குறள் 163
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை ]
பொருள்
அறன் - அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள். அறம் - ஒழுக்கம், தருமம், புண்ணியம்,
ஆக்கம் - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு; செல்வம்; பொன்; பெருக்கம்; இலாபம்; ஈட்டம்; கொடிப்படை; திருமகள்; மங்களகரம்; வாழ்த்து.
ஆக்கம் - படைப்பு - உண்டாக்கப்பட்டது; பெறுகை; செல்வம்; நிவேதனம்; உணவுபரிமாறுதல்; காடு.
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.
வேண்டாதான் - வேண்டாதவன்
என்பான் - என்றுசொல்பவன்; என்றுசொல்லப்படுபவன்.
பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.
ஆக்கம் - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு; செல்வம்; பொன்; பெருக்கம்; இலாபம்; ஈட்டம்; கொடிப்படை; திருமகள்; மங்களகரம்; வாழ்த்து.
ஆக்கம் - படைப்பு - உண்டாக்கப்பட்டது; பெறுகை; செல்வம்; நிவேதனம்; உணவுபரிமாறுதல்; காடு.
பிறனாக்கம் - பிறருடைய / மற்றவர்களுடைய ஆக்கம்(வளர்ச்சியை)
பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்
பேணாமாக்கள் - அகதிகள்.பேணாமாக்கள் பேசார் பிணித்தோர் (மணி. 28, 223).
பேணாது - பேணக்கூடாத; விரும்பக்கக்கூட கூடாத
அழுக்காறு - பொறாமை, மன அழுக்கு, மாசு, மலம்
அழுக்காறு - பிறர்ஆக்கம்பொறாமை; மனத்தழுக்கு
அழுக்கு - மாசு; மனமாசு பொறாமை ஆணவமுதலியபாசம்; வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை; மலசலாதிகள்; பிள்ளைப் பேற்றின்பின் வடியும் ஊனீர்; ஆமைவகை.
அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்
அழுக்கறுப் பான் - பொறாமையை அறுப்பான்
முழுப்பொருள்
மற்றவர்களின் வளர்ச்சியைப் பார்த்து ஒருவன் அவர்களை போற்ற வேண்டும். அவர்களை பேண வேண்டும். அதுவே அறம்.
எனக்கு ஒரு உதாரணம் தோன்றுகிறது, எனது கல்லூரி வகுப்பு மாணவி சொன்னது, நட்பென்பது சீ-சாவில் நாம் கீழே சென்றாலும் நண்பன் மேலே செல்வதை பார்த்து ஆனந்தம் அடைவதாகும். அதுப்போல பிறரின் வளர்ச்சியைப் பார்த்து இன்புறுவதே அறம்.
ஆனால் பிறரின் வளர்ச்சியையும், உயர்நிலையும் பார்த்து ஆனந்தபடாதாவன், பொறாமைகொள்கின்றவன் அறன் தரும் நல்லூழ்களை வேண்டாம் என்று சொல்பவனாவன். அறம் தரும் பயன்கள் - பெரியோரின் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், உறவுகள், - மற்றும் பல. பொறாமை படுபவனை யாரும் தன்னுடன் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
அதுமட்டும் இல்லாமல் பொறாமை கொண்டால் தன்னுடைய வேலைகளில் கவனம் செய்வதை விட்டுவிட்டு பிறரின் வேலைகளில் கவனம் செலுத்தி, தனது வேலைகளில் சொதப்பிக் கோட்டை விட்டுவிடுவார்கள். ஒழுங்காக தங்களது வேலை செய்திருந்தால் வரும் பயனை அவர்கள் இழந்துவிடுவார்கள்.
பலர் அடுத்தவர்களின் வளர்ச்சியில் பொறாமை கொண்டு வயிறெரிச்சல் பட்டு தங்கள் நிம்மதியும் இழந்து, உடல் நலனையும் இழப்பார்கள். கேடுவான் கேடு நினைப்பான்`
மேலும்: அஷோக்
பரிமேலழகர் உரை
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான்-மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கு அறுப்பான்-பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உதவாது அழுக்காற்றைச் செய்வான்.
விளக்கம்
('அழுக்கறுத்தல்' எனினும் 'அழுக்காறு' எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாம்.)
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஆக்கம் அறன் வேண்டாதான் என்பான் -இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் ஆகிய பேறுகளைத் தனக்கு வேண்டாதவனென்று சொல்லப்படுகின்றவன்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான்- பிறன் செல்வங் கண்ட விடத்து அதற்கு மகிழாது பொறாமைப்படுபவனாவன்.
பொறாமைக்காரன் பிறனுக்கு ஒரு தீங்குஞ் செய்ய இயலாது தனக்கே கேட்டை வருவித்துக் கொள்கின்றான் என்பது, இதனாற் கூறப்பட்டது.
மு.வரதராசனார் உரை
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை
பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.
வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான்- பிறன் செல்வத்தை (க் கண்டு) மகிழாமல் பொறாமை கொள்பவன், அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் - அறமும் பொருளும் வேண்டாதவன் என்று (பெரியோரால்) சொல்லப்படுவான்.
அகலம்: அழுக்கறு என்பது பகுதி. அழுக்கறு - பொறாமை கொள். ‘பேணாது’ என்பது ஈண்டு மகிழாமல் என்னும் பொருட்டு.
கருத்து: அழுக்காறு உடையவனுக்கு அறமும் பொருளும் இல்லை.
ஆக்கமாய் உலகம் போற்றும்
.. அறவழிச் செயல்கள் யாவும்
நீக்கியே நினைந்தி டாது
.. நெறியிலா துலகில் வாழ்வோன்
போக்கெலாம் அழுக்கா றேற்றுப்
.. பிறர்பெறும் போகம் செல்வம்
நோக்கியே பொறாமை கொள்ளும்
.. நிலைதனில் உழல்வான் என்றும் (3)
No comments:
Post a Comment