போலக் காவாதவிடத்து, அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது. இஃது அறிவுடையார் செய்யார் என்றது.

சாலமன் பாப்பையா உரை
அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?.

Thirukkural - Management - Managing Emotions
Emotional imbalances are common among children & grownups, among uneducated & educated people, among leaders & followers, and among men & women. So, dealing with and managing emotions at family, work place, and society demand extraordinary  skills. Inability to manage emotions is one of the causes for many of the modern day diseases. “An emotion is a strong feeling of any kind: love, joy, hate, fear and jealousy,” (Oxford  Advanced Learner's Dictionary, 1996). Kurals tells us the importance of understanding  the role of emotions in one's self and others and channelizing them for productive relationships and performances. 

One of the age-old methods for managing emotions is to put oneself  in the other person's place and position to look at events from that person's perspective. What is the use of all education or knowledge, if an educated or a knowledgeable person cannot connect with others and experience their sufferings and pains as his own? Valluvar raises this question through Kural 315.

What good is that sense which does not feel and prevent
All creature's roes as its own?

No comments:

Post a Comment